மழைக் கால காலை நேர உணவு - புழுங்கல் அரிசிக் கஞ்சி

மழைக் காலங்களில் காலை வேளையில், சுடச் சுட கஞ்சி செய்து தருவார்கள்.

முன்பெல்லாம் வீட்டில் பழைய சாதப் பானை கண்டிப்பாக இருக்கும். நீராகாரம்(நீராத் தண்ணீ)எடுத்து, தெளிய வைத்து, 2 நாளைக்கு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். சற்றே புளித்திருக்கும். (நல்ல புழுங்கல் அரிசியில் வடித்த சாதத்தைத் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் வைத்திருந்து, மறு நாள் காலையில், அந்தத் தண்ணீரை, இருத்து வைத்துக் கொள்ளவும்).

கஞ்சி செய்ய: ஐ.ஆர்.20 ரக புழுங்கல் அரிசி நன்றாக இருக்கும்.(பொன்னி அரிசி வேண்டாம்).

குக்கரில் சற்றே பெரிய பாத்திரத்தில்(பொங்கி வழியாத அளவுக்கு) ஒரு டம்ளர் அரிசிக்கு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வந்ததும், இறக்கி வைக்கவும்.

திறந்து பார்த்தால், கஞ்சி சேர்ந்து, கொழ கொழவென்று இருக்கும்.

இத்துடன் தயாராக வைத்து இருக்கும் நீராத் தண்ணீயை சேர்த்து, அடுப்பில் வைத்து, கல் உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து, ஒரு கொதி வர விடவும்.

தொட்டுக் கொள்ள, பொட்டுக் கடலைத் துவையல், பருப்புத் துவையல், கூழ்வடகம், வெங்காய வடகம் இத்தனையும்(!!) வேண்டும்.

கஞ்சி சாப்பிடுவதற்கு என்றே கும்பா இருக்கும். (பார்த்து இருக்கிறீர்களா?)

அதில் சூடான கஞ்சியை ஊற்றி, பக்கத்தில் மேலே சொல்லி உள்ள வெஞ்சனங்களை வைத்துக் கொன்டு, கஞ்சியில் சிறிது மோர் ஊற்றிக் கலந்து சாப்பிட வேண்டும்.

முக்கியமான விஷயம்: வெளியே மழை பெய்து கொண்டு இருக்க வேன்டும். வீட்டு உறுப்பினர்கள் குறைந்தது 7, 8 பேராவது சேர்ந்து வட்டமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும். பக்கத்தில் ட்ரான்ஸிஸ்டரில், சிலோன் ரேடியோவில் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

வீட்டிலுள்ள சிறிய குழந்தைகள் சுற்றிலும் கூச்சலிட்டுக் கொண்டு, விளையாடிக் கொண்டு இருக்க வேண்டும்.

பொன்னாள் அது போலே வருமா இனிமேலே!!

ஏக்கத்துடன்

சீத்தாலஷ்மி

மேலும் சில பதிவுகள்