அறுசுவை நான்காம் ஆண்டு தொடக்க நாள் விருந்து நிகழ்ச்சி (படங்களுடன்)

அன்பு சகோதரிகளுக்கு,

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18-11-2007) அன்று நடைபெற்ற அறுசுவையின் 4 வது பிறந்த தினத்தை ஒரு சிறிய விருந்துடன் அறுசுவைக்கு பங்களிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுடன் கொண்டாடினோம். கொண்டாட்டம் என்று பெரிதாக எதுவும் இல்லை. அறுசுவைக்காக தங்களின் நேரத்தை செலவழிக்கும் பலருக்கு அன்று சிறப்பு விருந்து ஒன்று கொடுக்க விரும்பினோம். முன்பே திட்டமிட்டு நடத்திய நிகழ்ச்சி அல்ல. திடீரென யோசித்து உடனே செயல்படுத்தினோம். அதனால் எல்லோரையும் அழைக்க முடியவில்லை. அசைவ விருந்து என்பதால் சிலரால் வர இயலாது போயிற்று.

திருமதி. மனோ சாமிநாதன் அவர்களால் வர இயலாது போனதில் என்னைவிட அவருக்கு அதிக வருத்தம். ஒரு கலவர பூமியை தாண்டி அவர் வரவேண்டிய நிலை. விஷப்பரீட்சை வேண்டாம் என்று விட்டுவிட்டோம். திருமதி. பைரோஜா ஜமால் வெளியூர் சென்றுவிட்டார். பலரை எங்களால் அழைக்க முடியவில்லை. மொத்தமாக ஒரு 30-35 பேர் கலந்து கொண்ட ஒரு சிறிய விருந்து நிகழ்ச்சி. அதில் மிகவும் சந்தோசமான விசயம், செல்வியக்கா தனது கணவர் மற்றும் மகனுடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததுதான். நிகழ்ச்சிகளின் சில துளிகளையும், விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகளையும் இங்கே படங்களாக கொடுக்கின்றோம். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த ;-)

image image

நாகையில் சுனாமி விட்டுச் சென்ற அடையாளங்கள் நீங்கள் மேலே பார்க்கும் பெண் குழந்தைகள். அந்த ஒரு நிமிட இயற்கை சீற்றத்திற்கு முன்பு இவர்களுக்கும் தாய், தந்தை, அண்ணன், தங்கை, சுற்றம், உறவினர் என்று பலர் இருந்தனர். எல்லாவற்றையும் அந்த ஒரு அலைக்கு பறிகொடுத்தவர்கள். இவர்களையும் இவர்கள் நிலை பற்றியும் பின்னொரு நாள் எழுதுகின்றேன். இவர்கள் உணவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவர்கள் உணவருந்திய தகவல் கிடைத்தபின்புதான் இங்கே எங்கள் விருந்தினை தொடங்கினோம்.

image image

நான் கூப்பிட்டு கௌரவப்படுத்த நினைத்த மற்றுமொரு முக்கிய நபர், மேலே படத்தில் இருக்கும் மூதாட்டியார் ராதாபாய் அவர்கள். 90 ஐ நெருங்குகின்றவர். தள்ளாமை உடலில் ஒட்டிக்கொண்டாலும், மனதால் இன்னமும் 30 ஐ தாண்டாதவர். சமையலாகட்டும், கைவினைப்பொருட்கள் செய்வதாகட்டும், மற்ற வீட்டு வேலைகள் ஆகட்டும்.. எதையும் மிகவும் உற்சாகமாக செய்பவர். வயது இவருக்கு தடையாகவே இல்லை. பின்னல் வேலைகளில் இவர் காட்டும் வேகம் அவரது அனுபவத்தை பேசும். இவரின் செயல்பாடுகள் இவரது திறனை பேசும். ஆனால் இவரால் மட்டும் பேச முடியாது. பிறவியிலேயே வாய் பேச இயலாதவர். ஊனம் எதற்கும் தடையல்ல என்பதை இன்று வரை நிரூபித்துக்கொண்டிருப்பவர். நான் மனம் சோர்வுறும் நேரமெல்லாம் இவரை ஒரு நொடி நினைத்து என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்வேன். இவரைப் பற்றியும் பிறகு நான் அறுசுவையில் ஒரு கட்டுரை எழுதுகின்றேன். அறுசுவை நான்காம் ஆண்டு தொடக்கத்தை இந்த அம்மையாரைக்கொண்டு தீபம் ஏற்றி, கேக் வெட்டி தொடங்கினோம்.

image image

நான் முன்பே குறிப்பிட்டு இருந்ததுபோல் எனது பிறந்தநாளை நான் கேக் வெட்டியெல்லாம் கொண்டாடியது கிடையாது. இந்த விருந்தும் அறுசுவை நான்காம் ஆண்டு தொடக்கத்திற்காக என்று சொல்லித்தான் அனைவரையும் அழைத்திருந்தேன். செல்வி அக்கா, அலுவலகத்தில் உள்ளவர்கள், இன்னும் ஒன்றிரண்டு பேர் தவிர அங்கு வந்திருந்த யாருக்கும் எனது பிறந்த நாள் என்பது தெரியாது. அறுசுவை பிறந்த நாளிற்காக, பள்ளி பயின்ற காலத்தில் எனது வகுப்புத் தோழரும், நாகை உமா ஹோட்டல்ஸ், ஸ்வீட்ஸ், பேக்கரிஸ் நிறுவன உரிமையாளர் திரு. P.N. குப்புசாமி அவர்களின் மகனுமாகிய திரு. ராஜராஜன் அவர்கள் நமக்காக மிகவும் ஸ்பெஷலாக ஒரு கேக் தயாரித்து கொடுத்திருந்தார். அறுசுவையில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான கேக் மற்றும் பாதுஷா, நெய் மைசூர்பாகு, மில்க் ஸ்வீட்ஸ் போன்ற குறிப்புகள் எல்லாம் இவர்கள் கடைகளில் தயாரிக்கும்போது படமாக்கப்பட்டவை.

இந்த கேக் மிகவும் ருசியாக இருந்தது. சாப்பிட்டவர்கள் அத்தனை பேரும் மிகவும் பாராட்டினார்கள். அதில் ஒரு சோகம் என்னவென்றால், செல்வியக்கா உட்பட நிறைய பேர் இந்த கேக்கை சாப்பிடவில்லை. ஆனால், நாங்கள் கொடுக்கவில்லை என்று பழி போட்டுவிட்டார். :-) ஓரளவிற்கு உண்மைதான். கேக்கை வெட்டி நாங்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. காரணம், கேக் வெட்டியது மதியம் 2 மணிக்கு. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. உடனே சாப்பிடவேண்டியிருந்ததால் நான்தான் இப்போது கேக் கொடுத்தால் யாரும் சாப்பாடு சரியாக சாப்பிடமாட்டார்கள் என்று சொல்லி, கேக்கை சில துண்டங்கள் மட்டும் வெட்டி வைத்து வேண்டுபவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதையும் பஃப்பே போன்றுதான் வைத்திருந்தோம். சாப்பிட்டு வந்தபின்பு நான் செல்வியக்காவிடம் பலமுறை கேட்டும் அவர் வயிறு புல்லாகிவிட்டது, பிறகு சாப்பிடுகின்றேன் என்று சொல்லிவிட்டு, சாப்பிடாமலே சென்றுவிட்டார்.

image image

முதல் படத்தில் உள்ளது நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள். முதலில் உள்ளது அவரின் கணவர் திரு. இளங்கோ அவர்கள். வலப்பக்கம் அமர்ந்திருப்பது அவரின் ஒரே மகன் திரு. சந்துரு அவர்கள். இஞ்சினியரிங்க் படித்துக்கொண்டிருக்கின்றார்.

அடுத்த படத்தில் இருப்பது யாரும் சமைக்கலாமில் ஏராளமான குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. சுமதி திருநாவுக்கரசு அவர்கள். கணவர் திரு. திருநாவுக்கரசு மற்றும் மகள் செல்வி காயத்திரி அவர்களுடன் வந்து கலந்து கொண்டார். வெளியில் உற்சாகமாய் எல்லாவற்றிலும் பங்குகொள்ளும் இவருக்குள்ளும் ஒரு சோகம் உண்டு. இவரது ஒரே அன்பு மகனை சுனாமியில் இழந்தவர் இவர். இதைப் பற்றியும் பிறகொரு நாள் எழுதுகின்றேன்.

image image

திருமதி. சுமதி திருநாவுக்கரசு அவர்களும் நம்ம செல்வி அக்கா அவர்களும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள் என்று எண்ணுகின்றேன். நிறைய பேசிக்கொண்டிருந்தார்கள். என்னவென்றுதான் தெரியவில்லை.

விருந்திற்கு வந்திருந்த மற்றொரு முக்கியமான நபர், திருமதி. சாந்தி முத்துராமலிங்கம் அவர்கள். இவரும் யாரும் சமைக்கலாம் பகுதிக்கு ஏராளமான குறிப்புகள் கொடுத்திருக்கின்றார். இன்னமும் அவரது குறிப்புகளை வெளியிடவில்லை.

image image

அறுசுவை உறுப்பினர்களுக்கு செல்வி அக்கா படம் காண்பிக்கின்றார்:-)

என்னைப் பற்றி அவர் கொடுத்த கமெண்ட், "நீங்க கொஞ்சம் கலரா இருப்பீங்கன்னு நெனைச்சேன்". "நான் தான் சொன்னேனே அக்கா, நான் பயங்கர கருப்புன்னு, ஏற்கனவே மன்றத்துல ஒரு பதிவு எல்லாம் போட்டேன்... " என்றதற்கு, "இருந்தாலும்..." என்று இழுத்தார். பாவம், எதிர்பார்க்கவில்லை போலும். இதைத்தான் அவரது பதிவில் பாபுவை பார்ததும் ஆச்சரியமாக இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தார் என்று எண்ணுகின்றேன். :-) (போட்டோ ஷாப் வைச்சு போட்டாவை கலராக்குற மாதிரி, நிஜத்தில கலராக்க எந்த ஷாப்பும் உதவுறது இல்ல. நான் என்ன பண்றது.. :-( )

image image

அறுசுவையின் தூண்களாக இருக்கும் செல்வி. பத்மா, செல்வி. பாப்பி(செண்பகவல்லி), செல்வி. ரேவதி இவர்களுடன் நம்ம செல்வி அக்கா.

இரண்டாவது படத்தில் இருப்பவர்கள், இடமிருந்து வலம், திரு. ரபீக் (மார்க்கெட்டிங்), திருமதி. சுரேதா (எனது நெருங்கிய தோழி), செல்வி. அனிதா (பாப்பியின் தங்கை), செல்வி. பத்மா(அறுசுவை அனைத்துப் பணிகளும்), செல்வி. ரேவதி (தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்குழு), செல்வி. அனு (ஆரம்பகாலத்தில் அறுசுவையில் பணிபுரிந்தவர், தற்போது அரசு உத்தியோகத்தில் இருக்கின்றார்.) செல்வி. சியாமளா (பத்மாவின் தங்கை), திரு. அயூப் (தற்போது பகுதி நேரம் பணிபுரிகின்றவர். மார்க்கெட்டிங் மற்றும் அறுசுவை மலையாள தள பணிகளை செய்து வருபவர்.)

image image
ஐஸ்கிரீம் பரிமாறிக் கொள்ளும் அறுசுவை குடும்ப உறுப்பினர்கள். இந்த விருந்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று என்னிடம் போராடி அனுமதிப் பெற்று, அனைத்துப் பொறுப்புகளையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, எல்லா வேலைகளையும் பம்பரமாக சுழன்று செய்தவர்கள். இந்த நிகழ்ச்சியை மிகவும் உற்சாகமாய் அனுபவித்தவர்கள் இவர்கள்தான். அவர்கள் சந்தோசம்தான் எனது சந்தோசம்:-)
image image

செல்வி அக்காவிற்காக சொல்லி வைத்து எங்கள் ஊர் ஸ்பெஷலான கடல் மீன்கள் வாங்கி சமைக்கச் சொல்லியிருந்தேன். வஞ்சிரம் மீன் வறுவலும், பாறை மீன் குழம்பும், பாறை மீன் பொரித்த மசாலாவும் (இதனை தயாரித்தளித்தவர் மீன் ஸ்பெஷலிஸ்ட் திருமதி. கமர் நிஷா அவர்கள்) செய்திருந்தோம். அவர் கடைசியில் நான் மீன் சாப்பிடுவதில்லை என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். என்னுடைய வற்புறுத்தலுக்காக வஞ்சிர மீன் வறுவல் மட்டும் சாப்பிட்டார். (தட்டில் இருக்குது பாருங்க..:-))

 

சரி, இப்ப விருந்தில் என்ன என்ன ஐயிட்டங்கள் இருந்ததுன்னு பார்க்கலாம். அதுதானே அறுசுவைக்கு முக்கியம் :-)

 
image image image
1. மட்டன் பிரியாணி, 2. பட்டர் சிக்கன், 3. சிக்கன் 65, இவை எனது நெருங்கிய நண்பரின் உணவுவிடுதியில் தயாரிக்கப்பட்டது. அங்கு இந்த உணவுகளை தயாரிப்பவர் எங்களால் அத்தை என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி. வள்ளி ராஜேந்திரன் அவர்கள். பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் இவர். இவர் தயாரிக்கும் பட்டர் சிக்கனால் இந்த உணவுவிடுதிக்கு சிறப்பு பெயர் உண்டு. நான் இவரைப் பற்றி முன்பு ஒருமுறை மன்றத்தில் (பெண்கள் அதிக அளவில் சமைப்பது குறித்த உரையாடலில்) குறிப்பிட்டு இருக்கின்றேன். தனியொரு பெண்மணியாக பெரிய விருந்துகளுக்கும் சமைக்கக்கூடிய திறன் பெற்றவர்.
image image image
4. முட்டை பொரியல், 5. மட்டன் க்ரேவி, 6. தாளிச்சா. இதில் முட்டை பொரியலை வீட்டிலேயே நண்பர்கள் தயாரித்துவிட்டனர். நண்பர் வீட்டில் அவித்த முட்டையை மசாலாப் போட்டு வித்தியாசமாக செய்வார்கள். அதைத்தான் செய்வதாக இருந்தோம். கடைசி நேரத்தில் நேரமின்மை காரணமாக அது முட்டை பொரியலாக மாறிவிட்டது. பிரியாணிக்கான தாளிச்சா ஒரு இஸ்லாமிய சமையல்காரரிடம் இருந்து செய்து வாங்கி வந்தது.
image image image
7. வஞ்சிரம் மீன் வறுவல், 8. பாறை மீன் குழம்பு, 9. வறுத்த மீன் மசாலா. எங்கள் ஊரின் சிறப்பே இங்கு கிடைக்கும் கடல் மீன்கள்தான். ஐஸில் வைக்காத, புத்தம் புதிய மீன்கள் அதிக சுவையுடையது. நண்பரிடம் சொல்லி வைத்து பார்த்து வாங்க காலையிலேயே கடற்கரை சென்றுவிட்டோம். 5 கிலோ அளவிற்கு எடையுள்ள பெரிய வஞ்சிரம் ஒன்று நண்பர் எடுத்துக் கொடுத்தார். குழம்பிற்கு பாறை மீன் ஒன்று எடுத்தோம். யாரும் சமைக்கலாம் பகுதியில் குறிப்புகள் வழங்கும் இஸ்லாமிய சகோதரி கமர் நிஷா அவர்கள் மீன் உணவுகள் தயாரிப்பதில் வல்லவர். பாறை மீனை வைத்து ஸ்பெஷல் மீன் குழம்பும், மீனை வறுத்து மசாலா சேர்த்து சற்று க்ரேவி போல் செய்யும் ஒரு வகை மசாலாவையும் செய்து கொடுத்தார். விருந்தில் இந்த மீன் உணவுகள்தான் எல்லோருடைய பாராட்டையும் பெற்றுத் தந்தது.
image image image
10. வெஜிடபிள் பிரியாணி, 11. ஒயிட் ரைஸ், 12. தயிர் சாதம். சைவம் சாப்பிடுபவர்களை இந்த விருந்திற்கு அழைக்கவில்லை. இருப்பினும் ஒன்றிரண்டு பேர் அசைவம் சாப்பிட இயலாதவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்காக சைவ உணவும் தயார் செய்திருந்தோம். வெஜிடபிள் பிரியாணி, தயிர்சாதம் இரண்டும் நாகையில் பிரபலமான ஒரு சைவ உணவு விடுதியில் (சரவணபவன்) இருந்து வரவழைக்கப்பட்டது.
image image image
13. சாம்பார், 14. ரசம், 15. கூட்டு. நாகை உமா உணவுவிடுதியின் சாம்பார் மிகவும் பிரபல்யமானது. அங்கு தயாராகும் ரசமும் நன்றாக இருக்கும். இந்த சைடு டிஷ் வகைகளை அங்கிருந்து ஸ்பெஷலாக செய்து வாங்கி வந்தோம்.
image image image
16. வாழைக்காய் வறுவல், 17. உருளைக்கிழங்கு சிப்ஸ், 18. வெங்காயம், வெள்ளரி, காரட் தயிர் பச்சடி.
image image image
19. நார்த்தங்காய் ஊறுகாய், 20. வடகத் துவையல், 21. இனிப்பு பச்சடி. இதில் இனிப்பு பச்சடியைத்தான் அதிக பேர் விரும்பி சாப்பிட்டனர்.
image image image
22. ப்ருட் சாலட், 23. ஐஸ்கிரீம். பிரபல ஐஸ்கிரீம் பார்லரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஐஸ்கிரீம் மற்றும் ஆப்பிள், அன்னாசி, மாதுளை, வாழை கலந்த சாலட். இது ஒன்றுதான் பற்றாமல் போன அயிட்டம் :-)
 
 
 
 
ஜெயந்தி அக்கா, அடுத்த விழா கண்டிப்பாக சென்னை அலுவலகத்தில்தான். ஐந்தாம் வருட தொடக்கத்தின்போது உங்கள் அனைவரின் ஆதரவோடும் அறுசுவை இன்னமும் வளர்ச்சியுற்றிருக்கும். சென்னை அலுவலகமும் விரிவுபடுத்தப்பட்டிருக்கும். நீங்கள்தான் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்பீர்கள்.

ஆஹா...... அட்மின் கலக்கீட்டீங்க. இதுவா சின்ன விழா. ரொம்ப கிரான்ட்டாக கொண்டாடியுள்ளீர்கள். அதுவும் நம்ம அறுசுவை சீஃப் கஸ்ட்டுக்களுடன் விழா மிகவும் கலைகட்டுகின்றது. சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நீங்கள் காட்டும் பரிவு மனதை நெகிழவைத்துவிட்டது அதற்கு உங்களப் பாராட்ட எனக்கு தகுதியில்லை, த்ர்மம் தலைகாக்கும் தக்க சமையத்தில் உயிர் காக்கும் என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. அடுத்த ஆண்டு விழாவிற்கு நீங்கள் என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நான் ஆஜர். உங்களை நினைத்து பெருமைப்படும் அன்பு அக்காள் மனோகரி.

பிகு:(எங்களை நினைத்து கொஞ்சம் கூட உங்களுக்கு பரிதாபமே வரவில்லையா? இப்படி விளாவரியாக உணவின் புகைப்படங்களைப் போட்டு நாக்கு மட்டுமல்ல தலையே வியர்த்து விட்டது).

சிறப்பான விருந்து போல் தெரிகிறது. படங்கள் அழகாக இருக்கின்றது. அறுசுவை பிறந்தநாள் கேக் மிகவும் அழகாக இருக்கிறது. அதை வெட்டும் அம்மம்மாவும் அழகு :)
-நர்மதா :)

வணக்கம் அட்மின் அண்ணா. நீங்கள் படங்களுடன் அறுசுவையின் நான்காமாண்டின் விழாவை காட்டியது மிக அருமை. படங்களை பார்க்கும் போது நாம் அங்கு இல்லையே என்று நினைத்தேன். படங்களில் உங்கள் அம்மா அங்கு இல்லையே ஏன். அறுசுவையின் பிறந்தநாளன்று நீங்கள் பல நல்ல விஷயங்களை செய்துள்ளீர்கள். 5 ஆம் ஆண்டு விழாவிற்கு மேலும் கலக்குங்க.

கேட்க்க மறந்துவிட்டேன்.விழாவிற்கு அம்மா வரவில்லையா?

அட்மின், படங்களும், உங்களுடைய விளக்கங்களும் அருமை. மன்றத்தில் பேசும் அனைவரும் அங்கிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். முதியோருக்கு மரியாதை செய்யும் அந்த நற்பண்பை பாராட்டியே ஆக வேண்டும்.

(சாப்பாட்டு படமெல்லாம் நாங்க கேக்கவே இல்லையே:-)) யக்கா மனோகரி அக்கா, நாம ஜெலுசில போட்டுப்போம்:-)

பிரியமுள்ள மனோகரி அக்கா அவர்களுக்கு,

கண்டிப்பாக அடுத்த ஆண்டுவிழாவிற்கு நீங்கள் எங்களுடன் இருப்பீர்கள். இது உண்மையிலேயே மிகவும் எளிய விழாதான். உணவு மட்டும்தான் ஏற்பாடு செய்திருந்தோம். விருந்தினை தொடங்குவதற்கு முன்பு கேக் வெட்டினோம். அவ்வளவுதான். வேறு ஒன்றுமே செய்யவில்லை.

அம்மா அவர்கள் தற்போது சென்னையில் எனது சகோதரர் வீட்டில் இருக்கின்றார்.(வீட்டில் யாரும் இல்லை என்பதால்தான் இவ்வளவு ஆட்டம் போட முடிந்தது.:-))

சகோதரிகள் முத்துலெட்சுமி மற்றும் நர்மதா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அண்ணாவிர்க்கு
திருமதி அஸ்மாவின் கம்ப்யூட்டருக்கு வந்த வைரஸ் காய்ச்சலால் அருசுவையை பார்வை இட முடியவில்லை,அதை சரி செய்து இப்பொழுது சர்வர் பிரச்சினை,அதனால் அவர்கலால் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கமுடியவில்லை என்று ஆதங்க பட்டார்கள்,மேலும் அவர்கள் சார்பாக வாழ்த்து தெரிவிக்க சொன்னார்கள்,பிடியுங்கள்
அஸ்மாவின் வாழ்த்துக்களை!
(ஹும் அருசுவையில் அரிய சுவைகளுடன்)ஜமாய்த்துவிட்டீர்கள்,சுனாமி பாதிக்க பட்ட குழந்தைகளுடன் கொண்டாடியது பாராட்ட படவெண்டியது!

ம்ம்....மொத்தம் 25 அய்ட்டம் கேக் உட்பட..இது தான் சின்ன விழாவா....அப்போ பெரிய விழா எப்படி இருக்கும்!!!

இதுல மனசுல தொட்டது அந்த வயதான அம்மாவும்,சுனாமியால பாதிக்கபட்ட குழந்தைகலும்..

எங்கு ,எது சிறப்பா இருக்கும்னு பார்த்து பார்த்து விருந்தும் தயார் செய்த விதம் பாராட்டவேண்டிய விஷயம்.மீன் உட்பட கடல்ல போய்யி பிடிச்சுட்டு வந்து.... அசத்திடீங்க.

அந்த பட்டர் சிக்கனும், மீன் கிரேவியும் எங்களுக்கு அந்த குறிப்பு கிடைத்தால் நல்லாருக்கும்.

நாங்கலும் கலந்து கொண்டது போல உணர்வு வந்திச்சு.

பிரியமுள்ள தங்கை
பர்வீன்.

உடனே வாங்க இங்க னு இருக்குற த்ரெட் கு வாங்க ..
அரட்டை அடிக்கலாம் ல இருக்கு ..

pls say ur comments on that

உடனே வாங்க இங்க னு இருக்குற த்ரெட் கு வாங்க ..
அரட்டை அடிக்கலாம் ல இருக்கு ..

pls say ur comments on that

மேலும் சில பதிவுகள்