அயல்தேசம் - முத்தமிழன்

1. <b>அயல்தேசம்</b>

கம்பிகளில்
தொங்கிக் கொண்டும்,
தகிக்கும் வெயிலைத்
தாங்கிக் கொண்டும்,
கட்டளைகளை
கச்சிதமாக முடிப்போம்.

பசித்தபோது
புசிக்க முடியாமல்
சமயம் கிடைத்தபோது
சமைத்துச் சாப்பிடுவோம்.

அடுக்கு கட்டில்களில்
அழுக்கு மெத்தை விரிப்பினில்
படுத்துக் கிடக்கும்போது,
தானாக வந்தமரும்
தாய் முகமும்,
மனைவி மக்களுடன்
வாங்கிய கடனும்.

நினைத்துக்கொண்டே
தூங்கிட முயலும்போது
அடித்து எழுப்பிவிடும்
ஆண்ட்ராய்டு அலாரம்
அடுத்தநாள் வேலைக்குச் செல்ல...

தொலைந்து போன புன்னகையில்
கலைந்து போன கனவுகளோடு
பணிக்குச் செல்வோம்
அணி அணியாக...

அயல் தேசத்தில்.

2. <b>தாய்மை</b>

காசு இருந்தால்தான்
காட்சி தருவார்
கடவுள்கூட
கைவீசி வந்தாலும்
பசியமர்த்தி விடுபவளே
அம்மா !

Comments

இரண்டு கவிதைகளுமே அருமை முத்தமிழன். 'அயல்தேசம்' வெகுவாக‌ மனதைத் தொட்டது.

‍- இமா க்றிஸ்

மிக அருமையாக வெளியிட்டமைக்கு எனது நன்றிகள் .

என்றும் அன்புடன்
முத்தமிழன்

மிக்க மகிழ்ச்சி இமா க்றிஸ், உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.

என்றும் அன்புடன்
முத்தமிழன்