விலகிச் செல்லும் மரமும் விதையும்

வழமையான காலைப்பொழுதுதான் ஆனால் வழமைக்கு மாறாக வெறிச்சோடி கிடந்தது அமிர்தாவின் மனம் .நீண்ட அமைதியின் நிசப்த்தத்தை கிழித்து வெளிவந்த பெருமூச்சுடன் சுற்று முற்றும் பார்த்தாள்
மனம் மட்டுமா வெறிச்சோடி கிடந்தது வீடும் தான்.
கண்ணீர்த்துளிகள் அடிக்கடி கன்னத்தில் சூடு வைப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.
வழக்கமான கோபங்கள் கடும் வார்த்த்தைகள் எல்லாம் வடித்து போட்டது போல் இருந்தது.

அவள் உள்ளம் அறிந்த அமிர்தாவின் கணவன் தலைகோதி ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோள் கொடுத்தான் .இதைக்கேட்டதும் ,புதிதாக திருமணமானவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆம் புதிதாக திருமணமானவர்கள்தான்
ஆனால் அது அமிர்தத்தின் கடைக்குட்டி மகள். ஏற்கனவே ஒரு மகள் திருமணமாகி போயிருந்தாள்.மகனும் திருமணமாகி வேலை நிமித்தம் தனிக்குடித்தனம் போயிருந்தான்.

அம்மா அப்பா 3 பிள்ளைகளைக் கொண்டது அமிர்தாவின் குடும்பம். யார் உதவியும் கிடைக்காமல் பற்பல தியாகங்கள் செய்து பசி தூக்கம் தள்ளி வைத்து குழந்தைகளை வளர்த்தாள்
.காலையில் சமைத்து விட்டு பிள்ளைகளை ஆயத்தம் செய்து
கணவனுடன் புறப்பட்டு பிள்ளைகளை டே கேர் ல் விட்டு கணவன் ஒரு பக்கம் வேலைக்கு செல்ல தானும் ஒருபக்கம் ஓடி ஓடி வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது.இப்படியே வேலைப்பழுவிற்கும் பரபரப்பிற்கும் எப்போதும்
குறைச்சல் இல்லாமல் பொழுதுகள் கழிந்தது .

காலையில் எழுந்த உடனே கரண்டிகள் பாத்திரங்கள் அமிர்தாவின் கோவத்திற்கு சங்கீதம் இசைக்கும்.கணவனுக்கு காப்பி குடுக்கும்போது :எல்லாம் நானே செய்தாக வேணும்,அதை செய்து தந்தால் என்ன இதை செய்து தந்தால் என்ன
என்ற புலம்பல்களுக்கு எப்போதும் குறைவிருக்காது.

ராஜ் ம் அன்பான கணவன் தான் .இருந்தாலும் ஏனோ சில வீட்டு வேலைகளில் ஈடுபாடு இருக்கவில்லை.வெளி வேலைகள் கஷ்டமான வேலைகள், எதையாவது பழுது பார்ப்பது என்றால் ஆர்வமுடன் செய்பவனுக்கு பால் சூடாக்குவதும்
வெங்காயம் அரிவதும் கடினமாக தெரிந்தது.அமிர்தாவின் புலம்பல் தாங்க முடியாமல் சில நாட்களில் செய்து கொடுத்தாலும் பல வேளைகளில் ஒதுங்கி விடுவதே வழக்கம்

பாதி சமையலில் இருந்து ஓடி வந்து பிள்ளைகளை தட்டி எழுப்பி விட்டு மறுபடியும் ஓடுவாள்.தனக்கும் கணவனுக்குமான மதிய சாப்பாட்டை லஞ் பாக்ஸ் ல் போட்டு வைத்து விட்டு மறுபடியும் பிள்ளைகளிடத்து போனால் அவர்கள் தங்களை மறந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

அவ்வளவுதான் பத்திரகாளியாக மாறிவிடுவாள்.சத்தம் மட்டுமென்ன விடி காலையிலேயே தலகாணியோ எதுவோ கிடப்பதை கொண்டு அடி கூட விழ தவறியதில்லை .

அவர்களுக்கும் பழகி விட்டிருந்தது யாருக்கு அடி விழவில்லையோ அவர் பெருமைக்குரியவராக மற்றவர்களை கேலி செய்வதும் நடக்கும்.

சொந்தங்களுக்கும் தன் ஒத்தவர்களுக்கும், பிள்ளைகளுக்கு தேவைப்பட்ட எல்லாமே தான் கொடுப்பதும் ,அவர்களுக்கு தனித்தனியாக பணம் சேமிப்பு செய்வது பற்றியும் ,நல்ல பாடசாலையில் கல்வி ,நல்ல ஆடைகள் என்று தேவைப்பட்டதெல்லாம் அவர்களுக்கு கிடைப்பதையும் சொல்லி சொல்லி பெருமை பட்டுக்கொள்வாள்.
.
அதுமட்டுமல்ல மற்றவர்களுக்கு அறிவுரை கூட சொல்லுவாள் டி வி யில் பாட்டு கேக்கிறார்களே உங்கள் பிள்ளைகள் இதுக்கு பதில் டிஸ்கவரி சானலை பாக்க சொல்லி சொல்லலாமே? என் பிள்ளைகளையெல்லாம் நான் பாட்டுக்கு ஆட விடமாட்டேன் ,
ஸ்கூல் முடிந்து வந்து இப்பிடி அங்கொன்றும் இங்கொன்றும் புத்தக பாக் ,சப்பாத்து ,சொக்ஸ் என சிதறி போடுகிறார்களே இது கூடாத பழக்கம் நான் அனுமதிப்பதில்லை.அதை அதை அங்கே அங்கே வைத்தே ஆக வேணும் எனக்கு என்பாள் .

இப்படியே குழந்தைகள் வளர வளர அமிர்தாவின் கோவத்தின் வெளிப்பாடுகள் மாறியதே தவிர கோவம் மட்டும் மாறவில்லை.எப்போதும் கடுமையாகவே நடந்து கொண்டாள்.
பிள்ளைகள் விளையாடினால் போய் படி என்பதும் ,ஆடிப்பாடி
களித்தால் மார்க் வாங்கிய கடுமையில் என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு என்பதும் ,அலங்கரித்துக்கொண்டால் இது தேவையா ????? கூடாது இதெல்லாம் வேண்டாம் என்பதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க கடுமையான சட்டங்கள் வைப்பதும்
ஓயாமல் அறிவுரைகள் சொல்வதுமாய் அமிர்தாவின் செயல்பாடுகள் இருக்க ,

காலம் மட்டும் மிக வேகமாய் உருண்டு சென்று கொண்டிருந்தது .பிள்ளைகளும் திருமண வயதை எட்டியது மட்டுமல்ல ஒரு ஒருவராக திருமணமாகி கூட்டை விட்டு பறந்தனர்.

அந்த ரீதியில் தான் இன்று கடைசி மகளும் திருமணமாகி செல்ல வேலையில் இரு ந்தும் ஓய்வு கிடைக்க வாழ்க்கையை முதன் முறையாய் நின்று நிதானித்து திரும்பி பார்த்தவளுக்கு
எல்லாம் கடந்து போய்விட்டிருந்தது .

எங்கோ குழந்தை அழும் சத்தம் கேட்டது .இதுவே என் குழந்தையாக இருக்கக்கூடாதா என்று வாய்விட்டு சொன்னாள்

ஏன திடீரென இந்த மாதிரி பேசுகிறாய் என்ற கணவனுக்கு

ஆம் என் மூர்க்க குணங்களை தூக்கி எறிந்து விட்டு ,அன்பாய் ,ஆதரவாய் ,செய்யும் தியாகங்களை ரசித்து குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகள் விதிக்காமல் அரவணைத்து அனுபவித்து வாழ ஆசைப்படுகிறேன் என்றாள்,

அதற்கு அமிர்தாவின் கணவன் அதற்கு ஏன் கவலை படுகிறாய் நம் மூத்த மகளின் செல்லத்தை அடிக்கடி கூட்டி வந்து பார்த்துக்கொள்வோம் .நாம் என்ன தூரத்திலயா கட்டிக்கொடுத்திருக்கிறோம் கவலையை விடு என்ற போது ,அமிர்தா உடைந்துபோய் சத்தமாக அழுதுகொண்டே சொன்னாள்,

கடந்த தடவை போன போது நான் மகளிடம் கேட்டேன் குழந்தையை கூட்டிப்போகிறேன் என்று அவள் மறுத்து விட்டாள்.
இல்லை அம்மா நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் நம்மோடு பட்ட சிரமமே போதும்.எனக்கு என் குழந்தைகள்
எந்த சிரமமும் கிடையாது,அவர்கள் ஒவ்வொரு செயலையும் நான் ரசிக்கிறேன் . நிர்ப்பந்தங்களும்,கட்டுப்பாடுகளையும் அவர்கள் மேல் திணிக்க விரும்பவில்லை,அவர்கள் வீட்டை கலைத்து போட்டால்
அவர்களுடன் சேர்ந்தே சுத்தம்
செய்து விடுவேன்.நான் அவர்களுக்காக செய்யும் தியாகங்கள் வேலைகளை சுமையாக எண்ணவில்லை.எனக்கு அது சுகமாக இருக்கிறது அம்மா.
சுடு சொற்களை அவர்கள் மீது வீசி பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க விரும்பவில்லை.

நீ இங்கு வருமுன் நானும் பிள்ளைகளும் கரம்போட் விளையாடிக்கொண்டிருந்தோம் ,உனக்கு பிடிக்காதே என்று நிறுத்தி அதை ரூம் ல் கொண்டுபோய் வைத்து விட்டோம்.பிள்ளைகளுக்காக எங்களையும் வீட்டையும் மாற்றி வைத்திருக்கிறோம்.
எங்கள் வசதிக்கு அவர்களை வளைக்க விரும்பவில்லை.நாளை அவர்கள் இந்த வீட்டை விட்டு தனி வாழ்க்கைக்கு செல்லும் போது இங்கு கடந்து போன ஒவ்வொரு நினைவுகளும் அவர்களை சந்தோசப்படுத்த வேணுமென்று நினைக்கிறேன் அம்மா.

வசதி, வாய்ப்பு, பேரறிவு, புகழ்,பணம் எல்லாவற்றையும் வைத்து அவர்கள் உயர்வையும் மகிழ்ச்சியையும் சம்பாதிப்பதை விட அன்பையும் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வைத்து அவர்கள் உயர்வை சந்திக்க கற்றுக்கொடுக்கிறேன்.இல்லை இல்லை
உதாரணமாய் வாழ்ந்து காட்டுகிறேன்.
என்று மகள் சொன்னதை சொல்லி முடித்தாள் அமிர்தா.

எனக்கு என் பிள்ளைகள் குழந்தைகளாக வேண்டும். நான் அவர்கள் என்ன செய்தாலும் அன்பால் அரவணைத்து கலகலப்பாக வாழ வேண்டும் என்றாள் .காலம் கடந்துவிட்டதை மறந்தவளாய்.

ஆம் பிள்ளைகள் மேல் நாம் எவ்வளவு உயிராக இருந்தாலும் அவர்கள் நம் வீட்டின் நீண்ட கால விருந்தாளிகள்.எப்போதுமே எங்கள் பிள்ளைகள்தான் இருந்தாலும் நாளை எங்கள் வீட்டுக்கு வந்தால்
வீட்டை கலைத்து போட்டு ஓடி ஆடி குழப்படி செய்ய மாட்டார்கள். நீங்கள் கண்ணயரும்போது கண்ணை திறந்து பார்த்தோ காதுக்குள் விரல்விட்டு குடையவோ மாட்டார்கள்.

அவர்கள் குறும்புக்காலம் ,கவலைகள் வேர்விடாத காலம், சுமைகள் தோள் மீது ஏறாத காலம் ,எங்கள் வீட்டில் எங்களோடு இருக்கும் அந்த பொற்காலம்தான் என்பதை மறக்க கூடாது.

முடிந்த அளவு அன்பால் வழிநடத்துவோம்.அன்பால் ஆகாதது எதுவுமில்லை.

5
Average: 4.6 (13 votes)

Comments

உண்மைதான் சுரே .நிறையப்பேர் பேரன்ட்ஸ் இப்படிப்பட்ட தவறை செய்றாங்க ..எப்போ விட்டு விலகி ஓடுவோம் என்ற நிலையில் பல பிள்ளைகள் நானும் பார்த்திருக்கேன் ..

ஆனால் ஒரு சிலருக்கு உடல் ரீதியாவும் சில நேரத்தில் மன உளைச்சல் ஹார்மோன்கள் மாற்றம் இதனாலும் கோபம் எரிச்சல் எல்லாமே தன் தலையில் இருப்பதுபோன்ற கனமான உணர்வு வரும்.கணவரும் உதவனும் அந்த நேரத்தில் .என்னைபொருத்தவரை அந்தந்த காலத்தில் சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிச்சு முடிக்கணும் .காலம் நமக்காக காத்திருக்காது அதுபாட்டுக்கு உருண்டோடிடும் ..நாம்தான் ஐயோ அதை செய்யலியே இதை செயலையே என்று பின்னாட்களில் வருந்துவோம் வீடு என்பது ஹாஸ்டல் போன்ற உணர்வை குழந்தைகளுக்கு தந்துவிட கூடாது ..அம்மா என்றால் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் போன்ற உணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடாது அமிர்தம் போல

வாவ்..சூப்பரா எழுதியிருக்கீங்க.. இன்றைய அவசர உலகில் நடப்பது இதுதான்.. இதை படித்து சிலராவது திருந்தினால் நல்லது.. உங்கள் 2 குட்டிகளும் கொடுத்து வைத்த குட்டிகள்.. கவிஞர் சுரேஜினி பாலகுமாரன் நிறைய எழுதுங்கோ.. படிக்க காத்திருக்கோம்.. நன்றி..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

என் போன்ற குடுப்பத்தலைவிக்கு மிக மிகத் தேவையானது நண்பி.
மாற்றம் இன்றே தொடங்கட்டும் என்று இன்று முதல் எனது கோபத்தை குறைக்க முயற்சி செய்கிறேன்
அன்புடன்
சுபா

be happy

மிக‌ மிக‌ மிக‌ அருமையான‌ கதைக்கரு..இந்த‌ காலத்திற்கு மிகவும் தேவையான‌ ஒன்று...பொறுமை,அன்பு காட்டி குழந்தைகளை வளர்க்க‌ வேண்டும்...பிற்காலத்தில் அவர்கள் இளமை காலங்களை நினைத்து அசைப்போட‌,அவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க‌ நாம் அவர்களின் இளம் வயதில் சந்தோஷத்தை மட்டுமே கொடுக்க‌ வேண்டும்...
//ஆம் பிள்ளைகள் மேல் நாம் எவ்வளவு உயிராக இருந்தாலும் அவர்கள் நம் வீட்டின் நீண்ட கால விருந்தாளிகள்.// //அவர்கள் குறும்புக்காலம் ,கவலைகள் வேர்விடாத காலம், சுமைகள் தோள் மீது ஏறாத காலம்// //நான் அவர்களுக்காக செய்யும் தியாகங்கள் வேலைகளை சுமையாக எண்ணவில்லை.எனக்கு அது சுகமாக இருக்கிறது அம்மா.// இன்னும் நிறைய‌ அருமையான‌ வரிகள்...

உங்களுடைய‌ முதல் வலைப்பதிவை நான் இன்னும் படிக்கவில்லை...இந்த‌ பதிவு முதலில் கண்ணில் பட்டதால் படித்தேன்...நாளை படித்துவிட்டு அதில் பதிவு இடுகிறேன்...

இன்னும் இதே போன்ற‌ கருத்து மிக்க‌ நிறைய‌ வலைப்பதிவுகள் கொடுக்க‌ என் வாழ்த்துக்கள்...

Expectation lead to Disappointment

ம்ம் இதைவிட நிறைய பேர் நான் சின்ன வயசில இப்பிடியெல்லாம் அனுபவிக்கலையே ன்னு சொல்லி ஏங்குறதையும் பாக்கிறோம்தானே.யெஸ்ஸ் அப்பிடியும் இருக்கினம் .கணவன் மனைவி சேந்து பேசி சில மாற்றங்களை செய்ய வேணும்.தனி ஒருவர் சுமக்கிறது ரெம்ப பாவம்.

ஹி ஹி ஹி அபி நாங்களும் அடி திட்டு எதுவும் தெரியாமல் வளந்த பிள்ளைகள்தான் தெரியுமோ.அம்மா பழமொழி அறிவுரை எல்லாம் சொல்லுவாவே தவிர ஒரு நாள் குரல் உயராது.இப்ப கூட நாங்கள் அம்மாவை பற்றி சொல்லி சொல்லி பெருமை படுவோம் பேரண்ட்ஸ் 2 பேருமே பிரண்ட்லி நம்மளோட.நான் அம்மாக்கு சொல்லுவன் என்னை அம்மா ன்னு கூப்பிட சொல்லி ,சரி அம்மா கூப்பிடுறன் என்னுட்டு கூப்பிடுவா மீ அவோவை பூமணி ன்னு பேர் சொல்லி கூப்பிடுவேன்.அடிக்கடி நடக்கும்.மறந்துபோய் சுரேன் என்பா நான் திட்டி விட்டுடுவன் ,என்ன பூமணி நீர் மரிவாதை இல்லாமல் என்னை பேர் சொல்லுறீர் ன்னு.

நகை பணம் கொட்டி கொட்டி தந்திருந்தால் கூட நாங்கள் இவளோ நிம்மதியா வாழ்ந்திருக்க மாட்டோம் .எப்பிடி எல்லாத்தையும் சந்தோசமா மாத்திறது, எப்பிடி தீயது தவிர்த்து நிம்மதியா வாழுறது எங்கிறதை கற்றுக்குடுத்ததை தான் நாங்கள் மிகப்பெரிய சொத்தா நினைக்கிறோம்.

யெஸ் சுபா பிள்ளைகளுக்கு மட்டுமில்ல நமக்கு கூட அப்பிடி மாறும்போது ரெம்ப ரிலீவ் ஆ இருக்கும்.பெருந்தன்மையா வேற இருக்கும்.அம்மா அப்பா எங்கிறது மிகப்பெரிய விசயம் ,அதிலும் பிள்ளைகள் எங்கே போனாலும் எத்தனை வயசு ஆனாலும் அம்மாவை பற்றி சொல்லித்திரிவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள்.செய்யிற எல்லாம் செய்தே ஆக வேணும் அதையே சலிக்காமல் சந்தோசமா செய்து அவர்களையும் மகிழ்வித்தால் பின்னாளுக்கு நம்மளை பற்றி நல்ல நினைவுகளை சிதற விடுவார்களே.

மிக்க நன்றி meenal .அதிலும் தமிழ் பாரம்பரியம் மிக்க நாங்கள் அக்கறை காட்டாமல் விட்டுட்டு நமக்கு வயசு வர பிள்ளைகள் வீட்டுக்கு போனால் அங்கே நாங்கள் கொடுத்த குணம் தான் பெரும்பாலும் இருக்கும் எங்கிறதையும் மறக்க குடாதில்லோ .

ஹைய்,
''முடிந்த‌ அளவு அன்பால் நடத்துவோம் , அன்பால் முடியாதது ஏதுமில்லை''''அனுபவ‌ உண்மை. அதிகாரத்தாலும், ஆணவத்தாலும் அன்பை பெற‌ முடியாது.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அன்பு சுரேஜினி,

நல்லா இருக்கு இந்தக் கதை.

அந்த காலியான கூடுதான் மனசை என்னவோ செய்யுது.

குழந்தைகள் நம் வீட்டின் நீண்ட கால விருந்தாளிகள் - உண்மை, உண்மை.

ஆனா, கிளைகள் உயர்ந்தாலும், படர்ந்தாலும், அவற்றின் வேர்களை மறக்காமல் இருந்தால் போதும்.

அன்புடன்

சீதாலஷ்மி

முதல்ல‌ படங்கள் ரொம்ப‌ பொருத்தமா அழகா இருக்கு.
கதையின் கரு அருமை.

//எனக்கு என் குழந்தைகள் எந்த சிரமமும் கிடையாது,அவர்கள் ஒவ்வொரு செயலையும் நான் ரசிக்கிறேன் //.
அருமை தோழி. குழந்தை வளர்ப்பு என்பது ரசனையோடு அனுபவித்து செய்யனும்.

குழந்தைகளுடன் விளையாடுவது நல்ல‌ விஷயம் தானே. நம்ம‌ வனி கூட‌ பிடித்த‌ விளையாட்டு என்று சொல்லும் போது எனது குழந்தைகளுடன் விளையாடும் விளையாட்டு ந்னு சொல்லியிருப்பாங்க‌.

ஆனால், சுரே குழந்தைகட்கு அன்போடு கொஞ்சம் கண்டிப்பும் தேவை. நான் சொல்வது சரிதானே.
அடுத்த‌ கதைக்காக‌ காத்திருக்கிறேன்:))

உண்மை ரஜனி.அதிகாரமும் ஆணவமும் நம்முடையை நின்மதியைதான் கெடுக்குமே தவிர நாம் யார் மீது திணிக்கிறோமோ அவர்களால் மறைமுகமாக கேலி செய்யப்படுவோம்.மற்றவர்களை சந்தோசமாக வைத்திருக்க அன்பு செலுத்தியே ஆகவேண்டும் என்பதை விட நான் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் அன்பைக்காட்டுவது ஒன்றே வழி என்று நினைத்தால் சுலபமாக நமக்கு அன்பால் ஆளும் தன்மை வந்துவிடும்.

நன்றி சீதாலக்ஸ்மி.நிச்சயமாக அன்பாக வளக்கப்படும் குழந்தைகள் ஒதுங்கி போக மாட்டார்கள்.மறுபடியும் தம்மோடு நம்மையும் பின்னி பிணைத்து விடுவார்கள்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ஒரு வாழ்க்கை . நம்மோடு இருந்ததை விட கூடுதல் சந்தோசமாக அடுத்த கட்டத்தையும் கடந்து செல்ல பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள் கவலை வேண்டாம்.

நன்றி நிகிலா.
நிச்சயமாக கண்டிப்பு தேவை .நாம் கண்டிக்காமல் விட்டால் அவர்களே நாளை நம்மை தூற்றுவார்கள்.

ஆனால் அந்த கண்டிப்புக்கள் அன்புடன் மென்மையாக கனிவாக அவர்களை சென்றடைய வேண்டும்.

சிலவற்றிற்கு நாம் கோவம் ,எதிர்ப்பு என்பவற்றை காட்டியே ஆகவேண்டும் ஆனால் நிறைய பெற்றோர் அதை அடாவடித்தனமாக காட்டுவது பிள்ளைகளை வெறுப்படையவே செய்யும்.

பெற்றோர்களைப்போல பாசம் ,நட்பு,அரவணைப்பு ,பாதுகாப்பு குடுக்க இந்த உலகத்தில் யாராலும் முடியாது.அந்த உரிமையை நாம் சரியாக முழுமையாக பயன் படுத்திக்கொள்ளவேண்டும்.

’’எனக்கு மனசே சரியில்ல செத்துப்போகலாம் போல இருக்கு.’’
அறியா வயதில் என் தவறு ஒன்றுக்கு வருந்தி நான் என் அம்மாவிடம் சொல்லி ஆறுதலும் தைரியமும் பெற்றுக்கொண்ட வார்த்தை .

சின்ன தவறை செய்தாலும் அதை மறைக்கவோ பயம்கொள்ளவோ மனதில் வைத்து குடையவோ இன்று வரை அவசியம் ஏற்பட்டதில்லை எனக்கு இந்த நெருக்கம் பிள்ளைகளுக்கு கொடுத்தால் போதும் கண்டிப்பை கூட ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.