மழையுடன் 7 நாட்கள்

சென்னையில் மழை பெய்து இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் திரும்பிவிட்டது. இருந்தாலும் சென்னையில் இருந்த அனைவருக்கும், மழை பெய்த 7 நாட்கள் என்பது மறக்க முடியாத விஷயமாகும்.

டிசம்பர் 1 அன்று நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது, எங்களுக்கு காலையில் இருந்தே கரண்ட் கட் ஆனது, எதிர்பார்க்கவில்லை அந்த மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கும் என்று. அன்று இரவு வரை தொடர்ந்து ஒவ்வொரு வீடாக மழைநீர் அழையா விருந்தாளியாய் குடிபுக ஆரம்பித்தது,யாருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. விடாமல் இறைத்து விட்டு கொண்டே இருந்தார்கள், தடுப்பு வேலைகள் பார்த்தார்கள் எதுவும் தடுக்கமுடியவில்லை, என் வீட்டிலும் வராண்டாவை தொட்டு விட்டது, அன்று இரவு முழுவதும் யாரும் உறங்காமலே பயத்திலே கழிந்தது.

விடியற்காலை மழை லேசாக விட்டதும் வெளியே போய் பார்த்தால் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. எங்களுக்கு வெறும் மழை நீர் பாதிப்புதான், ஆனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளநீர் புகுந்தது.

எங்களுக்கு மறுநாள் கரண்ட் இல்லாமலே பொழுது விடிந்தது, மொபைல் போனிலும் நெட்வொர்க் கட் ஆனது, டீவி பார்க்க முடியாது, போனிலும் தொடர்பு கொள்ளும் நிலையிலும் யாரும் இல்லை, பேப்பர், பால் எதுவும் கிடைக்கவில்லை. உலகத்தொடர்பு இல்லாமல் 25 வருட முன்பு இருந்த வாழ்க்கைக்கு போய்விட்டோம்.

எந்த பொருளும் கிடைக்காமல் இருக்கும்பொருளுக்கு ஏற்றவாறு சமைத்து அன்றைய பொழுது கழிந்தது. விடிந்தது சரி ஆகிவிடும் என்று நம்பிக்கையோடு.

3நாள் எந்த விஷயமும் தெரியாமல் யார் என்ன ஆனார்கள் என தெரியலில்லை. 4 ஆம் நாள் பேப்பர் 10 ரூபாய்க்கும், பால் 60 ரூபாய்க்கும் கிடைத்தது. அனைத்தும் விலையேற்றம் ஆனாலும் மக்கள் எவ்வளவு கொடுத்து வாங்கவும் தயார் நிலையில் இருந்தார்கள்.

பேப்பர் படிக்கும்போதுதான் தெரிந்தது எவ்வளவு பாதிப்பு என்று.

எங்களுக்கு தண்ணீர் வடிய ஆரம்பித்தது, ஆனாலும் வெளியில் எங்கும் செல்லமுடியாத நிலை. எங்கள் தெருவை தவிர மற்ற இடங்கள் படகில் செல்லும் சூழ்நிலை.

வீட்டில் தினமும் உப்புமா, பொங்கல் என்றே சாப்பிட்டாங்க. உப்புமா பார்த்து ஓடியவர்கள் எல்லாம் இன்று உப்புமாவே போதும் என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் ;). காலம் செய்த கோலம்.

மொபைல் போன் எல்லாம் சந்தானம் 'டயலாக் போல டம்மி பீஸ்சு பாவா' மாதிரி கிடந்தது.

புளிசாதம், லெமன் சாதம், இருவேளைக்கும் சேர்த்து சமைத்து விடுவது என்றே பொழுது போனது, இரவு ஏழு மணிக்கெல்லாம் விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்டு 7:30 க்கு உறங்கியாகிவிட்டது.

ஆனாலும் இந்த நாட்கள் மகிழ்ச்சியாகவே கழிந்தது எங்களுக்கு, குடும்பத்துடன் இருக்கமுடிந்தது, குழந்தைகளுடந் விளையாடி கொண்டு. போன் கிடையாது, டீவி கிடையாது. எங்களை விட பாதிப்பு அடைந்த இடத்திற்கு எங்கள் தெருவில் உள்ளவர்களும்,மற்றொரு தெருவில் உள்ளவர்களும் சேர்ந்து உணவு தயாரித்து கொடுத்தோம் அனைவரும் காசு போட்டு செய்து.

போனில் லைன் கிடைக்காமல் நடந்தே வந்து என்ன ஆனதோ என்று உறவினர்கள் தண்ண்ரீல் நடந்தே வந்து பார்த்து விட்டு போனார்கள். எங்களை விட அவர்களுக்கே பாதிப்புகள் அதிகம்.

கிணற்றில் தண்ணீர் இரைத்தோம், கையில் இட்லி மாவி அரைத்தோம் எல்லாம் மாறி கரண்ட் இல்லாமல் வாழ கிட்டத்தட்ட பழகியே போனோம்.

.

6 ஆம நாள் கரண்ட் வந்ததும் நாங்கள் அனைவரும் கத்தியபோது நிச்சயமாக தாமஸ் ஆல்வா எடிசனும் கத்தியிருக்கமாட்டார். அவ்வளவு சந்தோஷம். ஆனால் ஒரு மணி நேரத்தில் திரும்ப போய்விட்டது. :(

7 ஆம் ஒரு மாலையில் முதன்முதலில் மெசேஜ் விழும் சத்தம் கேட்டதும் வந்த சந்தோஷக்கு அளவீடு சொல்ல முடியாது. அச்சசோ போன் சத்தம் கேட்டதே, ஏங்க உங்களுக்கு டவர் கிடைச்சுதா அது இது என்று ஒரே சத்தம், டவர் கிடைக்கும் இடம் தேடி எல்லோரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தோம். முதன்முதலாக போன் யூஸ் செய்த அனுபவம் போலவே.
அன்றே கரண்டும் வந்ததும்

எனக்கு பெரும்பாலும் நமது தோழிகளின் குறுஞ்செய்திகள், ஆனாலும் யாரையும் திரும்ப தொடர்பு கொள்ள முடியவில்லை. பெரும்பாலான செய்திகள் நான் பேசியே பழக்கம் இல்லாத தோழிகள் கூட மற்றவரிடம் என் நம்பர் வாங்கி மெசேஜ் செய்து விசாரித்தது எதிர்பாராத சந்தோஷம். நன்றி சொல்லி அன்னியபடுத்த போவதில்லை.

இன்னும் இங்கெல்லாம் சாலைகள் சீராக வில்லை. தினம் தினம் இங்கு சாகசபயணத்துடனே எங்கள் பயணத்தை தொடங்கி இயல்பாக்கிவிட்டோம்.

சென்னை 'நான் வீழ்வெனென்று நினைதாயோ' என்று மீண்டும் பிறந்த குழந்தையாய் நடை போட ஆரம்பித்தள்ளது, உதவிய அன்புள்ளங்களின் கைப்பிடித்து.

5
Average: 4.5 (11 votes)

Comments

பழைய காலத்தில் இருந்த மாதிரி தான் இருந்திருக்கீங்க.. அப்பா வீடு ம் தண்ணீர் வந்து இடுப்பளவு ஆனதும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். முக்கியமானதை எடுத்து கொண்டு.எல்லா போனிலும் சார்ஜ் இல்லாமல் எனக்கு மட்டும் தகவல் சொல்லிட்டு ஒரு வீட்டில் ஒருநாள் இரவிற்கு 1500ரூபாய் கொடுத்து மூன்று நாள் தங்கியிருந்தாங்க.பேருந்து விட்டதும் இங்கே வந்துட்டாங்க...

அன்பு தோழி. தேவி

கரன்டும் மொபைலும் இல்லாத லுஃப் எப்படி இருக்கும்ணு யோசிக்கவே முடியல. மழையில் மாட்டின உங்களை நினைத்து நாங்களும் நடுங்கினோம் :( இப்போ எவ்வளவு நகைச்சுவையா சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு பயம் வரத்தான் செய்யுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

படிக்கக் கவலையாக இருக்கிறது. ;( வாழ்க்கை எப்போ எதைத் தட்டில் எடுத்து வைக்கும் என்பது தெரிவதில்லை. மழை, வெள்ளம் என்கிற செய்திகள் கிடைக்க ஆரம்பித்த சமயம் மனதில் நிறையப் பேர் வந்து போனார்கள். இரண்டு பேரைத்தான் நலம் விசாரித்திருப்பேன். பிறகு எத்தனை சிரமங்கள் இருந்தாலும் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்பதாக நானே நினைத்துக் கொண்டேன். நினைவு வரும் சமயம் எல்லாம் சின்னதாக ஒரு செபம் சொல்லுவேன். நலம் என்பதற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலம் என்கிறதும் வாழ்க்கை என்பதுவும் எதிர்நோக்க இருக்கிறது. ஹ்ம்! இன்னொரு சுனாமி இது. ;(

‍- இமா க்றிஸ்

ம்ம்.. மழை மேல் குற்றமா? மனிதர்கள் மேல் குற்றமா? இயற்கை பேரிடர் என்று சிலரும், செயற்கை பேரிடர் என்று சிலரும் சொல்கிறார்கள். எதுவாக இருப்பினும் இனிமேல் இப்படி ஏதும் நடக்காமல் இருக்கவேண்டும். :-(

நட்புடன்
குணா

அன்பு ரேவதி,

சென்னைக்கு இது ஒரு மறக்க‌ முடியாத‌ அனுபவம் ஆகிடுச்சு. இனியேனும் எல்லாம் நலமாக‌ நடக்கணும்.

அன்புடன்

சீதாலஷ்மி