பட்டிமன்றம் - 5

அன்பு அறுசுவை தோழிகளே, மனோ மேடம் தேர்ந்தெடுத்த பட்டிமன்றத்திற்கான தலைப்பு இதுதான்.

“இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்களா அல்லது மன முதிர்ச்சியின்றி சுயநலமாக செயல்படுகிறார்களா?”

இளம்தலைமுறையினர் என்று 15- 30 வயதிற்குட்பட்டவர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

கடந்த 4 பட்டிமன்றமாக கலக்கிக் கொண்டிருக்கும் அறுசுவை உறுப்பினர்கள் இதிலும் தங்களது திறமையான வாதத்தை எடுத்து வைக்க அழைக்கின்றேன். செல்வி மேடம் போட்ட ரூல்ஸ் அத்தனையும் போன பட்டிமன்றத்தில் சொல்லாமலேயே அனைவரும் பின்பற்றியதால் நானும் அதனைத் திருப்பியும் வழி மொழிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். அப்பப்ப நடுவில் வந்து என் கமெண்ட்ஸ் கொடுப்பேன்.

அப்பாடா, நாம எந்த பக்கமும் இந்த முறை யோசிக்க வேண்டாம்னு நினைச்சா, தீர்ப்புன்னு ஒண்ணு சொல்லியாகணுமே. (என்னோட தீர்ப்பு நிச்சயம் என் கருத்தா இருக்காது.). அதனால என் வேலையை சுலபமாக்க நம்ம திறமைசாலிகள் தங்கள் வாதத்திறமையால் உதவுவார்கள் என்று நம்புகிறேன். பங்கு பெறுபவர்கள் ஒருவர் சொன்ன அதே கருத்துக்களை வேறு உதாரணங்களோடு விளக்கினால் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். மற்றபடி இதுவரை நடந்த மற்ற பட்டிமன்றம் போலவே இதுவும் சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறேன். என்னை நடுவராக தேர்ந்தெடுத்தமைக்கு மனோ மேடத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. தாங்கள் சிறப்பாக செய்த நடுவர் பணியினை நானும் செய்ய முயற்சிக்கிறேன்.

(நம்ம அறுசுவையில் எத்தனையோ அனுபவம் வாய்ந்த சீனியர்கள் இருக்கும்போது ஊட்டியில் இருந்துக் கொண்டு என் பேரைப் போட்டுக் கொடுத்த அட்மின் அவர்களை நேரம் வரும்போது பாராட்ட ( நற நற- பல் கடிக்கற சத்தம்தான் ) கடமைப்பட்டுள்ளேன்.).

ஓக்கே, ரெடி ஸ்டார்ட்.

நடுவர் அவர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம்.இன்றைய இளைய தலைமுறையினர் சாதுர்யமும்,தெளிந்த நீரோடை போலவும் உள்ள புத்தி கொண்டவர்கள்.அவர்களுக்கு எங்கிருந்துபா வரும் சுயநலம் என்ற புத்தி?

தனது பாதை இதுதான் என்று தீர்க்கமாக முடிவு எடுக்கும் பக்குவம் அவர்களுக்குள் உண்டு,அதை நாம் ஊக்கப்படுத்தி அதனை நாம் வரவேற்க்க வேண்டும்.

வழியில் ஒருவர் அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தால் ஓடி போய் உதவும் பழக்கம் இளைய சமுதாயத்திற்க்கே உள்ள வழக்கம்.

தனது தாய்,தங்கை,தம்பி குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக,இவர்களுக்காக தன் சுகத்தை பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி வெளிநாட்டில் போய் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார்கள்.

ஆக இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவான சிந்தனையுடன் தான் இருக்கிறார்கள்!!என்பதை வாதாடி என் கருத்தை முன் வைக்கிறேன்!!

நடுவர் தேவா அவர்களுக்கு வணக்கம். மற்றும் வாதிட வரும் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.

இன்றைய இளம் தலையினர் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்கள் என்பதே என்னுடைய வாதம். இன்றைய காலகட்டதில் நாகரீக வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மீடியாக்கள் மூலமாக எல்லாவற்றையும் அறிய முடிகிறது. பள்ளிப்படிப்பு முடிந்தவுடனே என்ன கோர்ஸ் செலக்ட் பண்ணலாம் இதனால் எதிர்காலத்தில் என்னென்ன நன்மைகள் என்பதை தெளிவாக அவர்களே முடிவெடுக்கின்றனர்.முந்தைய தலையினருக்கு இதெல்லாம் சாத்தியமில்லை

என் அக்காவிற்கு திருமணமாகும் போது 16 வயது அப்போது அவருக்கு எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்கத்தெரியாது. ஆனால் இன்றைய தலைமுறையில் சிறு வயதில் திருமணம் ஆகும் பெண்ணுக்கு கூட நல்ல தெளிவான சிந்தனையுள்ளது. புகுந்த வீட்டில் எப்படி நடக்க வேண்டும் என்பதையும், கணவரிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் புரிந்து நடக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக எங்கள் பிளாட்டில் கீழ்ப்ளோரில் இருந்தவர் காதல் மணம்புரிந்தவர்கள் 20 வயது பெண்தான் ஆனால் நல்ல சாமர்த்தியம், 50 வயது பெண் கூட அந்த அளவு திறமையாக குடும்பம் நடத்துவாரா என்பது கூட எனக்கு சந்தேகம்தான். கணவர், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள்தான். திருச்சியை சேர்ந்தவர்கள். கணவருக்கு 26 வயது. எதையெல்லாம் வாங்க வேண்டும், இருவர் குடும்பத்திர்க்கும் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும், எவ்வளவு சேமிக்க வேண்டும், என்று தீர்மானிப்பதில் இருவருமே வல்லவர்கள். நெட்கனைக்ஷன் கூட எதற்கு? தனிஷா அக்கா உங்கள் கனைக்ஷனில் வெள்ளி அன்று மட்டும் எனக்கும் கனைக்ட் பண்ணுவீர்களா என்று கேட்டாள்? ஆச்சரியமாக இருந்தது. நாங்களும் மறுக்காமல் பாஸ்வேர்டு கொடுத்தோம். இப்போது துபாய்க்கு மாற்றல் ஆகிபோகப் போகிறார்கள். நான் அவளிடம் சொல்லுவேன், வந்தனா உன்னிடம்தான் வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று.

ஆண்களை எடுத்துக் கொண்டால் கூட இளம்வயதில் பொறுப்பில்லாமல் சுற்றினாலும் 20 லிருந்து 30 வயதுக்குள் வேலை, பெற்றோரை கவனித்தல், தங்கையின் திருமணம், குடும்ப நாகரீகம் இப்படி எல்லா பொறுப்பும் வந்துவிடுகிறது. பெற்றோர்கள் தாங்களாகவெ முடிவெடுக்கும் காலம் மாறி, இதை இப்படி செய்தால் நன்றாக இருக்குமா, இல்லை எப்படி செய்யலாம் என்று தங்கள் பிள்ளைகளை கேட்டு முடிவெடுக்கும் அளவிற்கு இன்றைய தலைமுறையினர் இருக்கின்றனர்.

அக்கால தலைமுறையினர் என்குடும்பம், என்வாழ்வு என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து வந்தனர். இன்றைய தலைமுறையினர் அப்படியில்லாமல் நண்பர்கள், அண்டை வீட்டார் என்று தன் சுற்று வட்டாரத்தை பெருக்கி கொண்டு, அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் அதை தீர்க்கவும் முன் வருகின்றனர்.

மேலும் எங்கள் ஊர் இளைஞர்கள் (திருமணம் ஆனவர்களும்) சேர்ந்து அங்கு வாழும் மக்களில் யாரெல்லாம் ரொம்ப வறுமையாக வாழ்கிறார்களோ அவர்களுக்காக, வெளிநாடு மற்றும் உள்ளூர்களில் வசதியாக வாழ்பர்களிடம் பணம் பிரித்து, அம்மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து புத்தகம்,நோட், பேனா,பென்சில் எல்லாவற்றிற்கும் உதவி புரிகின்றனர். ஊரில் ஒரு பிரச்சனை என்றாலும் யாரோ நமக்கென்ன என்று இருக்காமல் தானே முன்வந்து அவர்களுக்க்கு உதவுகின்றனர். காலம் காலமாக அங்கு வாழ்ந்த பெரியோருக்கு ஏன் இந்த சிந்தனை வரவில்லை?

அடுத்த வாரம் எங்கள் உறவினர் ஒருவர் அபுதாபிக்கு வேலைக்கு வருகிறார். என் கணவர்தான் அவருக்கு அந்த வேலை வாங்கி கொடுத்தது அதனால் நீங்கள் கம்ப்யூட்டர்,ஸ்போகன் இங்லிஷ் கற்று வாருங்கள் என்று சொன்னார். அவரும் கற்று வருகிறார் அவரின் 10 வயது மகனிடம். வெளியே க்ளாஸ் போனாலும் என் பையந்தான் எனக்கு ரொம்ப தெளிவா சொல்லித் தருகிறான் என்று சொன்னார். மேலும் உங்கள் மேல் அதிகாரியுடன் எப்படி நடக்க வேண்டும் என்று கூட சொல்கிறானாம். சிறு வயதிலேயே இத்தகய தெளிவாக இன்னோருவருக்கு தன்னுடைய கருத்தை புரிய வைக்கும் திறன் இளைய தலைமுறையினருக்கு உள்ளது என்று கூறி என்முதல் சுற்றினை முடிக்கிறேன். வாதம் சூடாகும் போது மீண்டும் வருவேன்..........

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நடுவர் அவர்களுக்கு என் வணக்கம்.
அன்பு த்தோழிகளே,உங்களுடன் பேசியது இல்லை. உங்கள் பேச்சுக்களை வாசித்து இருக்கிறேன்.

இன்றைய இளம் தலைமுறையினர் மன உதிர்ச்சியின்றி சுய நலத்தோடு தான் செயல்படுகிறார்கள்.
அவர்களுக்கு நல்ல வழிக்காட்டிகள் கிடையாது. தாங்கள் யாரை பின்பற்ற வேண்டும், தனக்கு எது நல்லது, தன் குடும்பத்துக்கு எது நல்லது அல்லது சமுதாயத்துக்கு தான் என்ன செய்ய முடியும்..என்று எல்லாம் அவர்களை இன்றைய சமுதாய சூழல் சிந்திக்க விடுவதில்லை. பொழுதுபோக்கு பற்றி மட்டுமே இளைஞன் பேசுகிறான். அப்படியே சுயநலமின்றி வாழ்பவனை "பிழைக்கத் தெரியாதவன்" என்று பட்டம் கொடுத்து ஒதுக்கி விடும் இன்றைய உலகம்!

கடன் வாங்கி தன்னை கல்லூரி அனுப்பும் தந்தையை நினைத்துப் பார்ப்பது இல்லை. தனக்கு இரண்டு சக்கர வாகனம் வாங்கித்தர வில்லையே என்று, "எதற்கு என்னைப் பெற்றீர்கள்" என்ற கேள்விக் கேட்கும் இளைஞர்கள் எவ்வளவு பேர்....கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் என்ற மாமனிதர் கூறினார்.
ஆனால், இன்றைய இளைஞனுக்கு கேமிரா செல்போனும், காரும், சொகுசு வாழ்க்கையும் உடனே வேண்டும்...அது தான் கனவு, அதற்கு உழைக்கனுமா? வியர்வை சிந்தாமல் வேலை பார்க்க தயார்........"நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே,நீ நாட்டிற்கு என்ன செய்தாய் ? எண்ணிப் பார்" பெரியவங்க சொன்னது....இன்றைக்கு இளைய தலைமுறையினர், தம்மால் தம் வீட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று நினைத்து செயல்பட்டாலே போதும்... ஒவ்வொரு குடும்பமும் மேம்பட்டாலே சமுதாயமே மேம்படுமே...இளைஞர்களை குற்றம் சொல்லவில்லை...அவர்கள் முன்னே உள்ள உலகம், அவர்களுக்கு தெளிந்த பாதையைக் காட்டாமல் மேலும் குழப்பத்தையே தருகிறது....இன்னும் நிறைய இருக்கிறது பேச.... மிக மிக முக்கியமான தலைப்பு இது. தேர்ந்தெடுத்த மனோ மேடம் அவர்களுக்கு நன்றி...

குழப்பத்தில், மன முதிர்ச்சி இன்றி தான் இன்றைக்கு இளைய சமுதாயம் செயல் படுகின்றனர் என்பது என் கருத்து.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவான சிந்தனையுடன் தான் இருக்கிறார்கள் என்பது தான் எனது வாதம்..ஆனால் இப்போது எனது கருத்துக்களை சொல்ல நேரம் இல்லை(பிரண்ட் வருகிறார்கள்) அதனால் கண்டிப்பாக என் கருத்துக்களை நாளை பதிக்கிறேன் நன்றி..

இந்த வயது சாதிக்கத் துடிக்கும் வயது - 1940 களின் இளைஞர்கள் தன் தாய் நாட்டின் விடுதலைக்கு உயிரையும் கொடுத்தார்கள்...அன்றைக்கு அவர்கள் முன் இருந்த பிரச்சினையில் சாதித்தனர்.
1960 களில் இலக்கியம், விவசாயம் என்று புரட்சிகளில் அன்றைய இளம் தலைமுறை கவனம் திரும்பியது. 1980 களில், அரசாங்க வேலை,ஆசிரியப் பணி, போட்டித் தேர்வுகள் மதிப்பளிக்கும் படி இளஞர்கள் கவனம் திரும்பியது.
ஆனால், இன்று பொறியியல், மருத்துவம் படிக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் இருந்து, தேறினாலும், மேலும் உயர் கல்வி (சிறப்பு பாடமாக) படிக்க வேண்டும்...மென்மேலும் செலவுகளே செய்தாலும் வேலை கிடைப்பது அரிது. கல்வி வியாபாரமாகி விட்ட சூழலில், பள்ளி, கல்லூரிகளில் எத்தனை இளைஞர்கள் சக ஏழை மாணவர்களுக்கு (அறிவை பகிர்தல் மட்டுமே நான் குறிப்பிடுகிறேன்) உதவுகிறார்கள்? ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் வைத்துப் பேசும் இளைஞர் கூட்டம், டியூசன் வைத்துத் தான் மட்டும் படித்துக் கொள்வர்........வகுப்பறையில் கவனிக்கும் மாணவனையும் கிண்டல் பேசி ஓட்டியெடுக்கும் இளைஞர்கள் உண்டே........இன்று கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வு இது தானே.............
முந்தையவர்கள் ஆசிரியர்களைக் கண்டால் மதித்தார்கள்....இன்று நிலைமை வேறு.......
சமுதாயத்தின் பிரதி பிம்பம் இளைய தலைமுறையின் வாழ்க்கை.......
ஒரு பிரச்சினை என்றால், இன்று தடுமாறுகிறான் இளைஞன்........
சுற்றி உள்ளவர்கள் மேல் பலியை போட்டுத் தான் தப்பித்துக் கொள்ளவே நினைக்கிறான்.......
பக்குவம் என்பதை அடையும் போது காலம் கடந்து விட்டு இருக்கும்....மிக முக்கியமாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் மிகவும் பாடுபட்டு தங்கள் இலக்குதனை நினைக்க வேண்டி இருக்கிறது...அவசர உலகிலே, போலி நகரிக உலகிலே திசை தெரியாமல் சிக்கினால் தெளிவு எங்கே கிடைக்கும்?

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அனைவருக்கும் வணக்கம்.
பட்டிமன்ற தலைப்பு கொடுத்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது.யோசித்துப்பார்த்ததில் இன்றைய தலைமுறையினர் மிகத் தெளிவாக செயல் படுகின்றனர்.அதில் எந்த மாற்றமும் இல்லை.முதலில் என் மகள்,மகனிடமே பார்க்கிறேன்,அவர்கள் செயல்படும் விதத்தை.எனக்கு அட்வைஸ் பண்ணும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்து காணப்படுகிறார்கள்.நாம் வளர்ந்தவிதம் காலகட்டம் வேறு,இன்றைய சூழல்,அவர்கள் அனைத்தயும் கற்றுகொள்ளும் அளவிற்கு வசதிவாய்ப்புக்கள் பெருகி கிடக்கிறது.நாம் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயம் நல்ல பலன் தான்.எடுத்துச்சொன்னால் புத்திசாலிகள் தெளிவாக செயல்படுவார்கள்.
மீண்டும் மீண்டும் வருவேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மன முதிர்ச்சி இல்லை என்பதை நான் ஒத்துக்கவே மாட்டேன்.எங்க இளைஞர்களுக்கு இருக்குற மன பக்குவம் வேறு யாருக்கு உண்டு?

//கடன் வாங்கி தன்னை கல்லூரி அனுப்பும் தந்தையை நினைத்துப் பார்ப்பது இல்லை. தனக்கு இரண்டு சக்கர வாகனம் வாங்கித்தர வில்லையே என்று, "எதற்கு என்னைப் பெற்றீர்கள்" என்ற கேள்விக் கேட்கும் இளைஞர்கள் எவ்வளவு பேர்//

அந்த கடனை எப்பாடுபட்டாவது அடைக்க தானும் ஒரு வேலை செய்யவே அவன் அதை கேட்கிறான்.இப்படி நீங்க கடனில் தத்தளிக்கிறதை பார்க்கவா என்னை பெற்றீர்கள் என்ற நோக்கத்தில் மட்டுமே என் இளைய சமுதாயத்தினர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்!

//வியர்வை சிந்தாமல் வேலை பார்க்க தயார்//

எதிரணியினரே தாங்கள் பாண்டிபஜார் போன்ற நகர வீதிகளில் பார்த்தீர்களானால்,பொம்மைகளை கடும் வெயிலில் நின்று விற்று சப்பாதிக்கின்றனர்.

சிலர் தம் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக படிப்பு பகலில் படித்து,மற்ற நேரத்தில் வேலை செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.இவர்களை போய் மன முதிர்ச்சியின்றி செயல்படுவதாக கூறுகிறீர்களே?

//கல்வி வியாபாரமாகி விட்ட சூழலில், பள்ளி, கல்லூரிகளில் எத்தனை இளைஞர்கள் சக ஏழை மாணவர்களுக்கு (அறிவை பகிர்தல் மட்டுமே நான் குறிப்பிடுகிறேன்) உதவுகிறார்கள்?//

எவ்வளவோ பேர் தனக்கு தெரிந்தவற்றை சக நண்பர்களுக்கு சொல்லி கொடுப்பதும்,அவர்கள் சாப்பாடு கொண்டு வரா விட்டாலும் தன்னுடைய சாப்பாட்டை மற்றவரோடு பகிர்ந்து உண்பதை இங்கு தவிர வேறெங்கு காண முடியும்.

தன் வீட்டு கஷ்டங்களை கூட,தன் நண்பர்களோடு மனம் விட்டு பேசி கவலையை மறக்கின்ற மாணவ மாணவிகள் எத்தனையோ பேர்.

//ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் வைத்துப் பேசும் இளைஞர் கூட்டம், டியூசன் வைத்துத் தான் மட்டும் படித்துக் கொள்வர்........வகுப்பறையில் கவனிக்கும் மாணவனையும் கிண்டல் பேசி ஓட்டியெடுக்கும் இளைஞர்கள் உண்டே//

அட என்ன எதிரணியினரே கால காலமாக இது நடந்து வரும் ஒரு செயல் தானே.முந்தைய காலத்தில் இல்லை!ன்பதை எப்படி சொல்ல முடியும்?

ஆசிரியர்களே இன்று கேட்கும் காலம் வந்துவிட்டது,எனக்கு என்ன பெயர் வைத்து உள்ளீர்கள் என்று?அவர்களுக்கே அவ்வளவு ஆர்வம் இருக்கும் போது எம் இளைஞர்கள் என்ன செய்வர்?

// டியூசன் வைத்துத் தான் மட்டும் படித்துக் கொள்வர்..//

டியூசன் வச்சு சில பசங்க கத்துகிட்டு மற்றவங்களை படிக்க விட மட்டாங்களாம்!என்னப்பா கதை இது.இப்ப இருக்கிற பெற்றோர் தான் தன் பசங்க இந்த துறையில் தான் வல்லவரா ஆகனும்னு இல்லாம,எல்லாத்துலேயும் ஒரு க்ளாஸுக்கு அனுப்பிடுறாங்க.

பள்ளி முடிஞ்சதும் டியூசன்,அப்புறம் கராத்தே,பாட்டு க்ளாஸ்,டான்ஸ் க்ளாஸ்....இப்படி அடுக்கி வைப்பது பெற்றோரோட வேலையா போச்சு.சில பேர் ஃபேஷனுக்காகவே இப்ப பசங்களை டியூசன் அனுப்புறது வேடிக்கையா போச்சு.இதுக்கு குறை சொல்ல எங்க இளைஞர்கள் தான் கிடைச்சாங்களா!என்ன கொடுமை சாமி இது!!

//ஒரு பிரச்சினை என்றால், இன்று தடுமாறுகிறான் இளைஞன்........
சுற்றி உள்ளவர்கள் மேல் பலியை போட்டுத் தான் தப்பித்துக் கொள்ளவே நினைக்கிறான்//

ஒரு ப்ரச்சனைனா முதலில் தீர்வு சொல்பவன் எங்க இளைஞர்களா தான் இருப்பாங்க.எங்கே அவர்களோட ஐடியாவை கேக்குறீங்க.பெண்ணா இருந்தா உனக்கு என்ன தெரியும் போய் வேற வேலையை பார் என்பாங்க.ஆணா இருந்தா உருப்படாதவனே,ஒழுங்கா போய் படின்னு சொல்வீங்க.வாய்ப்பு இருந்தாதானே யார் மேலே யார் பழியை தூக்கி போட்டாங்கன்னு சொல்ல முடியும்!!

போலி நாகரிக உலகிலே திசை தெரியாமல் சிக்குபவர்கள் வசதி படைத்த சிலரால் தான் முடியும்.
முடிவா அவங்களே சொல்லிட்டாங்க ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் மிகவும் பாடுபட்டு தங்கள் இலக்குதனை நினைக்க வேண்டி இருக்கிறது.

ஆக மொத்தம் எங்க இளைஞர்கள் கஷ்டப்பட்டாவது தெளிவான சிந்தனையோடு அவங்க இலக்கை அடைகிறார்களா அது தான் முக்கியம்!!

இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் பெரியவர்களை விடவும் மிக தெளிவாக தான் சிந்தித்து செயல்படுகிறார்கள்.. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர் கையில் என்று ஏன் சொன்னார்கள்? அப்துல்கலாம் ஏன் மாணவர்களை கனவு காண சொன்னார்?அவர்கள் தான் சிந்தித்து செயல்வடுவார்கள் என்ற எண்ணம் மட்டுமே!

எங்கள் குடும்பத்தில் நாங்கள் மூன்று பெண்கள்..நான் முதல் பெண்..எனக்கு 18வயதில் திருமணம்..+2முடித்திருந்தேன்..நல்ல வரன் சொந்தத்தில் வந்தது..என் அப்பாவுக்கு விருப்பம் தான் ஆனால் நான் படிக்க ஆசை பட்டதால் ஒரு தயக்கம் இருந்தது..என் விருப்பபடி விட்டுவிட்டதால் நானே யோசிக்கும் படி ஆனது..அந்த வயதிலும் சிந்தித்து எனக்கு பின் 2தங்கைகளின் வளர்ச்சி,படிப்பு,திருமணம் இருப்பதால் சம்மதித்தேன்..ஆனால் இப்போது அந்த முடிவு சரியான முடிவுதான் என்று தோன்றுகிறது காரணம் இப்போ நான் நல்ல வசதியுடன் 3,4 நாடுகளை சுற்றிவிட்டேன்..படிப்பதற்கு வயதோ,இடமோ சம்பந்தம் இல்லை என்பதால் இப்போ நிறய கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்தேன்..முதல் தங்கையும் நன்றாக படித்து திருமணமும் முடிந்து விட்டது..அவளுக்கும் அழகான ஆண் குழந்தை உள்ளது

முதல் தங்கைக்கு திருமணம் முடிந்து வளைகாப்பு எல்லாம் பார்த்து குழந்தை பிறந்த சமயத்தில் என் 2வது தங்கை படித்து முடித்து +2வில் 1058 மதிப்பெண்கள் வாங்கினாள், ஆனால் வீட்டு செலவுகள் அதிகம் ஆனதால் அவளை படிக்க வைக்க வசதி போதவில்லை..அப்போது அவளே சிந்தித்து எனக்கு பெரிய அதாவது dr,Er படிக்க வேண்டாம், டீச்சர் ட்ரைனிங் படிக்கிறேன் என்று சொன்னாள்..அதுவும் கவர்ன்மென்ட் கோட்டாவில் சீட் வாங்க முடியும் செலவும் அதிகம் ஆகாது என்று சொன்னாள்..வேலை எப்படியும் கிடைக்கும் என்றும் அவள்தான் சொன்னாள்..அதே போல அவளுக்கு சீட் கிடைத்து இப்போது படித்தும் வருகிறாள்..பள்ளியில் படிக்கும் போதும் சில தேர்வுகள் எழுதுவாள்..அதற்கு வருடா வருடம் படிப்புக்கு கவர்மெண்ட் பண உதவி வரும்..பள்ளியில் முதலாவது மார்க் வந்தால் இப்படி நிறைய பரிசுகள் வாங்குவாள்..அதை அப்படியே சேமித்து வைத்து அவள் படிப்பை அவளே படிப்பாள் என் அப்பா உதவி இல்லாமல்.. கேட்டால் இப்போதிருந்து சம்பாதிக்க,சேமிக்க பழக வேண்டும் என்பாள்..எவ்வளவு அழகாக சிந்தித்து செயல்படுகிறாள் இந்த வயதில்? அவளை போல இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் நான் உதாரணம் சொல்வேன்..

நம் குழந்தைகள் நம்மை எப்படியெல்லாம் கேள்வி கேட்க்கிறார்கள்? எவ்வளவு அறிவுபூர்வமாக சிந்திக்கிறார்கள்? நமக்கே பல சமயம் ஆச்சர்யமாக இருக்கும் இல்லயா?அவர்கள் தங்கள் அறிவை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைக்க விரும்ப மாட்டார்கள்..மேலும் மேலும் பெருக்க தான் ஆசைபடுகிறார்கள்..அதனால் மிக தெளிவாய் சிந்தித்து செயல்படுகிறார்கள்..நம்முடைய காலத்தில் ஒரு செயலை அல்லது வேலையை அரும்பாடுபட்டு செய்திருப்போம் ஆனால் இப்போ அதே வேலையை இந்த கால குழந்தைகள் விரல் சொடுக்கும் நேரத்தில் முடித்து விடுவார்கள்..காரணம் தெளிவான சிந்தனை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

படிப்பு,வேலை,திருமணம்,குழந்தை என்று எல்லாவற்றிலும் பிளான் பண்ணி செய்து வெற்றியும் காண்கிறார்கள்..அதற்கு தெளிவுதான் காரணம்

இன்னும் நிறைய சொல்லலாம்..அடுத்த பதிவில் போடுகிறேன்..இந்த வாய்ப்பு கொடுத்த அருசுவைக்கு நன்றி..மேலும் நடுவர் அவர்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் இளைஞர்கள் தெளிவான சிந்தனையுடன் தான் இருக்கிறார்கள் என்று கூறி முடிக்கிறேன்..நன்றி

ஆயிஸ்ரீ உங்களை இதுவரை நான் அறுசுவையில் கண்டதில்லை. பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. ரொம்ப அழகா வாதாடுறீங்க. கலக்குங்க

அன்பு எதிரணியினரே,

ஒரு குறிப்பிட்ட வயதுவரை இளம்தலை முறையினர் பைக், கேமராபோன்,ஸ்டைல்க்ளாஸ் போன்றவற்றுடன் ஜாலியாக நண்பர்களுடன் ஊர்சுற்றுவது, வாத்தியாருக்கு பட்டப்பெயர்கள் வைப்பது இதெல்லாம்அந்த பருவத்தில் சகஜம்தான். இது எந்ததலைமுறையிலும் மாறாது. கடன்வாங்கி கல்லூரிக்கு அனுப்பும் தந்தையை அவன் மனதிற்குள் வைத்திருப்பான். அதற்காக அதையே சொல்லி சகமாணவர்களை போரடிக்க முடியுமா அவனால்? அவர்களுக்கு ஒரு வேலை கிடைத்ததும் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள். அதைத்தான் பார்க்க வேண்டும்

இளம் தலையினர் தங்கள் உடன் பயிலும் ஏழை மாணவர்களுக்கு பள்ளியிலோ, கல்லூரிகளிலோ டெர்ம் பீஸ் கட்டமுடியாது தவிக்கும் போது தாங்களே முன்வந்து அவர்களுடைய கஷ்டத்தை நீக்குகின்றனர். சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் சந்துரு என்ற இளைஞர் 2-வது டான்ஸராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எந்த பயிற்சியாளரிடமும் பயிற்சி பெறவில்லை. அதற்கு தன்னிடம் வசதியும் இல்லை என்றும் இப்படி ஆடிக்கொண்டிருந்தால் உருப்படாமதான் போவாய் என்று பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர் என்றும் அதனால் அவர் வீட்டை விட்டு வந்து விட்டேன் என்றும் கூறினார். எனக்கு உதவியது 2 நண்பர்கள்தான் என்று சொன்னார். எனக்கு சாப்பாடு, ஆடை எல்லாமே 2 நண்பர்களும்தான் என்று கூறி அழுதுவிட்டார். நல்ல நண்பரால்தான் நான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்தேன் என்று கூறினார். இளம்தலையினருக்கு உதவும் பண்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

எமது இளைஞர்களும், இளைஞிகளும் முன்னேறத்தான் துடித்து கொண்டு இருக்கினர். ஆனால் நமது நாட்டின் பொருளாதார நிலையும், அரசியலும், மதப்பிரிவினைகளும்ந்தான் அவர்களுடைய நல்ல சிந்தைக்கு தடையாக இருக்கிறது. இளைஞர்கள் நாம் இதை பயில வேண்டும், வாழ்வில் இத்தகைய குறிக்கோளை அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். எல்.கே.ஜி படிப்பிற்கே 20000 ரூபாய் அட்மிஷன் பீஸ்கட்ட சொன்னால் எமது இளைஞர்கள் எப்படி அவர்கள் குறிக்கோளை அடைய முடியும்? அரசாங்கபள்ளியில் பள்ளியில் பயின்று வந்த மாணவர்களை நம் அரசாங்கமே ஏளனமாக பார்க்கிறது

........"நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே,நீ நாட்டிற்கு என்ன செய்தாய் ? எண்ணிப் பார்" ____///

என் நாட்டிற்காக நான் எதையும் செய்ய வேண்டுமானால் என்நாடு எனக்காக எதாவது செய்தால்தானே நாமும் செய்ய முடியும். 95% மார்க் வைத்திருந்தாலும், நல்ல சுயசிந்தனை இருந்தாலும் நீ OC Caste உன்னை இந்த கோட்டாவில் சேர்க்க முடியாது என்று சொல்வது என்நாடுதானே? நம்நாட்டில் எல்லோருமே பணவசதி கொண்டவர்கள் அல்ல. நிறையபேர் நடுத்தரவர்க்கம்தான். நல்ல உயர்ந்த லட்சியங்கள் இருந்தாலும் கல்வியே வியாபாரம் ஆகிய சூழ்நிலையில் எங்கள் பாவப்பட்ட இளம்தலையினரால் என்ன செய்ய முடியும்?

அப்துல்கலாம் சொன்னது போல் எங்கள் இளம்தலையினர் நல்ல குறிக்கோளை அடைய கனவு கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். நம்ம சமுதாயம்தான் அவர்களுடைய உணர்வை கட்டிபோடுகிறதே தவிர எதிரணியினர் சொல்வது போல் அவர்கள் குழப்பவாதிகள் அல்ல.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நடுவர் தேவா மேடம் அவர்களுக்கு வணக்கம்.

இன்றைய இளைஞர்கள் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்கள் என்ற அணியில் எனது பதிவுகளை அளிக்கிறேன்.

நம் வீட்டிலும் நம்மைச் சுற்றிலும் கவனித்தாலே போதுமே, இது புரிவதற்கு!

முதலில் சுயநலம் என்பது சிறிதும் இல்லை அவர்களுக்கு. பள்ளி, கல்லுரி மாணவர்கள், காலையில் அம்மாவிடம் சொல்வது, " அம்மா , என் ப்ரெண்டுக்கும் சேர்த்து லன்ஞ் குடும்மா" என்பதுதான்.

என் குழந்தைகள் என்னிடம் சொல்வது இதுதான்: " அம்மா, கோவில், பூஜை, என்று செலவு செய்கிறாய், உன் விருப்பம், அத்துடன், முதியோர் இல்லம், ஆதரவு அற்றோர் இல்லம், இங்கெல்லாம் சாப்பாடு கொடுக்க செலவு செய், வயிறு நிறைந்தால் அவர்கள் நம்மை வாழ்த்துவது நமக்கு எவ்வளவோ நல்லது" என்று.

இது தவிர அவர்கள் செய்யும் வருடாந்திர முக்கிய செலவு - வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரப் பெண்மணியின் குழந்தையின் படிப்பு செலவுக்கு அவர்களால் முடிந்ததைக் கொடுப்பது - பணம், ஸ்கூல் பீஸ், புத்தகங்களுக்கு என்று!

அழகாக விளக்கம் சொல்கிறார்கள் - அடுத்த தலைமுறை முன்னேறனும் என்று.

தியாக தீபம் போன்ற ஒரு தோற்றத்தை அவர்கள் விரும்புவது இல்லை. தானும் நன்றாக வாழ்ந்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் நல்ல முறையில் வழி நடத்தும் முறையை அவர்கள் அறிவார்கள். காரணம், கடமை, பொறுப்பு என்பது, குறுகிய கால கட்டத்துக்கானது மட்டும் அல்ல, அது வாழ்நாள் முழுவதற்குமான வாழ்வியல் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதுதான்.

"Responsibility is not a short term goal; It is a life time commitment."

இதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

அடுத்த சுற்றில் இன்னும் நிறையப் பேசுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்