ஒலிம்பிக்ஸ் - முதல் தங்கம்

அப்பாடா, ஒரு வழியா நாம தங்கம் வாங்கிட்டோம். இந்திய வரலாற்றில் தனி மனிதன் முதல் முறையா தங்கம் வாங்கிட்டார் அப்படி இப்படின்னு நியூஸ் களை கட்டுது. எப்படியோ, இனி ஆபிசில் கொஞ்சம் பெருமையா ஒலிம்பிக்ஸ் பத்தி பேசலாம். இப்படி ஒரு சாதனை செஞ்சு நம்ம எல்லோரையும் சந்தோஷப்பட்டு, பெருமிதம் கொள்ள செஞ்ச அபினவ் பிந்த்ராவை பாராட்ட வார்த்தையில்லை.

அதே சமயம் நாம ஒரு தங்கத்துக்கே 28 வருஷம் காத்துக் கிடந்து இப்பதான் கிடைச்சிருக்குன்னு நினைக்கும்போது நம்ம நாட்டின் ஊழலையும், அலட்சியத்தையும் சொல்லாமலும் இருக்க முடியல. போட்டிக்கு போறதுக்கு முன்னாடியே ( போனா தங்கம் வாங்குவாங்களான்ற கதை இருக்கட்டும்) போதை மருந்து, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து, அவரை அவருக்கு நல்லா தெரியும், அதனால செலெக்ஷன்ல கொளறுபடின்னு இப்படி ஏகப்பட்ட கதை. இதெல்லாம் இங்கே ஆஸ்திரேலியாவிலும் உண்டுதான். ஆனாலும் இங்கே அப்படி என்னவாவது செஞ்சு போறவன் கூட தங்கம் வாங்கிடறான். நம்ம ஆளுங்க பார்ட்டிசிப்பேட் பண்றதோட சரி. கவர்மெண்ட் செலவில் சைனாவையோ, சிட்னியையோ சுத்திப் பார்த்துட்டு வந்துடறாங்க. இதில பெரிய ஜோக்கே நாங்க ஒலிம்பிக்ஸ் நடத்துவோம்னு நம்ம நாட்டில் அரசியல்வாதிங்க குதிக்கிறதுதான். ஒரு தடவையாவது நிறைய கோல்ட் மெடலோ அல்லது வெண்கல பதக்கமோ
வாங்கிட்டு அப்புறம் சொல்லி இருந்தா சரின்னு சொல்லலாம். அதை விட்டுட்டு நம்ம பணத்தை செலவழிச்சு, ஒலிம்பிக்ஸ் நடத்தறேன் பேர்வழின்னு அதில் நிறைய பணமும் சுருட்டிக்கிட்டு, பத்தாததுக்கு வர்றவனுக்கெல்லாம் மெடலை அள்ளிக் கொடுத்துட்டு கடைசியில் போன முறை தான் வாங்கிட்டோமென்னு ஒண்ணும் வாங்காம தலையில் துண்டை போட்டுக்கிறதுக்கு பதிலா, நடத்தினால் எவ்வளவு பணம் செலவாகுமோ அதை விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், கிராமப் புறத்தில் இருக்கும் இளைஞர்களை விளையாட்டில் ஜொலிக்க வைக்க சிறப்பான பயிற்சிக்கும் செலவழிக்கலாம்.

தனி ஒருவருக்கே எப்போதும் உதவி செய்யாம அவர்களோட பொருளாதார நிலையைக் கொண்டு ஊக்கப்பணம் வழங்கலாம். ஒருவருக்கே 25 லட்சம், கார்னு அள்ளிக் கொடுத்து அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பயிற்சின்னு செலவழிச்சு கடைசியில் மத்தவங்க அதனால இருக்கற கொஞ்ச நஞ்ச ஊக்கமும் தொலைஞ்சுப் போய் விரக்தியா இருக்கற மனநிலையையாவது மாற்றணும். எத்தனையோ பேர் சந்தர்ப்பம் கிடைக்காம , தரப்படாம இருக்கறதாலதான் 28 வருஷம் கழிச்சு ஒரே ஒரு தங்கம். இனியாவது திருந்துவாங்களான்னா இல்லைன்ற பதில்தான் வரும். அபினவ்க்கு பணம், வீடு, விளம்பரம்னு அவரையும் கமர்ஷியலா ஆக்கிடுவாங்க. அடுத்த முறையும் அவர் ஒருத்தரையே நம்பிட்டும் இருப்பாங்க. வழக்கம்போல மத்தவங்களை விட்டுடுவாங்க.

இந்த ஒலிம்பிக்ஸ் பரேடின் போது பார்த்த மற்றொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். பரேடில் வீரர்களைப் பார்த்து கையசைத்த சோனியா காந்தி நமது நாட்டின் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக புடவை அணிந்திருந்தார். அதுவும் அவர் அன்று அவர் அணிந்திருந்த முறை வீட்டில் நமது அம்மாக்களைப் பார்ப்பது போன்று இருந்தது. இழுத்து செருகிக்கொண்டு உற்சாகமாக கையசைத்தார். பார்த்துக் கொண்டிருந்த என் வீட்டு வேலைக்கார பெண்மணி சொன்னது இதுதான், " பாரும்மா! ஜட்டி போடற நாட்டிலிருந்து வந்த வெள்ளைக்கார பொம்பளை நம்ம ஊர் புடவை கட்டி இருக்கு. நம்ம ஊர்க்காரிகளைப் பாருன்னு" . நிச்சயம் அதைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. சல்வார் கூட ஒரு வகையில் நமது தேசிய உடை போலத்தான். சீனாவில்தானே இருக்கிறோம் என்று சல்வாரில் கூட வரவில்லை. எப்போதுமே புடவையில் இருப்பவர்களுக்குக்கூட அது மிகவும் வசதியான உடை என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் அணிந்திருந்த விதமே அத்தனை அழகாக இயல்பாக இருந்தது. சொல்லப் போனால் நானும் அந்த விளையாட்டு வீராங்கணைகள் போல நமது நாட்டு கலாச்சாரத்தை மதிக்காமல் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒரு முறை கூட புடவை கட்டியதில்லை. இத்தனைக்கு நான் தான் இங்கே புடவை கட்டுவதில் பெஸ்ட்னு சொல்லுவாங்க ( மத்தவங்களுக்கு கட்டி விடும்போதுதான்). இனிமேலாவது புடவை கட்டுவோம்னு, புடவைகளை உடனே அனுப்புங்கள் என்று அம்மாவிடம் சொல்லி இருக்கிறேன்.

இதெல்லாம் இருக்கட்டும். நமது அறுசுவை தோழிகளுக்கு நான் சொல்லாமல் விட்டுப்போன விஷயம் ஒன்று இருக்கிறது. நம்ம அட்மினை ஒலிம்பிக்சிற்கு அனுப்பி இருந்தால் துப்பாக்கி சுடுதலில் இன்னுமொரு தங்கம் வென்றிருக்கலாம். அப்படி ஒரு திறமை இருக்குன்னு இதுவரை அவர் என்கிட்ட சொன்னதுக்கூட இல்லை. இந்த முறை இந்தியா சென்ற போது, பாபு, பாப்பி மற்றும் அறுசுவை ஊழியர்கள் , எங்க பேமிலி என்று எல்லோரும் வேளாங்கண்ணி பீச் சென்றோம். அங்கே பீச்சில் பலூன் சுடுவதற்கு வைத்திருந்தார்கள். பாபு கடைக்காரரிடம் மொத்தமாக பணம் கொடுத்து, துப்பாக்கியை வாங்கி ஒவ்வொரு பலூனாக சுட்டார். நானும் ஏதோ கோல்மால் போலிருக்கிறது, எப்படி ஒரு முறைக்கூட தப்பாமல் சுட முடியும் என்று அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க, பத்தாததுக்கு பாப்பி வேறு அதோ அந்த 2வது லைனில் இருக்கும் மஞ்சள் பலூனை சுடுங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். பத்மா முதல் லைனில் நீல பலூன் என்று சொன்னார். இப்படி எத்தனை முறை எல்லாரும் மாற்றி மாற்றி கேட்டாலும் சரியாக அந்த பலூனை சுட்டார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. அப்ப திரும்பிப் பார்த்து நீங்க ஒரு முறை ட்ரை பண்றீங்களான்னு கேட்டார். நான் ஏன் ட்ரை பண்றேன். எனக்குத்தான் ஒரு பலூனை கையில் பக்கத்தில் வெச்சுட்டு சுடுன்னாலே சுடத் தெரியாதே. இல்லை னு ரொம்ப மெதுவா சொல்லிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இன்று வரை எப்படி அதுபோல் சரியாக சுட முடிந்தது என்று அவரிடம் ஞாபகம் வைத்துக் கேட்கவும் இல்லை. ஒவ்வொரு முறையும் அறுசுவையில் அதனை எழுத வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டேன். ஒரு வேளை எதாவது ஆர்மியில் அல்லது ஷூட்டிங் ஸ்கூலில் கத்துக்கிட்டாரோ என்னவோ அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

இப்போதைக்கு, இன்னுமொரு தங்கம் கிடைக்காதான்னு மற்ற இந்தியர்களைப் போல நானும் கனவு கண்டுக் கொண்டிருக்கிறேன்.

சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தேவா

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் இவர்கள் சொன்னதாக வந்திருக்கும் பத்திரிகை செய்தியை இங்கு கொடுத்திருக்கிறேன்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவர் திரு சுரேஷ் கல்மாடி அவர்கள் கூறியது:

"பெரிய அதிசயங்கள் எதையும் இந்திய வீரர்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்".

இதைவிட ஒருபடி மேலே போய் நமது விளையாட்டு அமைச்சர் திரு எம். எஸ். கில் கூறியுள்ளது:

"வெளிப்படையாகச் சொல்லப்போனால், இந்தியா என்று ஒரு நாடு இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக மட்டுமே நம் அணி ஒலிம்பிக் போட்டிகளுக்குப் போகிறது, மற்றபடி பதக்கம் வாங்குவது சாத்தியமில்லை".

அதே விசா என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 10க்கு 7 பேர் கண்டிப்பாக இந்திய வீரர்கள் நிறைய பதக்கம் வெல்வார்கள் என்று கூறியுள்ளனர். சாதாரண குடிமகனுக்கு இருக்கும் நம்பிக்கை கூட இவர்களுக்கு இல்லை.

பதக்கம் பெற்றது மட்டும் இல்லை. அந்த முகத்தில் கண்டிப்பாக ஒரு கர்வமோ, அலட்டலோ கிஞ்சித்தும் இல்லை. இவ்வளவு பெரிய சாதனை படைத்தும் அமைதியாக இருந்தது மிகப் பெரிய விஷயம். அபினவின் தந்தை இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்ததும் அருமை.

நேற்றைய கிரிக்கெட் மாட்சில் தோற்றதற்கு தேர்வுக்குழுவும் காரணம். கிழம் கட்டைகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு இளைஞர்களை சேர்க்க வேண்டும்.

டீவியில் சாதாரண சிறுவன் அசாதாரணமாக ஏரியில் டைவ் அடிப்பதைப் பார்த்தால் அடடா திறமையானவர்களை முறையாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தால் கண்டிப்பாக நாமும் பதக்கப் பட்டியலில் முன்னே இடம் பிடிக்கலாமே என்று தோன்றும்.

நான் கூட உடையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். வெளியே சொல்ல வெட்கப்படுகிறேன். நைட்டியில் இன்று சென்னையில் இரவில் வண்டி (டூ வீலர்) கூட ஓட்டுகிறார்கள். கடைக்கு, குழந்தைகளை பள்ளியில் விட, ஏன் டாக்டர் வீட்டில் கூட ஒரு பெண்ணை நைட்டியில் பார்த்து நொந்து விட்டேன். இளம் பெண்கள் (திருமணமானவர்கள் கூட) திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக்கூட புடைவையில் வருவதே இல்லை. அவர்களது உடல் அமைப்புக்கு பொருந்துவதோ இல்லையோ, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை. நான் 35 வருடங்களாக புடைவைதான் கட்டி வருகிறேன். இதில் எந்த அசௌகரியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏன் அந்த காலத்தில் பேன், ஏசி எதுவும் இல்லாத காலத்தில் 9 கெஜ புடைவையை கட்டிக்கொண்டு நம் அம்மா, பாட்டிமார்கள் இருக்கவில்லையா? மற்ற உடைகள் பொருத்தமாக இருக்கும் பெண்கள் கூட புடைவை கட்டிக்கொண்டால் இன்னும் அதிக அழகாகத்தான் தெரிவார்கள். நமக்குத்தான் இதெல்லாம் புரியவில்லை. இல்லை இல்லை புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

பார்ப்போம் நம்ப அறுசுவை வீரர் தம்பி பாபுவை அடுத்த ஒலிம்பிக்கிற்கு அனுப்ப சிபாரிசு செய்வோம். அதற்குள் உள்ளூரில் ஏதாவது போட்டியில் கலந்து கொள்ளச் சொல்வோம்.

வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

வாழ்த்துக்கள் தங்கம் வாங்கிய அந்த குட்டி தம்பிக்கு...உங்களை போலதான் பதக்க பட்டியல் பார்க்கும் போது நம் நாடு 5,6 வது இடத்திலாவது வராதான்னு தோணுது, என்ன செய்ய இப்பொவே கண்ண கட்டுதேன்னு வடிவேலு மாதிரி சொல்லவேண்டியதுதான் ஒரு தங்கதுக்கு 28 வருஷம்? என்ன செய்ய?எனக்கும் எப்போதும் புடவை கட்ட ரொம்ப பிடிக்கும்,நான் US-ல் இருக்கிறேன்..இங்கு நிறைய தமிழ் மக்கள் இருக்கிறாங்க, ஆனால் யாரும் புடவை கட்டுவது இல்ல, கொஞ்சம் வயசான(40,45 வயது) அம்மா மட்டும்தன் கட்டுறங்க...நான் புடவை கட்டினா எல்லொரும் சிரிக்கிறாங்க, என்ன செய்ய ஊரொட ஒத்து வாழ வேண்டியதாருக்கு..

மல்யுத்தத்தில் சுசீல்குமாருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்திருக்கிறது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்