கேக்கு...தா!!

எப்போதோ படித்த ஜோக் ஒன்று...
மைக் மோகனுக்கு கேக் சாப்பிடும் ஆசை வந்தால் எப்படிக் கேட்பார்!!

மலையோரம் வீசும் காற்று...
மனசோடு பாடும் பாட்டு...
கேக்கு தா! கேக்கு தா! :-)

எங்கள் பாடசாலையில் ஒவ்வொருவர் பிறந்தநாள் அன்றும் காலைத் தேநீர் வேளையின் போது சின்னதாக ஒரு தேநீர் இருக்கும். ஒவ்வொருவர் சமையலில் சிலது எல்லோராலும் விரும்பப்படுபவை இருந்தன. அருட் சகோதரர் ஒருவர் நன்றாக மஃபின் செய்வார். சில சமயம் அஸ்பராகஸ் ரோல் கொண்டு வருவார். (அஸ்பராகஸ் ரோல் எனக்கு மிகவும் பிடிக்கும்.) ஒருவர் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாக - கரட், செலரி, குடமிளகாய்த் துண்டுகளோடு layered dip கொண்டு வருவார். எங்கள் பகுதித் தலைவர் கேக் கொண்டு வருவார். ஒருவர் எப்பொழுதுமே சாசேஜ் ரோல்ஸ் கொண்டுவருவார். (எண்பதைச் சமீபித்தவர். சேல் போகும் போது வாங்கி ஃப்ரீஸரில் அடுக்கிவிடுவாராம். அவசரத்திற்கு எடுத்து வெட்டி பேக் செய்தால் போதும். இயலாவிட்டால்!! ;) பாடசாலைக்குக் கொண்டு வந்து வெட்டி பால் பூசி அவனில் போட்டுவிடுவார்.)

கட்லட், ஜக்கட் பொட்டேட்டோஸ், பட்டீஸ், பேஸ்ட்ரி வீல்ஸ் என்று என் சமையல் மாறும். சுவை வித்தியாசமாக இருக்கும் காரணத்தால் நான் எதைக் கொண்டு போனாலும் அங்குள்ளவர்களுக்குப் பிடிக்கிறது. (வெள்ளையர் சிலர் நான் சாப்பிடுவதை விடக் காரமாகச் சாப்பிடுவார்கள்.) அதோடு கேக்குக்கான பூக்கள் இலைகள் செய்து எடுத்துப் போவேன். பாடசாலையில் ஒரு பெட்டியில் கேகுக்கான சின்ன மெழுகுவர்த்திகள், அவற்றுக்கான பூ வடிவ சொருகு குச்சிகள், பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் இருக்கும். பகுதித் தலைவர் கொண்டு வரும் கேக்கை அலங்கரித்து விடுவேன்.

எங்கள் சிலருக்கு கோடை விடுமுறையின் போது பிறந்தநாள் வருவதால் இந்தச் சின்னச் சின்னக் கொண்டாட்டங்களுக்குக் கொடுப்பினை இல்லை. என் ஐம்பதாவது பிறந்தநாள் வந்த வருடம் பாடசாலை வருடம் ஆரம்பித்த அன்று யாரிடமும் சொல்லாமல், நானே ஒரு சின்ன விருந்து தயார் செய்து எடுத்துப் போனேன். கூடவே... விடுமுறையில் விடுபட்டுப் போவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டி கேக் ஐஸ் செய்து எடுத்துப் போனேன். எல்லோரும் ஒரே சமயம் (வெட்டாமல்) வெட்டிக் கொண்டாடினோம். :-) அது எப்படியென்றால்... ஒவ்வொரு கேக்கிலும் ஒரு மெழுகுவர்த்தி - எரித்து, பாடி, கை தட்டி, வர்த்தியை அணைத்து... பொதுவாக பெரியதொரு கேக்கை வெட்டிச் சாப்பிட்டோம். அவரவர் தன் கேக்கை வீட்டிற்கு எடுத்துப் போனார்கள்.

மினி கேக் - ஒரு பெரிய தட்டில் கேக்கை பேக் செய்து எடுத்து சின்னச் சின்ன வட்டங்களாக வெட்டினால் அவை மினி கேக்குகள் தானே! :-)

குட்டித் தட்டுகள் வேண்டுமே! சீடீக்கள் சிலவற்றில் kitchen foil சுற்றி ஒட்டினேன். இதில் இன்னொரு வசதி இருந்தது. பாடசாலைக்கு எடுத்துப் போக வசதியாக, உயரமான ப்ளாஸ்டிக் கிண்ணங்களைக் கொண்டு கேக்கை மூடி செலோடேப் போடக் கூடியதாக இருந்தது.

கேக்கை ஒரே அளவாக வெட்ட கட்டர் வேண்டுமே! Electric can opener கொண்டு ஒரு தகரப் பேணியை வெட்டிக் கொண்டேன். உள்ளே இருந்த தேங்காய்ப் பாலை ஒரு கண்ணாடிப் போத்தலுக்கு மாற்றிக் கொண்டு, பேணியைக் கழுவித் துடைக்க அருமையான கட்டர் கிடைத்தது. சில கேக்குகளை வெட்டும் போது பேணியை ஒரு இடத்தில் சற்று அதிகமாக அழுத்திவிட்டேன்; சரிந்தது போல் வந்திருந்தன.

ஐஸ்சிங் பூசும் முன் கைகளைக் கழுவிக் கொண்டு, ஒரு கேக்கைச் சுற்றிலும் ஈரக் கையால் ஒற்றி எடுத்தேன். தயாராக இருந்த ஒரு சீடீ தட்டின் மத்தியில் சிறிது ஐஸிங் தடவி வைத்தேன். கேக்கைச் சுற்றிலும் ஐஸிங் பூசிய பின் சீடீயில் வைத்து விட்டு, அடுத்த கேக் வேலையையை ஆரம்பித்தேன்.

இப்படியே crumb coating உடன் அடுத்த கட்ட அலங்காரத்திற்கு கேக்குகள் அனைத்தும் தயாராகின.

இந்த இடுகையில்... பூந்தோட்டச் சொந்தக்காரியான சாசேஜ் ரோல் மேக்கருக்காகத் தயாரித்தது பற்றி:- :-)

இரண்டாவது தடவை ஐஸிங் பூசும் சமயம், கை போன போக்கில் ஐஸிங்கை ஒற்றி ஒற்றி எடுத்திருந்தேன்.

இனி... இடுகையிலுள்ள முதலாவது படத்தைப் பார்க்க வேண்டும். :-)

முன்பு முயல் கேக்கிற்குப் பயன்படுத்திய அதே பூ அச்சைக் கொண்டு பூக்களை வெட்டியிருக்கிறேன். http://www.arusuvai.com/tamil/node/32768
மகரந்தம் & கேக்கின் அடியில் கரையாக - 100's & 1000's
இலைகள் - பச்சை நிறம் சேர்த்த பட்டர் ஐஸிங் (நொஸில் இல - 27)
காம்புகள் - பச்சை நிற பட்டர் ஐஸிங் (நொஸில் இல - 2)
சற்றுச் சரிவாக வெட்டிவிட்டேன் என்றேனில்லையா! உயரமான பக்கம் பின்னால் வரத் தக்கதாக வைத்து, பூக்களை முன்னோக்கி வைத்தேன். பிழை திருத்தப்பட்டுவிட்டது. :-)
இறுதியாக, பச்சை நிற மெழுகுவர்த்தியொன்றைச் சொருகினேன்.

மீதிப் படங்கள் கண்ணில் பட்டால் அடுத்த இடுகை இதே தலைப்பில் தொடரும்.

5
Average: 4.8 (5 votes)

Comments

மோகன் மட்டும் கேட்டார் நொந்து போயிடுவார்..
எல்லோரும் உங்க கையால செம சூப்பரான கேக்கா சாப்பிடுறாங்க.. நாங்க மட்டும் பார்த்திட்டே இருக்கோம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

தாங்கன்னு கேட்டா ஒரு பார்சல் அனுப்பி வைக்கலாம். தான்னு கேட்டா! ம்ஹும்! மாட்டேன். ;))

‍- இமா க்றிஸ்

வல்லவனுக்கு... மிச்சம் நீங்களே முடிச்சிடுங்க இமா. சிடி தட்டு கப் மூடி எல்லாமே நல்ல யோசனை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி. :-) அது ஆண்பாற் சொல் இல்லையா! ;) யாராவது வல்லவனுக்கு பெண்பால் என்னவென்று சொல்லுங்களேன்! மண்டை வெடிச்சுரும் போல இருக்கு எனக்கு. :-)

மெதுவா எல்லோரும் திரும்ப ஒன்றாக வர ஆரம்பிச்சிருக்கிறதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. நானும் இனி என்ன வேலை இருந்தாலும் அறுசுவைக்கு லீவு விடுறது இல்லை என்கிற முடிவில் இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Arumai imma

வல்லவனுக்கு பெண் பால் !! வல்லவள் வலியவள்

வாவ் !குட்டி குட்டி கேக்க பாக்க அழகாயிருக்குடேஸ்ட் முடியாத நிலைமை எனக்கு ..ஆனா பரவாயில்லை மூணு குட்டிகேக்ஸ் பார்சல் அனுப்புங்க :) ஒன்றுகணவருக்கு ஒன்று ஷாரனுக்கு மூணாவதில் கொஞ்சம் யோகர்ட் டாபிங் போட்டு அனுப்புங்க ஜெஸ்ஸி பொண்ணுக்கு :) அஸ்பராகஸ் ரோல் நான் பார்த்ததில்லைஅதுவும் மாவு வைச்சி செய்றதா ? ரெசிப்பி எதிர் நோக்கறேன்

:-) இப்ப எல்லாம் மூளை கொஞ்சம் லேட்டாத்தான் வேலை செய்யுது. ரெண்டு செக்கன் யோசிச்சன். பிறகு, ஏஞ்சல் மாதிரி யாராவது வந்து சொல்லுவாங்க என்று இங்க போட்டுட்டுப் போயாச்சு. நன்றி ஏஞ்சல். நான் திரும்பவும் மறக்காம இருக்க வேணும். :-)

//அஸ்பராகஸ் ரோல் நான் பார்த்ததில்லைஅதுவும் மாவு வைச்சி செய்றதா ? ரெசிப்பி எதிர் நோக்கறேன்// அவ்வ்!! நோக்குக! நோக்குக! விரைவில் கொடுக்கிறேன். படிச்சுட்டு அடி கொடுக்காம இருக்கணும். டீல்!! ;))

‍- இமா க்றிஸ்

இமா அம்மா கேக் சூப்பர் போங்க... சிடி பிளேட் ல கேக் சான்ஸ்ஸே இல்ல., அந்த சிடி பிளேட் ஐடியா சூப்பர் என் பையன் 1 பிறந்த நாள் வரப்போகுது அதுக்கு இந்த ஐடியா தான் யூஸ் பண்ண போறேன் நன்றி இமா அம்மா...

எனக்கும் இந்த குட்டி கேக் ஐடியா பிடிச்சிருக்கு இம்ஸ்.நமக்கும் கேக் சொக்லட்ஸ் ஒரு குட்டி பீஸ் க்கு மேல போகாது.சின்னவர்கள் பேத்டே தவிர நமக்கு நீங்க சொன்ன பிரேக்பாஸ்ட் பேத்டே தான்.

நீங்க சொன்னதே மாதிரி கட்லட் அண்ட் காலைல எடுக்கக்கூடிய சில ஸ்னாக்ஸ்.

அஸ்பராகஸ் mutton bacon ல ரோல் செய்வேன் காலைல சாப்பிட பொருத்தமா இருக்குமெண்டுட்டு.

ஆனா வர வர இந்த அஸ்பராகஸ் விலை தான் ரெம்ப எகிறுது .ஏனேண்டு தெரியேல.இதுக்கு எண்டு ஒரு சீசன் இல்லியா இம்ஸ்.அண்டைக்கு மேலோட்ட்மா பில் செக் பண்ணுறன் 1 கிலோ மட்டன் ம் 4 கட்டு அஸ்பராகஸ் ம் ஒரே விலை. பட் நமக்கு மட்டனை விட வெஜ் ரெம்ப பிடிக்கும்.

நீங்க சொன்ன சி.டி ஐடியாவும் பிடிச்சிருக்கு.குட்டி கேக் க்கு ஐசிங் ல கிரம்ஸ் பொருத்தமா இருக்கு.கொப்பி அடிச்சிட வேண்டியதுதான்.

//ஒரு குட்டி பீஸ் க்கு மேல போகாது.// ஓம், அதுதான் இப்ப இந்த வேலைல இறங்கியிருக்கிறன். மிச்சத்தை ஐஸிங் இல்லாம ப்ளெய்னா வைக்கிறது.

//அஸ்பராகஸ் mutton bacon ல ரோல்// எனக்கு மட்டின் வேணாம். பேக்கன் ரோல்! கொஞ்சம் கெஸ் பண்ண ஏலுது. இருந்தாலும்... குறிப்பு தரலாமே சுரேஜினி. உங்கட பேரில முன்பாதியை பதிலாகச் சொல்லுவீங்கள் என்று எதிர்பார்க்கிறேன். ;D

//இதுக்கு எண்டு ஒரு சீசன் இல்லியா இம்ஸ்.// ;) இருக்கே! விலைக்குக் காரணமும் இருக்கு. ம்... மிச்சம் தட்டினன். ;D அதை கொப்பி பண்ணி, ஏற்கனவே தட்டிக் கொண்டு இருக்கிற இன்னொரு போஸ்ட்டோட சேர்த்தாச்சுது. பொறுத்திருக்க வேணும் வாசிக்க. ;)

//குட்டி கேக் க்கு ஐசிங் ல கிரம்ஸ் // குழப்பீட்டன் போல இருக்கு. crumb coat - முதலாவதாகப் பூசும் ஐஸிங் கோட்டிங், அதில கேக் துகழ்கள் வெளிய தெரிஞ்சாலும் பரவாயில்லை. அடுத்ததா வைக்கிற நல்ல ஐஸிங்ல கேக் தூள் வராது. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். இந்த டெக்னிக்கைத் தான் சொன்னன்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா,

அம்மாடி, எவ்வளவு நுணுக்கமான வேலை! ரசிச்சு ரசிச்சு செய்திருக்கீங்க.
படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

மகனின் நண்பர், அவரது திருமண அழைப்பிதழுடன், அவர் தங்கை செய்த ஒரு க்ராஃப்ட் வைத்துத் தந்தார்.

சி.டி.யில், குழந்தைகள் காதில் போட்டுக் கொள்ளும் சின்ன சின்ன வண்ண வளையங்களை, வளையல்கள் போல அடுக்கி, ஒட்டி வைத்து, பச்சையில் வெற்றிலை, ப்ரவுன் நிறத்தில் குட்டியாக கொட்டைப் பாக்கு போல செய்து, ஒட்டி வைத்து, சி.டி.யை தாம்பூலத் தட்டு ஆக்கியிருந்தார். வெகு அழகாக இருந்தது.

பழைய சி.டி.க்கள் உங்கள் கை பட்டு அழகாக உபயோகப் பட்டிருக்கிறன.

அஸ்பாரகஸ் என்பது ஒரு விதமான தண்டுதானே, ரொம்ப ஹெல்தின்னு சொல்லுவாங்க.

சாதாரணமாக, சின்ன துண்டுகளாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, லேசாக உப்பு சேர்த்து, செய்து கொடுத்ததுண்டு.

இந்தப் பதிவை படித்ததும், முன்னொரு நாள் தளிகாவின் இழையில் கேக் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. இப்போது மீண்டும் ஒரு முறை படித்தேன்.

இதோ அந்த இழை:

http://www.arusuvai.com/tamil/node/16922?page=3

எப்படியெல்லாம் அரட்டை அடிச்சிருக்கோம் என்று சந்தோஷமாக இருந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி விஜயா.

@ தீபா - உங்களுக்கும் என் நன்றி.
பிறந்தநாள் கேக்குக்கு இது ரொம்ப குட்டியா இருக்குமே! என்ன செய்தீங்க என்பதை பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின் மறக்காமல் வந்து சொல்லுங்கள்.

‍- இமா க்றிஸ்

//தாம்பூலத் தட்டு // ஆஹா! சூப்பர் ஐடியாவா இருக்கே!

//குழந்தைகள் காதில் போட்டுக் கொள்ளும் சின்ன சின்ன வண்ண வளையங்களை//இப்படி ஒன்று நான் கண்டதேயில்லை. ;(கூகுள் பண்ணிப் பார்த்தேன். ஒரு பக்கம் திறந்த மாதிரி இருப்பதைச் சொல்றீங்களா? இல்லை, முற்றாகவே வளையமாக இருக்குமா?

உங்கள் பழத்தட்டு யோசனை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துது சீதா. முன்னால விசிட்டிங் போறப்ப பழங்களைப் பையில் வைத்து எடுத்துப் போவோம். இப்போ ரெக்கார்ட் ட்ரேயில் வைத்து க்ளாட் ராப் போட்டு எடுத்துப் போகிறோம். :-) இப்படி எடுத்துப் போகும் ஒவ்வொரு சமயமும் உங்களை நினைத்துக் கொள்வேன். :-)

அஸ்பராகஸ் - சாத்தாவாரியின் குருத்து. நிலத்தினடியிலிருந்து கிளம்பும் போது குண்டாக இருக்கும். வளர விடாமல் அடியோடு வெட்டி எடுக்க வேண்டும். நார்ப்பொருள் அதிகம்.

//சின்ன துண்டுகளாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, லேசாக உப்பு சேர்த்து// இது நல்ல ஐடியாவா இருக்கே!. செபா பொரியல் செய்றாங்க. நான் காய்களுடன் வேக வைத்துச் சாப்பிடுவேவ். சாம்பார்ல கூட நன்றாக இருக்கிறது.

//எப்படியெல்லாம் அரட்டை அடிச்சிருக்கோம்// :-) எப்பவாவது அவங்கவங்க வேலைச் சுமை குறையும் போது திரும்ப வருவாங்க. உங்களை இங்க திரும்பப் பார்க்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு சீதா.

‍- இமா க்றிஸ்

ungal padaipu migavum arumai ma

அழகானபதிவு இமா.

அன்புடன்,

:-)அப்ப கேக் வடிவா இல்லையா! ;)
உங்கட பிறந்தநாளுக்கு என்ன கேக் செய்யலாம் என்று யோசிச்சுக்கொண்டு இருக்கிறன். :-)

‍- இமா க்றிஸ்

:-)மிக்க நன்றி சகோதரி.

‍- இமா க்றிஸ்

உங்கள பத்துதான் கேக் மாபின் எல்லாம் செய்ய ஆசை வந்து செய்தேன்... போன வருட பிறந்த நாளெல்லாம் அதில்தான் கொண்டாடினேன்... அப்புறம் சும்மா சும்மா செய்ய கூடாதுன்னு வீட்டில தடா போட்டதுல செய்யுறதா விட்டுட்டேன்...குட்டி குட்டியா அழகா இருக்கு ...ம்ம் ஆசையா இருக்கு ..

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..