என் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் தோழிகளே

ஹாய் தோழிகளே எப்படி இருக்கிறீர்கள் அறுசுவைக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு எப்பாவது வந்து எட்டி பார்ப்பேன். இப்ப எனக்கு ஒரு பிரச்சனை எனக்குன்னு சொல்லவதை விட இது எல்லாருக்கும் நடக்கும் பிரச்சனை தான் மாதவிடாய். சில பேருக்கு மாதவிடாய் தாமதமாக வரும் சிலருக்கு மாசத்துல 2 டைம் வரும். எனக்கு வந்து இருக்கும் பிரச்னை கடந்த இரண்டரை மாதமாக மாதவிடாய் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கே. கொஞ்சம் கொஞ்சமா வருது அதிலும் இந்த 4 வராம அதிகமா இருக்கு. எனக்கு இது முதல் தடவை கிடையாது பல தடவை இது போல் நடந்து இருக்கு. ஆனால் அதிகமா வந்தது இல்லை நானும் டாக்ட்டரிடம் காட்டிட்டேன் அவங்க இது பெரிய பிரச்னை எதுவும் இல்லை கவலை பட வேண்டாம் அப்படினு சொல்லி 20 நாள் 21 நாள் சாப்பிடுற மாத்திரை சாப்பிட சொல்லுறாங்க.நானும் சாப்பிட்டேன் ஆனால் அதுவும் எப்ப மாதவிடாய் நார்மல் ஆகுற வரை அதை சாப்பிட சொன்னாங்க. என்னால அந்த மாத்திரையே தொடர்ச்சியாக எடுத்துக்க முடியலை. அத சாப்பிட்ட ரொம்ப தூக்கம் வருது பசி அடிக்கடி எடுக்குது உடல் ரொம்ப சோர்வா ஆகிடுது. பசங்கள ஸ்கூல் அனுப்பனும் கணவரே வேலைக்கு அனுப்பனும் காலையில டிபன் மதியம் சாப்பாடுனு இத்தனை வேலை இருக்கு இந்த மாத்திரையால் எதையும் என்னால செய்ய முடியல அதனால நான் அதை நிறுத்திட்டேன். டாக்டரே இது பயப்பிடாஓன்னும் இல்லை சொன்னதுனால நான் வரத்து வரட்டும் போறது போகட்டும் விட்டுட்டேன் இப்ப என்னனா சில பேரு இது நல்லது இல்லை இது பெரிய பிரச்னை இன்பெக்சன் ஆகும் அப்படி இப்படினு என் அம்மா கிட்ட சொல்லி இருகாங்க அவங்க இந்தியால இருகாங்க அவங்க எனக்கு கால் பண்ணி கவலை படுறாங்க இவ்வளவு நாள் அதை நினைக்காமல் இருந்தேன் அம்மா சொன்னதும் எனக்குள்ள ஏதோ ஒரு பயம் வந்துடுச்சு.இப்ப நான் டாக்டர் கிட்ட போனாலும் அதே மாதிரி தான் மருந்து குடுப்பாங்க ஏன் சொல்லுறேன் நான் முத தடவை இந்த மாதிரி பிரச்னை வந்தப்பவே 3 4 தடவ வேறே வேறே டாக்டர் கிட்ட காட்டினேன் அவங்க எனக்கு சொன்ன பதில் ஒரே மாதிரி தான் இருந்தது இப்ப நான் டாக்டர் கிட்ட போனாலும் அதே பதில் தான் வரும். இப்ப என் சந்தேகம் என்னனா இது போல் பிரச்னை யாருக்காவது இருந்து இருக்க இதனால் ஏதாவது பிரச்சனையா இதற்க்கு ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்க. எனக்கு உதவுங்கள் தோழிகளே

//இந்த 4 வராம அதிகமா இருக்கு.// ஒரு நாளில் அதிக‌ நாப்கின்ஸ் பயன்படுத்தத் தேவையாக‌ வந்தால் டாக்டரிடம் திரும்பப் போங்க‌. அதை அன்றே செய்ய‌ வேண்டும்; நான்கு நாட்கள் கழித்து அல்ல‌. கொஞ்சம் கொஞ்சமாகப் படுகிறது என்றால் டாக்டர் சொன்னது போல‌, பிரச்சினை இராது. //மாதவிடாய் நார்மல் ஆகுற வரை அதை சாப்பிட சொன்னாங்க.// ஆமாம், பிறகு பெரும்பாலும் சரியாகிவிடும். அதுவரை மட்டும் பொறுக்க‌ மாட்டீர்களா?

இரத்தப் போக்கால் வரும் சிரமம் பெரிதா? அல்லது தூக்கக் கலக்கம் & களைப்போடு வேலை செய்வது பெரிதா? இரத்தப் போக்கு உங்களுக்குப் பிரச்சினையாகவே தெரியவில்லை என்று தோன்றுகிறது. (இப்படித் தொடர்ந்து இரட்தப் போக்கு இருந்தால்... உங்களுக்கு உடலுறவின் போது சிரமங்கள் இருப்பதில்லையா! தினமும் நாப்கின் பயன்படுத்த‌ வேண்டி வருவது இல்லையா? ஆடைகள், படுக்கை எதிர்பாராதவிதமாக‌ அழுக்காகி துவைக்கும் வேலைகள் அதிகமாவது இல்லையா!) இன்னொரு குழந்தை வேண்டும் என்று நினைக்கும் சமயம் இதை முதலில் ஒழுங்குக் கொண்டுவர‌ வேண்டியிருக்கும். இப்போது குழந்தைகள் போதும் என்று நீங்கள் சொல்ல‌ நினைக்கலாம். காலம் எமக்கு எதை வைத்திருக்கும் என்பது தெரியாது.

இந்த‌ மாத்திரை சாப்பிடும் சமயம் இடையில் நிறுத்துவது சரியல்ல‌. முழுமையாக‌ 21 மாத்திரைகளை எடுத்து முடித்து விட்டு நிறுத்தலாம். இடையில் நிறுத்தினால் ஓரிரண்டு நாட்களில் மாதவிடாய் வரும். உங்களுக்கு மாத்திரையை ஒழுங்கில்லாமல் எடுக்கும் பழக்கம் இருக்குமானால், அதனாலேயே இரத்தப் போக்கு ஒழுங்கீனம் ஆகும். எடுப்பதானால் ஒழுங்காக‌ எடுப்பது நல்லது. அதுதான் பலன் கொடுக்கும். மாத்திரைகளை எடுக்கும் போது ஒரு காலண்டரில் அடையாளம் செய்யுங்கள்.

//என்னால அந்த மாத்திரையே தொடர்ச்சியாக எடுத்துக்க முடியலை.// உங்கள் பிரச்சினை சரியாக‌ வேண்டுமானால் எடுக்கத்தானே வேண்டும்! அல்லாவிட்டால் திரும்ப‌ டாக்டரிடம் போய் இப்போதைய‌ பிரச்சினையைச் சொல்லுங்கள். வேறு மாற்று மருந்துகள் இருக்கலாம்.

//அத சாப்பிட்ட ரொம்ப தூக்கம் வருது பசி அடிக்கடி எடுக்குது உடல் ரொம்ப சோர்வா ஆகிடுது.// ஒரு சிலருக்கு இப்படி இருக்கலாம். //பசங்கள ஸ்கூல் அனுப்பனும்// கொஞ்சம் கொஞ்சம் அவர்கள் வேலைகளைச் செய்யப் பழக்குங்க‌. ட்ரெஸ் பண்ண‌, உட்கார்ந்து சாப்பிட‌, பாடசாலைக்குத் தேவையானதை முதல் நாள் இரவில் தயாராக‌ எடுத்து வைக்கச் சொல்லிக் கொடுங்க‌. அவர்கள் பாடசாலையால் வந்ததும் / படித்து அல்லது விளையாடி முடிந்ததும், பொருட்களை உடனுக்குடனே சரியான‌ இடத்தில் வைத்துவிடச் சொல்லிக் கொடுங்க‌. இது பல‌ வேலைகளைக் குறைக்கும். உங்களுக்கு உடம்பு முடியவில்லை என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்க‌. அவர்கள் உங்கள் மேல் அன்புள்ள‌ குழந்தைகள், நிச்சயம் உதவப் பார்ப்பார்கள். (இந்தப் பழக்கங்கள் அவர்கள் எதிர்காலத்திற்கும் உதவும்.)

//கணவரே வேலைக்கு அனுப்பனும்// :‍) அவர் உங்களை விடப் பெரியவராக‌ இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் குழந்தை அல்லவே! எத்தனை ஆண்கள் வெளியூரில், வெளிநாட்டில் எல்லாம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் மனைவியரும் தாய்மாரும் அருகே இல்லாமல் அவரவர் வேலைகளைப் பார்ப்பது இல்லையா! படிக்கவென்று ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பையன்கள் தம் வேலையைத் தாங்களே பார்ப்பது இல்லையா! பெண்களுக்கு உதவாது விட்டாலும் தம் வேலையைத் தாங்களே செய்யவாவது தெரியவேண்டும். (இப்போ இருந்தே உங்கள் குழந்தைகளை அவர்களது சின்னச் சின்ன‌ வேலைகள் செய்வதற்குப் பழக்குங்கள். தமக்கான‌ வேலைகள் எனும் போது மாட்டேன் என‌ மாட்டார்கள். வருங்காலத்தில் உங்களுக்கும் உதவும், உங்கள் மருமக்களுக்கும் உதவியாக‌ இருக்கும்.)

உங்க‌ கண‌வரிடம் உங்கள் உடல்நிலையைப் பற்றிச் சொல்லுங்கள். இயலாமையைப் பற்றிக் கலந்து பேசுங்கள். அவர் வேலையை அவரே பார்த்துக் கொண்டால் பெரிய‌ உதவியாக‌ இருக்கும் என்பதைச் சொல்லுங்கள். இதற்கும் முடியாது என்று சொல்லும் மனைவியாக‌ இருந்தால்... வேறு வழி இல்லை. புலம்பிக் கொண்டு அனுபவிக்கத்தான் வேண்டும்.

//காலையில டிபன் மதியம் சாப்பாடுனு இத்தனை வேலை இருக்கு// உங்கள் வசதிக்கு ஏற்ப‌ கொஞ்சம் பாட்டர்னை மாற்றலாம். மனைவிக்காக‌ அம்மாவுக்காக‌ வளைந்துகொடுப்பார்கள் மற்றவர்கள்.

‍- இமா க்றிஸ்

//இந்த மாத்திரையால் எதையும் என்னால செய்ய முடியல அதனால நான் அதை நிறுத்திட்டேன்.// இரவில் எடுத்துப் பாருங்களேன்! தூக்கத்தைக் கொடுக்கும் மாத்திரைகளை இரவில் எடுப்பது வசதி. உங்கள் வழமையான‌ தூங்கும் நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பாக‌ எடுங்கள். தூக்கம் வரும் நேரம் சரியாக‌ இருக்கும். காலையில் பெரும்பாலும் உடல் நன்றாக‌ இருக்கும். களைப்பு உணர்வு இருந்தால் கொஞ்சம் வேலைகளைக் குறைக்கலாம். ஒரே சமயம் இரண்டு வேளைக்கான‌ டிஃபன் செய்து வைத்தால் உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இது தற்காலிகம்தானே! சரியாகி மாத்திரையை நிறுத்திய‌ பின் உங்கள் பழைய‌ ரூட்டினுக்குத் திரும்பலாம்.

//டாக்டரே இது பயப்பிடாஓன்னும் இல்லை சொன்னதுனால// :‍) சொன்னார்தான், ஆனால் ட்ரீட்மண்ட்டே தேவையில்லை என்று நினைத்திருந்தால் அவரே மாத்திரையைப் ப‌ரிந்துரைத்திருக்க‌ மாட்டார் அல்லவா!

//நான் வரத்து வரட்டும் போறது போகட்டும் விட்டுட்டேன்// தப்பு கண்ணா. :( இதையே உங்களால் அட்ஜஸ்ட் பண்ண‌ முடியவில்லை எனும் போது... கவனியாது விட்டு, பிறகு இன்னும் தூக்கம் அதிகம் வரும் மருந்துகள் எடுக்க‌ வேண்டிய‌ நிலை வந்தால் என்ன‌ செய்வீர்கள்! அப்போதும் வருவது வரட்டும் என்று கவலையீனமாக‌ இருப்பீர்களா? எந்தப் பிரச்சினையும் சின்னதாக‌ இருக்கும் போது சரிசெய்வது சுலபம்.

இது உங்கள் உடல்; உங்கள் வேலைச் சிரமம். உங்கள் கணவர் ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைப்பதாகத் தெரியவில்லை. இன்னும் பிரச்சினையானால் அப்போது மட்டும் உதவுவாரா! நீங்கள் செய்ய‌ வேண்டியவை 1. உங்கள் கணவரிடம் பேசுங்கள். உங்கள் நலனில் அவருக்கு அக்கறை இராதா! பேசுவது பயனில்லை என்றால் ஒரே வழி... ஸ்ட்ரைக். :‍) 'இவ்வளவு தான் என்னால‌ ஆகும்.' என்று முடிந்ததை மட்டும் செய்து வையுங்கள். மேலதிகமானவற்றை அவரே செய்யட்டும். 2. குழந்தைகளைப் பழக்குவது. 3. மாத்திரைகளை எடுப்பது அல்லது மருத்துவரிடம் போய்ப் பேசுவது.

//இன்பெக்சன் ஆகும்// என்று நினைக்கவில்லை. உள்ளே காயம் இருப்பதால் இரத்தப் போக்கு இல்லை. ஆனால் இது டாக்டர் நினைப்பது போல‌ அல்லாமல் வேறு விஷயம் ஏதாவது ஒன்றுக்கான‌ அறிகுறியாக‌ இருக்கலாம். சில‌ விடயங்கள் ஆரம்பத்தில் கண்டுகொள்ள‌ முடிவதில்லை அல்லவா? தலைவலி ஓய்வு போதாவிட்டாலும் வரும்; மூளையில் கான்சர் என்றாலும் வரும். அது போலதான் இதுவும். சாதாரணம் என்று கவனிக்காமல் விட‌ இயலாது.

உங்கள் குழந்தைகளுக்காக‌ நீங்கள் நன்றாக‌ இருக்க‌ வேண்டாமா! ஏதாவது சிரமம் வந்தால் அப்போது உங்கள் கணவர் தன் வேலைகளைப் பார்த்துக் கொள்வார். ஆனால் உங்கள் குழந்தைகளைப் பராமரிப்பது அவருக்குத் தெரியாத‌ விடயமாக‌ இருக்கும்.

//இப்ப நான் டாக்டர் கிட்ட போனாலும் அதே பதில் தான் வரும்.// எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்கிறீர்கள். :‍) நீங்கள் பார்த்த‌ எந்த‌ ஒரு டாக்டரிடமாவது, இந்த‌ மாத்திரையால் தூக்கம் வருகிறது, உடல் களைக்கிறது, வேறு மாத்திரை கிடைக்குமா என்று விசாரித்திருக்கிறீகளா?

//இப்ப என் சந்தேகம் என்னனா இது போல் பிரச்னை யாருக்காவது இருந்து இருக்க// எந்தப் பிரச்சினை? ரத்தப் போக்கா, மாத்திரைக்குத் தூக்கம் வருவதா? முதலாவது நிறையப் பேருக்கு இருந்திருக்கும். இதே மாத்திரை வேலை செய்யும்.
இரண்டாவது... சிலருக்கு இருந்திருக்கும். ஆனால் அதைப் பெரிதாகக் கவனித்திருக்க‌ மாட்டார்கள் அல்லது அவர்களால் சமாளிக்க‌ முடிந்திருக்கும்.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா நீங்க சொல்வது சரி தான் நானும் மூன்று மாதமா அந்த மாத்திரையே எடுத்துட்டு தான் இருந்தேன் அந்த மாத்திரை போடும் பொது சரியாய் மாதம் மாதம் வந்துடும் ஆனா அதிகமா இருக்கும் ரத்த போக்கு துக்கத்தை கூட என்னால சமாளிச்சிக்க முடியும் அம்மா அதிக பசி எடுக்குது ஏற்கனவே நான் குண்டாக இருக்கேன் இதுல இந்த பாசி வந்த சாப்பிடாம இருக்க முடியல அந்த நேரத்துல வயிறு முட்ட தண்ணிய குடிக்குறேன் கணவரும் சரி பசங்களும் சரி அவங்க வேலை பார்த்துப்பாங்க ஆனா 2 வயது குழந்தையை நான் தானே கவனிக்கணும் ஏற்கனவே நான் சொல்லி இருக்கென அவள் இரவில் தூங்கவே மாட்ட பகலா தான் தூங்குவ அதுவும் பாதி தான் இப்படி இருக்கையிலே நான் நைட் மாத்திரை சாப்பிட முடியாது பகலையும் 8 மணிக்கு பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு மதியம் சாப்பாட்டு சமைச்சிட்டு அவளுக்கு சாப்பாடு குடுத்துட்டு தூங்கவே 10 11 மணி ஆகிடுது நைட் அவளே வச்சிட்டு சமைக்க முடியாது அது கஷ்டம் அதுனால தான் காலையில சமைக்குறேன். மதியம் அவரே வந்து சாப்பாடு போட்டு சாப்பிட்டு கிளம்பிடுவாரு 4 மணிக்கு பசங்க பஸ் வந்துடும் நான் சாதாரணமா மதியம் தூங்கின கூட இவை சில டைம் தனவே முழிச்சிட்டு பெட் மேலே குதிப்ப தனியா விளையாடுவ அதுனால நான் டக்குனு முழிச்சிடுவேன் இப்படி இருக்கும் பொது இந்த மாத்திரை சாப்பிட்டு அசந்து தூங்கிட்டேனா இவை என்ன செய்யிற எது செய்யிறானு தெரியாம போயிடும் இது எல்லாம் தான் மாத்திரை எடுக்குறதுக்கு தயக்கமா இருக்கு நீங்க சொன்ன மாதிரி இதற்க்கு வேறெ வலி இருக்கானு டாக்டர் கிட்ட கேக்கல எப்படியும் அடுத்த வாரம் டாக்டர் கிட்ட போகலாம்னு இருக்கோம் நீங்க சொன்னதை பற்றி கேக்கணும் அம்மா அது மட்டும் இல்லை இப்ப 2 3 நாலா சரியாய் பகல் நேரத்துல ஒற்றை தலைவலி வந்து பாடாய் படுத்திட்டு இருக்கு நைட் வரை இருக்கு இது கூட இந்த மாதவிடாய் பிரச்சனையால் என்று எனக்கு சின்ன சந்தேகம் இருக்கு.ரொம்ப நன்றி அம்மா இவ்வளவு பொறுமையா என்னோட பதிவிற்கு விளக்கம் குடுத்து இருக்கீங்க அம்மா

//அடுத்த வாரம் டாக்டர் கிட்ட போகலாம்னு இருக்கோம்// :‍) பன்மைல‌ பதில் சொல்றீங்க‌. கஷ்டப்படுறது நீங்க‌ ஒருத்தர் மட்டும்தான்.

கூட‌ வரப் போற ஆளுக்கு எந்த‌ சிரமமும் இராது. இன்றைக்கே போனாலும் ரெண்டு வாரம் கழிச்சு போனாலும் அவருக்கு ஒண்ணுதான். தாங்க‌ முடியலை என்று சொல்லி உடனே போங்க‌. இல்லாட்டா எல்லார் மேலேயும் எரிஞ்சு விழணும் மாதிரி இருக்கும். குழந்தைகள் பாவம்.

//ஏற்கனவே நான் சொல்லி இருக்கென// சாரி கண்ணா. உண்மைலயே எனக்கு எல்லா விபரமும் பாடமாக‌ இருப்பதில்லை. அவ்வப்போது படிப்பதை வைத்துத் தான் பதில் சொல்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க‌.

‍- இமா க்றிஸ்

இல்லை அம்மா அவருக்கு ஹெவி ஒர்க் நைட் லேட்டா தான் வீட்டுக்கே வராரு இன்னும் 1 வாரத்துக்கு பிஸி தான் அடுத்த வாரம் எப்படியாவது அப்பாயின்மென்ட் போட்டு கூட்டு போறேன் சொல்லி இருகாங்க அதுனால தான் அடுத்த வாரம் சொன்னேன் // சாரி கண்ணா. உண்மைலயே எனக்கு எல்லா விபரமும் பாடமாக‌ இருப்பதில்லை. அவ்வப்போது படிப்பதை வைத்துத் தான் பதில் சொல்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க‌.// ஐயோ சாரி எல்லாம் வேண்டாம் அம்மா நீங்கள் எனக்கு அம்மா மாதிரி நான் ஏன் உங்களை தப்பாக நினைக்க போறேன்

மேலும் சில பதிவுகள்