பிரார்த்தனைகள் - நல்வாழ்வின் திறவுகோல்

பிரார்த்தனைகள்Nalvalvin Thiravukol

பிரார்த்தனைகள்

உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒன்று, பிரார்த்தனை. அதாவது, கடவுளிடத்தில் வேண்டுதல். என்னதான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும், மனிதன் இன்னும் பிரார்த்தனைகளில் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. உலகின் பல பகுதிகளில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே, பிரார்த்தனைகளின் மூலம் பல அதிசயங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளன. நம் வாழ்க்கையில் கூட சில சமயங்களில் அப்படிப்பட்ட அற்புதமான நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுண்டு. என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கும் நிர்க்கதியான நிலையில், யாரோ அனுப்பி வைத்தது போல நமக்கு உதவி செய்ய ஒருவர் வருவதுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில், கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவிசாய்த்து விட்டதாக நாம் மகிழ்கிறோம்.

பிரார்த்தனைகளின் போது நடப்பது என்ன? அவை நிறைவேறுவது எதைப் பொறுத்தது? தெய்வத்தின் சக்தியாலா? அப்படியெனில், ஒரே தெய்வத்திடம் இரண்டு பேர் பிரார்த்தனை செய்யும் போது, ஒன்று பலிக்கவும், ஒன்று பலிக்காமல் போகவும் நேரிடுவது ஏன்? பிரார்த்தனை செய்யப்படும் இடம் அல்லது மண்ணின் புனிதத்தாலா? ஒரே இடத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகளும் ஒரே விதத்தில் நிறைவேறுவதில்லையே? செலுத்தப் படும் காணிக்கையின் மஹிமையாலா? அப்படியாயின் காணிக்கை செலுத்தவே சக்தியற்ற சில ஏழைகளின் பிரார்த்தனைகள் நிறைவேறத்தானே செய்கின்றன? இந்தக் கேள்விக்கு எல்லா மதங்களும் கூறும் ஒரே விடை: நம்பிக்கை அல்லது விசுவாசம். இதுதான் காலங்களைக் கடந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றும் அற்புதத்தைச் செய்து வருகிறது.

நம் கட்டுரையின் தொடக்கத்திலிருந்து நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதும் இதைத்தான். நம்பிக்கைதான் ஆழ்மனத்தைத் தூண்டக்கூடிய ஒரே சக்தி. அந்த நம்பிக்கையை ஆழ்மனத்துக்கு செலுத்தி அதன் சக்தியை விடுவிக்கும் பணியை நம் புறமனம் செய்கிறது. எனவே புறமனத்துக்கு நம்பிக்கையை வழங்கும் பணியைப் பிரார்த்தனைகள் செய்கின்றன. பண்டைய காலத்திலிருந்து இன்று வரை, பிரார்த்தனைகளின் மூலம் நோயாளிகள் குணமாக்கப் படுவதும், காணாமல் போனவை திரும்பக் கிடைப்பதும், பிரச்சினைகள் தீர்க்கப் படுவதும், இந்த முறையினால்தான்.

பிரார்த்தனைகள் நிறைவேற நம்பிக்கையோடு பொறுமையும் மிகவும் அவசியமாகின்றது. ஏனெனில், நாம் ஒன்றை வேண்டியவுடன், அது நிறைவேறும் என்ற நம்பிக்கை கொள்கிறோம். அது உடனே நடக்காவிட்டால், நம்பிக்கையை இழக்கத் தொடங்குகிறோம். “ஒருவேளை நடக்காமல் போய் விடுமோ?“ என்ற அச்சம் வரத்தொடங்கியவுடன், அது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் சரியத் தொடங்குகின்றன. “நடக்கும்“ என்ற எண்ணத்திலிருந்து சற்றும் பிசகாமல் காத்திருப்பவர் இறுதியில் நடக்கக் காண்கிறார். நம்பிக்கையின் தீவிரத்திற்கு ஏற்ப, அது நிறைவேறுவதற்கான கால அளவு வேறுபடும்.

“ஆழ்மனத்தின் அற்புத சக்தி“ என்ற புத்தகத்தை எழுதிய ஜோஸஃப் மர்ஃபி என்ற எழுத்தாளர் தன் புத்தகத்தில் விவரிக்கும் ஒரு சம்பவத்தை இங்குக் குறிப்பிடுகிறேன். வட ஆஸ்திரேலியாவில் ஓரிடத்தில், காசநோயால் துன்புற்ற ஒரு வயதான தந்தைக்கு, ஒரு அன்பான மகன் இருந்தார். அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஒரு புகழ் பெற்ற புனிதத் தலத்தில் ஒரு துறவியைக் கண்டார். அந்தத்துறவி அணிந்திருந்த மோதிரத்தில், யேசு க்றிஸ்து அறையப்பட்ட சிலுவைலிருந்து உடைந்த சிறு மரத்துண்டு பதிக்கப் பட்டிருந்ததாகவும், அந்த மோதிரத்தைத் தொட்டவர்கள் அனைவருக்கும் அற்புதமான முறையில் நோய்கள் குணமாவதாகவும் அறிந்தார். தன் தந்தையின் காசநோயைத் தீர்க்க, அந்த மோதிரத்தைப் பயன்படுத்த அவர் முடிவு செய்தார்.

வீட்டிற்குச் சென்றவுடன், அந்த மோதிரத்தின் பெருமைகளைச் சொல்லி, அதை மிகுந்த விலை கொடுத்து அந்தத் துறவியிடம் தான் வாங்கியதாக் கூறித் தந்தையிடம் கொடுத்தார். அளவற்ற மகிழ்ச்சியடைந்த தந்தை, அந்த மோதிரத்தை ஆர்வத்துடன் வாங்கி அணிந்து கொண்டு, கடவுளை வேண்டியபடியே சென்று படுத்து உறங்கினார். அடுத்த நாள் காலை அவர் மருத்துவ உலகமே அதிசயிக்கும் வண்ணம் குணமடைந்திருந்தார். அவருக்கு அந்த நோய் இருந்ததற்கான அறிகுறியே உடலில் இல்லாமல் போனது. மோதிரத்தின் சக்தியில் அவர் வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை. ஆனால் மோதிரம் பொய்தான் என்பது அவருக்குத் தெரியாது. ஆம். துறவியிடம் இருந்து மோதிரத்தை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது என்று அறிந்து கொண்ட அவரது மகன், தானே அது போன்ற ஒரு மோதிரத்தைத் தயாரித்துக் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த மோதிரமும் அவர் எதிர்பார்த்த அற்புதத்தை நடத்திவிட்டது. உண்மையில் அற்புதத்தை நடத்தியது எது? அந்தப் பெரியவரின் நம்பிக்கை. உண்மை தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் குணமாகியிருக்க மாட்டார்.

என் சொந்த சகோதரியின் வாழ்வில் நடந்த ஒரு அற்புதம். அவர் தான் வாங்கும் எந்த ஒரு பொருளையும், பயன்படுத்தும் முன்பாக, தன் குருநாதரின் சிலைக்கு முன்பாக வைப்பார். “இது நான் வாங்கியதல்ல. நீங்கள் எனக்கு இட்ட பிச்சை. இது தன் முழுப் பலனையும், மகிழ்ச்சியையும் எனக்கு அளிக்க நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்.“ இவ்வாறு வேண்டியபின், அவர் அதை அசீர்வதித்ததாகக் கருதி, பின்புதான் பயன்படுத்துவார். ஒரு முறை அவர் தன் கணவரோடு சொந்த ஊரில் ஒரு விசேஷத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினார். நள்ளிரவில் ரயில் நிலையத்தை அடைந்த அவர்கள், ஆட்டோவில் வீடு சென்றார்கள். விசேஷத்தில் அணிந்து கொள்வதற்காகக் கொண்டு சென்ற நகைகளை, தனது தோளில் மாட்டும் பையில் வைத்து, பத்திரமாகக் கையில் பிடித்திருந்த என் சகோதரி, எப்படியோ தூக்கக் கலக்கத்திலோ அல்லது இறங்கும் அவசரத்திலோ அந்தப் பையைத் தவற விட்டு விட்டார். அது இருட்டில் ஆட்டோவின் இருக்கைக்கடியில் விழுந்துவிட்டது. அதை கவனிக்காமலே, வீடு வந்ததும் மற்ற உடமைகளை எடுத்துக் கொண்டு ஆட்டோ வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டனர். வீட்டைத்திறந்து உள்ளே சென்றவுடன்தான் என் சகோதரிக்கு நகைப்பையின் நினைவு வந்தது. அதற்குள் ஆட்டோ எங்கோ போய் விட்டது. ஆட்டோக்காரரைப் பற்றிய எந்த அடையாளமும் தெரியாது. நள்ளிரவின் இருளில் அவரை எங்கு சென்று தேடுவது? என் சகோதரிக்கு முதலில் நினைவுக்கு வந்தது, அவரது குருநாதரின் சிலைதான். ஒவ்வொரு நகையும் வாங்கியவுடன், அவரது காலடியில் வைத்து எடுத்துதானே நான் அணிந்தேன்? அவ்வாறிருக்க, அது எப்படி என்னிடமிருந்து காணாமல் போகும்? என்று நினைத்த அவர், நேராகத் தன் பூஜையறைக்குச் சென்று, சிலையின் முன் அமர்ந்துவிட்டார். “நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. என் நகைகள் உம்மால் ஆசீர்வதிக்கப் பட்டவை. அவை மீண்டும் என்னிடம் வந்து சேர வேண்டும்.“ என்று வேண்டிய வண்ணம் கண்மூடி செய்வதறியாது உட்கார்ந்துவிட்டார். அவரது கணவருக்கு இன்னும் நடந்தது தெரியாது. தெரிந்தால் என்ன நடக்குமென்பதும் தெரியாது. ஐந்து நிமிடங்களுக்குள் வாசல் அழைப்பு மணி ஒலித்தது. கண் திறந்து யாராயிருக்கும் இந்த நேரத்தில் என்று யோசிக்கும்போதே, கணவர் இவரை அழைக்கும் ஒலி. எழுந்து சென்று பார்த்தால், ஆட்டோ ஓட்டுநர் வெளியே நிற்க, கணவரின் கையில் இவரது பை!!!! “இந்தா, பையை ஆட்டோவில் விட்டுவிட்டு வந்துவிட்டாயாம். ஆட்டோக்காரர் கொண்டு வந்திருக்கிறார். உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார்.“

சகோதரி உணர்ச்சிவசத்தில் திக்குமுக்காடி, பையை வாங்கிப் பார்க்க, உள்ளறையில் கவனமாக கைக்குட்டையில் சுற்றி வைக்கப் பட்டிருந்த நகைகள் அப்படியே இருந்தன. சரியென்று இவர் தலையசைக்க, அவர் ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லி சிறிது பணம் கொடுத்து அனுப்பலாமென்று சட்டைப் பைக்குள் கைவிட, ஆட்டோக்காரரோ, எதையும் வாங்க மறுத்து, வந்த வேகத்தில் திரும்பிச் சென்று விட்டார். அதுவரை நடந்தவற்றை நம்ப முடியாமல், திக்பிரமை பிடித்தாற்போல் சிலையாகி நின்ற என் சகோதரி, சுய உணர்வு வந்தவராய்க் கணவரிடம் நடந்ததைக் கூற, நகைகள் அந்தப் பையில்தான் இருந்தன என்ற விஷயமே அவருக்கு அதன் பின்புதான் தெரிய வந்தது. உடனே அந்த நகைகள் மீண்டும் குருநாதரின் காலடிக்குத் திரும்பின என்பதைக் கூறவே வேண்டாம்.

பட்டப் பகலில், பெண்கள் அணிந்திருக்கும் நகைகளையே பறித்துச் செல்லும் கயவர்கள் நிறைந்த இக்காலத்தில், இப்படியும் உத்தமராக ஒரு ஆட்டோ ஓட்டுநர் இருப்பதும், இவர்கள் சரியாக அவரது வண்டியில் பிரயாணம் செய்ய நேரிட்டதும் அதிசயமென்றால், பை தவற விடப்பட்ட ஐந்தாவது நிமிடமே அது அந்த இரவின் இருளில் அவரது கண்களில் பட்டதும், அதை சற்றும் தாமதிக்காமல் அவர் கொண்டு வந்து ஒப்படைத்ததும், மேலும் அதிசயமல்லவா? என் சகோதரி தன் குருநாதரின் சக்தியில் வைத்த அதீத நம்பிக்கையைத் தவிர வேறு எது இந்த அதிசயங்களை அடுத்தடுத்து நடத்தியிருக்க முடியும்?

இதுபோல் ஒன்றல்ல… நூற்றுக் கணக்கான அற்புதங்களை அன்றாடம் பார்க்கலாம். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. உங்கள் இஷ்ட தெய்வம் யாராக இருந்தாலும் சரி. உங்கள் பிரார்த்தனையோடு நம்பிக்கையும் பொறுமையும் சேருமானால், நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறும்.

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்

– என்று இராமலிங்க வள்ளலார் சிலாகிக்கும் அந்த தெய்வம், உங்கள் ஆழ்மனத்தில் அமர்ந்திருக்கும் ஆனந்த தெய்வமேயன்றி வேறில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக, மனிதன் வெளியில் தேடி அலையும் அனைத்தையும், அவன் உள்ளே கண்டு உணர்ந்துவிட்டால், பின்பு அவனை வெல்லவே உலகில் யாருமில்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிவிட்டு, என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி.

Comments

வழக்கம் போலவே அருமை.. இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.வாழ்த்துக்கள்

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மிக‌ மிக‌ அருமை சகோதரி நன்றி

மிக மிக அருமை சகோதரி

vt