சிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 3

Chinatown Singapore

சிங்கையில் என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம் இயற்கையை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை. குட்டித் தீவு… அதில் 60லட்சம் மக்களுக்கான இருப்பிடம் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள்…  இத்தனையும் யோசித்தால் அது முழுவதும் ஒரு காங்க்ரீட் காடாகத்தானே இருக்க முடியும் எனத் தோன்றும். ஆனால் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை… சிறிய இடம் இருந்தாலும் மரங்களும் புல்வெளிகளும் வளர்த்திருப்பார்கள். சாலையோர மரங்களை பராமரிப்பதற்காக தனியாக ஒரு துறையே இருக்கிறது. செல்ஃபோன் டவர்களால் நம் ஊரில் சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன என்றோம். ஆனால் இங்கே சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் கிளிகளும் பறந்து திரிகின்றன. இங்கேயும் செல்ஃபோன் டவர்களும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. ஆனால் மரங்களையும் பாதுகாப்பதால்தான் இங்கே சிட்டுக்குருவிகள் சிறகடித்துப் பறக்கின்றன. நாமும் மரம் வளர்ப்போம்.

அரசாங்கம் குடிமக்களின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழே பொதுவாக உடற்பயிற்சி சாதனங்களும் நடைபயிற்சி செய்வதற்கான நடைபாதைகளும் அமைக்கப்பட்டிருக்கும். நள்ளிரவிலும் நடைப்பயிற்சி செய்பவர்களைப் பார்க்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்களும் எல்லா வருடமும் உடல் தகுதி தேர்வில் தேர்வாக வேண்டும். ஒவ்வொரு ஆண் சிங்கப்பூர் குடிமகனும் நிரந்தர வாசியும் 2வருடங்கள் இராணுவப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். பள்ளிக் கல்வி முடிந்ததும் இராணுவப்பயிற்சி முடித்து விட்டுதான் கல்லூரியில் சேர முடியும். தனிமனித ஒழுக்கத்திற்கு இந்த பயிற்சியும் ஒரு காரணமாக இருக்குமோ என எனக்குத் தோன்றுகிறது.

ஒருமுறை இங்கே டேக்சி எடுத்த போது ஓட்டுனர் வழி தெரியாமல் சற்று சுற்றி நான் போக வேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்த்தார். அவர் வேண்டுமென்றே சுற்றவில்லை. வழி தெரியாமல்தான் அப்படி நடந்தது. ஆனாலும் அவர் மீட்டர் கட்டணத்தில் 2வெள்ளி (தற்போதையமதிப்பு 100 ரூபாய்) குறைவாக போதும் என்றார். நானும் நீங்கள் வேண்டுமென்றே செய்யவில்லையே அதனால் பரவாயில்லை மீட்டர் கட்டணமே கொடுக்கிறேன் என்ற போதும் அவர் விடாப்பிடியாக 2வெள்ளி குறைவாகவே பெற்றுக் கொண்டார். மீதி சில்லறை 5காசு என்றாலும் சரியாக திருப்பி தருவார்கள். 

சிங்கையில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் பயமின்றி எப்போதும் எங்கேயும் தனியாக போய் வரலாம். குற்றச்செயல்களே நடப்பதில்லை என சொல்ல முடியாது. ஆனால் மிகக்குறைந்த அளவிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன. சிங்கப்பூர் காவல் துறை சொல்வதே “Low crime doesn’t mean No crime”. அதனால் எப்போதும் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவே வலியிறுத்துவார்கள்.

இங்கே எல்லா குடியிருப்பு பகுதிகளும் பொது போக்குவரத்தை எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டிருக்கும். பேருந்து நிறுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் நடைபாதைகள் பெரும்பாலும் கூரை இடப்பட்டிருக்கும். மழையிலும் குடையின்றி செல்ல முடியும். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அதிகபட்சம் 500 மீட்டர்களுக்குள் பேருந்து நிறுத்தம் இருக்கும். பெரும்பாலும் எல்லா பேருந்துகளும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வித்த்தில் அமைந்திருக்கும். சக்கரநாற்காலியில் பயணி காத்திருக்கிறார் என்றால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்க வேண்டிய பயணிகள் இறங்கியதும் ஓட்டுனரே சக்கரநாற்காலி பேருந்தில் ஏறுவதற்கு வசதியான பலகையை இழுத்து விடுவார். பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி என்றால் பயணி தானாகவே ஏறிக்கொள்வார். இல்லையென்றால் ஓட்டுனர் உதவி செய்வார். மாற்றுத்திறனாளி ஏறி அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சக்கரநாற்காலியை நிறுத்திய பிறகுதான் பிற பயணிகள் ஏறுவதற்கான வாயிலைத் திறப்பார். அதே போல அந்த பயணி இறங்கும் நிறுத்தம் வரும் போது மாற்றுத்திறனாளிகள் இறங்கவேண்டும் என்பதற்குரிய பொத்தானை அழுத்தினால் ஓட்டுனரே முதலில் அவர் இறங்குவதற்கு உதவி செய்து இறக்கிவிடுவார். எல்லா இடங்களிலும் சக்கரநாற்காலி செல்வதற்கு ஏதுவாக சாய்வு பாதைகளும் அமைக்கப் பட்டிருக்கும். இதனால் சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் யார் உதவியும் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் எளிதில் சென்று வர முடியும். நம் ஊரிலும் இதுபோல் வர வேண்டும். நாமும் அவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். என்னடா ஓவரா புகழறேன்னு யோசிக்கறீங்களோ… நல்ல விஷயங்கள் எங்கே இருந்தாலும் பாராட்டுவதும் அதை நாம் பின்பற்ற முயற்சிப்பதும் நல்லதுதானே.

இப்போ அப்படியே கிளம்பி நாம் சைனாடவுன் பகுதிக்கு போவோம். இந்தியர்களுக்கு லிட்டில் இந்தியா என்றால் சீனர்களுக்கு இந்த சைனா டவுன். சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லக்கூடிய இடம். சைனாடவும் ரயில் நிலையத்திலிருந்து பகோடா தெருவுக்குள் நுழைந்தால் வரிசையாக கடைகள். பலவிதமான கைப்பைகள் பேனாக்கள் குடைகள் உடைகள் ஆபரண பொருட்கள் என அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும். 3 for 10 dollars கடைகள் இங்கே அதிகம். சிங்கையில் பிறபகுதிகளிலும் இது போன்ற கடைகள் உண்டு. ஆனால் சைனா டவுனில்தான் இவை பிரபலம். சிங்கையில் நினைவு பொருட்கள் பரிசளிக்க வாங்க விரும்பினால் இங்கே வாங்கலாம். 

சைனா டவுனின் மையப்பகுதியில் உள்ளது சிங்கையின் மிகப்பழமையான சவுத் ப்ரிட்ஜ் மாரியம்மன் ஆலயம். 1827ம் ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டது. பல இன ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது இந்த ஆலயம். ஐப்பசி மாதம் நடக்கும் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சீனர்களும் கூட இக்கோவிலில் தீமிதிப்பார்கள். 

மாலை நேரங்களில் சைனாடவுன் இன்னும் களைகட்டிவிடும். குட்டிக் குட்டி உணவகங்களில் இருந்து வரும் மணமே பசியைத் தூண்டும். வாட்டர் செஸ்ட்நட் வறுக்கும் வாசனை அப்படியே என்னை அதன் பக்கம் ஈர்த்துவிடும். பலாக்கொட்டையின் சுவையில் இருக்கும் அந்த வறுத்த வாட்டர் செஸ்ட்நட்டின் சுவைக்கு நான் அடிமை.  அதை அப்படியே சாப்பிட்டு வந்தால் இன்னொரு பக்கம் சாத்தே… கோழியும் இறைச்சியும் தீயில் சுடப்படும் வாசனை மூக்கைத் துளைக்கும். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்துட்டே வந்தால் வயிறு நிறைந்து விடும், சுடச்சுட அல்லது குளிர்ச்சியாக சோயாமில்க் அல்லது கரும்புச்சாறு குடித்து இரவு உணவை நிறைவு செய்யலாம். இதெல்லாம் வேண்டாம் ஐஸ்க்ரீம் பழம் சாக்லேட் எல்லாம் ஒரு தட்டில் ஊற்றி தேய்த்து வெட்டி ரோல்களாக உருட்டி தரும் ஐஸ்க்ரீம் ஒன்றை பல வீடியோக்களில் பார்த்திருப்போமே. அதுவும் கிடைக்கும், நம் கண்முன்னே செய்து தருவார்கள். வேண்டிய ஃப்ளேவர்களில் சொல்லி வாங்கி சாப்பிட்டுட்டே பொடி நடையா ரயில் நிலையத்துக்கு போயிடலாம். ரயில் நிலையத்துக்குள் போகும் முன் சாப்பிட்டு முடிச்சிடுங்க. ரயில் நிலையத்துக்குள்ளும் ரயிலிலும் பேருந்திலும் சாப்பிட்டால் ஃபைன் கட்ட வேண்டி வரும்.

அடுத்த பகுதியில் ஜூரோங் பறவைகள் பூங்காவுக்கு போகலாம்.

- கவிசிவா

 

சிங்கப்பூர் போகலாம் வாங்க.. பாகம் 2

Comments

படிக்க படிக்க இப்படில்லாம் இருக்குமா ஆச்சரியமாவும் அதிசயமாகவும் இருக்கு. நமக்கு இதெல்லாம் கற்பனை ல கூட நடக்குமான்னு தெரியல. ஏக்கமா படிச்சுட்டு போகவேண்டியதுதான்

Be simple be sample

நடக்கும் நாம மனசு வச்சா நடக்கும். நம்பிக்கை அதானே எல்லாம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கும் இந்த பயமின்றி எப்போதும் நடமாட முடியும் தன்மை சற்று வியப்பாகத் தான் இருந்தது. அங்கே இரவு நேரம் பெண்கள் தனியாக உணவகங்களில் உண்பது கண்டேன். இங்கு கூட சற்று யோசிப்போம்.

உணவுகள் என்னைப் பெரிதாகக் கவர்வது இல்லை. ஆனால் பச்சை நிறத்தில் பிட்டு ரோல் என்று இருந்தது ஆர்வத்தைத் தூண்டியது. சாப்பிட்டுப் பார்க்கக் கிடைக்கவில்லை. அறுசுவையிலிருந்து தான் அவை ரம்பைச் சாறு சேர்த்துச் சமைப்பவை என்று தெரிந்து கொண்டேன்.

சைனா டௌன் எதை வாங்குவது எதை விடுவது என்று இருந்தது. :-)

‍- இமா க்றிஸ்

சொல்ல சொல்ல ஆசையா இருக்கு. எனக்கும் காசு சேர்த்து வச்சு சிங்கப்பூர் & பாரிஸ் போகணும்னு ஆசை. இப்ப இல்லனாலும் என் வாழ்நாள் முடியறதுக்குள்ள குடும்பத்தோட போகணும். முயற்சி பண்ணிட்டே இருக்கோம். பார்க்கலாம்.

- பிரேமா

திடீரென் அறுசுவை தோழிகள் நியாபகம்
புதிய கடவுசொல் வாங்கி இங்க வந்ததும் கண்ணில் பட்ட பதிவு, நேரில் கையை பிடிச்சு கூட்டிட்டு போன மாதிரி ஒரு ஃபீல்
நன்றி கவி

அன்புடன்
பவித்ரா