பிறந்தன 2016ம் ரம் பந்துகளும்!

21/08/2015 இறுதியாக நான் வலைப்பதிவிட்ட நாள். 2016ல் மீண்டும் தொட்டுக்கொள்ள வந்திருக்கிறேன். முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். _()_

மண்புழுப் பண்ணை பற்றி இன்னொரு பகுதி பதிவிடுவதாக இருந்தேன்; தமிழ்த் தட்டச்சு காலை வாரி விட்டது. பிறகு இங்கு சர்வர் பிரச்சினை. அது சரியாக, எனக்கு விழாக்காலம் ஆரம்பித்திருந்தது. எப்போதாவது தோன்றும் போது விட்டுப் போன அந்த இடுகை நிச்சயம் பதிவாகும். அது 2 வருசங்கள் கழித்துக் கூட இருக்கலாம், இரண்டு கார்த்திகைகள் கடந்தும், 'கார்த்திகைப் பூச்சிகள்' வராத மாதிரி. :-)

விழாக்காலம் என்றால், எங்கள் வீட்டு விழாக்காலம் போல் எங்கும் இராது என்று நினைக்கிறேன். :-) முக்கியமான தினங்கள் அத்தனையையும் சின்னதாகவென்றாலும் கொண்டாடிவிடுவது என் வழக்கம். அரிதாகக் கிடைத்த வாழ்க்கையைக் கொண்டாட வேண்டாமா!

மார்கழி 7 - எங்கள் மணநாள், 8 - என் பெயர் கொண்ட திருநாள், 25 - நத்தார், 26 - பெற்றோரது மணநாள், 27 - எங்கள் இன்னொரு மணநாள், தை 1 - வருடப்பிறப்பு, 13 - முக்கியமான இன்னொருவர் பிறப்பு. இந்த வருடம் இந்த லிஸ்ட் இன்னமும் கொஞ்சம் நீளமாக வளர்ந்திருக்கிறது. :-)

வெள்ளம், போர், விபத்து, சுகவீனங்கள் என்று எத்தனை வந்தாலும் இழப்புகள் கழிந்து உயிர் மீதமிருக்குமானால் நிச்சயம் அதைக் கொண்டாடத்தான் வேண்டும். கணக்குப் பார்த்தேன் - 54 வருடங்கள் மகளாகவும், 34 வருடங்கள் மனைவியாகவும், அதே எண்ணிக்கை வருடங்கள் ஆசிரியையாகவும் சேவையாற்றிருக்கிறேன். சேவைதானே இவையும்!! ;) இதை விட... இமாவாக... இன்றைய கணக்குப்படி... 7 வருடங்கள் 15 வாரங்கள் அறுசுவையில் சேவை. ;)) (வேறு பெயரில் முன்பே இருந்திருக்கிறேன்.)

அனைத்தையும் கொண்டாட... இங்கு கண்ணுக்கு மட்டும் விருந்து கொடுக்கிறேன்.

இந்த இடுகையில் இணைத்துள்ள முதலிரண்டும் அயலாருக்கும் நட்பு வட்டத்திற்கும் நத்தார் அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பவென்று செய்த கேக்குகளில் இரண்டு. மீதியைப் படம் எடுத்து வைக்கவில்லை. உள்ளே ரிச்கேக்... இங்கு உமா கொடுத்த குறிப்பு இருக்க வேண்டும். அது என் சமையல் முறையிலிருந்து வித்தியாசமாக இருந்தால் பிறிதொரு சமயம் குறிப்பை அறுசுவைக்கு அனுப்பி வைப்பேன்.

ஐஸிங் 1 - வெண்மை... தாவரக் கொழுப்பைப் பிரதானமாகக் கொண்டு தயாரித்த காரணத்தால் வந்தது. சுற்றிலும் உள்ள கோடுகள் - தீர்ந்து போன க்ளிங் ராப் பெட்டியிலிருந்து பிரித்தெடுத்த வெட்டும் பற்களை, செங்குத்தாகப் பிடித்தபடி turn table-ஐச் சுற்றிவிட்டால் தானாக அப்படிக் கோடுகள் வரும். பாண் வெட்டும் கத்தியாலும் கூட இப்படிக் கோடுகள் வரையலாம். மேலே வட்ட விளிம்பில் star nozzle (no 27) கொண்டு அலங்காரம் செய்திருக்கிறேன். பழங்கள் - சிறிய மிட்டாய்கள்.
இலைகள் செய்யும் விதம் காண - http://www.arusuvai.com/tamil/node/24542
தட்டிற்கான செய்முறை - http://www.arusuvai.com/tamil/node/20768 கடைசியாக உள்ளது.

ஐஸிங் 2 - மாஜரின் கொண்டு சற்று இளக்கமாகத் தயாரித்த ஐஸிங் - சற்றுப் பழுப்பாகத் தெரியும். palet knife கொண்டு 'பிக்பிக்' என்று ஒற்றி ஒற்றி உயர்த்தினால் ஐஸிங் இப்படி முட்கள் போல் கிளம்பி வரும். (இது எனக்குப் பிடித்த முறை. வேலை வேகமாக முடிய வேண்டுமானால் இப்படி ஒற்றி வைப்பது வசதி. ஐஸிங்கின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு விதமான முடிவு கிடைக்கும்.)

என் சேகரிப்பிலிருந்து பொருத்தமான இரண்டு வாழ்த்திதழ்களை எடுத்து, எழுத்துப் பகுதியை மட்டும் வெட்டி இரண்டிலும் சொருகியிருக்கிறேன்.

பாடசாலையில் வருட இறுதியில் rum balls செய்து ஆசிரியர் அறையில் வைத்திருந்தார்கள். அந்தச் சுவை பிடித்துப் போக நானும் செய்யலாம் என்று நினைத்தேன். இந்தச் சின்ன வேலைக்காக ரம் வாங்க முடியாது. சமையலுக்காகவென்று இப்படியான பானங்களை வாங்கி வைத்தாலும் மீதி, வீட்டிற்கு வரும் யார் கண்ணிலாவது பட்டு வைத்தால் தன்னைக் குடிகாரன் என்று நினைப்பார்கள் என்று க்றிஸ்ஸுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. :-) நான் கேக் செய்யவென்று பொருட்களை எடுத்து வைத்துவிட்டு ஆரம்பிப்பேன். பிறகு போத்தல் காணாமல் போயிருக்கும். அதற்குள் பொறுக்க முடியாமல் மறைவாக எங்காவது வைத்திருப்பார். :-)

குறிப்புகள் என்று தேடாமல், நாவும் மனதும் சொன்னபடி வீட்டிலிருந்த உலர் பழக் கலவை, தூளாக்கிய மாறி [மேரி என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ;-)] பிஸ்கட், கொஞ்சம் நொருக்கிய அரிசிப் பொரி, சிறிது மாஜரீன், கொஞ்சமே கொஞ்சம் சீனி & ரம் எசென்ஸ் சேர்த்துக் குழைத்துப் பிடித்து கொக்கோ தூளில் புரட்டி நத்தாருக்குப் பொருத்தமாகக் கிடைத்த குட்டிக் கடதாசிக் கிண்ணங்களில் வைத்தேன். கேக் ஐஸ் செய்து மீந்ததில் ஒவ்வொன்றின் மேலும் ஒரு நட்சத்திரம்... ம்ஹும்! அது பனி. ;-)

~~~~
உபகதை ஒன்று -

பனி என்றதும் வேறு ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. இப்போ சொல்லாவிட்டால் இமாவின் தலை சுக்கு நூறாகிவிடும். :-) அதற்கு முன்... 'மூன்றாம் பிறை' என்கிற திரைப்படத் தலைப்பு பற்றி எனக்கு விளக்கம் இல்லை. யாராவது சொல்லுங்களேன்.

யாராவது வித்தியாசமாக நடந்தால் ஃபுல் மூன், அமாவாசை என்று கிண்டலடிப்பார்கள்; கேட்டிருக்கிறேன். இதுவே ஆங்கிலத்தில்... 'lunatic'. இது போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தால் 10ஷன் ஆகி விடுவேன்; special needs ஆசிரியையல்லவா! சுவாரஸியமான விடயமொன்று... என்னையே விசேடமான என் மாணவர் ஒருவர், 'லூனடிக்' என்றார் ஒரு சமயம். ;) போதாததற்கு என் மற்றைய மாணவர்கள் மத்தியிலும் வதந்தி பரப்ப முற்பட்டார். காரணம்... நான் அதிகம் வேலை வாங்குகிறேனாம். அவர் அப்போது தீவிர 'போக்கிமோன்' பக்தராக இருந்தார். படிக்கும் சமயமும் அதே எண்ணம். எதிரி நான் - 'லூனடிக்'. ;))

இதற்குச் சமமான எங்கள் ஊர்ப் பயன்பாடு, 'பனி பிடிச்சிருக்கு' என்பது. :-)

ஊரில் ஒருவர் இருந்தார். அவரை நான் கண்டதில்லை; உண்மைப் பெயரும் தெரியாது. வீடு மட்டும் எங்கிருந்ததென்று தெரியும். எனக்கு அந்த மனிதரிடம் ஒரு வகை ஈர்ப்பும் பரிதாப உணர்ச்சியும் இருந்தது. பரிதாப உணர்வு... அவரைப் 'பனியன்' என்று பெயரிட்டழைத்த அனைவர் மேலும் இருந்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இவர்கள் தங்கள் உள்ளே என்னைப் பற்றியும், 'பனி' என்று நினைக்கக் கூடும் என்று மனம் சொல்லும். ;-) ரசனையில்லாத மனிதர்கள்!! ம்... அந்த வீடு சற்று வித்தியாசமாக அலங்காரமாகத் தெரியும். இன்றானால் அதைக் 'க்ராஃப்ட்டி '; என்று பாராட்டியிருப்பார்கள். அன்று, 'பனியன்'. ;-( அந்தக் காலகட்டத்தில்.... நானும் என் அலங்கார வேலைகள் சிலவற்றைப் பார்வையாளர்கள் கருத்துகள் பொறுக்க இயலாமல் பிடுங்கி வீசியிருக்கிறேன். இன்று ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில், 'க்ரியேட்டிவ்' ஆக இருக்கிறார்கள். ஒரு காலம் ஏற்புடையதல்லாததாக இருக்கும் விடயம் கால ஓட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் விடயமாக மாறி விடுகிறது. இதற்குப் நேர் மாறு எம் ஆடைகள். :) பண்டைய தமிழ்ப் பெண்கள் போல இப்போ ஆடையணிந்தால் அது மேற்கத்தைய ஆடையை விட மோசமாகத் தெரியாதா! ;)

கத்தரிக்காய் காய்க்கவில்லை; கதை மட்டும் முடிந்தது. :-)
~~~

விட்ட இடம்... பனி. அந்த ரம் பந்துகளின் மேல் பனி வைத்தும், வெறுமையாக இருப்பது போல தோன்றிற்று. இன்னும் அலங்கரிக்கலாம் என்று மனம் சொல்லிற்று. பச்சை ஃபாண்டன்ட்டைக் குழைத்து சின்ன இலைகள் செய்து சொருகினேன். பழங்கள்... 100's & 1000's. இடுக்கியால் பொறுக்கி உருண்டு ஓடாமல் வைப்பது சற்று பொறுமையைச் சோதித்தது. பெரிய தட்டு நிறைய, ஒரு 100 வரையாவது செய்திருப்பேன். விடுமுறைத் தனிமையை இனிமையாக ரசித்துக் கொல்லும் ரகசியம் இது. :-) கொள்ளை அழகு அந்தத் தட்டு. பார்த்து ரசித்ததில் படம் எடுத்து வைக்கத் தோன்றவில்லை. இவை இறுதியாக வீட்டாருக்காக மீந்து போன, இலையுதிர் ரம் பந்துகள். சிலவற்றில் பனியும் கூட வெடித்துப் போயிருக்கிறது. குமுதத்தில் பல வருடங்கள் முன்பு 'கோணல் முறுக்கு' என்று ஒரு சிறுகதை படித்தது நினனவுக்கு வருகிறது, இவற்றைக் கோணல் ரம் பந்துகள் எனலாமா! ;-)

~~~
கடைசிப் படத்தில் பின்னணியிலுள்ளது... http://www.arusuvai.com/tamil/node/24632

5
Average: 5 (7 votes)

Comments

ஹாய்,

'''54 வருடங்கள் மகளாகவும், 34 வருடங்கள் மனைவியாகவும்''''இமா முதலில் திருஷ்டி சுற்றி போட்டுக்கோ. கல் அடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது. அழாகன‌ பதிவு கொஞ்சும் தமிழ் அழகு தெளிவான‌ தமிழ் நடைமுறை.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

கேக்கை பார்த்திட்டு தான் ஓடி வந்தேன்.. நான் விட்டாலும் அந்த கேக் என்னை விடாது போல... கதை அருமை.. நல்ல மெசேஜ்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

கார்த்திகைப் பூச்சிகள் - இரண்டு கார்த்திகைகள் கடந்தும் \\ எவ்வளவு காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன். கூடவே இதற்கும் (ஜெயா என்கிற பெயருக்கும் ஒரு கருத்து உண்டு தெரியுமா!! ;) ஏப்ரல் மாதம் வ்ரட்டும், சொல்கிறேன் \\ பதில் கிடைக்குமோ (வரும் ஏப்ரலில்) என்ற‌ ஆவலுடன்......

எதிர்பார்ப்புடன்
ஜெயா

சமீபத்திய கருத்துகளில் தலைப்பைப் பார்த்ததுமே புரிந்தது, ஜெயா வந்தாச்சு என்று. :-)

//ஜெயா// எங்கே பேசினோம் என்பதே மறந்துவிட்டதே!! ;(( ஏப்ரல்!! கோபிக்காமல் ஒரு தடவை எந்த போஸ்ட் என்று சொல்வீர்களா? ;))

‍- இமா க்றிஸ்

உங்களுடைய‌ " தொடாததும் தொட்டவையும் " என்ற‌ வலைப்பதிவில்.

ஏப்ரலில்... 1ம் தேதியும் வருமே!! ;)))அதற்காகக் காக்க வைத்து ஏமாற்றாமல் இன்று சுருக்கமாகவாவது விடை சொல்லிவிடுகிறேன்.

ஜெயம்... வெற்றி. ஈஸ்டர் ஏப்ரலில் வரும் இல்லையா! சாவை வெற்றி கொண்ட திருநாள் ஈஸ்டர். ஜெயா... ஜெயம் என்பதன் சுருக்கம்தானே! :-)

‍- இமா க்றிஸ்

இமா
எனதுகார்த்திகை தீபத்திருவிழா பதிவில் கார்த்திகை மாதம் கார்த்திகைப் பூச்சி வரும்னு சொன்னீங்க‌. ஆனா, அது என்ன‌ பூச்சினு தெரியவே இல்லை. நீங்க‌ இன்னும் சொல்லவே இல்லை.

அப்புறம் மூன்றாம் பிறை கண்ணுக்கு அதிகம் புலப்படாது. அதைக் காண்பது நல்லதுன்னு ஐதீகம்.

கதையும் முடிந்து கத்திரிக்காயும் காய்ச்சாச்சு. ஆஹா, இந்த‌ வரியைக் கேட்டு எத்தனை வருஷம் ஆகுது.......:))

ம்ம்...இவ்வளவு பதவிகளை வகித்து வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள். :-)

 //ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில், 'க்ரியேட்டிவ்' ஆக இருக்கிறார்கள். ஒரு காலம் ஏற்புடையதல்லாததாக இருக்கும் விடயம் கால ஓட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் விடயமாக மாறி விடுகிறது. //
ம்ம்.. ரொம்ப உண்மைங்க மா .
உபகதை அருமைங்..

நட்புடன்
குணா

அன்பு இமா,

யப்ப்ப்பா.... ஒரே பதிவில் எத்தனை விஷயங்கள்!

முதலில் கேக் - எனக்கு கேக்கின் சுவையை விட, அதன் மேல் இருக்கும் அந்த ஐஸிங் ரொம்பப் பிடிக்கும். இப்பல்லாம் கேக் வாங்கறப்ப, ஐஸிங் ரொம்ப கிரீமியா இருக்கு. முன்பு போல, கடிச்சு சாப்பிடற மாதிரி மிட்டாய் போல வர்றதில்லை.

சமீபத்தில் கேக், ஐஸிங் எல்லாம் செய்து பார்த்து, வழக்கம் போல சொதப்பிடுச்சு:(

அதனாலேயே கேக் பதிவுகளைப் பார்க்கறப்ப ஒரு பிரமிப்பு ஏற்படும். இப்பவும் அதே போல ஆச்சரியமாக பார்க்கிறேன்.

மூன்றாம் பிறை - அழகாக இருக்கு என்று சொல்வாங்க, வேற எதுவும் தெரியல.

அத்தை மடி மெத்தையடி என்ற பாடலில் - ‘மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி, முல்லை மல்லிகை மெத்தையிட்டு’ என்று ஒரு வரி வரும்.

அதாவது நல்ல அழகான வளைவாக, இரு பக்கமும் சமமான முனைகளுடன் கூடிய மூன்றாம்பிறை நிலவையே தொட்டில் மாதிரி உருவகப் படுத்தி, அதில் மெத்தையிட்டு, தாலாட்டுவதுதான் கவிஞரின் கற்பனையாக இருந்திருக்கும்.

ஆனா, படத்தில் மூன்றாம் பிறை நாளன்று தொட்டில் கட்டுவது போல, விஷுவலைஸ் பண்ணியிருப்பாங்க.

கவிஞரின் கற்பனையை சரியாக படமாக்கவில்லையே என்று ஆதங்கப் பட்டுக்குவேன்.

இப்ப உங்களுடைய பதிவைப் படிச்சதும் அந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி