கரடியனார் கண்ட பிறை!

கரடியனார் பிறை கண்ட மாதிரி... அபூர்வமாக இன்று 'தொட்டுக்கொள்ள...' வந்தேன் நான். :-)

கரடியனார்! எவ்வளவு மரியாதையான விளிப்பு!! :-)

அவருக்கும் பிறைக்கும் என்ன தொடர்பு! கரடிகள் இரவில் வெளியே வருவதேயில்லையா! அப்படித்தான் இது வரை நினைத்திருந்தேன். இன்று இணையத்தில் தேடியதில், அவை இரவில் உறங்கும் என்பதாக உறுதியாக நினைக்க முடியவில்லை. சில வகைகள் இரவில் உலவுமாம்; சில பகலிலும் இரவிலும் இரை தேடுமாம்.

கரடிக்குத் தேன் பிடிக்கும்... அமாவாசை தினம்தான் தேன் சேகரிப்புக்கு உகந்த தினம் என்பதாக என் சிறு மூளையில் பதிவாகி இருந்த தகவலும் தவறென்று இன்று தெரிந்து கொண்டேன். தேனீப் பண்ணை வைத்திருப்பவர்கள், மாதம் இரு முறை கூட அறுவடை செய்வதாகத் தெரிகிறது. கரடியனார் அமாவாசையில் உலா வந்தால்... பிறை காண மாட்டார். மீதி இரவுகளை உண்மையில் தூக்கத்தில் தான் கழிப்பாரா?

இந்த கரடியனார் பிறை காணும் கதை என்ன! நிச்சயம் அவரவருக்குத் தெரிந்த கதையைச் சொல்லுவீர்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். :-)

~~~~~
முதலாவது படத்தில் உள்ளது... எப்பொழுதோ செபாவின் பக்கத்து வீட்டுக் குட்டியருக்காகச் செய்த கரடிக் குட்டி, இல்லையில்லை... கரடியனார்! :-)

முன்பு ஒரு முறை முயற்குட்டி கேக் பற்றிய இடுகை ஒன்று வெளியிட்டிருந்தேன். இதுவும் கிட்டத்தட்ட அந்த முயல் அளவான குட்டிக் கரடி கேக். தேடுபவர்களுக்கு இலகுவாக.. டெடி கேக்! ;-)

தேவையாக இருந்தவை

கரடியனார் அச்சு :-)
ஃபொண்டன்ட் - ஒரு கொட்டைப் பாக்கு அளவு
வெள்ளைச் சீனி & பச்சை நிறம்
டூத் பிக்
பூக்கள் & இலைகளுக்கான அச்சுகள்
100's & 1000's
பட்டர் ஐஸிங்
சாக்லெட் சிப்ஸ் - ஒரு பிடி அளவு
பலட் நைஃப் - இல 1
ஸ்னாப் லொக் பை
கண்ணாடிக் கிண்ணம்
கரண்டி

கேக் - விரும்பிய கேக் கலவையை அச்சில் வேக வைத்து எடுக்கலாம். கேக்கை உதிர்த்து சிறிது ஜாம் கலந்து அதை அச்சில் இறுக்கமாக அடைத்து தட்டியும் எடுக்கலாம். என் விருப்பம் இதில் இரண்டாவது வகை தான். அளவுகள் நேரம், வெப்பநிலை எதைப் பற்றியும் கவலை இல்லை.

ஃபாண்டன்டைத் தேய்த்து பூக்கள் & இலைகளை வெட்டி, இறுக விடுங்கள். டூத்பிக்கைக் கொண்டு இலை நரம்புகளை வரைந்து கொள்ளலாம். உள்ளங்கையில் வெட்டிய பூவொன்றை வைத்து நடுவில் டூத் பிக்கின் தட்டையான பக்கத்தால் அழுத்திவிட, குழிவாக வரும். 100's & 1000's இலிருந்து விரும்பிய நிற மணி ஒன்றை எடுத்து பூவின் நடுவில் மகரந்தமாக வைத்து அழுத்தி விட வேண்டும்.

அரைத் தேக்கரண்டி அளவு பட்டர் ஐஸிங்கை தனியே எடுத்து வைக்க வேண்டும்.

சாக்லெட் ஐஸிங் - ஒரு மேசைக்கரண்டி சாக்லெட் சிப்ஸை கண்ணாடிக் கிண்ணத்திலிட்டு 20 செக்கன்கள் மைக்ரோவேவ் செய்ய வேண்டும். வெளியே எடுத்து ஒரு கலக்குக் கலக்கி விட்டு, மீண்டும் 20 செக்கன்கள் மைக்ரோவேவ் செய்ய வேண்டும். சாக்லேட் இளகி நன்கு கலக்க முடியும் போது (இந்த நிலையில் கிண்ணம் சூடாக இருந்தால் குளிர் நீர் கொண்ட பாத்திரத்தில் இறக்கி குளிர வைப்பது நல்லது.) 4 மேசைக்கரண்டி அளவு பட்டர் ஐஸிங் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். நிறம் - திருப்தியாக இல்லாவிட்டால் தேவைக்கு ஏற்ப சாக்லெட் சிப்ஸோ பட்டர் ஐஸிங்கோ கலந்து எடுக்கவும்.

தட்டில் கேக்கை வைத்து, பாலட் நைஃபால் மெல்லிதாக ஒரு படை ஐஸிங் பரவிக் கொள்ளவும். கரடியனார் அமைப்பு மாறிவிடாமல் சீராகப் பரவ வேண்டும். துகள்கள் பிரிந்து வந்தால் பொருட்படுத்த வேண்டியது இல்லை.

சற்று இறுக விட்டு, மீண்டும் ஒரு படை சாக்லேட் ஐஸிங் பூச வேண்டும். இதற்கு முன் செய்வதற்கு மூன்று சிறு காரியங்கள் உள்ளன.
1. பாலட் நைஃபைச் சுத்தமாகத் துடைக்க வேண்டும்.
2. மீதம் உள்ள ஐஸிங் போதுமா என்பதைக் கவனிக்க வேண்டும்.
3. ஐஸிங் இளக்கமாக இல்லாவிட்டால், மைக்ரோவேவில் 10 செக்கன்கள் வைத்து எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். (இது... அளவையும் அவனையும் பொறுத்து மாறும்.)

இரண்டாவது பூச்சு பூசிய கையோடு, டூத்பிக்கினால் குட்டிக் கோடுகள் இழுத்தது போல வரைந்து விட்டால் ரோமம் வரைந்தாகி விட்டது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம்... கோடுகளின் போக்கு.

செவிகளைப் பற்றிப் பிரச்சினை இல்லை. வெளி வட்டம் மட்டும் வரைந்தால் போதும். மீதி இடங்களை வரைய வேண்டியதில்லை. பாதங்களும் அப்படியேதான். இந்தக் கரடியனார் உட்கார்ந்த நிலையில் இருந்தார். கால் ரோமத்தை மேல் நோக்கி இழுத்தேன். கைகளுக்கு - வளைத்து வரைந்தேன். முகம்... ஒவ்வொரு முறையும் மூக்கு நுனியிலிருந்து வெளி நோக்கி இழுத்தேன்.

இனி... தனியே எடுத்து வைத்த வெள்ளை ஐஸிங்கை ஸ்னாப் லாக் பையில் போட்டுக் கொண்டு, அதன் ஒரு மூலையை சின்..னதாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதைக் கொண்டு, நகங்கள், கண், மூக்கு, வாய் வரைய வேண்டும். பிறகு மீசைக்கு சின்னதாகப் புள்ளிகள் வைத்தால் கரடியனார் முழு உருவம் பெற்று விட்டார். சொல்ல மறந்தேன்... ;) கண் விழிகளுக்கு ஒவ்வொரு கறுப்பு நிற மணிகளைப் பொறுக்கி வைக்க வேண்டும். 100's & 1000's - ல் பொருத்தமான நிறம் கிடைக்காவிட்டல், கடுகு இரண்டைப் பயன்படுத்தலாம்.

தட்டைச் சுத்தம் செய்து கொண்டு புல்லைப் பரவி பூக்களையும் இலைகளையும் வைத்தால் வேலை முடிந்தது.

புல்லுக்கான செய்முறை விளக்கம் காண -http://www.arusuvai.com/tamil/node/23576

~~~~~
கரடியனார் கண்ட பிறையைக் காட்ட இயலவில்லை.. முழு நிலவையாவது காட்டலாம்.. ;-)

இரண்டாவது படத்தில் ஒரு குட்டிமுயல் அச்சு தெரிகிறதா? அது சாக்லேட் அச்சு. வெள்ளை ஃபாண்டன்ட்டை அந்த அச்சில் அழுத்தி எடுத்து, காய வைத்தேன். வெளியே எடுப்பது சிரமமாக இருந்தது. வெள்ளை சாக்லெட் சிப்ஸை உருக்கி ஊற்றியிருந்தால் சுலபமாக இருந்திருக்கும் என்பது பின்பு வெளித்தது.

கேக்கை வட்டத் தட்டில் ஊற்றியிருந்தேன். நடுவில் பொங்கியிருக்க, அப்படியே வைத்து, இறுக்கமாகக் குழைத்த வெள்ளை பட்டர் ஐஸிங்கைப் பூசி பாலட் நைஃபால் கண்டபடி இழுத்துச் சுருட்டிவிட்டேன்.

நிலா நடுவில் முயல். இது... சில வருடங்கள் முன்பு, ஒரு நட்பின் பிறந்ததினத்தை ஒட்டி தயாரித்தது. நட்பு வேறு நாட்டிலிருக்கிறார்; பெயருக்கும் சந்திரனுக்கும் தொடர்பிருந்த காரணத்தால் சுலபமாக இந்த அலங்காரம். அந்த நட்பின் பெயரால் இந்தக் கேக், எம் பாடசாலைச் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு அன்பளிப்பாகப் போய்ச் சேர்ந்தது. எங்கள் அதிபர் சொல்லுவார், 'எப்பொழுது ஒரு குடும்பத்திற்கு உணவுப் பொதி அனுப்புவதாக இருந்தாலும் அதனுள் குடும்பத்தின் சின்ன உறுப்பினர்களுக்காக ஒரு ட்ரீட் வைக்க வேண்டும். அல்லாவிட்டால் நாம் செய்வது பெரியவர்களுக்கான உதவியாக மட்டுமே இருக்கும்; பொதியைப் பிரிக்கும் சமயம் சின்னவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கக் கூடாது,' என்று.

5
Average: 5 (4 votes)

Comments

:-) சாரி கேட்க நீங்க தப்பு எதுவும் பண்ணல.
புது மெம்பர், தெரிஞ்சிராது என்கிறதால தான் சொன்னேன். :-)

‍- இமா க்றிஸ்

Nan ipo enathu pathilai sareyna idathil potu ullen tq sis