தட்டாங்கல் எனும் சுட்டிக்கல்

சமீபத்தில் எனக்கு வந்த‌ மெஸேஜ் ஒன்றில், சுட்டிக்கல் படமும் அதை விளையாடுவதால் விரலுக்கு, கை மூட்டுகளுக்கு மட்டுமல்லாமல் கண்ணுக்கும் ந‌ல்ல‌ பயிற்சி எனவும், அக்கு புள்ளிகள் தூண்டப்படும் என்றும் அருள் வாக்கு வரவே......

நானும் ஐந்து உருண்டைக் கற்களை எடுத்து மதிய‌ நேரம் விளையாடிப் பார்க்கலானேன். விளையாடும் முறை கூட‌ மறந்து போயிருக்கவே உதவிக்கு வரும் பெண்ணின் உதவியோடு மீண்டும் விளையாட‌ ஆரம்பித்தேன்.

விளையாட‌ ஆரம்பித்ததுமே அப்படி ஒரு சிரிப்பு எங்களிடையே. மீண்டும் பால்ய‌ வயதினுள் நுழைந்த‌ பிரமை...

ஒண்ணான், ரெண்டான், மூணான், நாலான் என்று விளையாடிய‌ பின் ஒரு கல்லை புறமுன்கையில் வைத்து (உள்ளங்கையின் எதிர்புறம்) அந்தக் கல் கீழே விழுந்து விடாமல் விரல்களை மடக்கி மற்ற‌ கற்களைப் பொறுக்க‌ வேண்டும்.

அப்போது தான் புரிந்தது.விரல்களை மடக்கியபடியே மீதி கற்களைப் பொறுக்குவதில் உள்ள‌ சிரமமும் நடு விரலில் வளையுந்தன்மை சற்றே குறைந்திருப்பதையும் உணர‌ முடிந்தது.

மூளைக்குள்ளே பல்ப் எரிஞ்ச‌ மாதிரி......

ஒவ்வொரு விளையாட்டாய் மனத்திரையில் ஆடியது.

ஸ்கிப்பிங் இதிலே நம் கை, கால் எல்லாவற்றுக்கும் நல்ல‌ பயிற்சி கிடைக்கின்றது.

அந்த‌ நாளில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அடிக்கடி விளையாடும் விளையாட்டு கிளியாந்தட்டு.

ஒரு பெரிய‌ சதுரம் வரைந்து நடுவில் ஒரு கூட்டல் அடையாளமிட்டு நான்கு சதுரங்களாக‌ பிரித்து விளையாடுவோம். நான்கு பேர் ஆளுக்கொரு கட்டத்தில் நிற்க‌ நடுவிலுள்ள‌ கூட்டல் அடையாளத்தில் ஒருத்தி 'கிளி வருது' என்று பாடிக்கொண்டே எங்களைத் தொட‌ வருவாள். கோட்டின் இங்குமங்கும் சென்று அவளை அலைக்கழித்து லாவகமாக‌ ஓடி விளையாடுவோம். வியர்க்க‌ வியர்க்க‌ விளையாடிவிட்டே புத்தகத்தை எடுப்போம்.

என்னே ஒரு குதூகலம்...கும்மாளம்,,. கொண்டாட்டம்.

பல‌ சமயம் 'நான் அவுட் இல்லே'னு கத்தியபடி சண்டையும் வரும். ஆனால், மறுதினமே சண்டையை மறந்து ஒன்று கூடுவோம்.

இன்னும் கண்ணாமூச்சி, நிழலா வெயிலா, நொண்டி, திருடன் போலீஸ், ஆடு புலி ஆட்டம் இப்படிப் பல‌. இன்னும் யோசித்து பாருங்க‌. நிறைய‌ நீங்களே விளையாடி இருப்பீங்க‌.

மணமுடித்து புகுந்த‌ வீடு வந்தபின் அங்கே வீட்டின் பின்பக்கம் இருந்த‌ பெரிய‌ மரம் ஒன்றில், ஊஞ்சல் இருந்தது. மாலை ஆனதும் தெருவிலுள்ள‌ பள்ளிக் குழந்தைகள் எல்லாம் ஆஜராகி விடுவர். ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம்.

ஒரே ஆட்டம் ; பாட்டம்; கொண்டாட்டம்; தான். முன்வாசல் கதவு பூட்டியே இருக்க‌ பின்வாசல் 'ஜே ஜே' என்று இருக்கும். வயது வித்தியாசம் பாராமல் சரிக்கு சமமா ஊஞ்சலாடி மிகிழ்வோம்.

பல்லாங்குழியை விட்டுட்டேனே. பல்லாங்குழி விளையாட‌ பல‌கை இல்லாமல் மணலைக் குவித்து அதில் குழி உண்டாக்கி புளியமுத்துக்களால் விளையாடுவோம்.

அந்த‌ நாளில் சிறுமியர் பெரியவளானதும் இரண்டு வாரம் லீவு தான். வீட்டிலே ஒரு ஓரமாக‌ உட்கார‌ வைத்து விடுவார்கள். அப்போது நேரப்போக்கே சுட்டிக்கல்லும், பல்லாங்குழியும் தான்.

இப்போதெல்லாம் விளையாட‌ மொபைல் போதும். வேறு யாரும் தேவை இல்லை. யாருடனும் சண்டை போடவும் வேண்டாம். விட்டுக் கொடுக்கவும் வேண்டாம். அனுசரித்துப் போகவும் கற்றுக்கொள்ள‌ முடியாம‌ற் போயிற்று.

குழந்தைகள் மாலையில் வீடு திரும்பினால் டியூசன். அப்புறம் டி. வி.

குறைந்தபட்சம் ஞாயிறு மட்டுமாவது டி.வி. கம்ப்யூட்டருக்கு தடா போட்டு மொபைலை அவசரத்துக்கு மட்டும் உபயோகித்து விளையாட‌ நேரம் ஒதுக்கி மகிழலாமே.

குழந்தைகளும் பெற்றோரும் சேர்ந்தே விளையாடலாம். முடிந்தால் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு இல்லாவிட்டால் நம் வீட்டுப் பெரியவர்களோடு விளையாடி உடல், மன‌ ஆரோக்கியத்தைப் பெறலாமே. இதனால் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவும் வலுப்பெறும். உடலும் வலுப்பெறும். சிந்தியுங்கள் தோழிகளே...

5
Average: 4.3 (6 votes)

Comments

அருமையான பதிவு, பழைய நினைவுகளை நியாபடுத்தி சந்தோசப்படுத்தீட்டீங்க,

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விளையாட்டு -சுட்டிக்கல்-
விளையாண்டு ரொம்ப வருசம் ஆச்சு,
இதை நாங்க கல்லாங்காய்னு சொல்வோம், விரிவாட்டம், சுருக்காட்டம் நு 2 மெத்தடுல விளையாடுவோம்,
அவ்ளோ சந்தோசமா இருக்கும் விளையாடும் போது, நாங்க விளையாடி விளையாடி சேப் இல்லாம் சொர சொரனு இருந்த ஜல்லிக்கல் அழகா ரவுண்டா, சைனிங்கா ஆகிடும்.

நிறைய விளையாட்டு காணாப் போச்சுக்கா, சில்லாக்கு, கோ கோ, நாடு பிடிக்கிறது, கண்ணா மூச்சு, இன்னும் நிறைய , எங்க இப்ப எல்லாம் கேரம், செஸ் விளையாட்டை கூட சிஸ்டம் ல தான் விளையாடுறாங்க,

ஓ இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கா, பெரியவங்க நமக்கு விட்டுப்போன பொக்கிசங்களை தொலைச்சிட்டு இருக்கோம் க்கா,

இப்பதான் எல்லாரும் மொபைல், கம்யூட்டர்னு ஆரோக்கியத்தை இழந்துட்டு இருக்காங்க,

நான் லீவ் நாள் ல பக்கத்து வீட்டு குட்டீஸ்ங்க கூட தான் விளையாடுவேன், ரொம்ப பிடிக்கும், நானும் அம்மாவும் தாயம் விளையாடுவோம் பரமபதத்தை விட கட்டம் போட்டு துரத்தி துரத்தி வெட்டுறதும் வெட்டு வாங்காம தப்பிக்கிறதும் அது ஒரு ஜாலி தான்.

முதல் படம் ரொம்ப அழகா இருக்கு,,,, இந்த வயதில் தான் நான் விளையாடினேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு சுபி

//இதை நாங்க‌ கல்லாங்காய்னு சொல்வோம்// அப்படியா... கோவையைச் சேர்ந்த‌ இன்னொரு தோழி 'அஞ்சுக்கல்'னு பேர் சொன்னாங்க‌. நாங்க‌ 'சுட்டி' னு சொல்லுவோம்.

விக்கிப்பீடியாவில் 'தெற்றி' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் நினைக்கிறேன். தெற்றி என்பதே மருவி சுட்டி என்றாகி இருக்கும் என்று.

//சுருக்காட்டம் விரிவாட்டம்// ஆம் நீங்க‌ சொன்னதுமே நினைவுக்கு வருது. அப்படி விளையாடி இருக்கிறோம் சுபி... எல்லாம் மறந்து போச்சு பா.

அந்தக் காலம் குட்டீஸ்லாம் வெயில்ல‌ விளையாடும் போது " ஒரு ஓரமா உட்கார்ந்து விளையாடக் கூடாதா"ன்னு பாட்டிம்மா சொல்லுவாங்க‌.

இப்போ நாமெல்லாம் "வெளியில‌ போயி ஓடி ஆடி விளையாடுங்க‌" சொல்ல‌ வேண்டிய‌ காலகட்டத்தில் இருக்கிறோம்.

//முதல் படம் ரொம்ப‌ அழகாக‌ இருக்கிறது// நன்றி....

பதிவுக்கு நன்றி சுபி:))

நல்ல செய்தி

Thank u :)

நாடு பிடிக்கிறது விளையாட்டை பற்றி சொல்லுங்க சுபி.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

முன்பே உங்கள் இடுகையைப் படித்து ரேட்டிங் கொடுத்துவிட்டேன் நிகி. இப்போதுதான் கமண்ட் போடாதது என் கவனத்திற்கு வந்தது. எனக்கும் சுட்டிக்கல்... தெற்றி என்கிற‌ பெயர்தான் தெரியும்.

//குழந்தைகளும் பெற்றோரும் சேர்ந்தே விளையாடலாம்.// உண்மைதான். பெற்றோருக்கே இந்த‌ விளையாட்டுகள் சிலது புதிதாக‌ இருக்கும். :‍) இந்தியாவில் எங்கோ ஒரு உணவகத்தில்... இடம் நினைவு இல்லை _ சில‌ விளையாட்டுகள் விளையாடப்படுவதாக‌ போர்ட் இருந்தது. படத்தைத் தேடிப் பிடித்துப் பெயர்களைப் பார்க்கப் போகிறேன்.

நீங்கள் அறிந்த‌ மீதி விளையாட்டுகளையும் பகிர்ந்துகொள்ள‌ வேண்டும் நிகிலா.

‍- இமா க்றிஸ்

மணமான‌ புதிதில் புகுந்த‌ வீட்டு குழந்தைகளோடு சேர்ந்து செம‌ ஆட்டம் போட்டிருக்கிறேன்.
கம்பு தள்ளி அப்படீன்னு ஒரு விளையாட்டு அந்தக் குட்டீஸ் தான் கற்றுக் கொடுத்தாங்க‌. ரொம்ப‌ இன்டரஸ்ட் ஆ இருக்கும். ஒரு சிறிய‌ குச்சியை ஒருவர் காவல் காக்க‌ வேண்டும். மற்றவர்கள் அந்தக் குச்சியை தூரமாக‌ தள்ளி விடனும். அப்போது தொட‌ வருவார்கள். அதற்குள் குச்சியை எங்கோ தள்ளி விட்ருவோம். இப்படி குச்சி எங்கோ போயிடும். பின்னாடியே போகனும்.....
வேர்க்க‌ வேர்க்க‌ விளையாடி விட்டு பெரியவங்க‌ கிட்ட‌ திட்டும் வாங்கியிருக்கேன்......சும்மா செல்லமாக‌...

இந்த‌ விடுமுறையில் மொபைலைத் தூக்கிப் போட்டு விட்டு குழந்தைகளோடு சேர்ந்து நாமும் விளையாடியே ஆக‌ வேண்டிய‌ காலகட்டத்தில் இருக்கின்றோம்.

நமக்கும் மகிழ்ச்சி. குட்டீசுக்கும் சந்தோசம். உடம்புக்கும் பயிற்சி. உறவும் வலுப்பெறும்.

முயற்சிப்போமே.

//நீங்கள் அறிந்த‌ மீதி விளையாட்டுகளையும் பகிர்ந்துகொள்ள‌ வேண்டும் நிகிலா.//

அவசியம் நல்ல‌ விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம் இமா..

பின்குறிப்பு; கடவுச் சொல்லை மறந்து தேடிப்பிடித்து வந்திருக்கேனாக்கும்...:)))