ஒரு மனிதனின் கதை!

"முன்பெல்லாம் நாடுகள் என்று இருந்ததில்லை. ஒரு உலகம்; ஒரே உலகம்; அது... ஒரு நாடு; ஒரே நாடு. அங்கு.... ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு பெண்ணைக் கண்டான். அவள் தனக்குப் பொருத்தமான துணை எனக் கண்டான். இருவரும் 'லிவிங் டுகெதர்' முறையில் ஒன்றாக வாழ்ந்தார்கள்.

அப்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் சந்தித்தார்கள்; உறவுகொண்டார்கள்; பிரிந்தார்கள். மீண்டும் வேறு ஆண்களையும் வேறு பெண்களையும் சந்தித்தார்கள்; பிரிந்தார்கள். மீண்டும் வெவ்வேறு ஆடவர்கள் வெவ்வேறு பெண்டிரைச் சந்தித்தார்கள்.

பெண் தாய்மையைத் தனியே எதிர்கொண்டாள். முடிந்த வகையில் பெற்றுவிட்டு அறிந்த விதத்தில் பராமரித்தாள். முடியாத போது தனித்து விட்டுவிட்டுக் கிளம்ப, குழந்தையால் இயன்றால் போராடித் தப்பிப் பிழைத்தது அல்லது மரணித்துப் போயிற்று. பிழைத்து வாழ்ந்த குழந்தை, தன் தந்தை, தாய் யாரென்று அறியாதிருந்திருக்கும்.

அவர்கள்.... வானத்துப் பறவைகளையும் பூமியில் வாழ்ந்த ஏனைய ஜீவராசிகளையும் போல சுதந்திரமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கென்று சட்டதிட்டங்கள் இருந்ததில்லை. பறவைகள் உண்ணும் பழங்களைக் கவனித்து தாமும் உண்ணப் பழகினார்கள். விலங்குகள் வேட்டையாடும் முறைகளைக் கவனித்து, தாமும் வேட்டையாடி உண்டார்கள். எது உகந்தது எது விஷம் என்று ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுத்தது.

தனித்தனி மனிதர்களாக இருந்த ஆண்களும் பெண்களும், பறவைகள் இணையொன்று சேர்த்துக் கூடு கட்டிக் குடும்பமாக வாழ்வதைக் கவனித்தார்கள். பறவைகள் இணை பிரியாமல் சேர்ந்து குஞ்சுகளைப் பராமரித்தன.

மனிதனும் அது போல வாழ விரும்பினான். ஒருவர் உதவி மற்றவர்க்கு அவசியம் என்பதை உணர்ந்தான். பிறகு.... மெதுவே தனக்குப் 'பிடித்த இணை' தனக்கு அவசியம் என்பதைப் புரிந்துணர்ந்தான். காலப் போக்கில்... பிடித்த இணையோடு மட்டும் கூடி வாழ்வது நலம் என்றுணர்ந்தார்கள். அன்பைப் பரிமாற, உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ள குரல் உதவும் என்று கண்டார்கள். ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு குரல் எழுப்பினார்கள். அவையே சொற்களாகின; சொற்கள் வசனக்களாக... பேச்சு உருவானது.

பிறகு!

அவர்கள் சேர்ந்து குழந்தைகளை உருவாக்கினார்கள். குழந்தைகளை இணைந்தே பராமரிக்க, பாதுகாப்பாக ஒரு இடம் வேண்டியிருந்தது. மரங்களில் அத்தனை பெரிய கூடு கட்டுவது சாத்தியமாகத் தெரியவில்லை. மலையடிவாரங்களில், கற்குகைகளினுள்ளே மழை. வெயில் எதுவும் நுழையாத பாதுகாப்புக்குக் கிடைக்கும் என்று அனுபவத்தில் தெரிந்துகொண்டார்கள். பின்பு அவையே அவர்கள் இல்லம் ஆகிற்று.

அங்கு குழந்தைகளைப் பெற்று பாதுகாப்பாக வளர்த்தார்கள். விலங்குகள் விரட்டவில்லை; வேறு பயங்களும் இல்லை. அவை வளர்ந்தன. இப்படியே தொடர... 'மானிடம்' என்றொன்று உருவாகிற்று. நல்ல குணங்கள் தீய குணங்கள் என்றும் வேறு பலதும் பகுத்துச் சிந்திக்க ஆரம்பித்தனர். ஆளுக்காள் உதவி, இணைந்து வாழ்ந்து சமுதாயம் ஒன்றை உருவாக்கினர்.

மெதுவே.... அறிவு, வசதி, வாழ்க்கை முறை எல்லாமே மெருகேறிற்று. ஏற்கனவே இருந்த ஆராய்ச்சி செய்யும் குணம் மும்முரமாக வேலை செய்ய ஆரம்பித்தது.

தமக்குத் தெரிந்ததை மக்கட்குச் சொல்லித் தர, அவர்கள் அதைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில்களை ஆக்கிக் கொண்டனர்.

சனத்தொகை தொடர்ந்து பெருக... சுலபமாகத் தெரிந்த தீர்வு - இடப்பெயர்வு. இடம் பெயர்ந்தனர் மக்களும் மக்கள் பெற்ற மக்களும் ஒன்றாக. புலம் பெயர்ந்தனர். மொழிகள் உருவாகிற்று. இனம், சாதி என்றெல்லாம் உருவாகிற்று."

அந்தச் சதுர உணவு மேசையை முழு உலகம் என்பதாகப் பாவித்து இரு கை விரல்கள் வழியாகவும் குகைகளுள்ளும் மரச் செறிவுகளுள்ளும் வெளியேயும் பயணித்தார் சாம் என்னும் அந்த மனிதர்.

"இது தான் மனிதனின் கதை"

அரை மணி நேரம் விடாமல் பேசியதில் களைத்திருப்பார்; வாய் உலர்ந்திருக்கும்; நிறுத்தப் போகிறார் என்று நினைத்தேன்.

ம்ஹும்! இல்லை, மீண்டும் பேச ஆரம்பித்தார் அவர்.

தீவிர சிந்தனையோடு, "முன்பெல்லாம் நாடுகள் என்று இருந்ததில்லை. ஒரு உலகம்; ஒரே உலகம்; அது... ஒரு நாடு; ஒரே நாடு. அங்கு.... ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு பெண்ணைக் கண்டான். அவள் தனக்குப் பொருத்தமான துணை எனக் கண்டான். இருவரும் 'லிவிங் டுகெதர்' முறையில் ஒன்றாக வாழ்ந்தார்கள்." என்று அதே ரீதியில் முதலில் இருந்து தொடங்கித் தொடர்ந்தார் - பேச்சுத் தேர்வொன்றுக்காக நன்கு தயார் செய்து வைத்திருந்ததை வீட்டுக்கு வரும் விருந்தாளிக்குப் பேசிக் காட்டும் குழந்தை போல.

ஒன்றரை வருடங்களாக அவரை அறிந்திருக்கிறேன். வெறுமனே இன்னார் என்பதாக மட்டும் அறிவேன். அதற்கு மேல் தெரிந்துகொள்ள விரும்பியதில்லை. தொண்ணூற்றொன்பது வயது மதிக்க இயலாத கம்பீரம் ஒன்று கண்டேன் அவரிடம். அது கொடுத்த மரியாதை காரணமாக அந்தந்தப் பொழுதுகளுக்கான வாழ்த்துப் பரிமாற்றங்களோடும் புன்னகைப் பரிமாற்றங்களோடும் மட்டும் நின்றிருந்தது எங்கள் பரிச்சயம்.

நெருங்கியிருக்கலாம் நான். என் சிந்தனைப் போக்கு வேறு. மற்றவர்கள் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்த்து என்னென்ன சங்கடங்கள் வரக் கூடும் என்று சிந்தித்துப் பார்க்கும் தொலை நோக்குச் சிந்தனை. ஒரேயொரு சமயம் சட்டையில் வழிந்திருந்த உணவைத் துடைத்துவிட்டிருக்கிறேன். பின்பெல்லாம் இவர் தொடர்பாக எதை அவதானித்தாலும் அருகே எங்காவது நிற்கும் இல்லப் பணியாளர் ஒருவரை அணுகி என் அவதானத்தைச் சொல்லிவிட்டு விலகி விடுவேன். அவர்கள் செய்தால் பணி; நான் செய்தல்... தவறு - குடும்பத்தாருக்குச் சங்கடம் கொடுத்தவளாவேன்.

ஒரு முறை எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த என்னை நோக்கி உபசாரமாக, தன் குளிர்பானம் நிறைந்த கண்ணாடிக் கிண்ணத்தை நகர்த்தினார். "That's yours Sam, have it." என்றேன். இல்லத்தில் எனக்கென்று தாதியர் தயாரித்துக் கொடுப்பவற்றைத் தவிர எதையும் உண்பதில்லை நான். அவர் நிராகரிப்பாகத் தலையை அசைத்தார்.

எதுவும் பேசியதில்லை என்னிடம். முன்பே சொன்னேனே! பேசும் சொற்பமும் பதில் வாழ்த்து அல்லது நன்றி, மன்னிக்கவும் இப்படி மட்டும் இருக்கும்.

அவரைப் பேசாது அமைதியாக அமர்ந்திருக்கும் மனிதராக மட்டும் கண்டிருந்த எனக்கு அவர் இத்தனை பேசியது ஆச்சரியமாக இருந்தது. பேசிய சமயம் நானும் அவரும் மட்டுமே உணவு மேசையிலிருந்தோம். அந்த மேசைக்குரிய நான்கில் ஓர் நாற்காலிக்குரியவர், அவர் அறையில் உறங்கிக்கொண்டிருப்பதை முன்பே அறையைக் கடக்கும் போது அவதானித்திருந்தேன். இன்னொருவர், இல்லத்திற்குச் சொந்தமான வாகனத்தில் வேறு சிலருடன் மிருகக் காட்சிச் சாலை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

தனிமை கொடுத்த பலமா! அல்லது என்னைத் தனித்துச் சந்திக்கக் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தும் எண்ணமா!

இரண்டும் இராது என்று தோன்றிற்று எனக்கு. அன்று... அவரது நாள். மூளை உற்சாகமான வேலை செய்த ஓர் நாளாக இருந்திருக்க வேண்டும்.

ரீவைண்ட் செய்தது போல் மீண்டும் மீண்டும் முதலிலிருந்து கடைசி வரை மனிதனின் கதையை ஆறு முறையாவது சொல்லியிருப்பார் அன்று. குறுக்கிட விரும்பாது அவதானித்துக் கொண்டிருந்தேன்.
இடையில் ஓர் சமயம், தான் குழந்தைகளைக் கற்பித்து மேன்மையான மனிதர்களாக்கியதைக் குறிப்பிட்டார். தனக்கு ஒன்பது குழந்தைகள் என்றும் அவற்றில் இரண்டு சிறு பராயத்திலேயே மரித்துப் போனதாகவும் சொன்னார். மீதி ஏழு பற்றிய நினைவுகள் அவரிடம் இல்லை.

கேட்டேன். எங்கே என்று தனக்குத் தெரியாதென்றார்.

எனக்குத் தெரியும் - அவர்கள் அனைவரையும் இல்லத்தில் வெவ்வேறு தருணங்களில் கண்டிருக்கிறேன். கனிவான அந்த வயதான குழந்தைகள் தம்மை விட வயதான இந்தக் குழந்தையை அன்பாகத் தலைதடவிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

இது... ஒரு மனிதனின் கதை. சிறப்பாக வாழ்ந்து குழந்தைகளைச் சீராகச் சான்றோராய் வளர்த்து மேல் நிலைக்கு உயர்த்திவிட்டு, பழுத்து... மக்கிப் போய் உரமாகும் சிறப்பான நாளை எதிர்பார்த்து ஒரே இடத்தில் தங்கிவிட்ட ஓர் பெருமை மிக்க மனிதனின் கதை.

கதை சொல்லி நான்... இல்லத்தின் அதே பிரிவில் மற்றொரு அறைவாசி. என்னால் நகர இயலும்... தள்ளுவண்டி உதவியோடு. சிந்தனையும் தெளிவாகவே இருக்கிறது இன்னும்.

என்றோ நானும் என் அன்புக் குழந்தைகளை அடையாளம் தெரியாதவனாவேனோ! அவர்களுக்கு வலிக்குமே! ;(

வேண்டாம், அதற்கு முன்பே எனை அழைத்துக் கொள் இறைவா!

Average: 5 (3 votes)

Comments

ஒரு மனிதனின் தொடக்கமும் ஒரு மனிதன் முடிவில் நிற்கும் காலமும் மனதுக்கு இதமாய் நெருக்கமாய் உங்கள் எழுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமை. முடிவில் சொல்லிய வார்த்தை அனைவருக்கும் வலியாய் இருந்தாலும் உண்மையான் வார்த்தைகள்

Be simple be sample

அன்பு இமா,

தொடக்கமும் நடப்பும் நிறைவும் நினைத்துப் பார்க்கவே, கலவையான உணர்வுகளாக இருக்கின்றன.

அன்புடன்

சீதாலஷ்மி

உண்மை தான் ஆனால் , முடிவில் சொன்ன வார்த்தை வலித்தது, ஆனால் அது தாய் நினைப்பது , குழத்தைகள் நினைப்பது எந்த வயதானாலும் தாய் உயிருடன் இருத்தால் அதுவே போதும் . ( மனதில் நினைப்பதை சரியாக வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை) என் பாட்டி இறந்து 10 வருடமும் தாண்டி விட்டது , அவர்கள் இறக்கும் போது வயது 93 இப்போழுது நினைத்தாலும் துக்கம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

'மனதில் நினைப்பதை சரியாக வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.' என்றீர்கள். என்னால் உங்கள் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் மனதைப் பாதித்திருந்தால் மன்னிக்கக் கோருகிறேன். உங்கள் பாட்டியின் இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள் ஃபாத்திமா.

இது கதை. இதைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

சாரி இமாம்மா , நன்றி

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்