பிரண்டை துவையல்

தேதி: May 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (8 votes)

 

நறுக்கிய பிரண்டை - கால் கப்
மிளகாய் வற்றல் - 3
தேங்காய் துருவல் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். பிரண்டையை தண்ணீர் ஊற்றி அலசி, சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் கறிவேப்பிலை, பிரண்டை இரண்டையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இவை நன்கு வதங்கியதும் அதனுடன் தேங்காய் துருவல், புளி, உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுக்கவும்.
இதை சாதத்துடன் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
பிராமண சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் வழங்கிய குறிப்பு இது. மாதர் சங்கத் தலைவி, சமூக சேவகி, நல்ல குடும்பத்தலைவி என்று பல முகங்களை உடைய இவர், அறுசுவை நேயர்களுக்கு ஏராளமான பிராமண உணவுகள் தயாரிப்பை செய்து காட்டவுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்மின் அவர்களுக்கு,

பிரண்டை என்றால் என்ன? அதன் படம் தர இயலுமா?
நன்றி...

நன்றி...

பிரண்டை என்பது ஒரு கொடி வகை தாவரம். பார்ப்பதற்கு பச்சை நிற குச்சி போன்று கட்டுகளோடு நீளமாக படர்ந்து வளரும். கிராமங்களில் வேலியோரம் நிறைய படர்ந்து இருக்கும். இதில் இலைகள் இருந்தாலும், அதன் தண்டு பகுதியைத்தான் சமையலுக்கு பயன்படுத்துவர். இலைகள் அதிகம் இருக்காது.

இதைக் கொண்டு செய்யப்படும் துவையல் மிகவும் ருசியானது. இதன் மணமும், சுவையும் வித்தியாசமாக இருக்கும். அப்பளம் தயாரிப்பிலும் பிரண்டை பயன்படுத்தப்படுகின்றது.

பிரண்டை படம்
<br /><br />
<img src="files/pictures/pirandai.jpg" alt="pirandai" />

அட்மின் அவர்களுக்கு,

ரொம்ப நன்றி!

இந்த செடியை பார்த்திருக்கிறேன்! ஆனால் இந்த செடியை பிரண்டை என்பார்கள் என்று தெரியாது!

எங்கள் ஊரில் இந்த செடி நிறைய இடத்தில் படர்ந்திருக்கும். இதை கொண்டு எங்கள் வீட்டிலும் துவையல் செய்வார்கள். ஆனால் எங்கள் மொழியில் இந்த செடியை நல்லேரி(!!!) என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். மறந்துவிட்டேன்! அம்மாவிடம் தான் கேட்கவேண்டும்.

மிக்க நன்றி! அண்ணா...

நன்றி...

பார்க்க ஆசையாக இருக்கிறது. ஊருக்குப் போனால்தான் இது எல்லாம் முயற்சித்துப் பார்க்கலாம். ;(

‍- இமா க்றிஸ்

பிரண்டை வாங்கினேன். ஆனால் அதை சுத்தம் செய்ய‌ தெரியவில்லை. சுத்தம் செய்யும் போது கை ரொம்ப‌ அரிக்கிறது. இப்படித்தான் அரிக்குமா? அல்லது இதில் பயன்படுத்தகூடாத‌ பிரண்டை என்று ஏதேனும் உண்டா? என்றும் பிரண்டையை சுத்தம் செய்வது எப்படி? என்றும் சொல்லவும்.

அன்புடன்
ஜெயா

அன்புள்ள‌ ஜெயாவிற்கு,
பிரண்டையில் பயன்படுத்தக்கூடாத‌ வகை என்று
எதுவும் கிடையாது. பிரண்டையின் சாறு கையில் உடம்பில் பட்டால் மிகவும்
மோசமாகத் தான் அரிப்பு எடுக்கும், ஆனால் முறிந்த‌ எலும்புகள் கூடுவதற்கும்.
குன்ம‌ வயிற்று வலிக்கும் மிக‌ மிகச் சிறந்த‌ மருந்து.
நீள‌ நீளமான‌ பிஞ்சாக‌( ஒடிக்க‌ வராது கத்தரியால்)
தான் கொடியில் இருந்து கத்தரித்து எடுக்கவேண்டும், அதை முதலிலேயே
நறுக்காமல் ஒரு கிடுக்கியால் பிடித்துக் கொண்டு தண்ணீரில் நன்றாக‌ முக்கிமுக்கி அலசி எடுத்து தண்ணீரை வடிய‌ விட்டுப் பிறகு கத்தரிக்கோலால்
இரண்டு கணுக்களுக்கும் இடையே உள்ள‌ தண்டை மட்டும் நறுக்கி எடுக்கவும்.
கையில் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு தான் நறுக்குவதோ அல்லது
நார்போன்ற‌ முற்றாலான வெளித்தோலை உரிப்பார்கள்.
பிறகு அதை கடாயில் எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக‌ வறுத்து
எடுக்கவேண்டும். பிறகு உளுத்தம் பருப்பு, மிளகாய், தேங்காய்,பெருங்காயம்,
புளி, தேவையான் உப்பு இவற்றை இரண்டு டீஸ்பூன் எண்ணெய்யில் வறுத்து
வறுத்த‌ பிரண்டையோடு சேர்த்து அரைத்து துவையலாக‌ எடுக்கவும். சுடுசோற்றில் போட்டு நெய் ஊற்றி துவையலை சேர்த்துப் பிசைந்து காரமான‌
பொரியல் அல்லது மாங்காய் ஊறுகாய், சிப்ஸ், வற்றல் வைத்து உண்ணலாம்.
சுமாரான‌ முற்றாலான கணுக்களைத் தொட்டியில் ஊன்றி வைத்து நீர் விட்டு
வந்தால் நன்றாக‌ வேர் பிடித்து கொடி வளரும். வாரத்திற்கு ஒரு முறை உண்ணலாம். எண்ணெய்யில் கட்டாயம் வதக்கவேண்டும், இல்லாவிட்டால்
வாய் தொண்டை எல்லாம் அரிப்பு எடுக்கும். நாட்டிலே ஒரு பழமொழி உண்டு.
உருப்படாத‌ பிள்ளைகளைத் (என்னை வையாதீர்கள்) திட்டும் போது
" உன்னைப் பெற்ற வயிற்றிலே பிரண்டையை வைத்துக் கட்ட" என்று.
அந்த‌ அளவு அரிப்பு எடுக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணமாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி. எனக்காக‌ இவ்வளவு நேரம் எடுத்து பதிலளித்ததற்கு மிக்க‌ ந்ன்றி. நிறைய‌ விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப‌ ரொம்ப‌ நன்றி.

அன்புடன்
ஜெயா