கருவின் வயது 90 நாள் - முத்தமிழன்

வேண்டாம் அம்மா
இந்த உலகம்.
போதும் இந்த துவாக்குடி
போவோம் வேறுலகம் தேடி ...

கருவறையில் இருக்கும்போதே
நம்மை பிணவறையில்
தள்ளிய - உலகம்
இனி
வேண்டாம் அம்மா !!!

தலைக்கவசம்
உயிர்கவசம் - இன்றேல்
உங்கள் உயிர்
எங்கள் வசம் - என்று
நிரூபித்து காட்டிய உலகம்
இனி
வேண்டாம் அம்மா !!!

ராஜா என்று
பெயர் வைத்தாலே
காமராஜாக்களுக்கு
கப்பம் கட்ட சொல்லும் உலகம்
இனி
வேண்டாம் அம்மா !!!

நூறாண்டுகள் வாழ
வாழ்த்திவிட்ட - சமூகம்
நூறு ரூபாய்க்காக
என்னை 90 நாளில்
உதைத்து மரணத்தில் தள்ளிய
உலகம் அம்மா !!!

வேண்டாம்
நமக்கினி துவாக்குடி
போவோம் வேறுலகம் தேடி !!!

- முத்தமிழன்

Comments

உங்கள் கவிதையைப் படித்த‌ பின் தான் செய்தியைத் தேடிப் பிடித்தேன். ;( பிரிந்த‌ அந்த இரு ஆத்துமங்களுக்கு இளைப்பாற்றி கிடைக்கவும் அவர்களது குடும்பத்தாருக்கு மன‌ ஆறுதல் வேண்டியும் என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

வேலி எப்படியம்மா பயிரை மேய முடியும் என்று விதண்டாவாதம் செய்த சம்பவமும் , வேலியாக இருக்க வேண்டிய காவல்துறையினர் (சிலர்) மேய்ந்தத்தோடு ( கையூட்டு) மட்டுமல்லாமல் வேருடன் பிடுங்கி எரிந்த சம்பவமும் என் வாழ்வில் சந்தித்தவைகள்.
என் மனம் சாந்தமடையவில்லை !!!
அவர்களாவது சாந்தமடையட்டும்.

என்றும் அன்புடன்
முத்தமிழன்

கவிதையை படிக்கும்போதே கண்கலங்குகிறது... மிகவும் கொடுமையான சம்பவம்.. காவல்துறையே சீர்க்கெட்டுப்போகிறது.. அவர்கள் எப்படி மக்களை சீராக்குவார்கள்..

உண்மைதான் !
பிறர்படும் இன்னல்களை கண்டு மௌனமாக கரைந்துபோகும் மக்களின் கோபங்கள் , ஒருநாள் தன் சுயரூபம் காட்டும் என்ற
நம்பிக்கையுடன்

என்றும் அன்புடன்
முத்தமிழன்