என் இனிய முயலே!

இன்று உயிர்ப்பின் திருநாளைக் கொண்டாடுவோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

முயலுக்கும் உயிர்ப்பும் என்ன தொடர்பு!! நத்தாருக்கு சன்டா போல ஈஸ்டருக்கு முயலார்.

என் இன்றைய இடுகையின் நோக்கம் முயலார் கதையைச் சொல்வதல்ல. ஒரு குட்டி முயல் கேக் - இதை... சமையற் குறிப்பு என்பதை விட கேக் அலங்காரத்திற்கான செயல்முறைக் குறிப்பு என்று கொள்ளலாம். இந்தக் குட்டி கேக் கையளவுதான் (10 செ.மீ) இருக்கும். பார்க்கவே தெரியும்... ஒரு saucerஇல் இருக்கிறது என்பது.

தேவையானவை

முயல் அச்சு
ஃபொண்டன்ட் - ஒரு பிடி அளவு

வெள்ளைச் சீனி
பச்சை நிறம்
சிவப்பு நிறம்
மெல்லிய ப்ரஷ் / டூத் பிக்
பூக்கள் & இலைகளுக்கான அச்சுகள்
100's & 1000's
பட்டர் ஐஸிங்
ஸ்டார் நொஸில் (இல 27) - (உடலுக்கு)
இலை நொஸில் (இல 68 )- (செவிக்கு)
ரைட்டிங் நொஸில் (இல 2) - (மீசைக்கு)
பலட் நைஃப் இல 1
ஸ்னாப் லொக் பை

விருப்பமான கேக்கை அச்சில் வேக வைத்து எடுக்கலாம். கேக் பொப்ஸுக்குச் செய்வது போல கேக்கை உதிர்த்துத் தயார் செய்து அச்சில் இறுக்கமாக அடைத்து தட்டியும் எடுக்கலாம். இதில் இரண்டாவது சுலபம். அச்சு சிறியதாக இருப்பதால் ஒரு கணக்கு வைத்து வேக வைத்துப் பதமாக எடுப்பது எல்லாச் சமயங்களிலும் சரிவருவது இல்லை. எங்காவது மேடாக உள்ள இடத்தில் சற்றுத் தீய்ந்து போனால் சுரண்டவும் இயலாது.

இதற்கு ஐஸிங் அதிகம் தேவை வராது என்பதால் கிண்ணக் கணக்கோ நிறுவை அளவுகளையோ பின்பற்றவில்லை. இரண்டு மேசைக்கரண்டி மாஜரினில் சிறிது சிறிதாக அரித்த ஐஸிங் சீனியைச் சேர்த்துக் குழைத்து சில துளிகள் பாலும் சேர்த்துக் கலந்து பைப்பிங் பையில் நிரப்பிக் கொள்ளுங்கள். ஐஸிங் பதம்... எப்பொழுதும் போல, கரண்டியை வைத்து உயர்த்தினால் ஐஸிங் கூம்பாக எழுந்து நிற்க வேண்டும்.

மூன்று மேசைக்கரண்டி அளவு சீனியை பையில் போடவும். சில துளிகள் பச்சை நிறம் சேர்த்து, பையை அழுத்தி மூடிக் கையால் கலக்கினால் சீனியில் பச்சை நிறம் தொற்றிக் கொள்ளும். முள்ளெலி கேக் டெகரேஷன் குறிப்பில் விளக்கம் படங்களுடன் காணக் கிடைக்கும். http://www.arusuvai.com/tamil/node/23576

தட்டில் முயல் கேக்கை வைத்து, ஐஸிங்கை மெல்லிதாக முயலின் மேற்பரப்பு முழுவதும் கேக் மறையும் விதமாகத் தடவி விட வேண்டும். அச்சினால் கிடைத்த வளவுகள், மேடு பள்ளங்கள் ஐஸிங் வைப்பதனால் மறைந்து விடாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு நட்சத்திரங்களைப் பைப் செய்து விடுங்கள். முன்னங்கால் & வாலுக்கு - தேவையான வடிவம் கிடைக்கும் வரை மேலே மேலே சின்னச் சின்ன நட்சத்திரங்களாக அழுத்த வேண்டும். ஒரேயடியாக பெரிய நட்சத்திரமாக வைக்கலாம் என்று நினைத்து அழுத்தினால் கெட்டுவிடும். மூக்கையும் சரி பார்த்துவிட்டு...

நொஸிலை (இலக்கம் 1) மாற்றி மாட்டிக் கொண்டு மீசையை வரையவும்.

இலை நொஸிலை மாட்டி கழுத்திலிருந்து மேல் நோக்கிக் கூராக வருமாறு இழுத்தால் செவி. இரண்டு தடவைக்கு மேல் வைக்க வேண்டாம்.

கண் - சிவப்பு நிறத்தை ப்ரஷ் அல்லது டூத்பிக்கினால் தொட்டு வரைந்துகொள்ளலாம்.

ஃபாண்டன்ட்டில் பூக்கள் இலைகளை வெட்டிக் கொள்ளுங்கள். இலைகளுக்கு நரம்புகள் - டூத்பிக்கினாலேயே அழுத்தி வரைந்துகொள்ளலாம். உள்ளங்கையைக் குவித்து, அதில் வெட்டிய பூவொன்றை வைத்து அதன் மத்தியில் ப்ரஷ் பின்பக்கத்தால் அழுத்தினால் அமைப்பாக வரும். 100's & 1000's இலிருந்து விரும்பிய நிற மணி ஒன்றை இடுக்கியினால் எடுத்து நடுவில் வைத்து அழுத்தி விடுங்கள்.

இனி பச்சைச் சீனியை முயலின் மேல் கொட்டாமல் கவனமாக சுற்றிலும் பரவி, இலைகளையும் பூக்களையும் வைத்துவிட்டால் வேலை முடிந்தது.

முயல் அச்சுக் கிடைக்காவிட்டால்!! தட்டையான கேக்கை, செதுக்கி முயல் வடிவம் கொண்டு வர வேண்டும். வெட்டிய பகுதிகள் ஐஸிங் பூசும் போது சற்று உதிரலாம். கையை நனைத்து உதறிக் கொண்டு வெட்டப்பட்ட இடங்களின் மேல் வைத்து நனைத்துவிட்டால் பிறகு உதிராது. க்ரம்ப் கோட்டிற்கு மேல் நட்சத்திரங்கள் வைப்பதால் கேக் துகள்கள் பிரிவது கேக்கின் அழகை எந்த விதத்திலும் பாதிக்காது.

இங்கு இது நீண்ட வார இறுதி. பெரிய வெள்ளி முதல் Easter Tuesday வரை விடுமுறை. நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு இடுகையில் சந்திக்கிறேன்.

Average: 5 (1 vote)

Comments

வாவ் !!முயல் ரொம்ப அழகா இருக்கு..ஆனா இவ்ளோ அழகு கேக்கை வெட்ட மனசே வராது இதே அளவுகள் வைச்சி கேக் செய்றேன் கரட் ஷேப்புக்கு :).
ஹாப்பி ஈஸ்டர் இமா குடும்பத்தாருக்கு

அது ஒரு குட்..டி கேக் ஏஞ்சல். மிஞ்சிப் போனால் 2 சேவிங்ஸ் இருக்கும். ஐஸிங்தான் பெருசாக் காட்டுது.

கரட் கேக்கை மறக்காமல் காட்ட வேணும் எங்கயாவது.

‍- இமா க்றிஸ்