கவி பாடும் நேரம்

மன்றத்தில் புதியதாய் சில பிரிவுகளைச் சேர்த்துள்ளோம். அதில் ஒன்று இந்த கவிதைகள் பகுதி.

இதுநாள் வரையில் அறுசுவை நேயர்கள் தங்களது கவிதைகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வந்தார்கள். அவற்றை நாங்கள் எடிட் செய்து கவிதைகள் பக்கத்தில் வெளியிட்டு வந்தோம். அதில சில பிரச்சனைகள் இருந்தன. எல்லாரது கவிதைகளையும் வெளியிட இயலவில்லை. சிலர் மிகச் சிறிய கவிதைகளை அனுப்புவார்கள். ஒரே ஒரு சிறிய கவிதைக்காக கவிதைப் பக்கத்தில் தனியே ஒரு பக்கம் ஒதுக்க இயலாது. அதனால் மேலும் சிலர் கவிதைகள் அனுப்பும் வரை காத்திருந்து, பல கவிதைகளைத் தொகுத்து ஒரு பக்கமாக கொடுத்து வந்தோம். இதனால் கவிதை அனுப்பியவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழலும் உண்டாயிற்று.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் களைந்திடவே மன்றத்தில் கவிதைகள் பகுதியை கொண்டு வந்துள்ளோம். உறுப்பினர்கள் தங்களது சொந்த கவிதைகளை இங்கே வெளியிடலாம். அது பெரிய கவிதையா, சிறிய கவிதையா என்பது பிரச்சனை அல்ல. ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் இங்கே பதிவு செய்யலாம். அறுசுவையின் பொதுவான விதிகள் இங்கேயும் பொருந்தும். படைப்புகள் உங்களது சொந்த படைப்பாக இருக்க வேண்டும். படித்த கவிதைகள், ரசித்த கவிதைகளை கண்டிப்பாக இங்கே வெளியிடக்கூடாது. உங்களது சொந்த கவிதைகளை மட்டுமே இந்த பகுதியில் வெளியிட வேண்டும். மற்றவர் கவிதைகளை வெளியிட்டால் அவை உடனே நீக்கப்படும். ஒருவர் தொடர்ந்து இதே தவறை செய்தால், அவரது அக்கவுண்ட் ப்ளாக் செய்யப்படும்.

இங்கே வெளியாகும் கவிதைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் பக்கத்தில் நாங்களே தொகுத்து வழங்குவோம். எனவே உறுப்பினர்கள் இனி கவிதைகளை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யாமல், இங்கே பதிவிட வேண்டுகின்றோம்.

என் மகளை பற்றிய கவிதை.

யாழினி..... நீ மழலை பாடும் போது யாழ் நீ !

- பிரேமா

பூ வாசம்
``````````````
திடீரென்றோர் பூ வாசம்
சுவாசத்தில் அறைகிறது.

அறையவில்லை,
மெல்லிதாய் மனம் வருடி
இதமாய் உள் நுழைந்தது.

என்ன மலர் இது?

மல்லிகையோ ரோஜாவோ அல்ல.
சொல்லத் தெரியவில்லை
ஆனால்... சுகந்தம் இது,
இதம் தரும் சுகந்தம்.
அறிமுகமான வாசனைதான்
சுவாசத்தில் வழிந்து
மெதுவே முழு உள்ளும்
நிறைகிறதே என்னதிது!
என்ன வாசனை!
எதுவாயினும்...
பிடிக்கிறது,
மிகமிகப் பிடிக்கிறது.

இச் சுகந்தத்தை
முதல் முதல் சுவாசித்த நாள்
பிரயத்தனத்தின் பின்
நினைவுக்கு வருகிறது.

ஓர் புது அத்தியாயத்தின்
முதல் முத்தம்
முத்தத்தின் ஸ்பரிசத்துடன்
கூட நுகர்ந்த வாசம் அது.
முத்தம்... ஒருதலையானது.
நான் மட்டும் கொடுத்த முத்தம்
பெற்றவர் அறிந்திரார் அதனை.
ஆம், பெற்றவள் அவள்,
எனைப் பெற்றவள்.
ஓரு வகையில்...
என் குழந்தை.

உயிருள்ளவரை
உணர்ந்ததில்லை அதனை.
இருக்கவேயில்லையோ அப்போது!
திடீரென்று கிளம்பியதோ!
மலர்கள்...
முகிழ்கையில் சுகந்தம்.
இவர்!
விழி மூடியதும் சுகந்தமா!

அவருக்கு...
இது சுகம் தான் நிச்சயம்.
சுகந்தங்கள்...
சுமைகளாயிருந்தன
சுவாசிக்கும் போது.
இனி!
அவை பாதிக்காது.
சுவாசம் இறுகாது;
திணற வைத்துக் கெடுக்காது.
ரசிக்கலாம் நிம்மதியாய்.

முதல் முத்தம்...
மெத்தென்று
உயிரோட்டம் விலகியும்
விலகாதிருந்த ஸ்பரிசம்.
உதட்டில் - மெல்லிய முறுவல்.
சற்றுக் கேலி தொனித்த முறுவல்.
'சென்றுவிட்டேன் பார்த்தாயா!
என் எண்ணம் போல் தூக்கத்தில்,
துக்கத்தையும் தூக்கத்தையும்
வென்றுவிட்டேன்.
இனி நீ எனக்காக அழ வேண்டாம்.'
என்கிற சந்தோஷக் கெக்கலிப்பா!

இரண்டாம் முத்தம்!
இன்னும் விசேடம்.
மறு நாள்...
அழகாய்ச் சேலையுடுத்து
பூச்சூடிப் பொட்டிட்டு
கழுத்தில் மணநாண்
விரலில் மணமோதிரமென்று
சுமங்கலிக் கோலத்தில்.
கண்ட கண் பனித்தது.
முகத்தில்...
எப்படி அந்தப் பிரகாசம்!
எவ்வாறு உறைந்ததந்த முறுவல்!

குளிர் அறையில்
நாமிருவரும் மட்டுமிருந்த தனிமையில்
வலிக்காமல் முத்தமிட்டேன்.
கன்னத்தின் மென்மை
தாக்கிற்றெனை.
எப்படி!
விறைப்பேதுமில்லாமல்
இயல்பான தூக்கம் போல்!
தூக்கமே தானோ அது!
இல்லையில்லை.
நம்பித்தான் ஆக வேண்டும் நான்.
மீளாத் துயிலது.

மீண்டும் ஓர் முத்தம்.
இம்முறை...
தாக்கிற்று அச் சுகந்தம்
வெகு வலுவாய்.
இயல்பான வாசனையா!
பரிமள தைலங்களா!
சுற்றிலும் நிறைந்திருந்த
பூக்களின் சுகந்தமா!
எதுவானால் என்ன!
நான் உணரக் காத்திருந்த
எனக்கான சுகந்தம் அது.
ஆளமாய் உள்ளிளுத்தேன்.
அப்படியே சேமித்தேன்.
வெளியே விடவில்லை.
விட விரும்பவில்லை.
அது கலந்து கரைந்தது
என்னுள், என் சிந்தையுள்.

பின்னர்...
பல சயமம் உணர்ந்திருக்கிறேன்.
தனிமையில் ஓர் அறையில்;
கடற்காற்றின் உப்பு வாசம் மறைத்து ஓர் நாள்;
அடர் காட்டின் நடுவே ஓர் பொழுது;
அமைதியாய்ப் பயணிக்கையில் ஒரு சமயம்.
என்று எப்போ எவ்வாறென்று
ஊகிக்கவியலாத் தருணங்களில்
திடீரெனவுறைக்கும்
அச் சுகந்தம்!
என் தனிமையில் மட்டும்
எனை ஆட்கொள்ளும் அது...
தரும் நானிழந்த அனைத்தும்
ஒன்றாய்.
நினைவு மீட்டல்...
சுகம் - அச் சுகந்தம் போல்.

அதனால்...
காத்திருக்கிறேன் தினமும்.
அடிக்கடி வர வேண்டும்
அம்மா நீ சுகந்தமாய்.

(இது என் சொந்த ஆக்கம்.)

வாசகர்களுக்கு ஓர் சின்ன வேண்டுகோள் - இப்போதெல்லாம் என் தட்டச்சில் எழுத்துப் பிழைகள் வரக் காண்கிறேன். இந்த ஒரு இடுகையில் 'பதிலளி' தட்டாமல் விடுவீர்களானால், திருத்த உதவியாக இருக்கும்.
இப்போதே அன்புடன் என் நன்றி.

‍- இமா க்றிஸ்

கவி பாடக் களம் இறங்கினேன்
சின்னதாய் ஓர் சந்தேகம்,
கவி மட்டும் பதிவிடும் இடம் இதா!
கவிதை சொன்னோர்க்கு
கருத்துச் சொல்லலாகாதா!

‍- இமா க்றிஸ்

கண்டிப்பாக இங்கே பின்னூட்டம் கொடுக்கலாம். பின்னூட்டங்களுக்கு இடையே கவிதைகளும் கொடுக்கலாம். கவிதையையே பின்னூட்டமாக கொடுக்கலாம். எல்லாம் உங்கள் விருப்பம்.

பெரிய கவிதை அல்லது ஒருவரே நிறைய கவிதைகள் கொடுக்க விரும்பினால் தனி இழை கூட தொடங்கலாம். நான் மேலே குறிப்பிட்டுள்ளது போல், தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளை கவிதை பகுதியில் வெளியிடுவோம்.

உணர்கிறேன்
உங்கள்
கவிதையின் ஸ்பரிசத்தில்
நீங்கள் உணர்ந்த சுகந்தத்தை என்றும் உங்களுடனே கலந்திருக்கும் அம்மாவின் வாசம்
இங்கும் வீசுகிறது..

Be simple be sample

இமாம்மா, உங்ககிட்ட இல்லாத திறமையே இல்லைன்னு சொல்லலாம்.

திறமையே வியக்கும் திறமைகள் கொண்டவர் நீங்க. அறுசுவையில எல்லா இடத்திலயும் நீங்க இருக்கீங்க. எங்களுக்கு எல்லா ஒரு நல்ல இன்ஸ்பிரேசன் நீங்க. உங்களை பார்த்து நெறைய கத்துக்க நெனைக்கிறோம்.

"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"

- மஹா

பதிலுக்கு நன்றி அட்மின்.

மிக்க நன்றி ரேவா. :-)

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சகோதரி. என் கருத்தில் பட்ட / சுட்ட முக்கியமான விடயம்... இன்ஸ்பிரேஷன் என்று சொன்னீர்களே, அதுதான். :-) உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடக்கும் பொறுப்பு எனக்கு உண்டு என்பதை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். நிச்சயம் முயற்சி செய்வேன். :-)

‍- இமா க்றிஸ்

வணக்கம்.இந்தப் பகுதியில் பேஸ்ட் வாய்ப்பு இல்லையே.கவிதைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொழுது பேஸ்ட் வாய்ப்பு இருந்தது.இந்த பகுதியில் தட்டச்சு செய்து தான் அனுப்ப வேண்டும் போல! வேறு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா??

நான் இங்கு நேரடியாகத் தட்டச்சு செய்யவில்லை. வேறோர் இடத்தில் தட்டி வைத்து எடிட் செய்து வைத்துக் கொண்டு அதன் பின் காப்பி செய்து வந்து இங்கு பேஸ்ட் செய்திருக்கிறேன்.

இதற்கு முன் வேறு எங்கும் வெளிவராத என் சொந்தக் கவிதையை இங்கு பேஸ்ட் செய்திருக்கிறேன். முடிகிறதே! வேறு ஏதோ டெக்னிக்கல் விஷயம் பற்றிப் பேசுகிறீர்களோ!

‍- இமா க்றிஸ்

காப்பி பேஸ்ட் செய்ய Ctrl V keys பயன்படுத்தலாம். ஆனால், மொபைல் யூசர்ஸ்க்கு அதிலும் பிரச்சனைகள் இருக்கும். மேலும் சிலர் இந்தப் பிரச்சனையை சுட்டி காட்டியுள்ளார்கள். எனவே Copy prevention ஐ relax செய்துள்ளேன். இப்போது நீங்கள் காப்பி பேஸ்ட் செய்வதில் பிரச்சனைகள் இருக்காது. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் இங்கே தெரிவியுங்கள்.

மேலும் சில பதிவுகள்