இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 4

Indonesia Alphabets

இந்தோனேஷியா வந்ததும் எதிர்கொண்ட இன்னொரு பிரச்சினை மொழி. ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அதனால் பஹாசா இந்தோனேஷியா கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை. இன்னொன்று தனியே வெளியில் போக வர பயம். எப்பாதும் கணவருடன் தான் வெளியில் செல்ல முடியும். மற்ற நேரங்களில் கூண்டுக்கிளிதான். காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியவுடன் பூட்டப்படும் கதவு மீண்டும் அவர் வரும் போதுதான் திறக்கப்படும். 

2000ம் ஆண்டில் இப்போது போல் இணைய வசதிகள் இல்லை. சிங்கை வானொலியும் தொலைக்காட்சியும் தான் துணை. அதிலும் சிங்கை தொலைக்காட்சியில் ஒரு நாளில் 2 மணிநேரம் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள். காலையில் ஒன்றரை மணிநேரம் ஒரு மலேஷிய தொலைக்காட்சியிலும் தமிழ் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒரு திரைப்படம் இரண்டு நாட்களாக ஒளிபரப்பப்படும். ஆனாலும் அவை எங்களுக்கு பாலைவனச்சோலை தான். இந்தோனேஷிய தொலைக்காட்சி பற்றி இன்னொரு பகுதியில் பார்ப்போம்.

இன்னும் 3 தமிழ் குடும்பங்கள் இருந்தனர். எல்லோரும் தொலைப்பேசியில் மட்டுமே பேசிக்கொள்வோம். பக்கத்து தெருவில் இருந்தாலும் தனியே போக பயம். வீட்டிற்கு ஒரு இந்தோனேஷிய பெண்மணி வேலைக்கு வருவார். அவரிடம் உள்ள சாவியை வைத்து தானே வீட்டின் பின்புறம் வழியாக வருவார். அவரிடம் பேச வேண்டுமே! ஒரே அபிநயம் தான். கற்றுக்கொள்ளாமலேயே பரதம் ஆடினேன். ஆனால் அவங்க ரொம்ப புத்திசாலி. கை சைகைகளின் மூலமே என்னிடம் பேசி விடுவார். அடிப்படை வார்த்தைகள் மற்றும் எண்களை கற்றுக்கொடுத்தார். அதற்கு அவர் பயன்படுத்தியவை உணவு பேக் செய்து வரும் கவர்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் இந்தோனேஷிய ரூப்பியா நோட்டுகள். இந்தோனேஷிய மொழிக்கென தனி எழுத்து வடிவம் கிடையாது. ஆங்கில எழுத்துக்கள் ஆனால் உச்சரிப்பு ஒலி மாறுபடும். அதனால் வாசிக்க சிரமம் இல்லை.

பாட்டில்களில் அச்சடிக்கப் பட்டிருக்கும் வார்த்தைகளை வாசித்து காண்பித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் சைகையில் எனக்கு அர்த்தம் சொல்வார். தண்ணீர் பாட்டிலில் “Air Minum” என எழுதப் பட்டிருக்கும்.நான் அதிபுத்திசாலித்தனமாக அவரை முந்திக் கொண்டு “ஏர் மைனம்” என வாசித்தேன். சிரித்து விட்டார். நான் எழுத்துக்களின் உச்சரிப்பு ஒலியை ஆங்கிலம் போலவே வாசித்து விட்டேன். “ஐர் மினும்” என்றார். “ஐர்” என்றால் தண்ணீர் என்றும் “மினும்” என்றால் குடிப்பது என்றும் சைகையிலேயே சொன்னார். இப்படி தட்டுத் தடுமாறிட்டு இருந்தேன். அப்போது கணவரின் நண்பர் ஒருவர் 30 நாட்களில் ஹிந்தி மாதிரி 1 மாதத்தில் பஹாசா இந்தோனேஷியா பேசுவது எப்படி ன்னு ஒரு புத்தகம் கொடுத்தார்.

இப்போ சின்னதா ஒரு ஃப்ளாஷ் பேக்…. பத்தாம் வந்ததும் கணவரின் உடன் பணிபுரிபவர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றோம். அங்கே வேலை செய்யும் பாட்டிம்மா என் கணவருக்கும் அவர் உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் சமைத்து கொடுத்து பாசத்தோடு கவனித்து கொள்பவர். அவரிடம் “இஸ்திரிக்கு” அப்படின்னு ஏதோ சொன்னார். என்னடா இஸ்திரி பொட்டின்னு ஏதோ சொல்றாரே என்னவா இருக்கும் அப்படின்னு நினைச்சுகிட்டே ஒரு மாதிரி அசடு வழிஞ்சுகிட்டே விருந்து முடிஞ்சுது. வீட்டுக்கு வரும் போது இஸ்திரின்னு ஏதோ சொன்னீங்களேன்னு கேட்டேன், முடிஞ்சா நீயே கண்டு பிடிச்சுக்கோ அப்படீன்னுட்டார். எனக்கு ரோஷம் வந்திடுச்சு. உங்க ஹெல்ப் இல்லாமலே பஹாசா கத்துக்கறேன்னு சவால் விட்டுட்டேன்.

அடுத்த நாள் எங்கள் வீட்டுக்கு வரும் அம்மாவிடம் கேட்டேன். அவங்க “இஸ்திரிக்கு” ன்னா “என்னுடைய மனைவி” ன்னு அர்த்தம்னு சொன்னாங்க. இஸ்திரி ன்னா மனைவின்னும் சுவாமி ன்னா கணவர்னும் எங்களது திருமன ஃபோட்டோவை காட்டி விளக்கினார். அடப்பாவிங்களா அப்போ எங்க ஊருல பழைய காலத்துல பேசினதுதான் இப்போ உங்க ஊர் மொழியான்னு நினைச்சுக்கிட்டேன். ஃப்ளாஷ் பேக் முடிஞ்சிடுச்சு.

கணவரின் நண்பர் கொடுத்த புத்தகமும் ரொம்ப உதவவில்லை. ஆங்கிலம் - பஹாசா இந்தோனேஷியா - ஆங்கிலம் அகராதி வாங்கி வைத்துக் கொண்டு அதை உபயோகித்து யாராவது பஹாசாவில் என்னிடம் பேசும் வார்த்தைகளை டிக்ஷனரியில் தேடி அர்த்தம் கண்டுபிடித்து நான் பதில் சொல்லவும் டிக்ஷனரியிலேயே வார்த்தை கண்டு பிடித்து பதில் சொல்லின்னு தட்டுத் தடுமாறி அந்த மொழியை கற்றுக் கொண்டேன்.

கற்றுக் கொள்வதும் அவ்வளவு சிரமம் இல்லை. தமிழ், சம்ஸ்கிருதம் ஹிந்தி டச்சு மொழி ஆங்கிலம் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு சுற்றினால் அதுதான் பஹாசா 
இந்தோனேஷியா. 

சில உதாரணங்கள்

வனிதா – பெண்
ஜண்டேலா- ஜன்னல்
கொண்டை- கொண்டை
துனியா- உலகம் (இந்தியில் துனியா)
டெலிவிசி - தொலைகாட்சி (டெலிவிஷன்)
சவுதாரா - சகோதரன்
கட்டில் - கட்டில்
குர்சி - நாற்காலி (ஹிந்தியில் குர்சி)
அல்மேரா - அலமாரி
கருடா - கருடன்

இந்தோனேஷியர்களின் பெயரும் குறிப்பாக பெண்களின் பெயர்கள் இந்திய பெயர்களை ஒத்திருக்கும்.
உதாரணமாக சில பெயர்கள்
இந்திராவாதி
சுசீலாவாதி
ரெத்னாவாதி
சரஸ்வாதி
புஷ்பவாதி
இப்படி நிறைய பெயர்கள்  நம் ஊரில் “வதி” என்று முடிவதைப் போல “வாதி” என முடியும்

நான் இப்படி கொஞ்சம் சிரமப்பட்டு இந்த மொழியை கத்துக்கிட்டோமே… நம்ம ஆத்துக்காரர் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி சீக்கிரமா கத்துக்கிட்டாங்கனு விசாரித்தால்… வந்த பதில்.. ”வந்ததும் ஆளுக்கொரு இந்தோனேஷிய பொண்ணோட ஃப்ரெண்ட் ஆகிட்டோம். ஈசியா கத்துக்கிட்டோம்”. என் ரியாக்ஷன் என்னவா இருந்திருக்கும்னு நினைக்கறீங்க… அதேதான் ஙே…..

ஆனால் இந்தோனேஷியர்கள் நம் நாட்டு மொழியான ஹிந்தியில் அருமையாக பாடுவார்கள். இங்கே நீங்கள் ஏதாவது ரெஸ்ட்ரான்டுக்கு சென்றால் அங்குள்ள இசைக்குழு உங்களை பார்த்ததும் ஹிந்தியில் பாடினால் ஆச்சரிய படவேண்டாம். அவர்களுக்கு அந்த பாடலின் பொருள் தெரியாது. ஆனால் அருமையாக பாடுவார்கள்.

அடுத்த பகுதியில் இங்கே நம் மக்கள் இணைந்து கட்டிய கோவிலுக்கு சென்று சுற்றுலாவைத் துவங்குவோம்.. 
 

- கவிசிவா

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 3

Comments

ஒரு இந்தோனேஷியா வாட்ஸ்ப் வீடியோ பாத்திருக்கேன். ஹிஸ்ட்ரியை ஹைஸ்டோரி ந்னு சொல்லுவாங்க காமெடியா இருக்கும். அது போல இருக்கு நீங்க கத்துகிட்டது. எங்களுக்கும் எல்லாத்தையும் போட்டு மிக்ஸ்சில அடிச்சு கொடுத்துடுங்க கத்துக்கறோம்.
//இஸ்திரிக்கு” ன்னா “என்னுடைய மனைவி” ன்னு அர்த்தம்னு // நீங்க ஒரு நல்ல 'குடும்பஇஸ்திரி' கவுண்டமணி காமெடி நியாபகம் வந்துடுச்சு. :)
சரி சீக்கிரம் கோவில் போலாம் வாங்க

Be simple be sample

;-) உங்கள் அனுபவங்கள் வெகு சுவாரசியம்.
சிங்கை தொலைக்காட்சி பற்றி... அங்கு 99 மார்கழியில் சில நாட்கள் தங்கினோம். இன்ஸ்டால்மண்டில் 'அந்தப்புரம்' பார்த்தது நினைவுக்கு வருகிறது. பிறகு எத்தனை தேடினாலும் தமிழ்ப் படம் கிடைக்க மாட்டேன் என்கிறது.

வதியை வாதி என்கிறவர்கள் வாதியை வதி என்பார்களா? எனக்குப் பழக்கமான சொல்லை நினைத்துக் கொண்டேன்... பயங்கரவாதி! :-)

என் மாணவர்களுடன் அவர்கள் வேறு மொழி கற்கும் சமயம் துணைக்குப் போயிருக்கிறேன். பல சொற்கள் நீங்கள் சொல்வது போல் தமிழோ சிங்களமோ போல் ஒலித்து புரியவைத்துவிடும். என் கவனமெல்லாம் கணிதம் போல ஒரு ஃபார்முலாவைப் பிடித்துக் கொண்டு மாணவர்களுக்கு உதவுவதில் மட்டுமே இருப்பதால் கற்றுக் கொள்ள இயன்றதில்லை.

அடுத்து என்ன தலைப்பை எடுத்துக்கொள்வீர்கள் என்று ஊகிக்க முயல்கிறேன். ;-)

‍- இமா க்றிஸ்

அங்கு எங்கோ சேமக்காலைகளில் கல்லறைகள் நடுவே மக்கள் வாழ்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றியும் கொஞ்சம் விபரம் எழுதுவீர்களா? அறிந்துகொள்ள ஆவல்.

‍- இமா க்றிஸ்

இந்தோனேசியா பற்றி நெறைய தெரிந்து கொள்ள முடிகிறது. உங்க அனுபவங்கள் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. அடுத்த பாகத்திற்க்காக வெயிட்டிங்.

"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"

- மஹா

அனுபவங்கள் சுவார்ஸ்யமா இருக்கு. பலங்காலத்துல சுவாமி,ஸ்திரின்னு தான சொல்லுவாங்க அவங்க இப்பவும் அதை கடை பிடிக்கிறாங்க சூப்பர்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்களின் கடினமான அனுபவங்கள் புரிகிறதுபா. புது இடத்தில் மொழியறியாமல் மற்றவர்களிடம் சந்தித்து பேசுவது ரொம்ப இல்லை ரொம்ப ரொம்ப கடினமான ஒன்று.
அவங்க நம்மல சிரிக்கவைக்க பேசுராங்களா ? இல்லை கோவமா பேசுராங்களா ? கண்டுபிடிப்பது மிக கடினம். தெரிஞ்சுக்கிட்டாலும் பதில் சொல்லனுமே ! ஆனால் நமக்கு ஆர்வமும் முயற்சியும் இருந்தா எதுவும் கற்றுக்கொள்ளலாம்பா. உங்களின் அனுபவங்கள் பல விஷயங்களையும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும்.

ஆமா ரேவ்ஸ் அவங்க ஆங்கிலத்தை அவர்கள் பாஷையின் ஒலியோடு உச்சரிப்பார்கள். என்னோட பெயரை அவர்கள் "கஃபித்தா"ன்னு கூப்பிடுவாங்க :(
///இஸ்திரிக்கு” ன்னா “என்னுடைய மனைவி” ன்னு அர்த்தம்னு // நீங்க ஒரு நல்ல 'குடும்பஇஸ்திரி' கவுண்டமணி காமெடி நியாபகம் வந்துடுச்சு. :)///

எனக்கும் ஞாபகம் வந்துச்சும்மா வந்துச்சு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாம் இமாம்மா நானும் பல படங்கள் இன்ஸ்டால்மென்டில் பார்த்திருக்கிறேன் :). இப்போது எல்லா தொலைக்காட்சிகளும் நம் கையடக்க அலைபேசியில் இருந்தாலும் பார்க்கத்தான் ஆர்வம் இல்லை.
எனக்கு மொழிகள் கற்றுக் கொள்வதில் இயற்கையிலேயே ஒரு ஆர்வம். மலையாளம் பேசவும் எழுதவும் தொலைக்காட்சி பார்த்தே கற்றுக் கொண்டேன். அண்டை மாநில மொழி என்பதால் ஏற்கெனவே பரிச்சயம். எளிதாக இருந்தது.
மான்டரின் கற்றுக் கொள்ள ஆரம்பித்த போது இந்திய தொலைக்காட்சிகள் பத்தாமிலும் பார்க்க கிடைத்தது. அதனால் மான்டரின் தொலைக்காட்சி பார்ப்பது குறைந்தது. அந்த மொழியை கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டேன் :(

ஒரு மொழியை கற்றுக் கொள்ள என்னைப் பொறுத்தவரை சிறந்த வழி, ஆங்கில சப்டைடிலோடு அந்த மொழி படங்கள் மற்றூம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது. தொடர்ச்சியாக ஒரு மொழி நம் காதுகளில் ஒலிக்கும் போதும் அதன் பொருளை ஆங்கிலத்தில் விளங்கிக் கொள்ளும் போதும் நம் மூளையில் எளிதாக பதிந்து விடுகிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//அங்கு எங்கோ சேமக்காலைகளில் கல்லறைகள் நடுவே மக்கள் வாழ்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.//
எனக்கு இது புதிய தகவல் இமாம்மா. இந்தோனேஷிய நட்புகளிடம் விசாரிக்கிறேன். விவரங்கள் கிடைத்தால் கண்டிப்பாக பகிர்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி மஹா. உங்கள் பின்னூட்டம் என்னை இன்னும் நன்றாக எழுத வேண்டும் என தூண்டுகிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//பலங்காலத்துல சுவாமி,ஸ்திரின்னு தான சொல்லுவாங்க அவங்க இப்பவும் அதை கடை பிடிக்கிறாங்க சூப்பர்//
ஆமாம் சுவா. நாம் மறந்து போன சொற்களை அவர்கள் இப்போதும் பயன் படுத்துகிறார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரேணு!
//அவங்க நம்மல சிரிக்கவைக்க பேசுராங்களா ? இல்லை கோவமா பேசுராங்களா ? கண்டுபிடிப்பது மிக கடினம். //

இந்தோனேஷியர்கள் ரொம்ப நல்லவங்க பா. நான் தத்தக்கா பித்தக்கான்னு பேசினாலும் நல்லா பேசறீங்கன்னு சொல்லி ஊக்கப்படுத்தினாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!