ஓலையில்லா ஊர் இது!

'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை,' என்பது பழமொழி. அப்படியானால் ஓலையில்லா ஊருக்கு!!

நியூசிலாந்துக்கு வந்த நான்கு மாதங்களில் 'குருத்தோலை ஞாயிறு' வந்தது. கோவிலுக்குப் போன பின் தான் இங்கு தெங்கு வளர்வதில்லை என்பது நினைவுக்கு வந்தது. என்ன செய்வார்கள்!

ஓலையில்லாவிட்டால் என்ன! இவர்களிடம் அதிகமாகக் கிடைக்கிறது பைன் வகைகள். அவற்றைப் பிடுங்கி, சிறிய கிளைகளாக ஒடித்து விசுவாசிகளுக்குக் கொடுத்தார்கள்.

வீட்டுக்கு வந்தபின் அதை எங்கே வைப்பது என்பது ஒரு கேள்வி. காய்ந்த பின் பொடிப்பொடியாக உடைந்து உதிர ஆரம்பிக்கும். ஊரில் சிறிய வயதில் இருந்த வீட்டில்... சிற்றோடு வேய்ந்த கூரையில் நான்கு ஓலைக் குருசுகள் சொருகி இருக்கும். அனேகமாக எல்லாக் கிறிஸ்தவர்களது வீடுகளிலும் இவற்றைக் காணலாம். வீட்டிலுள்ளோர் எண்ணிக்கை அளவு குருசுகள் இருக்கும். அடுத்த விபூதிப் புதன் வரும் முன் அவற்றைக் கோவிலில் சேர்த்துவிடுவோம். இவற்றை எரித்து விபூதிப் புதனுக்குப் பயன்படுத்துவதற்கான சாம்பலைத் தயாரிப்பார்கள்.

இந்த பைன் கொப்புகளை கூரையில் சொருகி வைக்க முடியாது. சீலிங் கூரை! எப்படிச் சொருகுவது!! ஒரு கிண்ணத்தில் வைத்திருப்பேன். உலர்ந்தபின் அனைத்தையும் ஓர் ஸ்னப் லொக் பையில் போட்டு கூடவே 'சிலிக்கா ஜெல்' பைகள் சிலவற்றையும் போட்டுச் சேமித்து வைப்பேன். விபூதிப் புதன் வரும் சமயம் பார்த்து வைத்த இடத்தை மறந்துவிடுவேன். ;)

இங்கு வேறு ஓலை உள்ள தாவரங்கள் வளர்கின்றன. அத்தனை ஓலைகளை உயரத்திலிருந்து பிடுங்குவது சிரமம் என்பதால் இந்தக் குட்டிச் செடிகள் போதும் என்று விட்டுவிட்டார்களோ! சாமோவன் கோவில்களில் சைக்கஸ் ஓலைகளில் குருசுகளைச் செய்தபடியே கொடுப்பார்களாம். பாடசாலையில் ஒரு வருடம் கடதாசியில் குருசுகள் செய்து கொடுத்தோம்.

ஊரில் அவரவரே தான் குருசு செய்ய வேண்டும். வரிசையாக நின்று போய் குருத்தோலையை வாங்குவதற்குள்.... ;) நிறையப் பராக்குகள். எந்தெந்த அன்ரிமார் வந்திருக்கிறார்கள், யார்யார் வரவில்லை என்று ஒரு கணக்கு எடுத்துவிடுவேன். எனக்கு ஓலையைச் சரியாகக் கட்ட வராது. பிடித்துத் திருகுதிருகென்று திருகி ஒரு வழியாக குருசு செய்து முடியவும் யாராவது ஒரு அண்ணா அல்லது ஒரு அக்கா பார்த்துவிட்டு பிழை சொல்லி, திருத்திக் கொடுக்க முயற்சித்து, இலை பலமிழந்துவிட்டதால் எதுவும் இயலாமல் உருவியபடியே என் கையில் கொடுத்துவிட்டு விலகிவிடுவார்கள். திரும்ப நான் முதலிலிருந்து ஆரம்பிப்பேன். சில சமயம் யாராவது பரிதாபம் பார்த்து என் நொந்து போல ஓலையை வாங்கிக் கொண்டு தங்கள் நல்ல குருசை எனக்குத் தருவதுண்டு.

சென்ற வாரம் - சில ஆங்கில உறவுகளை வீட்டுக்கு அழைத்திருந்தேன். தமிழ் முறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். தோரணம் கட்ட விரும்பினேன். ஓலைக்கு எங்கே போவது!

ஓலையில்லா ஊருக்கு ஃப்ளாக்ஸ் இலை தோரணம்!

என்னிடம் இருந்த ஃப்ளாக்ஸ் செடி அடர்த்தி போதாது. அதற்கும் மேல்... ஏதோ வெள்ளைப் பஞ்சு போல் பூச்சி முட்டைகள் ஒட்டியிருந்தன. இத்தனை வளர வைக்கவே பெரும்பாடு பட்டிருக்கிறேன். க்றிஸ் அடிக்கடி அதை வெட்டிப் போட முயற்சிப்பார். நான் தடுப்பேன். சாக்குக்கு ஓரிரண்டு வெளி இலைகளை வெட்டி விடுவேன். இப்படியே பத்துப் பன்னிரண்டு வருடங்கள் தொட்டியில் கழித்த செடி இப்போதான் இரண்டு கிளை மொட்டுகள் அரும்பியிருக்கிறது.

இன்னும் ஒன்று... பாடசாலைச் சின்னவர்களோடு போன விஞ்ஞான (இந்தியத் தொலைக் காட்சியொன்றில் 'வேதமும் விங்னானமும்' என்று ஒரு பெண்மணி விளம்பரம் பேசிக் கொண்டிருப்பார். அவரது தொலைபேசி எண் தெரிந்தால் யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்!) கல்விச் சுற்றுலாவின் போது அவர்களோடு சேர்ந்து நானும் ஒரு ஃப்ளக்ஸ் நட்டு எடுத்து வந்தேன். அது இன்னும் குட்டிப் பிள்ளையாக இருக்கிறது.

ஓலையை வெட்டுவதற்கு ஓர் முறை இருக்கிறது. தென்னையில் வெட்டுவது போல் அல்ல. 'karakia' (பிரார்த்தனை) சொல்ல வேண்டும்.
Hutia te rito
o te harakeke
Kei whea, te kōmako e kō
Kī mai ki ahau
He aha te mea nui
o tēnei ao
Māku e kī atu
He tangata, he tangata, he tangata.

ஏதாவது புரிகிறதா? :-) மொஆனா பேசும் மொழி & Six Days Seven Nights திரைப்படத்தில் வரும் கடற்கொள்ளைக்காரர் பேசிய மொழி இது. மஓறி மக்களது மொழி.

இவர்களும் சுத்தம் பார்ப்பார்கள். டா(ப்)பு (தீட்டு) என்றால் பிடுங்கக் கூடாது. மழை நேரம் பிடுங்கக் கூடாது. நடுவில் உள்ளது பிள்ளை ஓலை; அருகருகே இருபுறமும் உள்ள இரண்டும் தாய், தந்தை ஓலைகள். அவற்றையும் பிடுங்கக் கூடாது. சரிவாக வெட்ட வேண்டும். பயன்பாட்டுக்கு மிஞ்சியதை எடுத்த செடிக்கு அடியில் போட்டுவிட வேண்டும்.

நடுவில் பூ இருந்தது. அடுத்தடுத்த ஓலைகளை விட்டுவிட்டு மீதியில் நன்றாக இருந்தவற்றை வெட்டிக் கொண்டேன். தென்னோலை போல் ஈர்க்கு பலமானதாக இல்லை. அதனால் கவனமாக நடு நம்புக்குச் சற்று முன்பாகவே வெட்டுவதை நிறுத்தினேன். மடித்து விட்டால் மீண்டும் நாய்வாலாக தன் நிலைக்குப் போயிற்று. ஸ்டேப்பிளரை எடுத்து நச் நச்! எங்காவது கிழிந்து போனால் மனம் தளர்வதில்லை என்கிற முடிவில் இருந்தேன். (செலோடேப் எதற்கு இருக்கிறது!) ஓலைகள் அகலமாக இருந்தன. அதனால் நீளமாக வெட்ட வேண்டியதாகிற்று. விளைவு - குறைந்த எண்ணிக்கை மடிப்புகள்.

மடிப்புகளில் சின்ன வகைக் கரப்புகளைக் கண்டேன். சரி, வெளியில் வைத்து வேலையை முடித்துவிட்டு தோரணத்தைக் கட்டி முடித்துவிட்டு உள்ளே செல்லலாம் என்று நினைத்தேன். பாதி வேலையில் க்றிஸ் கூப்பிட்டார். போய் வந்து பார்த்தால்... ட்ரேஸி சந்தோஷமாகத் தோரணம் சாப்பிடுகிறார். ;) நல்ல வேளை கூர் முனையில் சாப்பிட்டிருந்தார். மடித்ததும் மறைந்து விட்டது.

இந்த ஓலையில் செய்யும் கைவேலை ஒன்று புட்டிபுட்டி (பூ) http://www.arusuvai.com/tamil/node/25510

Average: 1 (1 vote)

Comments

இமாம்மாவின் கைவண்ணத்தில் எல்லாமே அழகு. வித்தியாசமான வரவேற்பு. ட்ரேஸியின் குறும்பு :) அப்பவும் விடாம செய்து தோரணம் அழகோ அழகு. முகபுத்தகத்தில் பார்த்த கோலமும் இந்த வரவேற்பில் ஒரு பகுதியோ..

Be simple be sample

:-) ஆமாம், தரையில் நீளமாக சிம்பிளாக பார்டர் கோலம் (சுண்ணாம்பு) போட்டிருந்தேன். ஒரு இடத்தில் இடைவெளி விட்டு அந்த இடத்தில் சிக்குக் கோலம் போட்ட டைலை வைத்தேன். மழை வந்து குழப்பி விட்டது. ;(

தோரணம் காய்ந்ததும் பின் எல்லாம் பிடுங்கிவிட்டு குட்டிப் பெண்கள் சாப்பிடக் கொடுக்கப் போகிறேன். :-)

‍- இமா க்றிஸ்

மா, நிஜமா எனக்கு ஒண்ணுமே புரியல. ஒரு ரெண்டு மூணு தடவை படிச்சுட்டு வரேன்

- பிரேமா

தோரணம் அழகாக இருக்கிறது.

//ஓலைக் குருசுகள் சொருகி இருக்கும்//

இப்போதும் எங்களிடையே இந்த வழக்கம் உண்டு. அடுத்த வருட விபூதி புதன் வரை பத்திரப்படுத்தி வைப்போம் ஆலயத்தில் கொடுப்பதற்காக.

அன்புடன்
ரீஹா :-)

;) என்ன புரியல! சொன்னால் அழகா விம்பார் போட்டு விளக்கி விட்டுருவேன். ;)

‍- இமா க்றிஸ்

கருத்துப் பதிவிட்டமைக்கு என் அன்பு நன்றிகள் ரீஹா.

நானும் பத்திரப்படுத்துவேன். பிறகு வைத்த இடத்தை மறந்துவிடுவேன். :-) நாலைந்து வருடத்துக்கு முந்தைய இலைகள் சமீபத்தில் கண்ணில் பட்டன. இந்த வருடத்து இலைகளோடு சேர்த்து எடுத்து வைத்திருக்கிறேன். மீண்டும் தொலைக்காமலிருக்க வேண்டும். ;)

கூரையில் சொருகினால் தொலையாது இல்லையா! :-)

‍- இமா க்றிஸ்

//ட்ரேஸி சந்தோஷமாகத் தோரணம் சாப்பிடுகிறார். ;) நல்ல வேளை கூர் முனையில் சாப்பிட்டிருந்தார். மடித்ததும் மறைந்து விட்டது.// யார் சாப்பிட்டது புரியவில்லை? ஏதும் விலங்கோ?

//நிறையப் பராக்குகள். எந்தெந்த அன்ரிமார் வந்திருக்கிறார்கள், யார்யார் வரவில்லை என்று ஒரு கணக்கு எடுத்துவிடுவேன். // இதுவும் ...!!

இது போக யாருக்கோ சாப்பிட கொடுப்போம் என்று போட்டிருந்ததாக படித்த ஞாபகம்.!! 3 முறை படித்தும் அந்த வரி என் கண்ணில் படவில்லை.

கொஞ்சம் விம் பார் போட்டு விளக்குங்க மா !!

- பிரேமா

இலங்கையில் திருவிழாக்கலில் இப்படி அலங்காரித்துப்பார்த்திருக்றேன் எனக்கும் அதே சந்தேகம் ட் ரேஸி என்றால் யார்?

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

ட்ரேஸியைக் காண - http://www.arusuvai.com/tamil/node/30937

பராக்கு - பிராக்கு! பராக்குப் பார்ப்பது. பக்தி உணர்வை ஒரு பக்கம் வைத்துவிட்டு கோவிலுக்கு யார் வந்தார்கள் எனப் பார்ப்பேன் என்றேன்.
அன்ரி - ஆண்டி! (குயவனை வேண்டிய நந்தவனத்து ஆண்டி இல்லை.) இலங்கையில் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதும் போது, 't' வரும் இடங்களில் ரகர வரிசை எழுத்துகளைப் பயன்படுத்துவோம்; 'd' வரும் இடங்களுக்கு டகர வரிசை எழுத்துகள் பயன்படுத்துவோம்.

'யாருக்கோ சாப்பிட கொடுப்போம்' ;) தோரணம் காய்ந்த பின்னால் அதிலுள்ள ஸ்டேப்பிள் பின்களை நீக்கி விட்டு ட்ரிக்ஸி & ட்ரேஸிக்கு சாப்பிடக் கொடுக்கப் போகிறேன். காய்ந்த இலைகள் அவர்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்கு வயிற்றோட்டம் வந்தால் வைக்கோல், காய்ந்த இலைகள் கொடுத்தால் விரைவில் நின்றுவிடுகிறது.

‍- இமா க்றிஸ்

ட்ரேஸி பற்றி மேலே சொல்லியிருக்கிறேன்.

இது வெகு சாதாரணம் தான். இலங்கையில் இதை விட அழகான தென்னோலை அலங்காரங்கள் பார்த்திருப்பீர்களே! வாழைத் தண்டில் குருத்தோலைகளைக் குற்றி செய்யும் அலங்காரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

‍- இமா க்றிஸ்

பராக்கு ... நாங்கள் அதை "பரக்க" என்போம்.

மற்றவை, விம் பார் போட்டு விளக்கியதில் பளிச் பளிச் என்று மின்னுகிறது. நன்றி மா.

- பிரேமா