பயனளிக்கும் குறிப்புகள்

இங்கே நான் கொடுக்கும் குறிப்புகள் அனைத்தும் நான் பயன்படுத்தும் குறிப்புகள்.இதுவரை உபயோகப்படுத்திய அனைவருக்கும் நல்ல பலன்களை தந்துள்ளது.இவை எல்லாம் வெளிநாட்டில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.நான் இந்தியா செல்லும் போது மொத்தமாக எடுத்து வந்து விடுவேன்.அப்படி கிடைக்காதவர்கள் கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரித்து கொள்ளலாம்.

1)எப்போதும் போல் சோப் போட்டு குளித்த பிறகு இந்த பொடியை முகம்,உடம்பில் தேய்த்து குளித்தால் பரு,கரும்புள்ளி,ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவும் வராது.இதற்கு தேவையானது
பன்னீர் ரோஜா - 200 (காய வைத்தது)- நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அல்லது
பூக்கடையிலிருந்து வாங்கி வந்து காய வைத்து கொள்ளவும்.Light Rose not Dark Rose.
வசம்பு - 100 கிராம்- தழும்பு,கரும்புள்ளிக்கு உகந்த மருந்து
கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம்
புனுகுப்பட்டை - 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
கடலைப்பருப்பு -100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
இவை அனைத்தையும் வெயிலில் 2-3 நாட்கள் காய வைத்து மாவு அரைத்துக் கொடுக்கும் இடத்தில் கொடுத்து சீயக்காய் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொடுக்க சொல்லி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பேபி சோப் போட்டு குளிக்க வைத்த பிறகு இந்த பொடியை உடம்பு முழுதும் தேய்த்து குளிப்பாட்டுவோம்.சிறு வயதிலிருந்து குளித்தால் உடம்பில் முடி இருக்காது.ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் முடியை போக்கும் தன்மையுள்ளது.
மேலும் முகத்திற்கு போடும் மஞ்சள் போல் கலர் பிடிக்காது.போட்டதே தெரியாது.

2) இதே பொடியை உபயோகப்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு பேக்(Face Pack)
போடலாம்.
தயிர் - 1 ஸ்பூன்
பொடி - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 10 துளி
எல்லாவற்றையும் கலந்து முகம்,கழுத்து முழுவதும் தடவி காயும் வரை ஊறவைத்து கழுவவும்.

3) முகத்தில் பரு இருப்பவர்கள் மேலே சொன்ன பேக்குடன் 1 ஸ்பூன் முல்தானி மட்டி பொடி சேர்த்து பேக் போடவும்.முல்தானி மட்டி(ஒரு வகை களிமண்) முகத்தில் எண்ணெய் பசையை சுத்தமாக எடுத்து விடும்.பரு வரவே வராது.எண்ணெய் பசை சருமம்,பரு அதிகம் உள்ளவர்கள் வாரம் 1-2 முறையும்,சாதாரண சருமம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும்,உலர்ந்த சருமம் உள்ளவர்கள் தயிர் அதிகம் கலந்து மாதம் ஒரு முறையும் உபயோகப்படுத்தவும்.ஆண்களுக்கும் இந்த பேக் போடலாம்.

4)முக்கியமாக இரவு தூங்கப்போகும் போது முகம் கழுவி விட்டுதான் படுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.முகத்தில் எதுவும் வராது.பேபி லோஷன் மட்டும் போட்டுக் கொள்ளலாம்.

5) கண்கள் அருகே உள்ள சருமம் மிகவும் மென்மையானது.நேரம் கிடைக்கும் போது இரு பஞ்சுத் துண்டில் பன்னீரை(Rose Water) ஊற்றி இரண்டு கண்ணிலும் வைத்துக் கொள்ளுங்கள்.

6)முகத்தை மாதம் ஒரு முறை ஸ்க்ரப்பிங் செய்யவும்.அப்போதுதான் இறந்த செல்கள் நீங்கும்.மேலே குறிப்பிட்ட பொடியையே தண்ணீரில் குழைத்து உபயோகப்படுத்தலாம்.அல்லது
ஆப்பிரிகாட் ஸ்க்ரெப்பர் போல கடையில் கிடைக்கும் தரமான பொருட்களை உபயோகப்படுத்தவும்.

7)கைகள் மிருதுவாக இருக்க தூங்கும் முன்பு சமையல் உப்பை(Table Salt) ஐ- 2 ஸ்பூன் ஈரமான கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்.பிறகு கையை கழுவி துடைத்து ஆலிவ் ஆயில் தடவி விடவும்.

8)என்னதான் என் கணவர் டாக்டராக இருந்தாலும் அவருக்கு உடம்பு சரியில்லையென்றால் வீட்டு வைத்தியம்தான்.சளி,ஜுரம் என்றால் அவருக்கு இந்த கஷாயம் தான் கொடுப்பேன்.என் பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்டது.
மிளகு-2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வெற்றிலை - 2
காய்ந்த திராட்சை - 10
பனங்கற்கண்டு(Or Palm Sugar)-2 ஸ்பூன்
சுக்குப் பொடி - 2 ஸ்பூன் (காய்ந்த இஞ்சி அல்லது பச்சை இஞ்சி)
வாணலியை அடுப்பில் வைத்து மிளகு,சீரகம் போட்டு நன்றாக கருகும் வரை(பட் பட்டென்று வெடிக்கும்) வைத்து,2கப் தண்ணீர் ஊற்றவும்.வெற்றிலை,காய்ந்த திராட்சையை பிய்த்து போடவும்.சுக்குப்பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.1/2 கப் அளவிற்கு வற்றியவுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.

9) தினமும் பல வித பேஷண்டுகளைப் பார்ப்பதால் அவர்களிடமிருந்து எளிதாக நோய்க்கிருமிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.அதனால் எங்கள் வீட்டு டீயில் தினமும் இந்த பொடியை சேர்ப்போம்.அனைவருக்கும் நல்லது.முக்கியமாக எதிர்ப்பு சக்தி வரும்.ஆனால் நான் டீ,காபி குடிக்கவே மாட்டேன்.இந்த பொடியை மட்டும் பாலில் போட்டு கொதிக்க வைத்து வெல்லம் கலந்து குடிப்பேன்.
சுக்கு - 100 கிராம்
மல்லி -100 கிராம்
ஏலக்காய் - 25
மிளகு - 50 கிராம்
அனைத்தையும் பொடி செய்து தினமும் டீ போடும் போது 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

10)இது எல்லாவற்றுக்கும் மேலான ஒன்று,நான் அறுசுவையில் பங்கேற்க்கும் பலரைவிட சிறியவளாக இருந்தாலும் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்.இந்த குறிப்புகள் அனைத்தும்
நான் உபயோகப் படுத்துவது.என்னதான் நாம் எத்தனையோ குறிப்புகள் படித்தாலும் செய்தாலும் நாம் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு கண்ணாடியை பாருங்கள்.அந்த எண்ணமே உங்களை அழகாக காட்டும்.பிறருடன் உங்களை ஒப்பிட்டாதீர்கள்.அவரவர் வாழும் வாழ்க்கை அவரவர்க்கு.இது நான் சொன்னதில்லை.Miss.Universe சுஷ்மிதா சென் சொன்னது.
கல்யாணம் ஆகிவிட்டால் போதும்.இனி எப்பிடி இருந்தால் என்ன என்று நினைக்காதீர்கள். கல்யாணம் ஆகும் வரை அழகாக இருந்த நாம் கணவருக்காக இன்னும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
நமது எல்லா உடைகளை விடவும் நைட்டி அழகாக இருக்க வேண்டும்.ஏனென்றால் பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் நைட்டி தான் அணிந்து கொள்கிறோம்.நான் இதுவரை பலரை பார்த்திருக்கிறேன்.வீட்டில் தொம்பா தொம்பா என்று நைட்டி அணிந்துக் கொள்வார்கள். கலர், டிசைன் எதுவும் நன்றாக இருக்காது.நான் நைட்டியை பார்த்து பார்த்து தான் வாங்குவேன்.வெளி உடைகளைவிட விலை அதிகம் இருந்தாலும் வாங்குவேன்.பெண் பார்க்க வரும் போது அழகாக உடுத்தும் நாம் கல்யாணம் ஆகிய பிறகு அதை மறந்து விடக்கூடாது. பிறகு நீங்க கல்யாணம் ஆனப்ப இருந்த மாதிரி இப்ப இல்லைன்னு குறை கூற கூடாது.வெளியில் என்னதான் நாம் நன்றாக இருந்தாலும்,யார் நம்மை ரசிக்க வேண்டுமோ அவருக்காக டிரஸ் செய்து கொள்ளுங்கள்.வீட்டில் எப்போதும் பிரெஷ்ஷாக இருங்கள்.வெளியில் செல்லும் போது லைட்டாக மேக்கப் செய்து கொள்ளுங்கள்.எளிதான மேக்கப் முறையை என் அடுத்த பதிவில் தருகிறேன்.

உங்களது குறிப்புகள் நிஜமாக பயனுள்ளதாக இருக்கும் நான் try பண்ணிப் பார்த்து விட்டு உங்களுக்கு கூறுகின்றேன் மேடம்.

தங்களின் இந்த குறிப்புகள் அருமையாக உள்ளது. இதில் கடைசியாக நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

// வெளியில் என்னதான் நாம் நன்றாக இருந்தாலும்,யார் நம்மை ரசிக்க வேண்டுமோ அவருக்காக டிரஸ் செய்து கொள்ளுங்கள்.வீட்டில் எப்போதும் பிரெஷ்ஷாக இருங்கள். //

that means கணவருக்காக......!அருமையான கருத்து!

// நான் இதுவரை பலரை பார்த்திருக்கிறேன்.வீட்டில் தொம்பா தொம்பா என்று நைட்டி அணிந்துக் கொள்வார்கள். கலர், டிசைன் எதுவும் நன்றாக இருக்காது. //

உண்மைதான்! அப்படி இருப்பவர்கள் உங்களின் இந்த பயனுள்ள குறிப்பை பார்த்தாவது தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!

வணக்கம் அக்கா,உங்களின் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.முக்கியமாக 10 paragraph.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.உங்களின் கருத்து என்னை போல் புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு பயன்னுள்ள்தாக இருக்கும்.இன்னும் வரும் காலங்களிலும் மேலும் பல புதிய தகவல்களை தாருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் .நீங்கள் கொடுத்த அழகு குறிப்புகான பொருள்களை Londonயில் எங்கு வாங்கலாம்?.என் முகம் முலுவதும் நிறைய Black Spots உள்ளது.KEEP IN TOUCH நன்றி.

அருமை, அருமையிலும் அருமை. நல்ல யோசனைகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், இதில் வயது எங்கே வந்தது. நீங்கள் கூறியுள்ளது போல் நம்முடைய அழகு கணவருக்கு தெரிந்தால் போதும், அடுத்தவர்களுக்கு மிகைப்படுத்தி காட்ட வேண்டுமென்ற அவசியமில்லை. நான் எப்போதுமே என்னுடைய உடைகளையும், உடைமைகளையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை என் கணவரிடமே விட்டு விடுவேன். நமக்கு எது நன்றாக இருக்கும் என்பது நம்மை விட அவர்களுக்கு தெரியும். என் அலுவலகத்திலும் என் உடைகளைப் பார்க்கும் என் சக ஊழியர்களாகிய சகோதரிகள் மிகவும் பாராட்டுவார்கள். என் கணவரின் தேர்வு சரியாகவே இருக்கும் (இல்லையென்றால் என்னை தேர்ந்தெடுத்திருப்பாரா :)) நீங்கள் சொல்லியது மிகவும் சரி. மனதளவில் நாம் வயதாகி விட்டதோ, அழகாக இல்லையோ என் நினைத்தாலே சோர்ந்து விடுவேம். என்னை பொருத்த வரை நான் 25 வயதை தாண்டியதே இல்லை. ஆரோக்கியமான உணவும், அளவான உடற்பயிற்சியும், நல்ல எண்ணங்களும் நம்மை இளமையாகவும், துடிப்பாகவும் வைத்திருக்கும். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

செல்வி அவர்களே,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.எனக்கும் என் கணவரைதான் டிரஸ் செலக்ட் பண்ண சொல்வேன்.திருமணம் ஆகும்வரை என் அம்மா,அக்கா தான் எனக்கு டிரஸ் தேர்ந்தெடுப்பார்கள்.அதைப்பற்றி நான் எப்போதும் ஒரு பெரிய விஷயமாக நினைத்ததில்லை.திருமணம் ஆனபிறகு எனக்கு எது பொருத்தமாக இருக்கும்,எந்த நிறம் நன்றாக இருக்கும் என்று பார்த்து பார்த்து அவர்தான் சொல்கிறார்.மற்றவர்கள் என் உடைகள் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் போதுதான் தெரிந்து கொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை பெண்ணியம்,பெண் உரிமை என்று பேசுவது தேவையில்லை. கணவருக்காக, குடும்பத்துக்காக எதையும் விட்டுக் கொடுப்பது தவறில்லை.பெண்கள் வேலை பார்க்காவிட்டால் இந்த சமூகம் தப்பாக பேசாது.ஆனால் நம்மை கல்யாணம் செய்துக்கொண்ட ஒரே காரணத்துக்காக காலம் முழுதும் வேலை பார்த்து நம்மைக் காபாற்ற வேண்டிய கட்டாயம் ஆணுக்கு இருக்கிறது.ஆண்,பெண் இருவரிலும் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டும் தான் அப்படி என்று சொல்லிவிட முடியாது.
இந்த ஒரு உறவுக்குள் தான் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை.சிலர் பிரெண்ட்ஸ் தான் முக்கியம் என்று சொல்வார்கள்.ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் நட்புக்கும் ஒரு எல்லை இருக்கிறது.அவரவர்க்கு திருமணம் ஆகிய பிறகு அவர் வீட்டு விஷயம் நமக்கும்,நம்ம வீட்டு விஷயம் அவருக்கும் தெரியாது.
எல்லாவற்றையும் சொல்லவும் முடியாது.
இன்பம்,துன்பம் இரண்டிலும் நம்முடன் இருக்கும் அவருக்காக வாழ்வதுதான் உண்மையான பெண்ணியம் என்பது எனது கருத்து.
என் கணவர் சில சமயம் சொல்வார்,என்ன இது கிராமத்தில் இருந்து வந்த பட்டிகாட்டு பெண் மாதிரி எனக்காக சமைத்துக் கொண்டே இருக்குற.நீ Engineer படித்திருப்பதால் உனக்கு அவ்வளவா சமைக்க வராதுன்னு ஸ்டைலா சொல்வேன்னு நினைச்சேன்.இப்படி இருக்கன்னு சில சமயம் திட்டக்கூட செய்வார்.படிப்பு அறிவை வளர்க்க.அதை விட்டுவிட்டு அதனால் பெருமையாக இருப்பது கூடாது.
சமையல்கூட அவருக்காக அன்புடன் செய்தால் நிச்சயம் நன்றாகதான் இருக்கும்.சமையல் என்றால் நமக்கு நன்றாக தெரிந்த சமையல்.பரிசோதனை முயற்சியில்லை.சில சமயம் அது காலை வாரி விட்டுவிடும்.

VANAKKAM DEVA MADAM..

KUNGUMAM COLOUR VULLE ROSE PAYANPADATTALAMA?
MULTAANIMATTI & PUNUGUPATTAI SERKKAAMAL INTHE PACK PODALAMA?

NANDRI..
INDRA,
MALAYSIA...

ஹாய் தேவா, நலமா. உஙகள் எழுத்துக்கள் அனைவறயும் கவர்ந்துள்ளது. வாழுத்துக்கள். எனக்கு 9 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிரந்ததிலிருந்து பாக்போடுவதில்லை. ஊஸ் வந்தபிறகு சைனஸ் உள்ளது. முகம் டல்லாக உள்ள்து. இத்ற்கு ஒரு பாக் சொல்லுஙகள். கலரும் கம்மியாகிவிட்டது

உங்கள் குறிப்புகள் அருமை..தொடர்ந்து எழுதுங்கள்..படிக்க ஆர்வமாக நாங்கள் காத்திருக்கோம்..உங்களுக்கு பயனுள்ள நிறைய விஷயங்கள் தெரிகிறது..வாழ்த்துக்கள் மேடம்.

mub

ஹாய் தீபா,
எப்படி இருக்கீங்க. குழந்தை நலமா? ஆண் குழந்தையா பெண் குழந்தையா? சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிக குளிர்ச்சியாக இருக்கும் பாக்கினை தவிர்ப்பது நலம். எலுமிச்சை, தயிர் சேர்க்காமல் கடலைமாவு,பன்னீர்,முல்தானி மட்டி(எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால்), கஸ்தூரி மஞ்சள், சந்தனம் சேர்த்து பாக் போடலாம். முகத்தில் ரொம்ப ட்ரையாக பவுடர் போல் உதிரும்வரை வைத்திருக்காதீர்கள். லேசான ஈரப்பதம் இருக்கும்போதே முகத்தை கழுவி விடுங்கள். ஏனெறால் பவுடராக உதிர்ந்து மூக்கினுள் சென்று அலர்ஜி ஏற்படுத்தவும் சான்ஸ் இருக்கிறது.

கலர் கம்மியானதுக்கு முகத்திற்கு அலோவேரா ஜெல் உபயோகப்படுத்தலாம். பேட் அவுட் போன்ற க்ரீமை நைட் தூங்கும் முன் அல்லது காலை எழுந்தவுடன் முகம் கழுவிய பிறகும் உபயோகிக்கலாம். ஆனால் அதனை போட்டுக் கொண்டு வெயிலில் செல்லக் கூடாது. மாதம் ஒரு முறை ப்ளீச்சிங், பேஷியல் செய்துக் கொள்ளுங்கள். இது எதற்கும் நேரம் கிடைக்காவிட்டாலும் சமைக்கும் போது உருளைக்கிழங்கை துருவி முகத்தில் இடுங்கள். உருளைக்கிழங்கு முகத்தில் கருமை நிறத்தை நன்றாக நீக்கும். இயற்கையான ப்ளீச்சிங் இது.

தங்களின் பாரட்டுக்கு மிக்க நன்றி. நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறேன். எனக்கு நேரமின்மையால் சில சமயங்களில் தொடர்ந்து எழுத இயலாமல் போய்விட்டது. இனி அவ்வாறு இல்லாமல் நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்