உங்களது சிகிச்சை அனுபவங்கள்

நவீன விஞ்ஞான யுகத்தில் கண்டுபிடிப்புகள் நாளுக்கொன்றாய் வந்து கொண்டிருக்கின்றன. மனிதனுடைய வாழ்க்கைத்தரம் நூறு, ஐம்பது வருடங்கள் அல்ல, ஒரு 25 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது. பெரிய அளவில் உண்டாகும் மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களினால் நன்மைகள் பல இருந்தாலும், சில தீமைகளும் இருக்கின்றன. மருத்துவத்துறை இன்று கண்டுள்ள முன்னேற்றம் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடுகையில் அதீதமானது. அதேசமயம், அன்று இருந்ததைவிட இன்று நோய்களும், பிரச்சனைகளும் எல்லாவற்றையும் சமன் செய்யும் விகிதத்தில் அதிகரித்து உள்ளன. இதற்கு மனித வாழ்க்கை முறையில் உண்டான மாறுதல்கள் ஒரு முக்கிய காரணம்.

வாழ்நாளில் உடல்நலக் குறைவினை சந்திக்காதவர் எவரும் இல்லை. எல்லோரும் ஏதேனும் ஒரு உடல் பிரச்சனையை அவ்வபோது சந்தித்துதான் வருகின்றார்கள். தடுக்கி விழும் இடம் எல்லாம் மருத்துவமனைகள் முளைப்பதும், நேற்று முளைத்த மருத்துவமனையில்கூட இன்று நுழைய இடம் இல்லாமல் இருப்பதும், பெருகி வரும் உடல் நலக் கோளாறுகளை தெளிவாய் காட்டுகின்றன.

புதுப்புது நோய்கள், புதுப்புது மருந்துகள், புதுப்புது சிகிச்சைகள் என்று மருத்துவத்துறையில் தினமும் புதியவை சேர்ந்த வண்ணமே உள்ளது. சிகிச்சை முறைகளில் ஏராளமான புதுமைகள் வந்துவிட்டாலும், புதுமையான நோய்களினால், நோய் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த அனுபவம் இல்லாத மனிதர்கள் மிகவும் பயப்படுகின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த புதியப் பகுதி.

இங்கே அறுசுவை நேயர்களின் அனுபங்களை மற்றவர்களுக்கு பாடமாக கொடுக்க விரும்புகின்றோம். உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுகள், அதனால் சந்தித்த பிரச்சனைகள், அதற்காக எடுத்துக்கொண்ட சிகிச்சைகள், அவற்றின் வெற்றி தோல்விகள்.. இப்படி அனைத்தையும் இங்கே பகிர்ந்து கொண்டால், அதே பிரச்சனையுள்ளவர்களுக்கு எளிதில் விளக்கங்கள் கிடைக்கும். நோய் மற்றும் சிகிச்சை குறித்த பயம் விலகும். ஒரு ஆறுதல் உணர்வோடு தைரியமாக அவர்கள் பிரச்சனையை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.

இது கொஞ்சம் அல்ல, நிறையவே சீரியஸ்ஸான பகுதி. இங்கே நிறைய கட்டுபாடுகள் வைக்க விரும்புகின்றேன்.

1. இது சீரியஸ்ஸான பகுதி என்பதால் இங்கே அரட்டைக்கு இடமில்லை. சீரியஸ்ஸான உரையாடல்களை திசை திருப்பும் பதிவுகள் கண்டிப்பாக நீக்கப்படும்.

2. தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், இந்த பிரிவில் புதிய இழையை (Thread) ஐ தொடங்கி, அங்கே உங்கள் அனுபவங்களை வெளியிடவும்.

3. ஒரு நோய் சம்பந்தமான உரையாடலில், சம்பந்தமேயில்லாமல் மற்றொரு நோய் குறித்த உரையாடலைக் கொண்டு வந்தால் அதுவும் கண்டிப்பாக நீக்கப்படும்.

4 ஒரு நோய் குறித்து நடக்கும் உரையாடலில், அதே த்ரெட்டில் அதே நோயினால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் அவர்கள் அனுபவங்களை வெளியிடலாம்.

5. மருத்துவம் சம்பந்தப்பட்ட விசயம் என்பதால் நிறைய இடங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு அனுமதி உள்ளது. முழுவதும் ஆங்கிலத்தில் பதியப்படும் பதிவுகள் உடன் நீக்கப்படும்.

6. தலைவலிக்கு கண்ணாடி போட்டதில் ஆரம்பித்து, தொண்டை வலி, தொடர் ஜுரம், அம்மை, டைஃபாய்டு, குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சைகள் என்று எந்த வித உடல்கோளாறுகளைப் பற்றியும் எழுதலாம்.

7. நீங்கள் எந்த மாதிரி சிகிச்சைகள் எடுத்துக்கொண்டீர்கள், எவ்வளவு நாட்களில் சரியாயிற்று அதனால் உண்டான மாற்றங்கள் ஏதேனும் உண்டா, பலன் உள்ளதா, எவ்வளவு செலவு ஆயிற்று என்பதையெல்லாம் எழுதலாம். தகவல்களை முழுமையாக கொடுங்கள். தகவல்கள் உண்மையாக இருக்கட்டும்.

8. மந்திரத்தால் சரியானவை, வேண்டுதலால் சரியானவை இவற்றையெல்லாம் விட்டுவிடலாம். முறையான மருத்துவத்தால் சரியானவை பற்றி மட்டும் இங்கே தகவல்கள் தரவும்.

9. மற்றவர்களை அதிகம் பயமுறுத்தும்படியான பதிவுகள் வேண்டாம். உங்களுக்கு நல்ல பலனளித்த சிகிச்சைகளைப் பற்றி மட்டும் கொடுக்கவும்.

இப்போதைக்கு முக்கியமான விதிமுறைகள் இவைதான்.தேவையெனில் மேலும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவோம். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவியாய் இருங்கள்.

அறுசுவை forum ல் the most useful topic எதுவென்று கேட்டால் இதைத்தான் சொல்வேன். But very sad, there are no postings :(

Admin sir,
இதில் தகவல்களை எப்படி சேர்ப்பது? விளக்கமாக சொல்லுங்கள். Please

suji

எப்போதும் மன்றத்தில் புதிய பதிவுகள் கொடுப்பது போலவே இதிலும் தகவல்களை சேருங்கள். அதாவது, சிகிச்சை அனுபவங்கள் என்ற தலைப்பிற்கு கீழ், புதிய கேள்வி சேர்க்க என்று உள்ள லிங்க்கை கிளிக் செய்து, அதன் தலைப்பில் உங்கள் பிரச்சனை மற்றும் சிகிச்சையை சுருக்கமாக ஒரு வரியில் கொடுத்துவிட்டு, விளக்கப்பகுதியில் விரிவாக கொடுக்கவும்.

நீங்கள் ஏதேனும் படங்கள் கொடுக்க விரும்பினால், அதனை எங்களுக்கு அனுப்பி வைக்கவும். நாங்கள் அவற்றை இங்கே சேர்த்துவிடுகின்றோம். மேலும் விளக்கம் தேவையெனில் தெரியப்படுத்துங்கள்.

சகோதரி ஜீவிதா அவர்களுக்கு,

நீங்கள் குறிப்பிட்டு இருந்தது உண்மையே. எனக்கும் இதில் கொஞ்சம் வருத்தம்தான். பல நல்ல பிரிவுகளில் பதிவுகள் இல்லாமல் இருப்பது ஒரு குறைதான். அனுபவத்தில் அறிந்து கொண்ட ஒரு உண்மை, இங்கே எதற்கும் ஒரு இனிஷியேட்டிவ் வேண்டும். அதன்பிறகு சூடு பிடித்துவிடும். நான் எனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளையும், அதற்கான சிகிச்சைகளையும் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். கொஞ்சம் என்னை ஃப்ரீ செய்து கொண்டு பின்னர் எழுதுகின்றேன்.

டியர் பாபு தம்பி ரொம்ப தேங்ஸ் எல்லா குரிப்புகளையும் சேர்த்தத்தற்கு இன்னும் ஒன்று விட்டு விட்டீர்கள்பராவாஇல்லை நாளைக்கு ஆபீஸ் போனதும் முதல் வேலையா அதை சேர்த்து விடுகிறேன்.
ஜலீலா

Jaleelakamal

பயனுள்ள பகுதி...ஆனால் எது பற்றி எப்படி எழுதுவது என்று ஒரு ஐடியா இல்லை. எனவே நீங்க சொன்ன மாதிரி நீங்க பிள்ளையார் சுழி போடுங்க.

விபத்துகள், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் இவற்றை எழுத அனுமதி உண்டா?
விளக்கம் கொடுத்தபின் எழுதுகிறேன்

நேற்று எழுதிய ஒரு வார்த்தை வாக்கெடுப்பு வரை கொண்டுவந்து விட்டதே....

விபத்து குறித்தும் எழுதலாம். அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள், எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து எழுதுங்கள்.

வாக்கெடுப்பிற்கான தலைப்பு நேற்று குறிப்பிட்ட வார்த்தையால் வந்ததல்ல. நீண்ட நாட்களாகவே மனதில் இருந்ததுதான். வேறு சில பதிவுகளினால் அதை பற்றி விவாதிக்க இதனை கொண்டு வர வேண்டியதாயிற்று.

இந்த பயனுள்ள தொடரில் என் அனுபவத்தை எழுதி நானே இதை ஆரம்பிக்கலாம் என நினைத்து எழுதுகிறேன். அவரவர் அனுபவங்களும் அதனால் கிடைத்த தீர்வுகளும் நிறைய பேரின் பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாக நிச்சயம் அமையும்.

8 வருடங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் ஒரு தம்ளர் பாலை அருந்தி முடித்ததும் திடீரென்று அந்த வலி எனக்கு ஏற்பட்டது. இடுப்பின் பக்கம் பளீர் என்ற வலி. ஒரு சில நிமிடங்களிலேயே அது சாதாரண வலி அல்ல என்று புரிந்து விட்டது. டாக்டரிடம் செல்ல மாற்றுப் புடவை அணியக்கூட முடியாத அளவு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்து விட்டது. இந்த வலிக்கு முன் பிரசவ வலி சாதாரணம். இதயத் தாக்குதலின்போது ஏற்படும் அதிக வேர்வை இதற்கும் கொட்டியது. என் சகோதரியின் மீது சாய்ந்தவாறு அரை மயக்கத்தில் அவர்கள் அழைத்துச் சென்ற டாக்டரிடம் சென்றேன். ஒரு இஞ்ஜெக்க்ஷன் போட்டு சில மாத்திரைகளும் சாப்பிடச் செய்து வலி 10 நிமிடங்களில் நிற்காவிட்டால் உடனடியாக பெரிய மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று அந்த டாக்டர் சொன்னார். அப்போது இரவு 11 மணி. வீட்டுக்கு வந்த சில நிமிடங்களிலேயே எப்படி வலி வந்ததோ அதுபோலவே அந்த வலி திடீரென போயும் விட்டது. எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்து வீட்டிலிருந்த ப்ளம்ஸ் பழங்கள், பால் இவற்றை அடிக்கடி சாப்பிட்டேன். மறு நாளும் அதே மாதிரி வலி வந்தது. கைவசம் அந்த மாத்திரைகள் வைத்திருந்ததால் அதிக வலியின்றி மறுபடியும் மீண்டு வந்தேன். அதற்குப்பிறகுதான் இந்த வலி எதனால் வந்தது என தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்து ஒரு gastroenterologist-இடம் சென்றேன். அனைத்து பரிசோதனைகள், ஸ்கான் எல்லாவற்றுக்கும் பிறகு அவர் ஒன்றும் இல்லை என்றார். அதன் பின் ஒரு சிறு நீரக அறுவை சிகிச்சை நிபுணரிடம் சென்றேன். அவர் எனது விளக்கங்களைக் கேட்ட பிறகு “சித்த மருத்துவ மருந்துகளை நிறைய நாட்கள் எடுத்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டார். நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப்போனேன். அதற்கு முன் வேறு சில பிரச்சினைகளுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் சித்த மருத்துவ மருந்துகளைச் சாப்பிட்டிருந்திருக்கிறேன்! நான் அதைச் சொன்னதும் அவர் “ சித்த மருத்துவ மருந்துகளில் உலோகங்கள் மிக மிகச் சிறிய விகிதங்களில் கலக்கப்பட்டிருக்கும். அவற்றை சில மாதங்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்போது அந்த மெல்லிய துகள்கள் சிறுநீரகக் குழாயில் படிய ஆரம்பித்து அதை அடைக்க ஆரம்பிக்கின்றன. முழுவதுமாக அடைக்கப்பட்டால் உங்களுக்கு வந்த வலிதான் வரும்” என்றார். அதற்குப் பிறகு தகுந்த மருந்துகள் எடுத்துக்கொண்டேன். அதன்பின் ஒரு சாதாரண நாளிதழில் ‘சிறு நீரகக்குழாய் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் ப்ளம்ஸ் பழம், பால் இவற்றை அந்த சமயங்களில் சாப்பிடக்கூடாது “ என்ற செய்தியையும் படித்தேன்.

இப்படி நானாக எனக்கு எதனால் அந்த வலி வந்ததெனத் தெரிந்து கொள்ள முயன்றதில் அந்த வலி பற்றிய விபரங்களையும் அது மீண்டும் வரவிடாமல் செய்ய ஏற்க வேண்டிய வழி முறைகளையும் தெரிந்து கொண்டேன்.

பொதுவாக எந்த மருத்துவ மருந்துகளும் அவை குணம் அளிக்காவிடில் அதிக நாட்கள் தொடர்வது நல்லதில்லை. சித்த மருந்துகளில் உலோகங்கள் கலப்பதால் அவற்றை அதிக நாட்கள் உபயோகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஆயுர்வேத மருந்துகளில் சில மிகவும் சூட்டை அளிக்கும். சில சர்க்கரை நோய் உள்ளவர்களின் சர்க்கரை அளவை மிகவும் குறைத்து திடீரெனெ பலகீனமாக்கிவிடும். அதனால் நமது அனைத்துப் பிரச்சினைகளையும் மருத்துவரிடம் மறைக்காமல் வெளிப்படுத்தி தகுந்த ஆலோசனைகள் பெற்ற பிறகே அவற்றை எடுக்க வேண்டும். அலோபதி மருந்துகளை கூட அவை வீரியம் மிகுந்தவை என்பதால் தேவையானால் மட்டுமே எடுக்க வேண்டும். நோய்க்கு ஏற்ற மாதிரி நம் உணவுப்பழக்கங்களை மாற்றிக் கொண்டாலே நமது நோயை பாதி வென்ற மாதிரிதான். இந்த உணவுப்பழக்கங்கள் பற்றி நாம் மறுபடியும் பார்ப்போம்.

என் உறவினரின் மகள் 10வது படித்துக்கொண்டு இருந்தபோது திடுமென வயிற்றுவலியால் துடித்தாள்.வழக்கமாக செல்லும் மருத்துவரிடம் சென்று காட்டியபோது இப்பவே அட்மிட் பண்ணிவிடுங்கள் ஸிவியர் அப்பன்டிஸ்..வெயிட் பண்ணினால் ஆபத்து.உடனே சர்ஜரி பண்ணி ஆக வேண்டும்.என்று கண்டிப்பாக கூறி இருக்கிறார்.இவர்களும் பயந்து போய் அட்மிட் பண்ணுவதற்கு முனைந்த சமயம் இன்னொரு உறவினர் செகண்ட் ஒபினீயன் போகலாம் என வழு கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வர முயற்சிக்கும் பொழுது டாக்டர் எதாவது ஒன்று ஆகி விட்டால் நான் பொர்றுப்பில்லை என பயமுறுத்தி இருக்கிறார்.அதை பொருட்படுத்தாமல் வழுகட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்து இன்னொரு டாக்டரிடம் சென்று காட்டியதில் ஒன்றுமே இல்லை.வெறும் காஸ் பிரச்சனைதான் என்று நிறைய தண்ணீர் குடிக்கும் படி கூறி சில மருந்துகளும் எழுதி கொடுத்துள்ளார்.
இதோ இன்று அந்த சிறுமி பெரியவளாகி பிரபலமான ஷாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல ஒரு வேலையில் இருக்கிறாள்.3வயது குழந்தைக்கு தாய்.
அன்றிலிர்ந்து அந்த கிளினிக் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டோம்.என்பத் வேரு விஸயம்.
இந்த சம்பவத்திலிருந்து நாங்கள் நல்ல ஒரு பாடம் கற்றுக்கொண்டோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தெரிந்தால் சொல்லுங்க( கை வைத்தியம்)

மேலும் சில பதிவுகள்