புது வீடு...

நாங்கள் புதியதாக ஒரு வீடு பாண்டிச்சேரியில் கட்டுவதாக உள்ளோம் (40x60 அடி). கட்டப் போகிற வீட்டில் என்னென்ன வசதிகள் செய்தால் நன்றாக இருக்கும் என அன்பு சகோதரிகள் ஆலோசனைகள் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக சமையலறைககு (14x10) வேண்டிய வசதிகளை சொன்னால் நலமாக இருக்கும். ஒவ்வொருவரின் அனுபவமும் ஒரு ஆலோசனை தானே! நிறைய சகோதரிகள் வெளிநாட்டில் இருப்பதால், முடிந்த வரை அங்குள்ள சமையலறை வசதிகளை, எங்களுடைய சூழ்நிலைக்கும், பட்ஜெட்டிற்குமேற்ப செய்யலாமே என்று ஒரு சின்ன ஆசை.
சகோதரிகள் உதவியை நாடும்,
செல்வி.

அன்பு செல்வி...

எனக்கு தோன்றும் சில குறிப்புகள்:

1) கண்டிப்பாக நீங்கள் சமைக்கும் இடத்தில் இருந்து பார்க்கும் வசதியாய் ஜன்னல் அமைத்து கொள்ளவும். நாம் நிறைய நேரம் அங்கு தான் இருப்போம் என்பதால் a beautiful view will surely be refreshing on all days....

2) அடுப்பு மேடையை உயரத்திற்க்கு ஏற்றாற் போல் இருத்தல் நன்று.

3) அடுப்பு வைக்கப் போகும் இடத்தை சுற்றி டைல்ஸ் போட்டுக் கொண்டால், சுத்தம் செய்வது எளிது.

4) Plan for doors to all shelves including under the kitchen table... This will give an neat look.

இன்னமும் நிறைய ஆலோசனைகள் வந்து கொண்டு இருக்கும். விருப்பத்திற்கேற்ப முடிவெடுங்கள். உங்கள் கனவு இல்லம் மனம் போல் அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
Mythili

வணக்கம் மேடம்,
என்னுடைய யோசனைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி.
Hall:வரவேற்பறையில் டிவி வைக்கும்பொழுது Glare அடிக்காமல்பார்த்து கொள்ளவும்.
Pooja:பூஜை அறையில் Swamy படங்கள் வைக்க Shelf வைத்து கொள்ளுங்கள்.
Bedroom:படுக்கும் அறையில் மிகவும் லைட் கலர் உபயோகப்படுத்துங்கள்.
Kitchen:மைதிலி மேடம் சொல்கிற மாதிரி கதவுகள் வைத்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்துக்கு தகுந்த மாதிரி மேல் அடுக்குகள் வையுங்கள். உங்கள் shelfல் சமையல் பொருட்களின் டப்பாக்கள் வைக்க அளவாக இடமிருந்தால் போதும் verticalஆக வைத்தால் பின்புறம் இருக்கும் பாட்டில்களை எடுக்க கஷ்டமாக இருக்கும்.
My Wishes for ur Happy&Dreamful Heaven(Home).

தங்களின் சரியான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. இன்னும் எவ்வளவு ஆலோசனைகள் சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறோம். சரியான நேரத்தில், சரியான ஆலோசனைகள் கிடைப்பதே பெரிதாக உள்ளது.

அன்புடன்,
செல்வி.

தங்களின் நல்ல ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்துள்ளீர்கள். கண்டிப்பாக பயன்படுத்துவேன்.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்வி எப்படி இருக்கின்றீர்கள்? வீடு கட்டப்போவதாக எழுதியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்.பிளான் எல்லாம் தயாராகி விட்டதா. எப்பொழுது கட்டுமான பணியைத் தொடங்கப் போகின்றீர்கள். கூடிய விரைவில் மிகவும் பிஸியாகி விடுவீர்கள் என்று நினைக்கின்றேன்.புது வீட்டிற்க்கான ஆலோசனைகளைக் கேட்டீருந்தீர்கள். சகோதரிகளும் நிறைய பயனுள்ள ஐடியாக்களை கொடுத்துள்ளார்கள். அதனுடன் என்னுடையதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் வரவேற்ப்பு அறை என்று பார்த்தோமானால் வீட்டிற்க்குள் வந்தவுடன், வரவேற்ப்பு அறையைத் தவிர மற்ற எந்த அறைகளும் கண்ணில் தென்படாதவாறு இருந்தால் நல்லது. அதைத் தான்டி உள்ளே வரும் பொழுது தான் மற்ற அறைகளைப் பார்வையிடுமாறு இருந்தால் நன்றாக இருக்கும்.
வீட்டிற்க்கு வரும் விருந்தினர்களுக்கென்றும் (Living room) குடும்பத்தார்களுக்கென்று(Family room) தனித் தனியாக வரவேற்பறை இருந்தால், இரண்டையும் பராமரிப்பது எளிது.

சமையலறை என்று பார்த்தோமானால், கவுன்ட்டர் டாப் அடுப்புகளை விட குக்கிங் ரேஞ் நல்லது என்று நினைக்கின்றேன்.இவற்றால் மேடையில் உங்களுக்கு நிறைய்ய இடம் கிடைக்கும்.
அடுப்புக்கு மேல் எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் சமைக்கும் பொழுது உண்டாகும் நெடியை சமாளிக்கலாம்.
மைக்ரோ அவனுக்கென்று ஒரு ஷெல்ஃப் மேடைக்கு மேல் இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள் இவற்றாலும் மேடையில் நிறைய்ய இடம் மிச்சமாகும்.

சமையலறையில் பேன்ட்ரி என்ற ஒரு சிறிய அறையும் இருந்தால் நல்லது.அதில் பல சரக்கு சாமான்கள், பெரிய பாத்திரங்கள் போன்ற பொருட்களை வைக்கலாம். மேலும் கிரைன்டர், மிக்ஸி போன்ற பொருட்களையும் அந்த அறையில் வைத்து உபயோகிக்கலாம். கிரைன்டர் வைப்பதற்கென்று ஒரு சிறிய மேடை அமைத்து அருகில் குழாய் வசதியையும் செய்துக் கொள்ளலாம். அறை கொஞ்சம் பெரியதாக இருந்தால் வாஷிங் மெஷின் வைப்பதற்க்கும் துணிகளை அயர்ன் செய்யும் வசதிகளையும் அந்த அறையில் வைத்துக் கொள்ளலாம்.அறையில் கட்டாயம் ஜன்னல் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவது நல்லது.

குளிர் சாதனப் பெட்டி வைப்பதற்கென்று ஒரு நல்ல இடத்தை தேர்வுச் செய்து அலமாரிகளை சுவரில் பொருத்துவதுப் போல், ஃபிரிஜ்ஜின் அளவிற்க்கு ஏற்றவாறு சுவரில் தாராளமாக இடம் வைத்து அதில் பொருத்து விட வேண்டும். இவ்வாறு வைப்பதால் சமையளறையின் இடத்தை அடைக்காமல் இருக்கும்.
அலமாரிகளின் கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப் பட்டிருந்தால் பொருட்களை வெளியிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம். இதனால் திறந்து திறந்து பார்க்கும் வேலை இருக்காது.
அடுப்பின் அருகில் இருக்கும் மேடை சமையலுக்கு மட்டும் பயன் படுத்துமாறு அமைத்துக் கொள்ளவும். மற்றபடி பொருட்களை மேடையில் வைத்து கையாள்வதை தவிர்க்குமாறு, எல்லா பொருட்களுக்கும் இடவசதி இருக்கும்மாறு பார்த்துக் கொள்ளவும்.

சாப்பிடுவதெற்க்கென்று தனியாக அறையிருந்தால் மேசை நாற்காலிகள் மட்டுமல்லாது, அலங்கார பாத்திரங்கள் போன்ற பொருட்களை வைப்பதெற்கென்று அலமாரிகளை சுவரில் பொருத்தியோ அல்லது ரெடிமேடாக வாங்கியோ வைத்து அறையை அலங்கரிக்கலாம்.

படுக்கை அறை என்று பார்த்தோமானால் வீட்டிலுள்ள ஒவ்வொறுவறுக்கும் ஒரு அறை இருக்குமாறு அமைத்துக் கொள்வது நல்லது. ரெடிமேட் அலமாரிகளுக்கு பதிலாக சுவரில் இருக்குமாறு அலமாரிகளை கட்டி மரக் கதவுகளை மட்டும் பொருத்துக் கொள்ளலாம்.

குளியளறை ஒவ்வொறு படுக்கையறையிலும் இருந்தால் நல்லது.அல்லது குறைந்தது இரண்டாவது இருந்தால் நல்லது. அதில் ஒன்று வீட்டின் பொதுவான இடத்தில் இருந்தால் விருந்தினருக்கும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

மேலும் இடம் இருந்தால் ஹோம் ஆப்பீஸ், படிக்கும் அறை என்று தனியாக அமைத்துக் கொள்ளலாம்.எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம் என்னவென்றால், வீட்டிலுள்ள எந்த பொருளுக்கும் இடமில்லை என்று கூறாதபடி திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஒகேவா.இன்னும் ஏதாவது நினைனிற்க்கு வந்தால் எழுதுகின்றேன். தங்களின் கனவு இல்லம் நிஜமாக மாற மீண்டும் வாழ்த்தி விடைப் பெறுகின்றேன்.நன்றி.

உங்களின் புது வீட்டிற்காக சகோதரிகள் மைதிலி, ரதி மற்றும் நம்ம ஐடியா மனோகரி மேடம் :) அனைவரும் நிறைய ஆலோசனைகளை அள்ளி கொடுத்திருந்தார்கள். எனக்கு தோன்றிய சிலவற்றையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

1. உங்கள் வீடு அமையும் பகுதி தாழ்வானதாக இருந்தால் அஸ்திவாரத்தை அதற்கேற்றாற்போல் உயரமாக போட்டால் மழைக்காலங்களில் வீட்டினுள் தண்ணீர் புகுவதை தவிர்க்கலாம்.

2. வாசல் காம்பவுண்ட் சுவருக்குள்ளே கொஞ்சமாக சிறிய அளவு இடத்தை மணலாகவே விட்டால் செம்பருத்தி, மல்லிகை, ரோஜா போன்ற அழகும் பயனுமுள்ள செடி வகைகளை நடலாம்.

3. நீங்கள் கெஸ்ட் ரூம் வைப்பதாக இருந்தால் அதில் கண்டிப்பாக ஒரு அட்டேச்ட் பாத்ரூம், டாய்லெட் வைத்துவிடுங்கள். வரக்கூடிய விருந்தாளிகளுக்கு அது ரொம்ப உதவியாக இருக்கும்.

4. வாசலின் மெயின் கதவை திறக்காமலேயே வெளியே பார்ப்பதற்கு சிறிய லென்ஸ் வைப்பது பாதுகாப்பானது.

5. ஹாலில் வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் இருக்கும்படி பெரிய ஜன்னல்களாக வைப்பது நல்லது. அதே சமயம் கொசுத்தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற ஜன்னல்களில் வலை அட்டேச் பண்ணலாம்.

6. ரூம்களில் அட்டேச்ட் பாத்ரூம் வைக்கும்போது கண்டிப்பாக (டாய்லெட்டிற்காக) சிறிய எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்துக்கொள்ளுங்கள்.

7. ஏதாவது ஒரு ரூமின் அட்டேச்ட் பாத்ரூமில் ஈரோப்பியன் டாய்லெட் வைத்துக்கொண்டால் அது வயதானவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் கர்ப்பிணிப்பெண்களுக்கும் வசதியாக இருக்கும்.

8.பெட்ரூம் அல்லாத மற்றொரு ரூமில் எக்ஸ்ட்ராவான தலையணை, பெட்ஷீட், போர்வை, பாய் வைப்பதற்கு சுவற்றிலேயே சற்று அகலமான ஒரு ஷெல்ஃப் செட் பண்ணிக்கொண்டால் ரொம்ப வசதியாக இருக்கும்.

9. சுவர் அலமாரிகள் செட் பண்ணும்போது அந்த அலமாரிகள் வெளியே தள்ளியபடி இல்லாமல் சுவற்றோடு சேர்ந்தாற்போல் வைத்தால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும், குழந்தைகளுக்கோ அல்லது அதன் கீழ் உட்கார்ந்து எழுபவர்களுக்கோ தலையில் இடிக்காமல் இருக்கும்.

10. தரைக்கு டைல்ஸ் போடுவதாக இருந்தால், வழுக்காத கிரிப் டைல்ஸ் போடுங்கள். அதற்கு லைட் கலரை தேர்வு செய்யுங்கள்.

11. கிச்சனில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைக்கும்போது சற்று பெரியதாக வைப்போம். அதனால் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் நாட்களில் பூட்டிய வீடு பூட்டியபடியே இருக்கும்போது, திருடர்களுக்கு அது ஒரு நல்ல வாசலாக அமைந்துவிடுகிறது. அதனால், ஃபேனுக்கு வெளிப்பக்க சுவரில் நெருக்கமான கம்பிகள் கொண்ட ஃபிக்ஸட் கிரில் போட்டுவிட்டு, உள்பக்க சுவரில் அதற்கேற்றாற்போல் ஒரு குட்டி இரும்புக்கதவு வைத்துவிடுங்கள். வெளியூர் செல்லும்போது மட்டும் அந்த கதவை பூட்டிக்கொள்ளலாம்.

12. கிச்சனில் வெளிச்சத்திற்கும் காற்றோட்டத்திற்கும் சற்று பெரிய ஜன்னலாக வைக்கலாம். அடுப்பு வைக்கும் மேடைக்கு பக்கத்தில் கேஸ் சிலிண்டரின் உயரத்தை கவனத்தில்கொண்டு, அங்கு மட்டும் மேடையின் உயரத்தை அதற்கேற்றாற்போல் சற்று உயரமாக்கிக்கொள்ளுங்கள்.

13.கிச்சனோடு சேர்ந்தாற்போல் ஷெல்ஃபுகளுடன் கூடிய ஒரு குட்டி ஸ்டோர் ரூம் வைத்துக்கொள்ளுங்கள்.

14. பாதுகாப்பு தேவைப்படும் வெளிக்கதவுகளுக்கு வெளிப்பக்கம் கிரில் கதவுகளை செட் பண்ணிக்கொள்ளுங்கள்.

15. ஷாக் ஏற்பட்டால் ஆட்டோமெடிக்காக கரண்ட் கட் ஆகும் சிஸ்டத்தை கரண்ட் மெயின் சுவிட்ச் பாக்ஸ் செட் பண்ணும்போதே சேர்த்து வைத்துக்கொள்வது ரொம்ப பாதுகாப்பானது.

மற்றபடி உங்களின் புதுவீடு சிறப்பாக அமைந்து நல்லபடி வாழ வாழ்த்தி முடிக்கிறேன்.

இத இதத் தான் எதிர்பார்த்தேன். என்னடா நம்மள மட்டும் கண்டுக்காம விட்டுட்டாங்களேன்னு பார்த்தேன். உங்கள் பதிலை கண்ட பின் பெரு மகிழ்ச்சியடைந்தேன். மிகவும் அருமையான ஆலோசனைகளாக சொல்லியுள்ளீர்கள். எல்லோருடைய ஆலோசனைகளையும் குறித்து வைத்துக் கொண்டு, வீடு கட்ட துவங்கும் முன்பே எங்கள் பொறியாளரிடம் கொடுத்து விட போகிறேன். ப்ளான் ரெடி தான். அனுமதியும் வாங்கியாகி விட்டது. ஈஸ்டருக்குப் பிறகு துவங்கலாமென்றுள்ளோம். அதற்குள் என் கணவரும், நானும் பூரண குணமடைந்து விடுவோமென நம்புகிறேன். எனது மகனின் பரீட்சைகளும் முடிவடைந்து விட்டதால் அவனைப் பற்றிய கவலையுமில்லை. எல்லா இடங்களுக்கும் தனித்தனியே ஆலோசனைக் கூறியுள்ளீர்கள். நான் மானசீகமாக என் வீட்டில் வலம் வந்து விட்டேன். கண்டிப்பாக வீடு கட்டி, அதில் குடியேறிய பின், வீட்டின் ஒவ்வொரு இடமும் உங்கள் அனைவரையும் எனக்கு ஞாபகப்படுத்தும். மீண்டும் நன்றி. ஒரு சந்தேகம். அதெப்படி எல்லோருடைய கேள்விகளுக்கும் இவ்வளவு அழகாக, விளக்கமாக தங்களால் பதில் எழுத முடிகிறது? பிஏ யாரேனும் உண்டா :))) அலுவலகம் முடிந்து வந்து வீட்டை சரியாக்கி, டிபன் முடித்து, 2230 மணிக்கு அறுசுவைக்கு வந்து 4 வரி அடித்தவுடன் களைப்பாகி விடுகிறேன். இடுப்பும், கண்ணும் படுக்கச் சொல்லும். தங்களின் மனக்கவலை பற்றிய தலைப்பில் விரிவாக பிறகு பேசுகிறேன். மேலும் புது வீடு குறித்த தங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி.

அன்புடன்,
செல்வி.

நலம், நலமா? நிறைய வித்தியாசமான, அருமையான ஆலோசனைகளாக அள்ளி வழங்கி விட்டீர்கள். இவ்வளவு பதில்கள் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக சமையலறை, பாதுகாப்பு பற்றிய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளது. நீங்கள் சொல்லியது போல் தோட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். வீட்டின் முன்புறமும், பக்கத்திலும் தோட்டத்திற்கென்றே தனியாக இடம் ஒதுக்கியுள்ளேன். வீட்டினுள்ளேயே வெளிச்சத்திற்காகவும், உயிரோட்டமாக இருக்க வேண்டுமென்பதற்காக ஓடிஎஸ் என்று ஒரு பகுதி வைத்துள்ளோம். அதை எவ்வாறு மேலும் அழகு படுத்தலாம் என்று யோசிக்கின்றோம். உங்களின் மிக நல்ல நல்ல ஆலோசனைகளை என்றும் வரவேற்கிறேன். நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செந்தமிழ் செல்வி!

உங்களின் கனவு இல்லத்துக்கு நிறைய சகோதரிகள் அருமையான யோசனனகள் தந்துள்ளார்கள். என் பங்கிற்கு நானும் இங்கு கொஞ்சம் எழுதுகிறேன். இந்த யோசனைகள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

முதலில் வீடு கட்டுவதற்கு, உங்களின் கட்டுமானப் பொறியாளரையும் வரைவாளரையும் உங்கள் எண்னங்களுக்கு ஒத்துப்போகிறவர்களாக, கவனமாகத் தேர்ந்தெடுங்கள். பிரபலமானவர்கள் என்றால் உங்களின் எண்ணத்துடன் ஒத்துப்போக விரும்பாமல் தங்களின் ஆலோசனையும் தேர்வுகளுமே சிறந்தது என அடிக்கடி வாதிடுவது நடக்கும். வருத்தங்களும் கருத்து வேறுபாடும் வருகிறதே என்ற நினைப்பில் நாம் விட்டுக் கொடுத்துப் போவதும் நடக்கும். அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதுதான் வருவார்கள். மேலும் அவர்களுடைய அலுவலகத்திலிருந்து அனுபவமில்லாத யாராவதுதான் வந்து கட்டுமானத் தளத்தில் எப்போதும் இருப்பார்கள்.

முக்கியமாக வண்ணக்கலவைகளுக்கு
அவர்கள் எப்போதும் வெண்மை, வெளிர் மஞ்சள், இதுபோன்ற வெளிர் வண்ணங்களைத்தான் நல்லதென சொல்வார்கள். வண்ணக்கலவைகளை உங்கள் கம்ப்யூட்டரில் வரைந்து மாற்றி மாற்றிப் பார்த்து கடைசியாக முடிவெடுங்கள். நான் ஒரு ஓவியர் என்பதால் இதுபோலவே வரைந்து daring colours சிலவற்றை முயற்சி செய்திருக்கிறேன். மற்ற வீடுகளிலிருந்து வித்தியாசமாக அழகாக வந்திருக்கின்றது.

முதலில் நமது சாம்ராஜ்யமான சமையலறை. இது உங்களுக்கு எந்நேரமும் மகிழ்ச்சி தரக்கூடியாதாக அமைய வேண்டும். காற்றோட்டமாக விசாலமாக இருக்க வேண்டும். சிலிண்டர்களை சமையலலறையின் உள்ளே வைக்காமல் அவைகளை வெளிப்பக்கமாக வைத்து உள்ளே காஸ் ட்யூப் வருகிற மாதிரி சமையலறை பக்கவாட்டில் ‘ஜாலி’ ஜன்னல்கள் அமைந்த ஒரு சிறிய தாழ்வாரம் அல்லது பால்கனி வைக்கலாம். எதிர்பாராத விபத்து, காஸ் லீக்கேஜ் இவற்றை இந்த ஏற்பாடு தவிர்க்க உதவும். மைக்ரோ அவன் உபயோகிப்பதாக இருந்தால் அதற்கென ஒரு தனி plug socket வைக்க வேண்டும். சமையலறையிலேயே குடிதண்ணீர் இனைப்பு ஒன்று, உங்கள் கிணற்றிலிருந்தோ அல்லது முனிசிபாலிடி குழாயிலிருந்தோ, அமைப்பது அவசியம். நல்ல தண்ணீரை யாருடைய உதவியுமின்றி தேவைப்படும்போது நீங்களே பிடித்துக் கொள்ளலாம். Sink அலுமினியமாக இல்லாமல் க்ரானைட்டில் இருப்பது நல்லது. நீண்ட நாள் புதிதாக இருக்கும். இதை நம் உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொண்டு, சமையலறை பக்க வாட்டில் க்ரில்கள் அமைக்கப்பட்ட பால்கனி பாத்திரங்கள் கழுவுவதற்கும் அவற்றை உலர வைக்க மேடையும் உள்ளதாய் அமைக்க வேண்டும்.

வரவேற்பறை காற்றோட்டமாக அமைய வேண்டும். TV LOUNGE தனியாக அமைய வேண்டும். .சுவரிலேயே built in wall unit நன்கு யோசித்து பெரியதாக அமைத்து விட்டால், தனியான wall unit வாங்குவதைத் தவிர்க்க முடிவதுடன் இடத்தையும் மிச்சம் பண்ணலாம்.

அன்னியமான வெளி ஆட்கள் உபயோகிக்க மொட்டை மாடியிலோ அல்லது வீட்டுக்கு பக்கவாட்டிலோ ஒரு பாத் ரூமுடன் கூடிய டாய்லட் வைப்பது நல்லது. பாத் ரூமில் அங்கு உபயோகிக்கக்கூடிய பொருள்கள் வைக்க ஒரு கதவுடன் கூடிய சிறு கப் போர்ட் வைப்பது வசதியாக இருக்கும்.

உங்களின் கனவு இல்லம் வெகு அழகாகவும் மகிழ்வு தரக்கூடியதாகவும் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

பி.கு: உங்களின் வெந்தய ரசம் செய்து பார்த்தேன். வெகு அருமையாக இருந்தது. மிக நல்ல குறிப்பு கொடுத்ததற்கு எனது நன்றி! உங்களின் வெந்தய ரசத்துக்குப் பின்னாலேயே சில நாட்கள் முன்பு பின்னூட்டம் எழுதியிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். வித்தியாசமான குறிப்புகள் வழங்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

நலமாக உள்ளீர்களா? நான் நலமாக உள்ளேன். சில நாட்களாக தளத்திற்கு வர முடியவில்லை. வந்தாலும் (நடு இரவில்) குறிப்புகள் கொடுக்க பயமாக உள்ளது, அட்மின் (அன்பாகத்தான்) திட்டுவாரே என்று. அப்புறம் சகோதரி மனோகரி வேறு ஐஸ்கிரீம் விற்பார்கள். சரி. உங்கள் குறிப்புகள் அனைத்தும் வெகு அருமை. மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், குறிப்பாக வரைவாளர்கள் பற்றி, நானும் கேள்விப்பட்டுள்ளேன். வெந்தய ரசத்தைப் பற்றிய உங்களின் பின்னூட்டத்தை எப்படி கவனிக்க தவறினேனென்று தெரியவில்லை. மன்னிக்கவும். மிக்க நன்றி. நீங்கள் சொன்னது போல் நானும் தக்காளி போட்டு செய்து பார்க்கிறேன். நன்றி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்