கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம்

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்' என்னும் பழமொழிகள் உண்டு. ஆனால் எனது மைத்துனரின் கல்யாணமோ கலாட்டாகவும், விபரீதமாகவும், வித்தியாசமாகவும், வேதனையான‌ சம்பவமாகவும் நடைபெற்றது.

ஆரம்பம் முதல் கடைசி வரை குழப்பமாகவே எல்லா நிகழ்ச்சிகளும் நடந்தது. நினைக்கும் போதெல்லாம் அது கனவா, நினைவா, நிஜமா, உண்மையா, என்று இன்று வரை மனதில் போராட்டமாகவே இருக்கிறது.

திருமண‌ அழைப்பிதழ் கொடுத்து உறவினரையும், நண்பர்களையும் அழைத்துவிட்டோம். மணமக்கள் அழைப்பு. பெண் வீட்டாரும் மண்டபத்திற்கு வந்து விட்டனர். மணமகன் ஊரில் திருமணம். முதல் பிரச்சனை ஆரம்பம்.

கல்யாணப்பந்தல், மணமகள் தலை அலங்காரப் பூக்களுக்கு பணம் வாங்கிய‌ பூ அலங்காரர் ஊரைவிட்டே ஓடிவிட்டார். மணப்பெண்ணோ தான் ஜடை அலங்காரம் செய்துக் கொள்ளாமல் மண‌ மேடைக்கு வர‌ மாட்டேன் என்று பிடிவாதம். அவளை சமாதானம் செய்வதற்குள் எங்களுக்கு கல்யாணமே வெறுத்துப் போனது. எப்படியோ சமாளித்து சடங்குகளை செய்தோம். விருந்தினை முடித்தோம்.

சிறிது ரிலாக்ஸாக‌ மண்டபத்திற்கு வெளியே நாங்கள் அமர்ந்தோம். திடிரென்று உருட்டுக் கட்டைகளுடன் சிலர் ஓடிவந்தனர். நாங்கள் பயந்து கத்தினோம். கல்யாணத்திற்கு வந்த‌ மணமகனின் நண்பர்கள் அவர்களது கார் கண்ணாடியை உடைத்து விட்டார்களாம், அவர்களின் மண்டையை உடைக்காமல் போக‌ மாட்டோம் என்று ஒரே கூப்பாடு. அவர்களை சமாளித்து, கண்ணாடிக்கு நஷ்ட‌ ஈடும் கொடுத்து இரண்டாவது பிரச்சனையை சமாளித்தோம்.

இதற்கிடையே பூவிற்காக‌ கடைக்கடையாய் ஏறி கிடைத்த‌ பூவை அதிக‌ விலை கொடுத்து வாங்கி மாவிலை, தென்னை ஓலையுடன் கல்யாணமேடையை அலங்கரித்து ஒப்பேத்தினோம்.

பொழுதும் விடிந்தது. முகூர்த்தப்புடவை தட்டை கையில் வைத்துக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று மயக்கமானார். காபி முழுவதும் முகூர்த்தப் புடவையில்? மயக்கமானவருக்கு உதவி செய்வதா/ புடவையை சரி செய்வதா/ என்ற‌ நிலமையில் அழுதே விட்டோம். இது மூன்றாவது பிரச்சனை. எப்படியோ புடவையை ஈரத்துணியால் துடைத்து கொஞ்சம் சரி செய்து , உள் பக்கமாக‌ மடித்து சமாளித்தோம்.

அப்படி, இப்படி பாடுப்பட்டு திருமணத்தை முடித்து பெருமூச்சு விட‌ நான்காவது பிரச்சனை ஸ்டாட் ஆனது. மணமக்களுடன் பொங்கல் பானையுடன் சுற்றிய‌ பிள்ளையின் காலின் மேல் பொங்கல் பானை விழுந்து விட்டது. அந்த பிள்ளையை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று எல்லா செலவையும் ஏற்றுக்கொண்டது ஒரு தனிக் கதையானது.

அடுத்தக் கட்ட‌ பிரச்சனை தாங்க‌ உச்சக் கட்டம். மணமக்களை அழைத்துக் கொண்டு பெண் வீட்டார் மறுவிருந்துக்கு சென்றனர். நாங்களும் சிலர் சென்றோம். மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து பாலும் பழமும் கொடுத்தனர். அப்போது ஒரே கூச்சலுடன் மணமகளின் தாயார் கத்தினார். கதறி அழுதார். என்ன‌ என்று எங்களுக்கு புரிய‌ வில்லை. கொஞ்ச‌ நேரம் பொறுத்தே தெரிந்தது. பஸ்ஸில் வரும் போது கூட்டத்தில் யாரோ அவர்களது மாங்கல்யத்தை அறுத்து எடுத்து சென்றுள்ளனர். என்ன‌ ஒரு கோரமான‌, கொடுமையான‌ நிகழ்ச்சி. எங்களால் நம்ப‌ முடியவில்லை. இப்படியெல்லாமா ஒரு திருமணத்தில் நடக்கும். எத்தனை பிரச்சனைகளை சமாளிப்பது என்று மனம் கொந்தளித்தது.

அப்படியும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அமைதி படுத்தினோம். ஆனால் அத்தனை கஷ்டப்பட்டும் பலனில்லாமல், பயனில்லாமல் போனதுதான் மிகப் பெரிய‌ கொடுமை, அந்த‌ மணமக்கள் ஒரு நாள் கூட‌ சேர்ந்து வாழவும் இல்லை. தனித்தனியாகவே வாழ்ந்தனர். காவல் துறை உதவியுடன் பிரிந்தே வாழ்ந்தனர். கல்யாணமாகி மூன்று வருடத்திற்குள் இருவரும் இறந்தும் விட்டனர்.

இதற்குத்தானா இவ்வளவு பாடுபட்டோம் என்று எண்ணி நாங்கள் வருந்தாத நாளில்லை. என்னால் மறக்க‌ முடியாத‌ கல்யாணம் இது.

4
Average: 3.4 (5 votes)

Comments

சிரித்துக் கொண்டே படித்தேன். கடைசியில்... ;(
என்ன ஆயிற்று? ஏன் பிரிவு? பிறகு மரணம் எப்படி? சொல்ல முடிந்திருந்தால் கேட்காமலே சொல்லியிருப்பீர்கள். அவர்கள் இருவரதும் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒரு சிறு செபம் சொன்னேன்.

//இதற்குத்தானா இவ்வளவு பாடுபட்டோம்// :-) இது... கடைசியில் கேக் பெட்டிகளைக் குப்பையாகப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது உண்டு. அவற்றிற்காக எவ்வளவு நேரம் செலவளிக்கிறோம். :-)

ஒரு கலியாணத்தில் மாப்பிள்ளை வீட்டுப் பெண் தட்டில் கூறைப் புடவையை எடுத்து வந்தார் - எல்லோரிடமும் ஆசி வாங்க. ஒரு வயதானவர் முன்னால் சற்று நேரம் நிற்க வேண்டி இருந்தது. அவர் ஆசி வழங்காமல் தன் நேரம் எடுத்து டம்ளரிலிருந்த காப்பியைப் பருகிக் கொண்டு இருந்தார். (அவர் மணமகளின் தந்தை என்பது பிறகு தான் எங்களுக்குத் தெரிய வந்தது.) வந்தவர் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க, அந்த அப்பா சட்டென்று காப்பி டம்ளரைத் தட்டில் ( கூறைப் புடவை மேல்) வைத்தார். தட்டுடன் நின்றவருக்கு குபீர் சிரிப்பு. ;D அவருக்கு பார்வை குறைவாம்.

ஏதாச்சும் ஒரு படம் போட்டிருக்கலாம் போஸ்ட்டுக்கு. :-)

‍- இமா க்றிஸ்

இந்த‌ கல்யாணத்தில் முதல்ல‌ இருந்தே ஏனோ எல்லாமே சரியில்லாம‌ நடந்திருக்கு.

//இப்படியெல்லாமா ஒரு திருமணத்தில் நடக்கும். எத்தனை பிரச்சனைகளை சமாளிப்பது// உண்மை தான் ரஜினி.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக‌ ஒரு வழக்கு.
ஆயிரம் காலத்துப் பயிர்னும் சொல்வாங்க‌.

நல்லதா நினைச்சி தான் செயல்படுறோம்.
ஆனா சிலசமயம் நம்மையும் மீறி ஏதோ நடந்து விடுகின்றது.

ஹாய்,
//என்ன‌ ஆயிற்று//ஏன் அப்படி//உண்மையான‌ அக்கறையுடன் கேட்டதற்கு நன்றி இமா. அந்த‌ மணப்பெண் பருவம் அடையாதவள். அந்த‌ உண்மையை தெரிந்தவுடன் , ஏமாற்றிவிட்டார்களே என்று மணமகன் தன் முடிவை தானே தேடிக்கொண்டார். தாய், சகோதர்களின் ஏச்சுக்கு ஆளாகி, சரியான‌ உணவு, உடையின்றி மணமகளும் வறுமையின் கொடுமையில் இறந்துவிட்டாள். மணமகன் வீட்டில் ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டும் அந்த‌ பெண்ணை காப்பாற்ற வில்லை என்பதே மிகவும் கொடுமை.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

///இந்த‌ கல்யாணத்தில் முதலில் இருந்தே ஏனோ எல்லாமே சரியில்லாமல் நடந்திருக்கு////உண்மை நிகிலா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

மிகவும் கவலையான‌ விடயம்.(கதை அல்ல‌ நிஜம் என‌ தலைப்பு இட்டிருக்கலாம்.)

//அந்த‌ மணப்பெண் பருவம் அடையாதவள்.// சின்னப் பெண்ணோ! அல்லாவிட்டாலும் கூட, பெரியவர்கள் செய்தது தவறுதான்.

பாவம் அவர்கள் இருவரும். ;((

‍- இமா க்றிஸ்

Sorry for posting here. Why receipes are not updated in arusuvai.com..