நேற்று! இன்று!! நாளை!!!

நேற்று...

ஏற்கனவே எனக்கு வலைப்பூவொன்று இருக்கிறது. (எங்கே என்னவென்றெல்லாம் யாரும் கேட்கவும் கூடாது; அப்படி யாரும் கேட்டாலும் தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் கூடாது. டீல்! :‍) இப்போதே நன்றி.)

ஏன் அதைச் சொல்ல ஆரம்பித்தேன்! ம்... நினைவுக்கு வந்துவிட்டது. :‍‍)) அங்கு இடுகைகளில் கொடுக்கும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எதையும் இங்கு கொடுக்க முடிவதில்லை. சொற்களின் கீழே கோடு, சொற்களை எழுதி.... குறுக்கே கோடு அடிப்பது, எழுத்துகளை நிறங்களில் எழுதுவது, படிகள் அமைப்பது, fading effects, ஹைலைட் செய்வது எவையும் முடிவதில்லை. இவற்றுள் சொல்லப்பட்ட‌ கடைசி விடயம்... எனக்கு மிகவும் பிடிக்கும். ஹைலைட் செய்யும் வார்த்தைகளை எந்த நிறத்தில் ஹைலைட் செய்கிறோமோ அதே நிறத்தில் எழுத்தையும் தட்டினால் விடயம் தெரியாதவர்கள், ஏன் தெரிந்தவர்கள் கூட பல சமயம் கவனிக்க மாட்டார்கள். வார்த்தைகளுள் ஒளிந்து விளையாடலாம். இங்கு அவை முடியாது; பரவாயில்லை. :‍)

இப்போ, உண்மையில் நேற்று என்ன‌ ஆகிற்றென்று சொல்கிறேன்.

சில சமயம், 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்,' என்று ஏதாவது கிடைக்கும் அல்லவா? அப்படி என்னிடம் வந்து சேர்ந்தன‌ சில‌ wood burning tips. உண்மையில் இலவசங்களல்ல‌ இவை. தேவைப்பட்ட உபகரணம் தனியே விற்பனைக்கு இருக்கவில்லை; இவற்றையும் சேர்த்தே வாங்க‌வேண்டியதாயிற்று.

ஒரு தடவை, உறவினர் ஒருவர் விடுமுறையில் சென்ற‌ போது, அவர்கள் வீட்டையும் செல்லப் பிராணியையும் கவனிக்கும் வேலையை எங்களிடம் ஒப்படைத்தார். விடுமுறை முடிந்து வந்த‌ போது, கரண்டிப் பகுதியில் ஓர் வீட்டின் படமும் கைபிடியில் _ 'Thanks for looking after our house.' என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்ட‌ மரக்கரண்டி ஒன்றை வாங்கிவந்து கொடுத்தார்கள். அன்று முதல் அடி மனதில் இந்த‌ வேலையை என்றாவது முயற்சி செய்து பார்க்க‌ வேண்டும் என்னும் ஆவல் இருந்துவந்தது.

நேற்று என் கனவு நனவாகிற்று. கன்னி முயற்சி இது. க்றிஸ்ஸின் workshop குப்பைத்தொட்டியில் கிடைத்த‌ MDF பலகைத் துண்டொன்றைப் பயன்படுத்தினேன். வேலை நுணுக்கங்களைச் சற்றுப் பழகித் தெரிந்துகொண்டு wood burning பற்றி தனியாக‌ ஒரு இடுகை பதிவிடுகிறேன்.

இதற்கு ஓர் வார்னிஷ் மேல்பூச்சுக் கொடுக்க‌ எண்ணியிருக்கிறேன். அழகு கெட்டுவிடுமோ! பலகையின் பின்பக்கம் தேதியைப் பொறித்திருக்கிறேன். அந்தப் பக்கத்தை முதலில் வார்னிஷ் செய்து பார்க்கலாம். பிடித்திருந்தால் இந்தப் பக்கம் பூசலாம்.
~~~~~~~~

இன்று....

ஒரு பெட்டியில் உறங்கிக்கொண்டிருந்த பழைய வாழ்த்திதழ்களைத் தரம் பிரித்தேன். ஏற்கனவே ஒரு தொகுதியைப் பிரித்து முடித்தாயிற்று. இது இரண்டாவது தொகுதி.

இந்த வேலை, வீட்டிலுள்ள‌ பொருட்களைக் குறைக்கும் ஓர் பெரிய முயற்சியின் சிறு பகுதி. இப்போ பாடசாலையில் கைவினை வகுப்பு எடுப்பதில்லை. அந்தப் பாடவேளை வேறு ஓர் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. கைவினை செய்வதற்காகச் சேர்த்த‌ என் சேமிப்புகளைக் கொஞ்சம் குறைக்கலாம்.

வேலையின் இடையே அகப்பட்டது இந்த இலை. மூன்று நான்கு வருடங்களாகத் தேடிக் கிடைக்காதது இன்று தானாகக் கையில் கிடைத்தது. சந்தோஷமாக இருக்கிறேன்.

பல வருடங்கள் முன்பு, இலங்கையிலிருந்து என் பெறாமக்கள் ஓர் நத்தார் வாழ்த்துடன் சேர்த்து இதை அனுப்பியிருந்தார்கள். வெகு கவனமாக அதே வாழ்த்திதழுடன் வைத்துப் பத்திரப்படுத்தியிருக்கிறேன். (காக்கைக் குணம்; வைத்த‌ இடத்தை மறந்துவிட்டேன்.) :‍)

கிடைத்த அன்று எப்படி இருந்ததோ அப்படியே, மெருகு குலையாமல் இருக்கிறது இலை.
~~~~~~~~

நாளை...

வாழ்த்திதழ்த் தொகுதியுள் பல‌ புதிய வாழ்த்திதழ்கள் இருந்தன‌. இவற்றில் சில‌ என்னுடையவை; சில‌ செபாவிடமிருந்து வந்தவை. சில படங்களில், ஒன்றுக்கு மேல் இருந்தன‌. சில படங்கள், ஏற்கன‌வே எங்களுக்கு வந்திருந்த‌ வாழ்த்திதழ்களில் இருந்தவற்றை ஒத்து இருந்தன‌. அனைத்தையும் ஓர் கூடையுள் சேகரித்தேன்.

இந்தக் கூடைக்கும் அறுசுவைக்கும் ஓர் தொடர்பு இருக்கிறது. :‍) (இது பற்றிப் பிறிதொரு சமயம் சொல்லப்படும்.)

நாளை இந்த‌ வாழ்த்திதழ்கள் உரு மாறப் போகின்றன‌.

அனுப்பியவர்களின் கையெழுத்து உள்ள‌ பக்கத்தைக் கவனமாகப் பிரித்துச் சேமிப்பேன். அப்படியே சிறப்பான‌ வாசங்கள் கொண்டவற்றையும் தனியாகப் பிரிப்பேன்.

அழகான‌ எழுத்துகளிலான‌, 'Merry Christmas', 'Happy Birthday' போன்றவற்றைத் தனியே வெட்டிச் சேமிப்பேன். இவற்றை அன்பளிப்பாகக் கொடுக்கும் கேக்குகளில் பயன்படுத்தலாம். லாமினேட் செய்து வைக்க முடிந்தால் நல்லது. கேக் ஐஸிங் பட்டு அட்டையின் அழகும் கெட்டுப் போகாது; அட்டையின் நிறமும் கேக்கில் ஊறாது. பயமில்லாமல் சாப்பிடலாம்.

ஒரே மாதிரி இரண்டு படங்கள் நிறைய‌ இருக்கின்றன‌. என்ன‌ செய்யலாம்! பயன்படுத்திய‌ அட்டையிலுள்ள‌ படத்தை அழகாக‌ வெட்ட‌ முடிந்தால்! வெட்டி எடுத்து அதே படம் உள்ள‌ புதிதாக‌ உள்ள‌ வாழ்த்திதழில் ஸ்பாஞ் அல்லது sticky dots கொண்டு ஒட்டலாம். 3 D வாழ்த்திதழ். இப்போ recycle என்பதோடு கூட‌ upcycle என்று வார்த்தையையும் பயன்படுத்துகிறார்கள். ஒன்றின் மேல் இன்னொன்று ஒட்டப்படப் போவதால்.... இவைதாம் உண்மையில் 'up'cycled. ;D இல்லையில்லை... decopage cards என்பதுதான் சரியான‌ பெயர்.

இப்போதே தயார் செய்தால்தான் நத்தாருக்கு வேளைக்கு அனுப்ப‌ முடியும். நாளை இதுதான் என் வேலை.

5
Average: 4.3 (4 votes)

Comments

ஹாய்,
'''காக்கை குணம்////வைத்த‌ இடத்தை மறந்து விட்டேன்'''' காக்கைக்கு மறதி அதிகமோ/ நான் அறியாதச் செய்தி. நேற்று, இன்று, நாளை பதிவு நல்ல பதிவு. நேரத்தை பயனுள்ள‌ வகையில் பயன்படுத்துகிறீர்கள் இமா. பாராட்டுக்கள்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

:‍) முதலில் இடுகையைப் படுத்துப் பார்த்துக் கருத்து பதிவிட்டமைக்கு என் அன்பு நன்றிகள் ரஜினி.

காக்கை உணவைப் பகிர்ந்து உண்ணும் என்று கேள்விப்பட்டிருப்போம். அவற்றுக்கு தமக்குக் கிடைத்த‌ உணவில் மீந்ததை ஒளித்து வைக்கும் பழக்கமும் உண்டு. எங்காவது நல்ல‌ இடமாகத் தேடி சொருகி வைக்கும். பிறகு தேவையான‌ போது அந்த‌ இடத்திற்கு நினைவாக‌ வந்துவிடும்; ஆனால் எங்கே ஒளித்தது என்பதை மட்டும் மறந்துவிடும். அங்கு இருக்குமோ, இங்கு இருக்குமோ என்று தேடிக்கொண்டிருக்கும். கூரையில் ஒவ்வொவுரு பீலியாக‌ தலையைச் சரித்துச் சரித்துத் தேடுவதை அவதானித்திருக்கிறேன்.

காக்கை இல்லாத‌ நாட்டில் 'காக்கைக் குணம்' நினைவு வரக் காரணம் ஒரு ஆண் சிட்டு. இப்போ வசந்தம். முட்டையோடு பேடு இருக்கிறது போல‌. இவர் மட்டும் இரை தேடுகிறார். என்ன‌ கிடைத்தாலும் தூக்கிக் கொண்டு நேரே பின் வீட்டுக் கூரைக்கு வந்துவிடுகிறார். அந்த‌ இடம் மற்றப் பறவைகளின் பார்வையில் படாது போல‌. (எனக்கு சமையலறைக்கு எதிரே இருப்பதால் தெரிகிறது.) இவர் காக்கை போல‌ ஒளித்து வைப்பதில்லை. மீதி அங்கேயே இருக்கும். திரும்ப‌ வந்து சாப்பிடுகிறார். வேறு யாரும் வரக் காணோம். கடந்த‌ ஒன்றரை வாரமாக‌ அந்தக் கூரைக்கு இவர் தனிக்காட்டு ராஜா. கூரையில் நிறைய‌ ரொட்டித் துண்டுகள் பரவிக் கிடக்கிறது.

‍- இமா க்றிஸ்

அன்புள்ள இமா. இங்கும் என்னிடம் நிறைய மரத்துண்டுகள் மிஞ்சி உள்ளன. அதில் முதலில் ஆறு டீ கோஸ்டர் தயார் செய்துள்ளேன். இனி அவற்றில் ஏதாவது டிசைன் வரையனும். வரைய வேண்டியவங்களுக்காக வெயிட்டிங். Wood burning கற்றுக் கொள்ள ரெடியா இருக்கேன். பூக்கள் அழகு. மொபைல் டைப்பிங். எனவே சுருக்கமான பதிவு.

//முதலில் ஆறு டீ கோஸ்டர் தயார் செய்துள்ளேன்.// என்ன‌ விதமாகத் தயார் செய்து இருக்கிறீர்கள்? அறிந்துகொள்ள‌ ஆவல்.

நான் எப்பொழுதும், முதலில் வரைவதோ எதுவோ அந்த‌ வேலையை முடிப்பது. அது திருப்தியாக‌ வந்த‌ பின் தான், பின் பக்கம் ஒட்டும் வேலைகள் செய்வேன்.

‍- இமா க்றிஸ்

2016 ல் புதிய‌ கதை யாராவது அனுப்பி இருக்காங்களா,(ஏற்கனேவே வலைபதிவில் இல்லாத‌ ஆள்), அப்படி இருந்தால் புது நபர் இருந்தால் அது என்ன‌ கதை என்று சொல்லவும்,எனக்குத் தெரிந்து இல்லை என்று நினைக்கிறேன்

எல்லாம் நன்மைக்கே

//2016 ல் புதிய‌ கதை யாராவது அனுப்பி இருக்காங்களா,// தெரியாது.
//(ஏற்கனேவே வலைபதிவில் இல்லாத‌ ஆள்),// இதற்கும் பதில் தெரியாது.

//அப்படி இருந்தால் புது நபர் இருந்தால் அது என்ன‌ கதை என்று சொல்லவும்,எனக்குத் தெரிந்து இல்லை என்று நினைக்கிறேன்// எதற்காக‌ இதை இங்கே சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. நான்கு தடவை என் இடுகையைப் படித்துவிட்டேன். எங்குமே புதிய‌ கதை, வலைப்பூவில் இல்லாத‌ ஆள் என்பவ‌ற்றைப் பற்றியெல்லாம் குறிப்பிடவில்லையே! எதற்காக‌ இந்தக் கேள்வி என்னிடம்!!

நான் யாரோ என் இடுகையைப் படித்து கருத்து சொல்லியிருக்கிறார்களாக்கும் என்று சந்தோஷமாக திறந்து பார்த்தால்! ஹ்ம்!! ஏமாற்றிவிட்டீர்கள். :‍) கேள்விகளைப் பொருத்தமான‌ இழைகளின் கீழ் வைக்கப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

காக்கா வச்ச இடத்தை மறந்துடும்னு நீங்க சொல்லி தான் தெரியும்.. :)

எல்லாம் செய்து முடிச்சுட்டீங்களா?? சீக்கிரம் காட்டுங்க பார்க்க ஆவலா இருக்கோம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அன்புள்ள‌ இமா
கிச்சன் டிராயர் பேக் செய்து வந்த‌ பேக்கிங் பலகை கால் இன்ச் தடிமனிலான‌ ப்ளைவுட். அதன் இருபுறமும் வெள்ளை கலர் மைக்கா ஒட்டப்பட்டு இருக்கின்றது.
அதில் அழகாக‌ படம் வரைய‌ முடிகின்றது. அதை மூன்றரை இன்ச் அளவு சதுரங்களாக‌ வெட்டி வாங்கிக் கொண்டேன். வெட்டப்பட்ட‌ ஓரத்தில் வெள்ளை கலர் பெயிண்ட் செய்து வைத்திருக்கிறேன்.
இனி அதில் ஏதாவது டிசைன் வரையணும்.

அப்புறம் funder max ல‌ யும் டீ கோஸ்டர் கட் பண்ணி வாங்கிக் கொண்டேன். அது வுட் போல‌ மிக‌ அழகாக‌ உள்ளது. அப்புறமா படம் காட்டறேன்.

தீபாவளி பிசி. பை இமா:)

//இருபுறமும் வெள்ளை கலர் மைக்கா// அழகா இருக்கும்.
//fundermax// வாவ்! சூப்பர் ஐடியா. சின்னவரும் டீகோஸ்டர் செய்ய வித்தியாசமாக ஏதாவது தேடிக்கொண்டிருக்கிறார். சொல்ல வேண்டும் இவற்றை. ஐடியாவுக்கு நன்றி.

தீபாவளி முடிந்து வந்து கட்டாயம் படம் காட்ட வேண்டும். காத்திருக்கிறேன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ஒரு சின்ன ப்ரேக் விட்டிருக்கிறேன். ஓரிரு வாரங்களில் தொடருவேன். படம் - இங்கே... பார்க்கலாம். ப்ராக்டிக்கல் டிஃபிகல்டீஸ் சிலது இருக்கு. :-) அங்கு எங்காவது காட்டுகிறேன்.

‍- இமா க்றிஸ்

funder maxல‌ tea coasterசெய்து அதில் golden colour metallic paint வைத்து கலம்காரி டிசைன் செய்தீங்கன்னா ரொம்ப‌ நல்லாருக்கும்னு தோணுது. முயற்சித்து பாருங்களேன்.:))

யோசனை நல்லா இருக்கு. நன்றி. நிச்சயம் அழகா இருக்கும் நிகிலா. //கலம்காரி// எனக்குப் பழக்கமில்லை. //ஸ்ரீ காளஹஸ்தி பாணி, மசூலிப்பட்டினம் பாணி// அவ்வ்!! இமா நிச்சயம் கெடுத்துருவேன். பயமா இருக்கு. :-) மகனுக்கும் ஆந்திரா டிசைன் சரிப்படாது.

பலாபெத்தி, ஹங்சபூட்டுவ, கொறு, Tapa design, Australian aboriginal art என்று ஏதாவது சொன்னால் எனக்குத் தெரியும். அறிமுகமில்லாத கலாச்சார விடயங்களை முயற்சி செய்ய முன் அவற்றைப் பற்றிக் கொஞ்சமாவது கற்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். நிச்சயம் பார்க்கும் யாராவது விளக்கம் கேட்பார்கள். சரியாகத் தகவல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் எனக்கு.

fundermax-ல கலம்காரி உங்க ஐடியா. உங்களுக்கே விட்டுருறேன். ட்ரை பண்ணீட்டு காட்டுங்க. பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

கலம்காரி டிசைன்ல‌ அனேகமா மயில் தான் போடனும். எனக்கு வுட் பர்னிங் செய்ய‌ முடியாதே. அந்த‌ கருவிக்கு எங்கே போக‌....
வட்ட‌ மயில் ஒன்றை ஏதாச்சும் வாழ்த்து அட்டையில் போட்டுப் பாருங்க‌. நீங்க‌ வுட் பர்னிங் செய்து அதில் மெல்லியதாக‌ ஏதாவது நெருக்கமான‌ டிசைன் வரைந்து அங்கே கோல்ட் அல்லது சில்வர் மெட்டாலிக் கலர் கொடுக்கலாம்.
முயற்சித்துப் பாருங்களேன் இமா. உங்களுக்கு நன்கு வரும்.:)

உங்க நாட்டில் காக்கையே இருக்கதா..???
நேற்று!இன்று!!நாளை!!! அருமை...

I love my parents...

இங்கு காக்கைகள் ரேவன்கள் இல்லை. மாக்பைகள் உள்ளன‌. அதே காக்கைத் தோற்றமும் குணமும் இருக்கும். ஆனால் அங்கங்கே பால் வெண்மை இறகுகள்
கலந்து இருக்கும். குரல் காக்கையை விட‌ இனிமை குறைவு. :‍) கூடு வைத்திருக்கும் சமயம் அந்த‌ வழியால் போவோர் வருவோரையெல்லாம் கொத்தித் துரத்தும். சில‌ இடங்களில் எச்சரிக்கை போர்ட் வைத்திருப்பார்கள், 'அருகில் உள்ள‌ மரத்தில் மாக்பை குடும்பம் குடியிருக்கிறது, பத்திரம்,' என்று. :‍)

‍- இமா க்றிஸ்

இங்கு காக்கைகள் ரேவன்கள் இல்லை. மாக்பைகள் உள்ளன‌. அதே காக்கைத் தோற்றமும் குணமும் இருக்கும். ஆனால் அங்கங்கே பால் வெண்மை இறகுகள் இருக்கும்///// ம்..

கூடு வைத்திருக்கும் சமயம் அந்த‌ வழியால் போவோர் வருவோரையெல்லாம் கொத்தித் துரத்தும். சில‌ இடங்களில் எச்சரிக்கை போர்ட் வைத்திருப்பார்கள், 'அருகில் உள்ள‌ மரத்தில் மாக்பை குடும்பம் குடியிருக்கிறது, பத்திரம்,' என்று///ம் பார்த்து அம்மா பத்திரமாக இருங்கள்.. இங்கு அதெல்லாம் இல்லை..

I love my parents...