பெண்குழந்தை

வணக்கம் சகோதரிகளே!

எனக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உண்டு. பெண்குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம். பெண்குழந்தை பெறுவதற்கு ஏதேனும் வழிமுறைகள் உண்டா? சகோதரிகள் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்...............

என்னை பொருத்தவரையில் வழி முறைகள் எதுவும் இல்லை. ஆனால் போன பிறவியில் நீங்கள் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் அதை பெண் குழந்தையின் வடிவத்தில் கட்டாயம் இந்த பிறவியில் பெறுவீர்கள்.இல்லையென்றால் No chance,sorry Mrs shanthosh.

ஓ அப்படியா... Mam,

அப்போ புண்ணியம் செய்தவர்கள் மட்டுந்தான் பெண்குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். நல்லது. நன்றி.

விஞ்ஞான ரீதியாக வழிமுறைகள் உண்டா? விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்? நன்றி.

உங்களின் கேள்வி சம்பந்தமாக என் கருத்துக்களை கூற விரும்புகிறேன். ஆண் குழந்தை வைத்திருப்பவர்கள் பெண் குழந்தைக்கும், பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் ஆண் குழந்தைக்கும் ஆசைப்படுவது மனித இயல்புதான். பொதுவாகவே குழந்தை என்பது அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது இறைவனின் அருட்கொடைதான்! இறைவன் தான் யாருக்கு விரும்புகிறானோ அவர்களுக்கு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது இரண்டையுமோ கொடையாக கொடுக்கிறான். சிலருக்கு குழந்தையே இல்லாமலும் விட்டுவிடுகிறான். ஆக எதுவாக இருந்தாலும் எல்லாமே அவனுடைய அதிகாரத்திலும் விருப்பத்திலும் உள்ளதுதான். இதற்கு விஞ்ஞான முன்னேற்றத்தை வைத்து எதுவும் செய்ய இயலாது. எனவே நீங்கள் பெண்குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இறைவனிடமே முறையிட்டு பிரார்த்தியுங்கள். உங்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம். நன்றி!

திருமதி. மனோகரி அவர்களா இப்படி ஒரு பதிலை கொடுத்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. பெண்குழந்தை இல்லாதவர்கள் எல்லாம் புண்ணியம் செய்யாதவர்கள் என்றா சொல்லுகின்றார்? மனசை கஷ்டப்படுத்தும் பதிலை சொல்லி இருக்கிறார். ஆறு பெண்குழந்தைகள் பெற்று அல்லாடுகின்றவர்கள் நிறைய புண்ணியம் செய்தவர்கள் என்று எடுத்துக்கலாமோ..

கொஞ்சம் சீரியஸ்சான விசயமாக தெரிகிறது. பெரியவங்க பேசிக் கொள்ளும்போது சின்னப் பையனா உள்ளே மூக்கை நுழைக்க தர்மசங்கடமா இருந்தாலும், எனக்குத் தெரிஞ்ச (படிச்சு தெரிஞ்சுக்கிட்டதுதாங்கோ..) சில விசயங்களை இங்கே சொல்லலாம்னு நினைக்கிறேன்.

புண்ணியம், இறைவன் கொடை இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விசயங்கள். அறிவியல் கூற்றின்படி பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பது இறைவன் அல்ல. ஆணின் உயிரணுவிலும், பெண்ணின் சினை முட்டையிலும் உள்ள குரோமோசோம்கள்தான். இரண்டிலும் தலா 23 குரோமோசோம்கள். இருப்பினும் குழந்தைப் பிறப்பைத் தீர்மானிப்பது கடைசி செக்ஸ் குரோமோசோம். பெண்ணுக்கு X குரோமோசோம்கள் மட்டுமே உண்டு. ஆணுக்கு X, Y இரண்டுமே உண்டு. சினைமுட்டைக்குள் சென்ற உயிரணு X ஆ, Y ஆ என்பதை வைத்துதான் குழந்தை ஆணா, பெண்ணா என்பது முடிவாகிறது. XX பெண், XY ஆண்.

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிக்கும் சங்கதி ஆணிடத்தில்தான் உள்ளது என்றாலும், அவனாக விருப்பப்பட்டு அதை செய்ய இயலாது. இந்த இடத்தில்தான் என்போன்றவர்கள் இயற்கையையும், நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனையும் காரணம் காட்டுவார்கள். மற்றபடி இடப்பக்கமாக படுத்தல், அதிகாலை நேர உறவு போன்ற விசயங்கள் எல்லாம், குழந்தையை தீர்மானிக்கும் நிரூபிக்கப்பட்ட விசயங்கள் அல்ல. எங்கோ ஒன்றிரண்டு எதேச்சையாக நடந்து இருக்கலாம். அவைகள் விதிகள் அல்ல. விதிவிலக்குகள்.

சரி, XX குரோமோசோம்களை இணையச் செய்வதற்கு வழிகளே கிடையாதா? இன்றைய தேதியில் இருக்கின்றன. IVF, In Vitro Fertilisation முறையில் பெறப்படும் குழந்தைகளை நாம் அப்புக் குட்டியா, அம்முக் குட்டியா என்று முன்கூட்டியே தீர்மானிக்க வசதிகள் உள்ளன. மேலும் தகவல்கள் வேண்டுமெனில் IVF ஐ googleல் டைப் செய்து தேடிப்பாருங்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த முறையை நாடுவதில் அர்த்தம் உள்ளது. உங்கள் பிரச்சனைக்கு போலி மருத்துவர்கூட இந்த தீர்வினை பரிந்துரைக்கமாட்டார்.

ஒன்று தன்னிடத்தில் இல்லாதபோதுதான் அதன்மீது ஆசை அதிகமாக இருக்கும். கிடைத்தப்பிறகு குறைந்து போகலாம். விருப்பப்படுவதில் தவறில்லை. அதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்ற உங்கள் கேள்வியிலும் தவறில்லை. எளிய முறைகள் ஏதேனும் இருந்தால் அதனை முயற்சி செய்யப் போகின்றீர்கள், இல்லையென்றால் வருவதை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள். இதுதான் உண்மை.

இறுதியில் ஒன்று மட்டும் கூற விரும்புகின்றேன். பெண் குழந்தை இல்லா கவலையை போக்க, ஆண் குழந்தையை பெண் குழந்தை போல் வளர்த்து அதில் பரவசம் அடையும் செயலை மட்டும் செய்துவிடாதீர்கள். எனக்கு அறிமுகமான குடும்பத்தில் நடந்த விசயம். பெண்மணி உங்களைப் போலவே பெண்குழந்தைப் பிரியர். இரண்டாவதும் ஆண் குழந்தை என்றதும், சிறுவயதில் இருந்தே அதற்கு பெண் உடையணிவித்து, சீவி சிங்காரித்து, நடனம் கற்றுக் கொடுத்து இப்போது உடலில் பாதி பெண்மைத்தனம் வந்துவிட்டது. வளர்ந்த நிலையில் இன்று நிறைய விசயங்களில் அவர்களுக்கு தர்மசங்கடம்.

அன்பு ஈஸ்வரி அவர்களுக்கு, எப்படி இருக்கின்றீர்கள்? பெண் குழந்தைகளை பெறுவது சம்பந்தமாக என்னுடைய கருத்தால் ஏற்பட்ட மனகஷ்டத்திற்க்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். நான் என்னுடைய கருத்துக்களை எழுதும் பொழுது அது என்னுடன் ஏதாவதொரு முறையில் என்னுடன் தொடர்புடையதாகத் தான் இருக்கும், அதை மனதில் வைத்துக் கொண்டு தான் எழுதுவேனே தவிர,கண்ணில் கண்டதையோ காதில் கேட்டதையோ வைத்து, அல்லது மூன்றாம் மனிதர் கூறிய செய்திகளை வைத்தோ எழுதுவது கிடையாது. காரணம் மற்றவர்களின் Half cooked message வைத்துக் கொண்டு பிறருக்கு உதவ முடியாது என்று நம்புகின்றேன்.

அதைப் போலத்தான் சந்தோஷி அவர்களுக்கும் எனது அனுபவத்தினால் கிடைத்த கருத்தை கூறினேனே ஒழிய யாருடைய மனதையும் கஷ்டப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. மேலும் இயற்க்கையான முறையில் ஆண் குழந்தை, பெண்குழந்தை என்று தேர்ந்தெடுத்து பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை என்ற உண்மையை வலியுறுத்துவதர்க்காகவும், பெண் குழந்தைகளின் மகிமையை நானும் ஒரு பெண் என்ற முறையில் அவர்களை மிகைப்படுத்தியும் கூற நினைத்து தான் போன பிறவியின் புண்ணியம் என்று குறிப்பிட்டேன்.

தங்களின் கூற்றுப்படி ஆறு பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் அல்லாடுவதாக கூறியிருந்தீர்கள். ஆறு அல்ல பதினாறு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களும் அல்லாடுவதாக யார் கூறினாலும் அதை நான் நம்பமாட்டேன். காரணம் அல்லாடுவது அவர்கள் அல்ல, அவர்களை அல்லாட விடுவது இந்த சமுதாயம் தான். ஐந்து பெண்ணை பெற்றவன் அரசனானாலும் ஆண்டி ஆவான், என்று இந்த சமுதாயம் தான் எதிர் பார்க்கின்றதே தவிர அவர்கள் அவர்கள்பாட்டுக்கு எல்லோரையும் போல சந்தோசமாக வாழ்ந்துக் கொண்டுத்தான் இருக்கின்றார்கள்.

ஆனால் ஒரு சில பெற்றோர்களின் தவற்றால் தான் இதுப் போன்ற பெயர்களை நம் பெண் சமுதாயத்திற்க்கு ஏற்படுத்தி விடுகின்றார்கள். அது என்னவென்றால் விரலுக்கேத்த வீக்கம் வேண்டும் என்ற பழமொழிகூட உண்டு.ஆனால் பெண்ணை பெற்றவர்கள்,தங்களின் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு மேல் உயர்ந்த இடத்தில் பெண்ணை கொடுக்க ஆசைப்பட்டு தகுதிக்கு மீறிய வாக்குகளை கொடுத்து விட்டு பிறகு அல்லாடுகின்றார்கள் என்பது தான் உண்மை. இந்த இடத்தில் உங்களின் கருத்தை நான் முற்றிலும் ஆமோதிக்கின்றேன். ஆக இந்த அல்லாட்டம் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டதே தவிர பெண்குழந்தைகள் பெற்றதால் அல்ல.

ஆக இவ்வாறாக அவர்களாகவே அல்லாட்டங்களை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்த்து விட்டு வேறென்ன பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை.அதை போல் ஆறு ஆண்குழந்தைகளைப் பெற்றவர்கள் என்ன சுகங்களை அனுபவிக்கின்றார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை.

ஆகவே இதுப் போன்று பெண்களை இழிவுபடுத்தும் பழைய பஞ்சாகங்களை, பெண்களாகிய நாம் தான் முதலில் அதை தூர எரிந்து விட்டு பாரதி கண்ட புதுமை பெண்ணாக, ஒவ்வொறு பெண்மணியும் மாற வேண்டும். எந்த ஆணும் ஒரு பெண்ணை அடக்க நினைப்பதில்லை. அவர்களுக்கு அந்த சந்தர்பத்தை நாம் தான் உண்டாக்கி கொடுக்கின்றோம் என்பது தான் உண்மை, இதைப் பற்றி மற்றொரு தலைப்பில் பார்க்கலாம்.

இனிமேல் பெண்ணைப் பெற்றவர்கள் அல்லாடுகின்றார்கள் என்று யாராவது கூறினால் அதை நம்பாதீர்கள்,அவ்வாறு கூறவும் விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த அருமையான தலைப்பில் எனது கருத்தக் கூற சந்தர்ப்பம் கொடுத்த சந்தோஷிக்கும்,ஈஸ்வரிக்கும் எனது நன்றிகள் நன்றி.

திரு அட்மின் அவர்களுக்கு,எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் ,அப்பொருள் பெய்ப்பொருள் காண்பதறிவு என்று மிஸ்டர் வள்ளுவர் கூறியுள்ளது போல், வயதில் சிறியவராக இருந்தாலும் இந்த XX, XY சமாச்சாரத்தைப் பற்றி அருமையாக விளக்கமாக எழுதியுருந்தீர்கள், தேவைப்படுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் எனக்கு அறிவியல் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கேட்ட உணர்வை ஏற்ப்படுத்தியது மிக்க நன்றி.

ஆனால் கடைசி பத்தியில் தங்களின் கருத்து தான் எனக்கு சற்று குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.காரணம் பெண்குழந்தை இல்லாதவர்கள் ஆண் குழந்தைக்கும், அதேப் போல் ஆண் குழந்தை இல்லாதவர்கள் பெண் குழந்தைக்கும் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு உடை அலங்காரங்களை செய்து பார்த்து மகிழ்வதும், அதன் மூலம் அவர்களின் ஆசையை தீர்த்துக் கொள்வதும் நமக்கு புதிய விசயம் அல்ல, இவ்வாறு காலங்காலமாக பெற்றோர்கள் செய்து மகிழ்வதைப் பார்திருக்கின்றேன், நானும் இதுப் போன்று செய்தும் இருக்கின்றேன். ஆனால் இந்த செயலானது எப்படி ஒரு ஆணிற்க்கோ, அல்லது பெண்ணிற்கோ அவர்களின் பாலியலில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்று தெரியவில்லை. பாலியலில் மாற்றம் அவர்களின் உடலில் ஏற்ப்படும் அல்லது சுரக்கும் வேதி பொருட்கள் தான் காரணம் என்று தான் நான் அறிந்துவைத்துள்ளேன்.

பொதுவாக அல்லது, ஒரு சில நடனம் கற்றுக்கொள்ளும் ஆண்களிடமும், நடனம் பயிற்றுவிக்கும் ஆண்களிடமும்,ஒரு வித பெண்மைதன்மை இருப்பதை கவனித்திருக்கின்றேன். அது ஒருவேளை அவர்கள் நடனத்தின் முக்கிய அம்சமான அபிநயங்களை, எப்பொழுதும் செய்வதால் ஏற்ப்பட்ட மாற்றமாகவும், அதன் மூலமாக உடம்பில் ஏற்ப்பட்ட flexibility ஆகவும் இருக்கலாமோ என்று தான் நான் நினைக்கின்றேன்.ஆகவே இந்த இரண்டையும் இணைத்து அது பெற்றோர்களின் செய்கையால் வந்தது என்று தங்களின் கருத்து தவறாக இருக்குமோ! அல்லது எனது கருத்து தவறாக இருக்குமோ, என்ற ஐய்யபாட்டை நீக்க வழியுன்டா என்று கூறவும் நன்றி.

நீங்கள் குறிப்பிடும் அனைவரும் செய்யக்கூடிய உடையலங்கார உதாரணம், ஏதோ மாறுவேடப் போட்டிக்கு தயார் செய்வதுபோல் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் செய்வது. ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் பையனாக்கிவிடுவீர்கள். இதனை எல்லாப் பெற்றோரும், மற்றோரும் செய்கின்றனர். இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.

நான் குறிப்பிட்ட உதாரணம் கொஞ்சம் தீவிரமானது. பெண் குழந்தையாய் வளர்ப்பது என்பது வேறு. இது நிச்சயம் அந்தப் பெற்றோரின் தவறுதான். நிறைய விளக்கம் கொடுக்க முடியவில்லை. உடலில் பாதி பெண்மைத்தனம் வந்துவிட்டது என்று நான் குறிப்பிட்டு இருந்த வார்த்தை, இப்போது மீண்டும் படிக்கையில் கொஞ்சம் தவறாகத் தெரிகின்றது. நான் சொல்ல நினைத்தது, நடை, உடை, பாவனை மற்ற செயல்பாடுகளை. அதை உடல் செயல்பாடுகளில் பெண்மைத்தனம் என்று எடுத்துக் கொள்ளவும். உடல் உறுப்புகளில் மாற்றங்கள் இல்லை.

நடனம் கற்றுக்கொள்பவர்கள், கற்றுக்கொடுப்பவர்கள் குறித்து நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பெரும்பாலானவர்கள் சாதாரணமாக பேசும்போதே அபிநயம் பிடிப்பர். பெண்களைப் போலவே கண்களில் பல நூறு பாவங்களை மாற்றி மாற்றி வெளிக்காட்டுவர். சிலருக்கு பேச்சுக்கூட மாறியிருக்கும். இத்துடன் நின்றுவிட்டால் பரவாயில்லை. மனதளவில் தான் ஒரு பெண் என்று நம்ப ஆரம்பித்துவிட்டால் என்னவாகும்? நான் குறிப்பிட்ட உதாரணம் இந்த வகை. இவருக்கு மனரீதியில் நிறைய மாற்றங்கள். இதற்கு மூலக்காரணம் பெற்றோர்கள்(குறிப்பாக தாயார்) என்பது நான் கண்டறிந்த உண்மை அல்ல. அவர்கள் சென்று சந்தித்த பிரபலமான மனநல மருத்துவர் சொன்னது. குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பது அறியாமல், தங்களின் மனதிருப்திக்காக செய்யப்படும் இம்மாதிரியான செயல்கள், பெற்றோர்கள் ஒருவித மனநோயாளிகள் என்பதை அடையாளம் காட்டுகின்றது.

திரு அட்மின் அவர்களுக்கு, உடனடியாக பதிலைத் தந்து எனது ஐய்யப்பாட்டை நீக்கியதற்க்கு மிகவும் நன்றி. நிச்சயமாக மனநோயாளியான பெற்றோர்களால் ஒரு சில குழந்தைகளுக்கு இதுப் போன்ற ஆபத்துக்கள் வர வாய்ப்புள்ளது என்பது ஆபத்தான உண்மைதான். ஆனால் இதுப் போன்ற செயல்கள் எங்கோ இலட்சத்திலோ, கோடியிலோ உருவாகும் என்பதால் பயப்பட தேவையில்லை என்று தான் நினைக்கின்றேன். குழந்தைகளின் மீதுள்ள ஆசையைக் கூட வரம்பு மீறாமல் பார்த்துக் கொண்டால் எல்லோருக்கும் நல்லது தான்.தங்களின் கருத்தை வாசிக்கும் எல்லாப் பெற்றோர்களுக்கும் இது ஒரு நல்ல எச்சரிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சரி அது போகட்டும்.உங்களிடம் நேரிடையாக ஒரு கேள்வி. அதாவது பெண்களைப் போலவே கண்களில் ஒரு நூறு கூட இல்லை, பல நூறு பாவங்களை மாற்றி மாற்றி...,என்று எழுதியிருந்தீர்கள். அப்படியானால் உங்களிடன் பேசும் எல்லாப் பெண்களும் இப்படிதான் பாவங்களுடன் பேசுவார்களோ? விருப்பம் இருந்தால் கூறவும்,சும்மா... சும்மா... ஒரு ஜோக்குக்கு தான் கேட்டேன்,நன்றி.

கேள்வியை தொடக்கிவிட்டு ஆளையே காணோம் என்று நினைத்தீர்களா? வீட்டில் விருந்தினர்கள் வந்தபடியால் இந்தப்பக்கம் வரமுடியவில்லை. இங்கு பார்க்கையில் சிறிய விவாத மேடையே நடந்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் உங்கள் உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவித்துள்ளீர்கள். அனைவருக்கும் எனது நன்றிகள்.

திரு பாபு விரிவான விளக்கத்தையே தந்துள்ளீர்கள். நீங்கள் சொன்னதைப் போன்றே வருவதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். இருந்தாலும் ஒரு சிறிய நப்பாசைதான்.

கடவுள் மீதிலும் - இயற்கை மீதிலும் உள்ள நம்பிக்கையில் பெண் குழந்தையின் கனவுகளை சுமந்து கொண்டு இருக்கிறேன்.
நன்றி

மேலும் சில பதிவுகள்