தீபாவளி ஷாப்பிங்

ஷாப்பிங் கிளம்பியாச்சா?

தோழிகள் எல்லாம் இந்நேரம் தீபாவளி ஷாப்பிங் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

தீபாவளிக்கான ஜவுளிகள் எடுப்பது என்பது பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. நம்முடைய குடும்ப வருமானம், எத்தனை பேர், அவங்க வயது, நாம் வசிக்கிற ஊர், பார்க்கும் உத்யோகம், நமக்கென்று உண்டான ட்ரெடிஷனல் ஸ்டைல் எல்லாவற்றையும் சொல்லலாம்.

நம்ம வீட்டில் எத்தனை பேர், எந்த வயதில் இருக்காங்க - இது முதலில் பார்த்து என்ன வாங்கணும்னு டிஸைட் செய்துக்கணும்.

வருட முழுவதும் இதற்காகவே சேமித்து வைத்திருந்தீங்கன்னா சூப்பர். போனஸ் வருது, அதில் வாங்கிக்கிலாம்னாலும் சரிதான்.

போனஸ் தொகையிலும் நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், இப்படி வாங்க வேண்டியிருந்தால், அதையும் கால்குலேட் செய்து கொள்ளுங்க.

உடைகளைப் பொறுத்த வரை - கிராண்ட், ஃபார்மல்ஸ், காஷுவல்ஸ் என்று பிரிச்சுக்கலாம்.

இது எல்லா வயதினருக்குமே பொருந்தும்.

முதலில் இல்லத் தலைவிகளுக்கு -

இந்த வருடத்தில் நிறைய கல்யாண வீடுகள், விசேஷங்கள் அட்டெண்ட் செய்ய வேண்டியிருக்கு என்றால் பட்டு சேலைகள், க்ராண்ட் சேலைகள் ஓ.கே.தான். அதுவுமே நெருங்கிய உறவினர்கள் வீட்டு விசேஷமா, இல்ல ஓரளவுக்கு சிம்பிள் ஆக போகக் கூடிய விசேஷமா என்று யோசிச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி சேலைகள் எடுங்க.

அலுவலகம் போகிறவங்களுக்கு எவ்வளவு சேலைகள் இருந்தாலும் போதாதுதான். ஃபார்மல்ஸ் ஆக - கண்ணை உறுத்தாத வண்ணங்களில் - டீஸண்ட் டிசைன்களில் பொருத்தமான வண்ணங்களில் ஜாக்கெட்டுகளுடன் எடுத்துக் கொள்ளலாம். அலுவலக உடைகளுக்கு டிசைனர் ரவிக்கைகள் தவிர்க்கலாம்.

காட்டனா, சிந்தெடிக்கா - இந்த சாய்ஸும் யோசிக்கணும்.

கஞ்சி போட்டு அயர்ன் செய்ய நேரம் இருக்கும், அந்த லுக்கே தனிதான் அப்படின்னா காட்டன் சேலைகள் எடுத்துக்கலாம். அதிலுமே ஸ்டார்ச் ஃப்ரீ சேலைகள் இருக்கு. அழகான லுக் தரும் இவை.

சில்க் காட்டன் - இவற்றில் க்ராண்ட் லுக், சிம்பிள் லுக் இரண்டுமே கிடைக்கின்றன. நல்ல ப்ரைட் வண்ணங்கள் கட்டினால் அசத்தலாக இருக்கும்.

சிந்தெடிக் சேலைகள் - அதிகம் விலை இல்லாமல், ரெகுலராக கட்டிக் கொள்வதற்கு நல்லா இருக்கும்.

சுடிதார் வெரைட்டிகள் - கேட்கவே வேணாம். எல்லா விலைகளிலும் எல்லா வெரைட்டிகளிலும் கிடைக்கிறது.

சுடிதார் வாங்கும்போது - எக்செல், மீடியம், ஸ்மால் என்ற அளவுகளில் கிடைக்கும். உங்களுக்குப் பொருத்தமான அளவைப் பார்த்து வாங்குங்க. விலையும் கலரும் பார்ப்பதை விட பொருத்தமான அளவு ரொம்பவும் முக்கியம்.

இல்லத் தலைவர்களுக்கு - தரமான முழுக் கால் சட்டைகள், ஃபார்மல் ஷர்ட்கள், தேவைப்பட்டால் உயர் ரக ஜரிகை அல்லது காட்டன் வேஷ்டிகள் எடுத்துக்கலாம். ஷர்ட், பேண்ட் அளவுகள் முதலிலேயே கரெக்டாக குறிச்சு வச்சுகிட்டு எடுங்க.

குழந்தைகளுக்கு - பார்க்கிற அத்தனையும் வாங்கணும் போலதான் ஆசையாக இருக்கும்.

ஸ்கூல் போகிற குழந்தைகளுக்கு அவங்க பெரும்பாலும் யூனிஃபார்ம் போட்டுக்கிறாங்க. அதனால், விசேஷ வீடுகளுக்கு போட்டுக் கொள்ள ஃபேன்சியான ட்ரெஸ்கள் ஒன்றிரண்டு, அதைத் தவிர ஸ்கூல் விட்டு வந்ததும் உடை மாற்றிக் கொள்ள - காட்டன் ட்ரெஸ்கள் தான் பெஸ்ட்.

லெகிங்ஸ் பற்றி கொஞ்சம் - இந்த உடை பற்றி நிறைய விமரிசனங்கள் இருக்கு. ஆனால் பெண் குழந்தைகள் - 5 வயதிலிருந்து உள்ள சிறுமிகளுக்கு இது ரொம்ப அவசியமாக இருப்பதைப் பார்க்கிறேன்.

ஆமாம் - இந்த வயதுக் குழந்தைகள் விளையாடப் போகும்போது தயக்கமில்லாமல் விளையாட முடிகிறது. மேலே ஃப்ராக் அல்லது சற்றே நீளமான டாப்ஸ் அணிந்து கொள்கிறார்கள். பார்க்கில், வெளியிடங்களில் சௌகரியமாக இருக்கிறது அவங்களுக்கு.
நல்ல டார்க் நிறங்களில் எடுங்கள். வெளிர் நிறங்கள் வேண்டாம்.

ஸ்கூல் யூனிஃபார்ம் ஸ்கர்ட் அணியும்போது, இப்பவெல்லாம் சில பள்ளிகளில் கறுப்பு நிற லெகிங்ஸ் அணியச் சொல்லி, பள்ளியிலேயே சொல்லி விடுகிறார்கள். நல்லதுதான்.

சிறுவர்களுக்கு - செக்ட் ஷர்ட்ஸ், அடர் வண்ணங்களில் ப்ரிண்ட் செய்தவை, ஹாஃப் ட்ரவுசர்கள் இவை நிறைய தேவைப்படும்.

க்ராண்ட் லுக் உடன் உள்ள கோட் டைப் மாடல்கள், ஒன்றிரண்டு ட்ரெடிஷனல் உடைகளும் தேவைதான்.

வீட்டுப் பெரியவங்களுக்கு - அதிகம் எடையில்லாமல், அணிவதற்கும் துவைப்பதற்கும் சுலபமாக, சுருக்கம் விழாத நீட் லுக் உள்ள வெரைட்டிகள் எடுத்தால் பொருத்தமாக இருக்கும். அவங்களோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொடுங்கள்.

எல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!

3
Average: 3 (2 votes)

Comments

லெக்கிங்ஸ் பற்றிய உங்கள் கருத்தே தான் எனக்கும் இருக்கிறது சீதா. சின்னவர்களென்ன, பெரியவர்களுக்கே வசதிதான். என் வேலையில் நிறைய திறந்தவெளிப் படிக்கட்டுகள் ஏறி இறங்க நேருகிறது. ஸ்கர்ட் அணிந்தால் லெக்கிங்ஸ் இல்லாமல் வேலைக்குக் கிளம்புவதில்லை.

'சுருக்கம் விழாத நீட் லுக் உள்ள' ஆடைகள் - எப்படி யோசிக்கிறீர்கள்! :-) இங்கு பெரிதாக யாரும் இஸ்திரி செய்வது இல்லை. அப்பாவின் துணிகளெல்லாம் ட்ரையரிலிருந்து நேரே அவரிடம் போகிறது. ஒரு சுருட்டு சுருட்டி உள்ளே வைத்து எடுத்து அணிகிறார். எப்பொழுதும் கசங்கிய தோற்றத்தில் தெரியும் அந்த ஒரு ஷர்ட்டை பறிக்கப் பார்க்கிறேன். அவருக்குப் பிடித்த நிறம் என்பதால் தர மறுக்கிறார். :-)

‍- இமா க்றிஸ்

தீபாவளி ஷாப்பிங்... முடிச்சாச்சு சீதாம்மா. ஆனால் ஏனோ சிறுவயதில் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. அப்போதெல்லாம் தீபாவளிக்காக காத்திருந்து புது ஆடைகள் வாங்குவோம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல ஷாப்பிங் டிப்ஸ். குழப்பம் இல்லாமல் எடுக்க உதவியாய் இருக்கும்

Be simple be sample