இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 7

Barelang bridge

என்னென்ன சாப்பிடலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சா. இப்போ நாம கிளம்பி பத்தாமின் அடையாளமான பரேலாங் ப்ரிட்ஜுக்கு (Barelang Bridge) போகலாம். பத்தாம்(Batam), தொந்தோன்(Tonton), நிபா(Nipah), செத்தோக்கோ(Setoko), ரெம்பாங்(Rempang), காலாங்(Galang) என்னும் ஆறு தீவுகளை இணைக்கும் பாலங்களைத்தான் மொத்தமாக பரேலாங் பாலம் என்பார்கள். பரேலாங் என்ற பெயர் கூட இதில் முக்கியமான 3 தீவுகளான பத்தாம் (Batam), ரெம்பாங்(Rempang) மற்றும் காலாங் (Galang) தீவுகளின் பெயர்கள் இணைந்ததுதான். 1997ல் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 
 
இவற்றில் முக்கியமான பாலம் பத்தாமையும் தோந்தோங் தீவையும் இணைக்கும் முதல் பாலம். இது தொங்கு பாலம். 642மீட்டர் நீளம் உடையது. சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் இங்கே இறங்கி பாலத்தை நடந்தே கடப்பார்கள். கடலையும் இயற்கையையும் ரசித்துக் கொண்டே நடப்பது ஒரு சுகானுபவம். இளம் ஜோடிகள் ஆங்காங்கே ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருப்பார்கள். உள்ளூர் வாசிகளின் திருமண ஆல்பத்தில் இந்த பாலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கண்டிப்பாக இருக்கும். சுட்ட சோளம், அவித்த வேர்க்கடலை, ஐஸ்க்ரீம் என ஒரு சுற்றுலா தளத்துக்கே உரிய தின்பண்டங்கள் நிறைய கிடைக்கும்.

 Cantilever Bridge

அடுத்த பாலம் தோந்தோங் தீவையும் நிபா தீவையும் இணைக்கும். இந்த பாலம் Cantilever Bridge வகையை சேர்ந்தது. 420மீட்டர் நீளம். நிபாவையும் செத்தோக்கோவையும் இணைப்பது Girder Bridge வகை. நீளம் 270 மீட்டர். அடுத்தது செத்தோக்கோவையும் ரெம்பாங் தீவையும் இணைக்கும் 365 மீட்டர் நீளமுள்ள Cantilever Bridge வகையை சேர்ந்த பாலம். இறுதியாக 385 மீட்டர் நீளமுள்ள ரெம்பாங் காலாங் தீவுகளை இணைக்கும் ஆர்ச் பாலம். இருபுறமும் காடுகளும் மலைகளும் கடலும் கண்களுக்கு கொள்ளை விருந்தளிக்கும். 

நான்காவது பாலத்தை கடந்து சற்றே இடது புறம் திரும்பினால் பரேலாங் மீன்பிடி குளம் இருக்கிறது. மீன் பிடித்து விளையாட நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம். தூண்டில், இரையாக பயன்படுத்த குட்டி மீன்கள் மற்றும் ஒரு உதவியாளர் நம்முடன் வருவார். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் சென்ற போது கட்டணம் 60 சிங்கப்பூர் டாலர்கள். தூய்மையான காற்று, அமைதியான கடல்… மனம் அப்படியே இலேசானதாகி விடும். 
Fishing pond
நானும் அங்கே தூண்டில் போட்டுட்டு நிற்கறேன் நிற்கறேன்… ஒரு மீன் கூட சிக்க மாட்டேங்குது. உதவியாளர் சிலபல குட்டி மீன்களை வீசி எறிந்து பெரிய மீன்களை விருந்துக்கு அழைத்தார். ஒரு அப்பாவி மீனும் வந்து என் தூண்டிலில் உள்ள இரையை கவ்வியது. மாட்டிக்கிச்சுன்னு தூண்டிலை மேலே தூக்கும் போதுதான் தெரிஞ்சுது அது அப்பாவி இல்லை “அடப்பாவி” மீன் அப்படீன்னு. இரையாக வைத்திருந்த மீனின் கீழ் பாதியை மட்டும் இலாவகமா தின்னுட்டு எஸ்கேப் ஆயிடுச்சு. ஸ்டுப்பிட் ஃபிஷ் னு வெறுப்பில் சொன்னால், தலைவர் அது ஸ்டுப்பிட் இல்லைம்மா க்ளெவர் ஃபிஷ் அப்படீங்கறார். அவர் என் தூண்டில்ல மாட்டிக்கிட்டார் மீன் தப்பிச்சிடுச்சுன்னு சொல்றாராம். நான் ஙே….

அடுத்து என்னவர் தூண்டில் வீசினார். சில நிமிடங்களிலேயெ ஒரு பெரிய மீன் சிக்கிடுச்சு. வெளியே எடுத்து ஃபோட்டோக்கு போஸ் மட்டும் கொடுத்து திருப்தி பட்டுக்கிட்டேன். திரும்பவும் அந்த குளத்திலேயே மீனை விட்டு விட்டோம். நமக்கே வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்தி சமைக்க சொல்லி சாப்பிடலாம். 

அடுத்த பகுதியில் பத்தாமிலுள்ள சில ரிசார்ட்டுகளையும் வியட்னாம் வில்லேஜையும் பார்க்கலாம்
 

- கவிசிவா

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 6

Comments

பாலம் போட்டோ சூப்பர். இந்த மீன் பிடித்த படம் முகபுத்தகத்தில் பார்த்த நியாபகம். அண்ணா கமெண்ட் :) சூப்பர்.

Be simple be sample

இது அதே மீன்பிடி குளம்தான். அதே மீன் தான் :)

//அண்ணா கமெண்ட் :) சூப்பர்.//

ஏம்மா ஏன்... இங்கே அந்த குரங்கு பொம்மையை போட முடியலியே :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒவ்வொருத்தர் சமைச்ச டிஷ் படங்களைப் போட்டு வெறுப்பேத்துவாங்க; கவி எனக்கு ஒரு பெரிய செலவுக்கு வழி வைக்கப் பாக்குறீங்க. :-)

‍- இமா க்றிஸ்