சிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 2

Dolphin show Singapore

இன்னிக்கு நாம செந்தோசா தீவுக்கு போவோம். பத்தாம் போக ஹார்பர் ஃப்ரன்ட் ஃபெரி டெர்மினல் போனோமே. அதே ஹார்பர் ஃப்ரன்டில் இருந்துதான் செந்தோசாவுக்கும் போக வேண்டும். தரை வழி, ஆகாயவழி… இந்த இரண்டு வழிகளிலும் செல்லலாம். 2000ம் ஆண்டுகளில் கடல் மார்க்கமாகவும் செல்லும் வகையில் ஃபெரி சர்விஸ்களும் இருந்தன. நாங்கள் முதல் முறை சென்றபோது ஃபெரியில் தான் சென்றோம்.

விவோ சிட்டி வணிக வளாகத்திலிருந்து ஒரு நடைபாலம் (Sentosa Boardwalk) செந்தோசாவுக்கு நம்மை இட்டுச் செல்லும். பொடிநடையாக போய் விடலாம். என்னால் நடக்கவெல்லாம் முடியாது என்றால் இருக்கவே இருக்கிறது ரயில் சேவை. இதே விவோ சிட்டி வணிகவளாகத்தின் மூன்றாவது தளத்திலிருந்து செந்தோசா செல்லும் செந்தோசா எக்ஸ்ப்ரஸ் (Sentosa Express) ரயிலில் போகலாம்.

எனக்கு ஆகாயவழியில்தான் போக வேண்டும் என்றால் அதற்கும் இருக்கவே இருக்கிறது கேபிள்கார் வசதி. மவுன்ட் ஃபேபரில் இருந்து செந்தோசா செல்லலாம். நம் வசதிக்கேற்ப ஒருவழியாகவோ அல்லது இருவழியாகவோ டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். கேபிள்காரிலேயே உணவு உண்ணவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதற்கான கட்டணம் தனி. 

செந்தோசா தீவில் ஏகப்பட்ட அட்ராக்ஷன்கள் இருக்கின்றன. அதாவது பார்ப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. நமக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து அதற்கேற பேக்கேஜுகளில் டிக்கெட் வாங்கினால் சற்று மலிவாக இருக்கும். பொதுவாக இந்த தீவில் கட்டணம் சற்று அதிகம் தான். ஆனால் கொடுக்கும் காசுக்கு சந்தோஷம் நிச்சயம். 

ஒவ்வொரு முறை செல்லும் போதும் புதிதாக சில அம்சங்கள் சேர்ந்திருக்கும். அதனால் பொதுவாக இருக்கு சில அம்சங்களைப் பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன். செந்தோசா செல்லத் திட்டமிடுகிறோம் என்றால் முதலிலேயே இணையத்தில் சென்று அங்குள்ள பொழுதுபோக்கும் அம்சங்கள் என்னென்ன எவை நமக்கு விருப்பமானவை என முதலில் நாம் ஓரளவிற்காவது முடிவு செய்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் தேர்ந்தெடுத்த அட்ராக்ஷனுகளுக்கான டிக்கெட்டுகள் எந்த காம்போவில் வாங்கினால் நமக்கு லாபகரமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதன் படி வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த காம்போ டிக்கெட்டுகள் சிலநேரங்களில் சில இணையதளங்களின் மூலமாக வாங்கினால் லாபகரமானதாக இருக்கும். அல்லது இந்த காம்போ டிக்கெட்டுகளை செந்தோசாவிற்குள் சென்று அங்கேயே கூட வாங்கிக் கொள்ளலாம்.

செந்தோசாவிற்குள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பஸ் சேவைகள் இருக்கின்றன. சிவப்பு பச்சை நீலம் என மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. எந்த தடத்தில் ஏறினால் நாம் விரும்பும் இடத்துக்கு செல்ல முடியும் என்பதை பேருந்து நிறுத்தங்களில் உள்ள வரைபடங்களிலும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் கையடக்க கையேடுகளிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

எனக்கு இங்கே பிடித்த முக்கியமான பொழுது போக்கு டால்ஃபின் ஷோ. டால்ஃபின்கள் டைவ் அடிப்பதும் டான்ஸ் ஆடுவதும் விசில் அடிப்பதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும். சீல்களும் கூட நமக்கு விளையாட்டு காண்பிக்கும். அடுத்து இதனோடு பேக்கேஜ் காம்போவாக வரும் சீ அக்வேரியம் (Sea Aquarium). சுறாவும், திருக்கை மீன்களும் இன்னும் ஜெல்லி மீன்களும் இன்னும் பேர் தெரியாத எத்தனையோ மீன்களும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். நாங்கள் முதன்முறை போன போது அன்டர் வாட்டர் வேர்ல்ட் ஆக இருந்தது. உள்ளே போனால் வெளியே வரவே மனம் வராது. நம் தலைக்கு உயரே மீன்கள் நீந்திச் செல்லும். மார்கெட்டுல செத்துப் போய் கிடந்தது எல்லாம் இங்கே உயிரோடு வந்து நமக்கு ஹாய் சொன்னது. கடலுணவு பிரியர்களான எனக்கும் என்னவருக்கும் இதை ஃப்ரை பண்ணினா நல்லாருக்குமா இல்லை குழம்பு வைத்தால் நல்லாருக்குமான்னுதான் எண்ணம் போனது. என்ன பண்றது நமக்கு சாப்பாடு முக்கியம் பாஸ் :) மீன்களுக்கு உணவளிக்கும் நேரம் முக்குளிப்பு வீர்ர்கள் அந்த மெகா மீன் டேங்கிற்குள் குதித்து மீன்களுக்கு உணவூட்டுவார்கள். ஆமாம் சில மீன்களுக்கு வாயிலேயே ஊட்டி விடுவார்கள். 

அடுத்து ஸ்கை லுர்ஜ் (Sky Lurge) எனப்படும் ஒரு அட்வென்சரஸ் ஐட்டம். எனக்கு பயம். அதனால் நான் போனதில்லை. கம்பியில் இணைக்கப்பட்ட மூவர் அமரும் சேரில் நாம் உட்கார்ந்து அந்த கம்பி தடத்தில் அது வழுக்கிக் கொண்டு சென்று கடற்கரையில் இறங்கும். மற்றவர்கள் போவதை பார்த்து திருப்தி பட்டுக்குவேன். இதே போல்  ஜிப் லைனரும் (zip liner) இருக்கிறது. சாகசம் பிடிக்கும் என்பவர்கள் செல்லலாம். என்னை மாதிரி தைரியசாலிகள் எட்ட நின்று பார்த்துக் கொள்ளலாம் :). 

பட்டர்ஃப்ளைஸ் கார்டன்… விதம் விதமான பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும் அழகே அழகு. அவை வெளியில் பறந்து விடாமல் இருக்க உயராமாக நெட் அமைத்து உள்ளே பூச்செடிகளும் மரங்களும் வைத்திருப்பார்கள். வெளியே வர மனமே வராது எனக்கு. நோ நோ… அவற்றை பிடித்து டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அதுங்க பாட்டுக்கு சிறகடிச்சு பறந்துட்டு இருக்கட்டுமே!

செந்தோசாவில் அங்கே இங்கே நடந்துட்டு இருக்கும் போது கொஞ்சம் கவனமாவே வாங்க. சிலர் கழுத்தில் மலைப்பாம்பை மாலையாக போட்டுகிட்டு ஃபோட்டோக்கு போஸ் கொடுத்திட்டு இருப்பாங்க. அவர்களை பார்த்தாலே மீ… எதிர்ப்பக்கமாக ஓடி எஸ்கே….ப்….. :). முதன்முறை போன போது இதெல்லாம் தெரியாத வெள்ளந்தியா இருந்தேனா… பராக்கு பார்த்துட்டே வரும் போது திடீர்னு ஒருத்தர் என் முன்னாடி மஞ்சள் நிறத்துல ஒரு பெரிய பாம்பை கடுத்துல போட்டுகிட்டு ஃபோட்டோ  எடுக்கறீங்களான்னு வந்து நின்னார். பா….ன்னு  சொன்னாலே நடுங்கற நான் அங்க இருந்து திரும்பி பார்க்காமல் ஓடியே போய் விட்டேன் :). அப்புறம் உங்களுக்கே தெரியாமல் நீங்க ஜிப்லைனர்ல போகறப்போவும் ஸ்கை லுர்ஜில் போகும் போதும் ஃபோட்டோ எடுத்து நீங்கள் வெளியே வரும் போது டிவியில் காண்பித்து ஃபோட்டோவாக வேண்டுமான்னு கேட்பாங்க. விலை கேட்டு உங்களுக்கு ஓகே ன்னா தலையை ஆட்டுங்க. விலை நிச்சயம் அதிகம்தான். இன்பச்சுற்றுலாவில் விலையை பார்க்காமல் நினைவுக்காக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் சிங்கையில் எல்லா சுற்றுலா தளங்களிலும் இதுபோல் ஃபோட்டோ நீட்டுவார்கள். தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

4D, 5D சினிமா அரங்குகள் இருக்கின்றன. 20நிமிட காட்சிகளாக இருக்கும். நிச்சயம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ஏற்கெனவே இது போன்ற சினிமாவிற்கு சென்றவர்களுக்கு அதிக எக்சைட்மென்ட் இருக்காது. முதல்முறை நன்றாக ரசித்தேன். இரண்டாவது மூன்றாவது முறைகளில் அந்த ரசிப்புத்தன்மை போய் விட்டது.

ஸ்கை டவர்.. இதில் ஏறி உட்கார்ந்தால் அது அப்படியே சுழன்று சுழன்று உயரே போகும். செந்தோசாவின் அழகை உச்சத்தில் இருந்து ரசிக்கலாம். எனக்கு பிடித்த இடம். எந்த பயமும் கிடையாது :). அப்படியே அலுங்காமல் குலுங்காமல் நம்மை கீழே இறக்கி விட்டு விடுவார்கள். இங்கேயும் உள்ளே ஏறப் போகும் போதே ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்வார்கள். மறுக்காமல் போஸ் கொடுத்துட்டு அப்புறமா வேணும்னா வாங்கிக்கலாம். வாங்க கட்டாயப் படுத்த மாட்டார்கள்.

இன்னும் ம்யூசியம், அந்தகால சிறைச்சாலை என நிறைய இருக்கின்றன. எல்லா இடங்களும் சுற்றிவிட்டு பாலவான் பீச்சில் வந்து ஓய்வெடுக்கலாம். கடலில் விளையாடலாம். பத்தாம் கடல் போலவே இங்கேயும் அதிக அலைகள் இருக்காது. ஆசிய கண்டத்தின் தென்கோடி முனை(Southernmost point of Asia)  இந்த பீச்சில்தான் இருக்கிறது. அங்கேயும் சென்று அந்த கல்வெட்டின் முன்னால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

செந்தோசா தீவின் மணிமகுடம் என்றால் இரவில் நடக்கும் வாட்டர் ஃபவுன்டெய்ன் ஷோ தான். 2000ம் ஆண்டில் செல்லும் போது இசைக்கேற்ப நடனமாடும் நீரூற்றுகள் மட்டும் இருந்த்து. அதற்கு அடுத்தமுறை போகும் போது இசைக்கு நடனமாடும் நீரூற்றுக்கு நடுவே லேசர் ஒளியில் உருவாகும் கார்ட்டூன் கேரக்டர்களும் நடனமாடின. தற்போது விங்ஸ் ஆஃப் டைம் (Wings of Time) என்ற பெயரில் கடற்கரையில் நடத்தப்படும் நீரூற்று, லேசர் மற்றும் தீ இவை மூன்றை வைத்து நட்த்தப்படும் ஷோ. கண்கொள்ளா காட்சியாக இருக்கும். செந்தோசா தீவின் மணிமகுடமே இந்த ஷோ தான். நான் வார்த்தைகளில் சொல்வதை விட நேரில் பார்த்தால் மட்டுமே இதனை உணர முடியும். இரவு 7.40மணிக்கும் 8.40மணிக்கும் இரண்டு ஷோக்கள் நடத்தப்படும். நாள் முழுக்க நடந்து நடந்து இந்த ஷோ முடியும் போது ரொம்பவே டயர்ட் ஆகி இருப்போம். 

டூர் பேக்கேஜில் வருபவர்களாக இருந்தால் காலையில் யுனிவெர்சல் ஸ்டுடியோசுக்கும் போய்விட்டு மதிய உணவிற்கு மேல் செந்தோசாவையும் சுற்றிப் பார்த்து முடித்திருப்பார்கள். நாம் தனியாக செல்லும் போது அவர்கள் அளவிற்கு திட்டமிட்டு செல்ல முடியாது.

யுனிவெர்சல் ஸ்டுடியோவும் செந்தோசா அருகிலேயேதான் உள்ளது. இதற்கு நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் அது வேறொரு உலகம். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் உள்ள யுனிவெர்சல் ஸ்டுடியோ போலத்தான் இருக்கும் ஆனால் அளவில் அமெரிக்காவில் உள்ளதை விட சிறியது. பலவிதமான ரோலர்கோஸ்டர்கள் மற்றும் ரைடுகள்தான் இதன் சிறப்பம்சம் வார இறுதி நாட்களில் நடைபெறும் ஊர்வலம் மிகவும் நன்றாக இருக்கும். செந்தோசாவை வார நாட்களிலும் யுனிவெர்சல் ஸ்டுடியோவை வார இறுதிநாட்களிலும் பார்ப்பது நல்லது. எனக்கு யுனிவெர்சல் ஸ்டுடியோஸ் அவ்வளவாக ரசிக்கவில்லை. ஏனென்றால் எனக்கு இந்த ரோலர் கோஸ்டர் ரைடுகள் எல்லாமே பயம். அதனால் 100வெள்ளி கொடுத்து உள்ளே சென்று ஒன்றிரண்டு குழந்தைகளுக்கான ரைடுகளில் மட்டுமே போனேன். இந்த ரைடுகளை என்ஜாய் செய்பவர்களாக இருந்தால் கொடுக்கும் காசுக்கு நன்றாக என்ஜாய் செய்யலாம். என்னை போன்றவர்கள். யுனிவெர்சல் ஸ்டுடியோ வெளியே உள்ள பூமி உருண்டை முன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டு வந்து விடலாம் :).

- கவிசிவா

 

சிங்கப்பூர் போகலாம் வாங்க..

Comments

ஆஹா! திரும்ப சிங்கப்பூர் போய் வந்த மாதிரி இருக்கு. :-) கடைசை வரி... நான் செய்தது. இன்னொரு தடவை போக வேண்டும். சில விடயங்கள் பார்க்க பாக்கி இருக்கிறது.

செந்தோசவில் இலங்கை யானை ஒன்று இருந்தது - கோமளி! அங்கு போன பின் எங்கு யானைகளைக் கண்டாலும் அவதானிக்கும் ஒரு விடயம், பாகர்கள் யானைகளுடன் பேசும் மொழி - பெரும்பாலும் சிங்களச் சொற்களில் தான் அறிவுறுத்தல் கொடுக்கிறார்கள். இங்கு உள்ள மிருகக்காட்சிச் சாலையிலும் இதைக் கவனித்தேன்.

‍- இமா க்றிஸ்

//கடைசை வரி... நான் செய்தது.//
ஹா ஹா இமாம்மா நானும் அதைதான் செய்திருக்கணும் 100வெள்ளி சும்மா கொடுத்துட்டு வந்தேன் :(
//கர்கள் யானைகளுடன் பேசும் மொழி - பெரும்பாலும் சிங்களச் சொற்களில் தான் அறிவுறுத்தல் கொடுக்கிறார்கள்//
புதிய தகவல் இமாம்மா. நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!