அன்பே கடவுள்.

அன்பு அறுசுவை நேயர்களே, நமது உறுப்பினர் திருமதி சங்கீதா அவர்கள் காலையில் சாமிக்கு நெய்வேத்தியம் செய்ய குறிப்பு கேட்டிருந்தார்கள்.அவர்களுக்கு விடையளிக்கலாம் என்று தொடங்கி கடைசியில், நம்மையறியாமல் கூட யாருடைய மனத்தையும் புண்படுத்த வேண்டாம் என்று கருதி இங்கு அன்பே கடவுள் என்ற தலைப்பில் பொதுவாக எனது கருத்துக்களை எழுதியுள்ளேன்.

கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்ய என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றது என்று சரியாக தெரியவில்லை.இதில் புராணக் கதை ஒன்று ஞாபகத்தில் வருகின்றது தமிழ் உரையில் படித்ததாக ஞாபகம்.. உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன், அதாவது வேடர் ஒருவர் வேட்டையாடும் பொழுது காட்டில், சிவலிங்கம் ஒன்று பராமரிப்பு இல்லாமல் இருந்ததை கண்டு மனம்வருந்தி அதற்கு பூஜை செய்ய நினைத்தாராம்.ஆனால் எப்படி செய்வது, என்ன படைப்பது என்று தெரியாமல் வேட்டையில் கிடைத்த பச்சை மாமிசத்தை கடவுளுக்கு படைத்தாராம். வாயில் நீரை நிரப்பிவந்து அபிஷேகம் செய்து,காட்டு மலர்களை பறித்து வந்து அர்ச்சனை செய்தாராம்.

இதைக் கணட ஈஸ்வரன், அவரின் பக்தியை மேலும் சோதிக்க நினைத்து லிங்கத்தின் ஒரு கண்களிலிருந்து இரத்தம் வழுவதுப் போல் செய்தாராம், இதை பார்த்ததும் மனம் பதறி இரத்தத்தை நிறுத்த பலவழிகளில் முயன்று கடைசியில் தன்னுடைய கண்களில் ஒன்றை கூறிய அம்பினால் பிடுங்கி எடுத்து இரத்தம் வழியும் இடத்தில் வேடர் வைத்தாராம். இரத்தம் வழிவது நின்றதைப் பார்த்து ஆனந்தம் அடைந்தாராம். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் சிவலிங்கத்தின் மற்றொரு கண்களிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்து தன்னுடைய மற்றொரு கண்ணையும் எடுத்து வைப்பதாக முடிவுச் செய்தாராம், ஆனால் இருக்கும் ஒரு கண்ணையும் பிடுங்கிவிட்டால் எப்படி லிங்கத்தில் அதை சரியாக பொருத்துவது என்பதால், தனது காலை எடுத்து லிங்கத்தின் மீது கண்களை பொருத்த வேண்டிய இடத்தில் அடையாளமாக வைத்துக் கொண்டு கண்களைப் பிடுக்க போனாராம், அதற்குள் ஈஸ்வரன் அந்த வேடனின் முன் தோன்றி அவரின் பக்தியைப் பாராட்டி இழந்த கண்ணையும் திருப்பி தந்து ஆசி வழங்கினாராம். கடவுளுக்காக தனது கண்களையே இழக்கத்துணிந்ததால் அவரை கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டதாக கதை சொல்கின்றது.

ஆகவே என்னைப் பொருத்தவரையில் கடவுளுக்கு படைக்க, பட்டியல் எதுவும் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.கடமையே என்று கருதாமல் அன்பாக நம்மால் என்னச் செய்ய முடியுமோ, அதை சுத்தபத்தமாக செய்து, கடவுளுக்கு முன்பாக படைத்து விட்டாலே போதும் என்று நினைக்கின்றேன். தினமும் பாலும் பழத்தை மட்டுமேவைத்து கூட கடவுளை வழிபடலாம்.நான் கடவுளை வழிபட கால நேரம் பார்ப்பதில்லை, வீட்டில் செய்யும் எல்லா வெஜிடேரியனையும் பலகாரங்களைக் கூட படையலாக வைத்துவிடுவேன். பக்தியால் அல்ல, குடும்பத்தில் நான் வணங்கும் கடவுளும் ஒருவர் என்று கருதுவதாலும், மற்றும் நினைவுகளில் மட்டும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எனது உறவினர்களுக்காகவும்,அவ்வாறு செய்வேன்.

கடவுள் என்ற ஒரு சக்தி இந்த உலகத்தில் இருந்தால் நாம் எல்லோருமே அவரின் குழந்தைகள் தானே, அப்படி என்றால் ஒரு தாய் தன் குழந்தையிடத்தில் ஒன்றுமே எதிர் பார்ப்பதில்லை அல்லவா,குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று தானே விரும்புகின்றார்கள்.கடவுளும் அதைப் போல்த் தானே, நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்கமாட்டார், மாறாக தூய்மையான இருதயத்தை மட்டுமே எதிர்பார்ப்பார் அதில் அவர் குடியிருக்கவும் விரும்புவார். ஆகவே என்னைப்பொருத்தவரையில் கடவுள் என்பது அன்பு, அன்பின் மறுபெயர் தான் கடவுள் என்று நம்புகின்றேன். இதைக் குறித்து நேயர்கள் தங்கள் கருத்தையும், மாற்று கருத்து இருந்தால் அதையும் கூறும்படி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

Thank you manohari madam
I like your way of presentings your opinion.

நீங்கள் சொன்ன விதம் ரொம்ப அழகாக இருக்கிறது...என்னுடைய நெய்வேத்தியமும் அது தான்...கடவுளுக்கு என்று தனியாக செய்து வைத்தது இல்லை(என்னென்ன செய்யனும் எனக்கு இன்னமும் தெரியாது)...

பண்டிகை நாட்களில் கூட என்னால் முடிந்ததை தான் செய்வேன்...சில சமயம் சர்க்கரையும் உடைத்தகடலையும் வைத்து சாமி கும்பிட்டுவிடுவோம்...

அவ்வளவு தான்...என்னவர் எப்போதுமே சொல்வார்...கடவுளுக்கு நாம குழந்தைங்க தானே....அதனால் ஒன்னும் கோவிச்சுக்கமாட்டார்.சமைச்சதை அவருக்கு வெச்சாப்போதும்...என்று....

உண்மையில் மனதில் கடவுளை நம்பினாலே போதும்...நாம் உண்ணும் சைவ உணவுகள் அனைத்தும் கடவுளுக்கு படைக்கலாம்...

நன்றி...

நன்றி...

ஹலோ புவனா எப்படி இருக்கீங்க? என்னுடைய பதிவுகளைக் குறித்து தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

ஹலோ வாணி டியர் எப்படி இருக்கீங்க? இந்த தலைப்பை எழுதிவிட்டு ஏதாவது பிரச்சனை வருமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தங்களின் கருத்தைப் பார்த்த பிறகு தான் நிம்மதியடைந்தேன். நான் குறிப்பிட்டுள்ள கண்ணப்பரின் கதையைக் கேள்விப் பட்டதுண்டா? பள்ளிக்கூடத்தில் எந்த வகுப்பு என்று நினைவில்லை, ஆனால் தமிழ் பாடத்தில் படித்தது மட்டும் நினைவில் உள்ளது. எனக்கு மிகவும் பிடித்த கதை என்பதால் இன்னும் அதை மறக்கவில்லை, அறுசுவையிலும் அதை எழுத வாய்ப்பும் கிடைத்தது. நன்றி டியர்.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா...உங்க பதிவை பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதியா இருந்தது...ஏன்னா எனக்கு சப்போர்ட் ஒருத்தர் இருக்காங்கன்னு...
என்னோட பாட்டி நான் செய்யறது தப்புன்னே சொல்லிட்டு இருப்பாங்க(இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம், கொஞ்சம்...........னு ஆரம்பிச்சுடுவாங்க)

எங்க பாட்டி தாத்தாவோட ஊர் காளஹஸ்தி தான்...அதனால் கண்ணப்பர் கோவிலுக்கு நிறைய முறை போயிருக்கேன்...ஈஸ்வரன் கோவிலை விட எனக்கு இந்த கோவில் ரொம்ப பிடிக்கும்...மலை மேல இருக்கும்...அதனால மலை ஏறி போய் பார்க்க நல்லா இருக்கும்...நீங்க போயிருக்கீங்களா...இப்ப ரொம்பவே மிஸ் பண்றேன்...

நன்றி...

நன்றி...

i love to read ur replies..the way u present ur opinion will b too gud..u have got gud presentation skils..keep on writing...take caree

ஹலோ வாணி டியர், நான் கண்ணப்பர் கோவிலுக்கு சென்றதில்லை, அது எங்கு இருக்கின்றது போன்ற விவரங்களும் தெரியாது. ஆனால் அது தங்களின் தாத்தா பாட்டியின் ஊர் என்றும், நீங்கள் அங்கு பல முறை சென்றிருப்பதை பார்த்த போது சந்தோசமாக இருந்தது. நீங்களாவது அந்த ஊரை அதிகம் மிஸ் செய்வதாக எழுதியிருந்தீர்கள்.

நான் இந்தியாவில் இருக்கும் போதிலிருந்தே, தமிழ் நாட்டை மிஸ் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டது. திருமணமாகி என் கணவருக்கு முதன் முதலில் வேலைக் கிடைத்ததே அண்டை மாநிலமான கேரளாவில் தான். ஆகவே அன்று தொடங்கியது இன்றோடு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக தமிழ் நாட்டை மிஸ் செய்கின்றேன். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி டியர்.

பின் குறிப்பு:ஆமாம்.... தாங்கள் என்னை தங்களின் பாட்னர் என்கின்றீர்களா, அல்லது பாட்டி என்கின்றீர்களா தெரிந்துக் கொள்ள ஆசை.

ஹலோ டியர் தலிகா, எப்படி இருக்கீங்க. தாங்கள் காட்டியுள்ள அன்புக்கும், எனது பதிவுகளைப் பற்றிய, தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி. மேலும் உங்களை போன்றோரின் சப்போர்ட்டால் தான் மனம் விட்டு எனது எந்த கருத்தையும் கூற முடிகின்றது. அதற்க்கு உங்களுக்கு தான் நான், நன்றி கூற வேண்டும்.நிச்சயமாக தொடர்ந்து எனது கருத்துக்களை எழுதுவேன்.நன்றி.

ஹலோ மனோகரி மேடம்,
கடவுளை பற்றி உங்கள் கருத்தை படித்தேன் மிகவும் அருமையான கருத்து. கடவுள் நம்முடைய அன்பை தான் பார்கிறார், நாம் எப்படி பூஜை செய்கிறோம் என்பதை அல்ல. எனக்கு ஒரு சந்தேகம், உடலுறவிற்கு பின் தலைக்கு குளித்து விட்டு தான் சாமி கும்பிடவேண்டும் என்று கேள்விப்பட்து உண்டு. அது உண்மையா? கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

Srinithi

ஹலோ ஸ்ரீநிதி எப்படி இருக்கின்றீர்கள்? நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள். ஆமாம் உடலுறவிற்கு பிறகு சுகாதாரத்தின் அடிப்படையில் தலைகுளிப்பது, சாமி கும்மிடுவது போன்ற விசயங்கள் நடை முறையில் இருந்து வந்தது உண்மையே.நம்முடைய முன்னோர்கள் கூறி விட்டுச் சென்ற விசயங்கள் அனைத்தும், ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் இருக்கும்.

ஆனாலும் என்னைப் பொருத்தவரையில் உடலுறவிற்கு பிறகு உடனே குளிப்பது சரியல்ல காரணம்,ஏற்கனவே உடலானது குளிர்ந்த நிலையில் இருக்கும், அப்பொழுது உடனே தலைக் குளிக்கும் பொழுது தற்காலிகமாக அஜீரணம், வாந்தி,போன்ற உபாதைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஒரு சில மணி நேரமாவது இடைவெளிவிட்டு,அல்லது உடல் சாதாரண வெப்ப நிலைக்கு வந்தப்பிறகு தலைக் குளிப்பது நல்லது என்பேன்.

ஆனால் அதற்கும் சாமிக்கும் சம்பந்தமில்லை. இவ்வாறு சாமியை மைய்யப் படுத்தி கூறுவது எல்லாமே ஒரு ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டவையாக இருக்கும் என்றே கூறுவேன். ஆகவே கண் கண்ட தெய்வமான கணவனே உங்கள் அருகில் இருக்கும் பொழுது, நீங்கள் எந்த சாமிக்கும் பயப்படத் தேவையில்லை. மனட்சாட்சிக்கு மட்டும் பயந்து, ஆனா ஒழுங்கா குளிங்க......,நன்றி டியர்.

மேலும் சில பதிவுகள்