சிங்கப்பூர் போகலாம் வாங்க..

Singapore deepavali

சிங்கப்பூர் பல மொழி பல இன மக்கள் இணைத்து வாழும் ஒரு நாடு. உலக வரைபடத்தில் ஒரு சிறிய சிவப்பு புள்ளிதான் சிங்கப்பூர். இயற்கை வளங்கள் என்று பெரிதாக ஏதும் கிடையாது. ஆனால் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இதற்கு காரணம் சிங்கப்பூரின் தந்தை, முதல் பிரதமர் திரு. லீ க்வான் யூ வின் தொலைநோக்குப் பார்வையும் சிங்கை மக்களின் ஒழுக்கமும் உழைப்பும்தான். 

சிங்கப்பூரின் பெயர் முதலில் தெமாசிக்(Temasek)  என்பது தான். தெமாசிக் என்றால் மீன்பிடி கிராமம் என்று பொருள். 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் நாள் மலேசியாவிலிருந்து பிரிய விருப்பமில்லாமல் கண்ணீரோடு பிரிந்து உருவான நாடு. சிங்கையின் மொத்த பரப்பளவு 721.5 சதுரகிலோமீட்டர்கள். சிங்கப்பூர் உருவான ஆரம்ப காலகட்டத்தில் இன மோதல்களும் கலவரங்களும் நடந்தன. அனைத்தும் திரு. லீ க்வான் யூ அவர்களின் தலைமையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாடு வளர்ச்சிப்பாதையில் நடைபோட ஆரம்பித்தது. 

2000ம் ஆண்டு சிங்கப்பூரில் வந்து இறங்கும் போது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் அழகிலும் பிரம்மாண்டத்திலும் பிரமித்து நின்றேன். அதன் பின் டேக்சி பிடித்து நாத்தனார் வீட்டுக்கு போகும் வழியெல்லாம் உயரமான கட்ட்டிடங்களை.. ஆ….ன்னு பார்த்துட்டே போனேன். 

நகர திட்டமிடல் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பேருந்து முனையம் அதனோடு இணைந்தே MRT (Mass Rapid Transit) எனப்படும் மெட்ரோ ரயில் நிலையங்கள் வணிக வளாகங்கள் என பொதுப்போக்குவரத்து மிகவும் எளிதாக்கப்பட்டிருக்கும். அடுக்குமாடி வீடுகள் கூடவே அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடங்கள், ஒவ்வொரு குடியிருப்பிற்கும் அருகிலேயே உடற்பயிற்சி மைதானங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள், கடைத்தொகுதிகள் என எல்லா வசதிகளும் இருக்கும். தொடர்ச்சியாக மக்களின் தேவைகள் கருத்து கேட்கப்பட்டும் ஆராயப்பட்டும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.  

பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஆங்கிலம், சீனம் மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் இருக்கும். நான்கு மொழிகளிலும் அறிவிப்புகளும் ஒலிக்கும். இந்த நான்கு மொழிகளும் சிங்கையின் ஆட்சி மொழிகள். பேருந்து மற்றும் ரயில் இரண்டிற்குமே ஈசிலிங்க் அட்டைகள்(EZlink cards) பயன்படுத்தலாம். இவற்றை பேருந்து முனையங்கள் மற்று ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஏறும் போதும் இறங்கும் போதும் இந்த அட்டையை அதற்கான கருவியில் ஸ்கேன் செய்தால் சரியான கட்டணத்தை எடுத்துக் கொள்ளும். யாருடைய உதவியும் இல்லாமல் சிங்கையில் எங்கேயும் தனியாக சென்று வரலாம். பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களை காண்பிக்கும் மொபைல் ஆப்கள் உள்ளன. வாடகை கார்களும் இருக்கின்றன. மீட்டர் கட்டணம். பாதுகாப்பானவை. 

சிங்கப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது சுத்தமான நாடு என்பதுதான். குப்பைகளை கண்டபடி தெருவில் வீசினால் அபராதம் கட்ட வேண்டி வரும். சூயிங்கம் தடை செய்யப்பட்ட பொருள். அதனால் இங்கே வரவங்க அதெல்லாம் எடுத்துட்டு வந்துடாதீங்க. அபராதம் மட்டுமே இந்த நாட்டை சுத்தமாக வைத்திருக்கவில்லை. சட்டத்தை மதிக்கும் மக்கள் கூடவே அரசு ஒவ்வொரு விஷயத்திலும் எடுத்துக் கொள்ளும் அக்கறை.  இங்கே நள்ளிரவில் நீங்கள் கவனித்தால் தெரியும் ரோட்டை கூட்டும் வாகனங்கள் ரோடு முழுவதையும் சுத்தம் செய்து கொண்டே போகும். சுத்தமா இருக்கற ரோட்டை ஏன் இவங்க கூட்டறாங்கன்னு நமக்கு தோணும் :). தெருவிளக்குகள் ஒவ்வொன்றும் சுத்தமாக துடைக்கப் படும். புல்தரைகளில் விழும் இலைகளை பணியாளர்கள் இயந்திரங்கள் உதவியோடு கூட்டி அள்ளுவார்கள். பேருந்து நிறுத்தங்களின் மேல் விழுந்திருக்கும் குப்பைகள் கூட சுத்தமாக அகற்றப்படும். நாம் நம் வீட்டை தூசி தட்டி துடைப்பது போல அவர்கள் நாட்டை சுத்தப்படுத்துவார்கள்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் குப்பை கொட்டுவதற்கான இடம் இருக்கும், வீட்டுக்கழிவு குப்பைகளை பைகளில் கட்டி அங்கே போட்டுவிட்டால் அது தரைதளத்தில் உள்ள குப்பை சேகரிக்கும் கிடங்கிற்குள் விழுந்துவிடும். ஒவ்வொருநாளும் இந்த கிடங்குகள் சுத்தமாக்கப் படும். இந்த கிடங்குகளின் வெளியே ரீசைக்ளிங் குப்பைகளுக்கான குப்பைத்தொட்டிகள் வைக்கப் பட்டிருக்கும். அவற்றில் ரீசைக்ளிங் செய்யப்படும் குப்பைகளை சேர்க்க வேண்டும். சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு ரீசைக்ளிங் செய்யப்பட்டுபவை அதற்கான தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். மற்ற குப்பைகள் எரிக்கப்பட்டு சாம்பல்கள் அதற்கான தீவில் இடப்படும். ஆனால் அந்த தீவை சென்று பார்த்தாலும் குப்பைகள் கண்ணுக்குத் தெரியாது. துர்நாற்றம் இருக்காது. அழகிய பூங்கா போல இருக்கும். இப்படி கொட்டப்படும் கழிவுகளால் கடலும் அந்தத் தீவைச் சுற்றிய பவளப்பாறைகளும் கூட எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. குப்பைகளைப் பாதுகாப்பாக அகற்ற இத்தனை முயற்சிகள் எடுக்கப் படுகின்றன.

சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க இந்த விவரங்கள் போதுமானவை என நினைக்கிறேன்.

முதலில் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்கு போகலாமா. லிட்டில் இந்தியா.. பேரைக் கேட்டாலே புரிந்திருக்குமே… இந்தியர்கள் அதிகம் வணிகம் செய்யும் இடம். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடம் என சொல்ல முடியாது. அதற்கு காரணம் எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட விகிதத்தில் எல்லா இன மக்களும் வாழ வேண்டும் என கொள்கை வைத்திருக்கிறது. சிங்கப்பூர் என்றாலே இந்திய பயணிகள் செல்ல விரும்பும் ஒரு இடம் முஸ்தஃபா சென்டர். இங்கே கிடைக்காத பொருளே இல்லை என சொல்லலாம். 2000 கால கட்டங்களில் இந்திய மளிகை சாமான்கள் இந்திய காய்கறிகள் வாங்க வேண்டும் என்றால் லிட்டில் இந்தியா பகுதிக்குத்தான் வரவேண்டும். இந்த முஸ்தஃபாவுக்கு வந்து விட்டால் எல்லாம் இங்கேயே வாங்கி விடலாம். இப்போது எல்லா குடியிருப்புகளின் அருகிலேயே இந்திய கடைகள் வந்து விட்டன. 

சனிக்கிழமை மாலை நேரங்களில் இந்திய தொழிலாளர்கள் நண்பர்களை சந்திக்கும் பகுதியாகவும் இந்த லிட்டில் இந்தியா பகுதி விளங்குகிறது. இதற்காக ஒரு பெரிய மைதானமே ஒதுக்கப் பட்டுள்ளது. நண்பர்களை சந்திப்பது ஊருக்கு பணம் அனுப்புவது தேவையான பொருட்கள் வாங்குவது இந்திய உணவுகள் சாப்பிடுவது என எல்லாம் இந்த ஒரே இடத்தில் நடக்கும். சனிக்கிழமைகளில் அவ்வளவு கூட்டம் இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு சனிக்கிழமையில்தான் பேருந்தில் ஏறும்போது ஏற்பட்ட தகராறில் ஒரு சிறிய கலவரமே நடந்து நம் இந்திய சமூகம் சற்றே தலைகுனிய வேண்டி வந்தது. முதலில் இந்தியர்களை மொத்தமாக குறை சொன்னாலும் பின்னர் கலவரத்தின் போது சிங்கப்பூரர்களுக்கு உதவிய நம் மக்களைப் பற்றி தெரிந்து கொண்டு தவறு செய்தவர்களை மட்டுமே வெறுத்தார்கள். அரசும் அவர்களுக்கு தண்டனை வழங்கியது.

தீபாவளிக்கு ஒருமாதம் முன்னரே இப்பகுதி களைகட்டத் தொடங்கிவிடும். லிட்டில் இந்தியா முழுவதும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள் சங்கமும் அரசும் இணைந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஒளியூட்டு விழா நடத்தப்படும். தீபாவளிச் சந்தையும் நடத்தப்படும். இந்திய ஆடைகள், பலகாரங்கள், வீட்டை அலங்கரிக்கத் தேவையான பொருட்கள், பட்டாசுகள் என வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். தீபாவளிச்சந்தைக்கு போவது என்பதும் சிங்கப்பூர் இந்தியர்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களில் அடக்கம்.

தமிழ்நாட்டின் பிரபல உணவகங்களின் கிளைகள் லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கின்றன. அடையார் ஆனந்த பவன், முருகன் இட்லிகடை, அஞ்சப்பர், தலப்பாகட்டி… இவையெல்லாம் இந்தியர்களின் வேடந்தாங்கல். இந்தியாவில் உள்ள ருசி கிடைக்காவிட்டாலும் எங்களின் பாலைவனச்சோலைகள் அவை :).

லிட்டில் இந்தியா முழுவதும் நடந்து நடந்து இன்னிக்கு கால் வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. அடுத்த பகுதியில் பத்தாமுக்கு ஃபெரியில் போகும் போது பார்த்தோமே அந்த செந்தோசா தீவுக்கும் யூனிவெர்சல் ஸ்டுடியோவுக்கும் போகலாம்.

- கவிசிவா

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 9

Comments

நான் போன முதல் வெளிநாடு சிங்கப்பூர். படிக்கும் போது மீண்டும் ஒரு முறை போக வேண்டும் என்கிற ஆசை வருகிறது. இரண்டாம் தடவை போன சமயம் பொங்கல்; கடைசியாக போன சமயம் தீபாவளி. அலங்காரங்கள் அருமையாக இருந்தன. ஒரு மூன் ஃபெஸ்டிவல் சமயமும் அங்கு இருந்தேன்.

அறுசுவை நட்பு தேன்மொழியை சிங்கையில் சந்தித்தது மறக்க முடியாதது. உங்களைத் தான் மிஸ் பண்ணிவிட்டேன். ;(

‍- இமா க்றிஸ்

இது என்ன ஊர் சிங்கப்பூர். கவுண்டமணிக்கு அப்பறம் நீங்கதான் கரெக்டா காட்டறீங்க. குப்பை விஷயம் நினைச்சாலே சான்ஸே இல்ல. மக்கள் முதல் ஒத்துழைப்பு ரொம்ப முக்கியமான பாயிண்ட். இன்னைக்கு பட்டாசு வெடிக்க டைமிங் வெச்சாங்க. யாராவது கடை பிடிச்சோமா முதல்ல நாம திருந்தி வர வேண்டிய தூரம் ரொம்ப தூரம் இருக்கு. லிட்டில் இந்தியா பார்த்தாச்சு. நெக்ஸ்ட்டு

Be simple be sample

ஆமாம் இமாம்மா நானும் மிஸ் செய்து விட்டேன் :( அடுத்தமுறை சிங்கையில் அல்லது இந்தியாவில் மீட் பண்ணிடலாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அதேதான் ரேவ்ஸ்... சிங்கப்பூ..ஊ.ஊர் :) அடுத்து நாம ரோலர்கோஸ்டர்ல போகப்போறோம். ஆம்லெட் போட்டுட மாட்டீங்களே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!