தோடு/மாட்டல் வகைகள்

தேதி: November 4, 2008

5
Average: 4.4 (8 votes)

இப்பொழுது பெரும்பாலோர் தங்க நகை அணிவதை விட ஆடம்பரம் இல்லாத இலகுவான தோடு, மாட்டல்களையே அணிய விரும்புகின்றனர். அதையே நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு நமக்கு பிடித்த வண்ணங்களிலும் டிசைன்களிலும் செய்து கொள்ளலாம். இந்த அழகிய பாரம் இல்லாத தோடு வகைகளை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

மணிகள் (பெரிய, சிறிய மணிகள்)
தோடு செய்யும் குண்டூசிகள்
குரடு
கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
மணி மூடிகள்
அலங்கார மாட்டல்கள்

 

மணிகள்(Beads): இது இல்லாமல் தோடுகள்/மாட்டல்கள் செய்ய முடியாது. இதற்கு அவரவற்கு பிடித்தமான அதிக பாரமில்லாத எல்லா வகையான மணிகளையும் உபயோகிக்கலாம்
குரடு: இதற்கு அடிப்படையாக இரண்டு வகையான குரடுகள் தேவை. 1. ஊசிகளை வளைப்பதற்கு - இதன் இரு தாடைகளும் உருளையாக இருக்கும். 2. ஊசிகளை வெட்டுவதற்கு - இதற்கு சாதாரண கம்பி வெட்டும் குரடையே உபயோகிக்கலாம்.
தோடு செய்யும் ஊசிகள்(Pins): இது குண்டூசியை போல ஒரு முனையில் தட்டையாகவும் மறு முனையில் அலங்காரமான அல்லது சாதாரண குண்டூசி போலும் காணப்படும். பல நீளங்களில் கிடைக்கும். வெள்ளி, தங்கம், பித்தளை, தாமிர நிறங்களில் கிடைக்கும்.
கொக்கிகள்(Hooks): மாட்டல்கள் செய்யும் போது உதவும். இதுவும் பல வடிவங்களில் வெள்ளி, தங்க, பித்தளை, தாமிர நிறங்களில் கிடைக்கும்.
மணி மூடிகள்(Bead caps): இது மணிகளுக்கு இடையில் அலங்காரமாக வைப்பதற்கு பயன்படும். இதுவும் பல வண்ணங்களில், பல வடிவங்களில் கிடைக்கும்.
முதலில் ஒரு நீளமான ஊசியில் ஒரு பெரிய பிங்க் நிற மணியை கோர்க்கவும். பின்னர் அடுத்தடுத்து ஒரு மணி மூடியையும், பிங்க் நிற சிறிய கிறிஸ்டல் மணியையும் கோர்க்கவும்.
பிறகு ஊசியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி விட்டு அதன் முனையை உருண்டையான தாடைகள் கொண்ட குரடினால் மணிகளுக்கு நெருக்கமாக வளைத்து விடவும்
பின்னர் ஒரு கொக்கியை இதனுள் கோர்த்து விடவும். (வெள்ளி நிற ஊசியை பயன்படுத்தினால் வெள்ளி நிற கொக்கியை சேர்க்கவும்)
அழகான அதிகம் பாரம் இல்லாத மாட்டல் தயார்
இதைப் போல் நம் விருப்பத்திற்கு ஏற்ற நிறங்களில் மணிகளைக் கொண்டு செய்து கொள்ளலாம்.
இதற்கு தட்டையான, வட்டமான, நடுவில் துவாரமுள்ள பெரிய மணிகளை பயன்படுத்தவும். மணியின் துவாரத்தினுள் ஊசியை கோர்த்து எடுக்கவும்.
பின்னர் முனையை சிறியதாக வளைத்து விட்டு மீதியுள்ள கம்பியை வெட்டி எடுத்து விடவும்.
வளைத்த பகுதியில் ஒரு கொக்கியை மாட்டவும். எளிமையன மாட்டல் ஒன்று தயார். இந்த மணிகள் பல வண்னங்களில் கிடைக்கும். எல்லா வண்ணங்களிலும் செய்து வைத்தால் ஆடையின் நிறத்திற்கேற்ப போட்டுக் கொள்ளலாம்.
இதையே வேறு விதமாக செய்வது என்றால் முதலில் வட்டமாக உள்ள மணியை கோர்த்துவிட்டு பின்னர் அதே நிற சிறிய தட்டையான மணியை கோர்த்து ஊசியை வெட்டி வளைத்து கொக்கியுடன் இணைக்கலாம். சற்று பெரிய(நீளமான) மாட்டல் தயார். இதையும் பல வண்ணங்களில் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சூப்பரா இருக்கு தோடு மாட்டல். எனக்கும் செய்து பார்க்க ஆசையா இருக்கு. இந்த வாரம் முயற்சிக்கிறேன். நிறைய வித்தியாசமா செய்யுறீங்க. அற்புதமான திறமை வாழ்த்துக்கள் நர்மதா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக, மிக, மிக......... மிகவும் அழகாக இருக்கிறது நர்மதா. (வார்த்தைகள் போதவில்லை) உங்கள் மகள் அதிஷ்டசாலி.
இலங்கைத் தோழிகள் சங்கம் 2ல் உங்களுக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன் பார்த்தீர்களா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நர்மதா ஒவ்வொரு தோட்டையும் தொட்டு தொட்டு முத்தம் கொடுத்துவிட்டேன்.அவ்வளவு கொள்ளை அழகு.உண்மைதான் தங்கநகைகளைவிட இதைத்தான் அனேகமானவர்கள் விரும்புகிறார்கள்.நான் எனது திருமணம் அன்றுமட்டும்தான் தங்கநகை போட்டேன்.இதை நீங்கள் சொல்லித்தந்தது விலை மதிக்க முடியாத பரிசு கிடைத்ததுபோல் இருக்கிறது.நாளை நான் செய்யத்தொடங்கப்போகிறேன். அப்பப்பா என்னே திறமை ,கைவண்ணம் உங்களுக்குள்.இந்தாங்கோ ஒரு கோடி நன்றி.

சுரேஜினி சொன்னது சரி தான்...இப்படி மாட்டலைக் கூட வீட்டில் செய்யலாம் என இப்பொழுது தான் தெரிந்தது..உங்கள் கைவண்ணம் பிரம்மிப்பூட்டுகிறது..ஆஹா என்ன திறமை.மிக்க நன்றி நர்மதா

Do u know how to stich chudhithars and nightys. If so please show me like this. Thanks in advance

geetha

geetha

ஹாய் நர்மதா, தோடு செய்யறது இத்தனை ஈசியா யாரும் சொல்லித் தந்தது இல்லை. எப்படி இப்படிலாம் பொறுமையா செய்யறீங்க. தோடுகளை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு. எல்லா தோடுமே அழகு. உங்களுக்கு சமையல், ஆர்ட் ( எல்லாத்தையும் விட பொறுமை)னு நிறைய திறமை சூப்பரா இருக்கு. என் பாராட்டுக்கள்.

ஹாய் நர்மதா எப்படி இருக்கீங்க? பொண்ணு எப்படி இருக்கா? உங்க தோடு டிஸைன் நல்லா இருக்கு லாஸ்ட் வீக் தான் என் பொண்ணுக்கு 20 வெரைட்டி தோடு டிஸைன் நான் மேக் பண்ணினேன் ட்ரஸ்க்கு மேட்ச்சாக ரெம்ப நல்லா இருக்கு பிரெஸ்லெட் டிஸைன் தெரிந்தால் சொல்லுங்களே நான் புக்கில் சில டிஸைன் பார்த்து இருக்கேன் நெட்லேயும் பார்த்துஇருக்கேன் கொஞ்சம் குழப்பமாக இருக்கு எனக்கு பொறுமையும் இல்ல:( உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க தேங்ஸ்

அன்பின் தனிஷா, இமா, சுரேஜினி, தளிகா, கீதா, தேவா & ஸ்வேதா அனைவருக்கும் நன்றி.
தனிஷா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
இமா, செய்வது மட்டும்தான். வெளியில் போகும்போது கையில காதில கழுத்தில ஒன்றும் இருக்காது. செய்வதோடு சரி. என்னைப்போல என் மளும் இருந்தால் என்ன செய்ய :) ஓம். உங்கட குறிப்பு பார்த்தனான். புல்டோ செய்தது அப்பாக்கு ரெசிப்பி நினைவில்லையாம். :(
சுரேஜினி வேறு சில டிசைன்களும் அட்மினுக்கு அனுப்பியுள்ளேன். அவர் பிரசுரிக்கும் போது பார்க்கவும். இவை எல்லாம் ஏற்கனவே (~4 மாதங்களுக்கு முன்) செய்து அனுப்பியவை. அட்மினுக்கு வேலை அத்தோடு புதிய தளத்தில் போடுவதாக சொன்னார். அதுதான் அவருக்கு கரைச்சல் தர விரும்பவில்லை. மகள் பிறந்ததும் இப்ப ஒன்டும் செய்ய நேரம் இல்லை :) வாழ்த்து மடல்கள்தான் செய்வது.:)
தளிகா, நன்றி உங்களிடம் ஒரு கேள்வி எப்படிதான் ஒரு கையால் டைப் பண்னுவீங்களோ. எனக்கு மகளை வைத்து கொண்டு டைப் பண்ண கஷ்டமா இருக்கு. :)
கீதா, சுடிதார், நைட்டி தைக்க தெரியும். ஆனால் இப்ப தைக்க கஷ்டம். தைக்கும் போது படம் எடுத்து அனுப்புகிறேன்.
தேவா, எனக்கும் பொறுமைக்கும் வெகு தூரம். எல்லாம் சட் சட்டுன்னு முடிய வேணும் எண்டு நினைப்பேன். ஆனால் ஆர்ட், கிராஃப்ட் என்றால் எங்கிருந்துதான் பொறுமை வருதோ தெரியாது :)
ஸ்வேதா, நீங்களும் பீட் வேர்க் செய்வீங்களா. உங்கட டிசைன்களையும் அனுப்புங்களேன். பிரேஸ்லெட் செய்யுறனான். சிறிய மணிகளை கோர்த்து கோர்த்து. ஆனால் என்னிடம் படங்கள் இல்லை. முடிந்தால் நானும் தேடிப் பார்த்து அனுப்புகிறேன்.
-நர்மதா :)

நர்மதா அது ஒண்டும் பெரிய விஷயமில்ல..எல்லாம் அறுசுவை மேல் உள்ள ஆர்வம் தான்.மடியில் தூங்கும்போது அல்லது தூக்கம் வரும்போதோ பிள்ளையை ஆட்டிக் கொண்டே ஒரு விரலால் டைப்பிங்..முதலில் கஷ்டமாக இருக்கும் பிறகு பழகி விடும்..ஆனால் நர்மதா என் மகள் தனியா தூங்காததால் நான் இப்படி செய்கிறேன் உங்கட பிள்ளை நன்றாய் உறங்குமா.

நர்மதா,
உண்மையில் கடையில் வாங்குவதுபோலவே எவ்வளவு அழகாக இருக்கிறது, நான் இப்படியான தோடுகளுக்கே அதிகம் காசு செலவழிக்கிறேன், சட்டையின் நிறத்திற்கேற்ப வாங்கிக் கொள்வேன். ஏதும் கொண்டாட்டங்களுக்கு மட்டும்தான் தங்கம் எல்லாம். இதே முறையில் கழுத்துக்கும் செய்யலாம் தானே முடிந்தால் செய்து போடுங்கள். முன்பு ஊரில் ஒருவர் எனக்கு செய்து தந்தார் நீண்ட நாட்கள் பாவித்தேன். அதுசரி இப் பொருட்கள் எல்லாம் இங்கே எந்தக் கடையில் கிடைக்கிறது முடிந்தால் சொல்லுங்கள் செய்யப்போகிறேன் எனக்கு ஆசை அதிகமாகிவிட்டது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

I know how to stitch but the neck and hand(shoulder) parts are the most difficult ones for me. If u could show me that, it would be great. I am in USA and it is very expensive to buy Indian clothes here. I do have a sewing machine and would like to try. Please show me ASAP. Thanks in advance

If anybody else can help me with this???????

geetha

geetha

தோடுகள் அழகு நர்மி.. விகடன்,குமுதத்தில் வரும் குறிப்புகள் கூட எனக்கு புரிந்ததில்லை.. தெளிவா இருக்கு.. இங்கு எனக்கு ஹாபியே ஜோ-ஆன் போய் பீட் செக்ஷனில் சுத்தி பார்ப்பதுதான்.. இனிமே செய்தும் பார்துடறேன்..நீங்கள் பயன்படுத்தி இருக்கும் டூல்ஸின் ஆங்கில பெயரையும் குறிப்பிடுங்கள் ..அவற்றை வாங்க மிக ஆவலாய் உள்ளேன்.. நன்றி

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அட, இத்தனை ஈஸியா இவ்வளவு அழகா தோடு செய்ய முடியும்னு இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்!. ரொம்ப தெளிவா எல்லோருக்கும் புரியும்படி சொல்லி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்.

என் பொண்ணுக்கு ( 3ம் வகுப்பு படிக்கிறாள்) இந்த மாதிரி மணியை கோர்த்து, சேர்த்து எதாவது செய்து பார்ப்பது ரொம்ப இஷ்டமான பொழுதுபோக்கு... (நிறைய நெக்ஸஸ்கள், ப்ரேஸ்லெட்டுகள் இருக்கு வீட்டில் :-) ). கட்டாயம் இந்த தோடு செய்ய தேவையானவற்றை வாங்கி, அவளுடன் சேர்ந்து செய்து பார்த்திட வேண்டியதுதான்...

ரொம்ப தேங்ஸ் நர்மதா எங்களுடன் ஷேர் பண்ணிகொண்டதற்க்கு... இன்னும் தொடரட்டும் உங்களின் அட்டகாசமான கைவேலைப்பாடுகள்!!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பின் அதிரா, அம்பிகா & ஸ்ரீ பாராட்டுக்கு நன்றி.
தளிகா, இப்பதான் நானும் ஒரு கை டைப்பிங் பழகிறேன். குழந்தை இப்ப நல்லா தூங்குறா. இதைப்பற்றி ஒரு கேள்வி கேட்டிருக்கேன் (குழந்தையின் தூக்கம்) பதில் சொல்லுங்க.
அதிரா, க்ராஃப்ட் கடையில் தேடி பாருங்கள். கட்டாயம் எல்லா க்ராஃப்ட் கடையிலும் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போது மாலைகள் செய்து அட்மினுக்கு அனுப்புகிறேன். பாருங்கள்.
கீதா, இப்ப எனக்கு சிறிய குழந்தை இருப்பதால் உடனே செய்ய முடியாது. முடியும்போது சொல்கிறேன். உடனே தேவை என்றால் மன்றத்தில் கேட்கவும். வேறு யாரும் சொல்வார்கள்.
அம்பிகா, எனக்கும் ஜோ-ஆன், மைக்கல்ஸ் போனால் நேரம் போவதே தெரியாது. எனக்கு பக்கத்தில் (10 நிமிட நடை) இரண்டு கடைகளும் உண்டு :) Findings (hooks, bead caps, clasps, etc.) Jewellery Making tool/kit என்றே பீட் செக்ஷனில் நிறைய இருக்கு. விலையும் குறைவுதான். (படிக்கிற காலத்தில் எனது நண்பர்கள் என்னை நர்மி என்றுதான் கூப்பிடுவார்கள். :))
ஸ்ரீ, செய்து பார்த்திட்டு சொல்லுங்கோ :)
-நர்மதா :)

ப்ளையரும் , கட்டரும் வாங்கி விட்டேன்.straight nose,long nose plier என்று இரு வகை இருந்தது.. ஏதோ தோனிச்சு straight nose plier வாங்கினேன்.நீங்களும் அதைதான் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.1 மணி நேரத்தில் இவ்வளவுதான் வாங்க முடிந்தது:) பீட் கேப் கோல்டென் கலரில் இருந்தது , சில்வரில் இல்லை. நீங்கள் கூறியபடி பீட்ஸ்களின் விலை குறைவாய் தான் இருந்தது..ஆனால் நாந்தான் குழம்பி விட்டேன்..எதை வாங்க,எதை விட என்று தெரிய வில்லை.அடுத்த வாரத்திற்குள் கண்டிப்பாக வாங்கி செய்து விடுவேன். அட பாவமே நீங்கள் நகையே போட மாட்டீங்களே ,செய்ததெல்லாம் வேஸ்டாயிடுமே.சரி என்ன செய்யலாம்?? என்னோட அட்ரஸ் குடுக்கறேன் அனுப்பி வையுங்க:)) நானும் உங்களை போல தான்.செய்வதில் தான் ஆர்வம் பயன்படுத்துவதில் இல்லை.என் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு பரிசளிப்பதாக எண்ணம்..முதலில் செய்து பழகலாமென்று இருக்கேன்..பிறகு பார்க்கலாம்.

thanx
feel free to ask my address to send those droppings u have made..;)

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

நர்மதா நான் செய்யத்தொடங்கிவிட்டேன்.இங்குள்ள wal*mart ல் தேவையான எல்லாம் சரியான சீப்.நிறைய வாங்கிவிட்டேன் என் சகோதரிகளுக்கெல்லாம் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது.10 தோடுவரை செய்து படம் எடுத்து மெய்ல் பண்ணினேன்.அப்படி புகழ்ந்து தள்ளினார்கள் .

’’எல்லா புகழும் நர்மதா ஒருவருக்கே’’என்று பாமாலை சூட்டுகிறென்.காதை மூடாதீங்கோ.

ரொம்ப நன்றி நர்

அன்பின் அம்பிகா, நல்லது. செய்து போட்டு படம் அனுப்புங்கோ. பீட் கப் கோல்ட் நிறம் என்றாலும் அழகாக இருக்கும். கறுப்பு முத்து என்றால் சில்வர் நன்றாக இருக்கும் வேறு கலருக்கு கோல்ட் பீட் கேப்பே வடிவா இருக்கும். நானும் நிறைய செய்து வைத்திருக்கிறேன். எங்கட ஸ்டேட் வந்தால் வீட்டை வாங்கோ. எல்லாம் தாறன். ஒரு மூட் வந்தால் (வாறாது குறைவு):) எல்லாம் எடுத்து போடுவன். சில வேளை போட்டுட்டு கடைசி நேரத்தில் கழட்டி வைத்து விட்டு போய்விடுவன். இனி மாட்டல் ஒன்றும் போட இயலாது. இப்பவே மகள் முடியை பிடித்து இழுக்கிறா. மாட்டலை பிடித்து இழுத்தால் காது கையோட போயிரும் :) வேறு சில தோடுகளும் அட்மினுக்கு அனுப்பியுள்ளேன். வரும் காலங்களில் பிரசுரிப்பார் என நினைக்கிறேன். அதுவும் சிம்பிள் டிசைன் தான். செய்வது எல்லாம் ஒரே மாதிரிதான். உங்கள் ரசனைக்கேற்ப பீட்ஸை அடுக்கினால் போதும். இன்னும் சிலதும் போட்டோ எடுத்தபடியுள்ளது. விளக்கம் எழுதி அனுப்ப நேரம் கிடைக்குதில்லை. உங்கட ஸ்டேட்டில் ஜெம் ஷோ ஏதாவது வந்தால் போய் பாருங்கோ. இன்னும் சீப்பா கிடைக்கும்.

அன்பின் சுரேஜினி, படம் எடுத்து எங்களுக்கும் அனுப்புங்கோ. நானும் பாக்கிறன். காதை மூடமாட்டேன். என்ர காதிலதான் தோடு இல்லையே :)) எனினும் பாராட்டுக்கு நன்றி. (ரியூஷனில் எனது ஆங்கில மாஸ்டர் என்னை நர் எண்டுதான் கூப்பிடுறவர். அவர் மட்டும்தான் அப்படி இதுவரை கூப்பிட்டது.:)
-நர்மதா :)

\\

ஹைய்யோ நான் கேட்க நினைத்ததை நீங்களே சொல்லிட்டீங்க.இங்கு கொலம்பஸில் 21,22,23 ஜெம் ஷோ வருகிறது.. நாங்கள் 22ம் தேதி சாம்ஸில் சாம்பிள் உணவுகளையெல்லாம் ருசி பார்த்துவிட்டு:) ,23ம் தேதி ஜெம் ஷோ போகலாமென்று இருக்கிறோம்...அடுத்த வாரத்திலிருந்து ஜாலிதான்..விடுமுறைக்கு இப்பவே தயாராகி விட்டோம் :) btw ஜெம் ஷோ போவது இதுதான் முதல் முறை..தோழிகளிடம் சிறிது டிப்ஸ் கேட்டு வைத்துள்ளேன்..முத்து மற்றும் பவளம் விலை மலிவாகவும் ரூபி விலை அதிகமாகவும் இருக்குமென்று கேள்வி பட்டேன்..உங்களுடைய டிப்ஸையும் சொல்லுங்கள்.. உங்கள் பெண்ணிற்கும் என் அன்பு.. நாங்களும் பெண் குழந்தைதான் எதிர்பார்க்கிறோம்.. பெயர் கூட தேர்வு செய்தாயிற்று.. ஆனால் கன்ஃபார்மாக தெரிய இன்னும் 2 மாதம் காத்திருக்கனும்:( ஒரு டெம்பரரி மெயில் ஐ.டி உருவாக்கி பிறகு சொல்கிறேன்.. தொடர்பு கொள்வோம் :)

'நர்' .. 'ந' வாகாமல் பார்த்துகொள்ளுங்கள்.(சும்மா:))

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அன்பின் அம்பிகா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். எப்போ குழந்தையை எதிர்பார்க்கிறீங்க. நீங்க விரும்பியபடியெ உங்களுக்கு குழந்தை கிடைக்கும் :) ஜெம் ஷோ எனக்கும் புதுசுதான். எங்களுக்கும் 21, 22 & 23 இங்கு நடக்க போகுது. ஒரு முறைதான் நான் சென்றேன். கோரல் ரோஸஸ் வாங்கினேன். mother of perlஇலும் பென்டன்ட் வாங்கினேன். சீப்பாவும் இருந்தது. முத்தும் பரவாயிலை. ஆனால் அதிகமாக எல்லாம் fresh water perlதான். அதனால் அதன் மதிப்பு எனக்கு தெரியவில்லை. ரெசேர்ச் செய்து பார்க்கணும். ஜெம் ஷோ பற்றி விஜிக்கு தெரியும் என நினைக்கிறேன். அவட்டையும் கேப்பம். ரிப்ஸ் தருவா. :)

சாதரண டிஸைனர் பீட்ஸ் ஜோ-ஆனை விட விலை சிறிது குறைவுதான். நிறைய வெரைட்டியும் உண்டு. அம்பரும் (Amber) பரவாயில்லை. Natural pine cone (tiny size)சிறிய இலைகளை 24 காரட் கோல்டில் electroform செய்து பென்டன்ட் போல விற்கிறார்கள். பார்க்க அழகாயும் வித்தியாசமாகவும் இருந்தது.

மிகுதி பிறகு சொல்ரன்.
-நர்மதா :)

நன்றி நர்மி, அடுத்த வருடம் ஜுலை மாதம் எதிர்பார்கிறோம்.. நானும் வழக்கப்படி கோரல் ரோஸஸும்,இலைகளும் வாங்கவுள்ளேன்... நிறைய கூறியிருக்கிறீர்கள்,ஸ்ஸ்.. அப்பா..இப்பவே கண்ண கட்டுதே:))எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்ல, எதெல்லாம் பிடிக்குதோ வாங்கலாமென்று இருக்கிறேன்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அம்பிகா என் ஜெம் ஷோ அனுபதில் சொல்லரேன் ... முதல் தடவை போகும் போது எல்லாமே ரொம்ப அழகாகவும், விலையும் குறைவாக இருப்பது போல் தெரியும் , எல்லவற்றையும் வாங்க ஆசையக இருக்கும் , பாத்து தேவை படுபவை மட்டும் வாங்குங்க..ஒரு ஸ்ரிங் வாங்கினால் அதில் நிறைய மாட்டல் வகைகளை பன்னலாம்.அதுக்கும் முன்பே நெட்டில் தேடி பார்த்து எல்லா ஜெம் வகைகளையும் தெரிந்துகுங்க, அப்படியே விலையையும் பாத்துடுங்க... அப்புறம் அங்கு போய் வாங்கும் போது எளிதாக இருக்கும் ,தேவையான வற்றை மட்டும் வாங்கலாம்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹலோ நர்மதா அக்கா, உங்கள் இந்தக் குறிப்பை பார்த்ததுமே செய்துவிடவேண்டும் போலிருந்தது. ஒரு மாதிரி எல்லாபொருட்களையும் வாங்கி, நேற்றுத்தான் செய்து முடித்தேன். அழாகவும், இலகுவாகவும் இருந்தது. நான் தான் செய்தேன் என்று என்னாலயே நம்பமுடியவில்லை. இக் குறிப்பு தந்த உங்களுக்கு என் நன்றிகள் :-)
விசா

தாங்க்ஸ் ஹாஷினி.. என்னோட ஃப்ரெண்டும் இதையேதான் சொன்னா, முதல் தடவை போனதால் ரொம்ப பிரமிச்சு போயிட்டேன்... நிறைய வாங்கவில்லையென்று சொன்னாள்.. எத்தனை வகை ஜெம் இருக்கிறதென்றெல்லாம் எனக்கு தெரியாது.. விலையும் தெரியாது.. இனிமேல் வலையில் தேட முயற்சிக்கிறேன்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹாஷினி& நர்மிக்கு

நேற்று ஜெம் ஷோ போயிருந்தோம்...நம்ம மக்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள்.. ஹாஷினி சொன்னதை போல் "ஜெம் வாங்க சில டிப்ஸ்கள்" போன்ற வலை தளங்களை படித்து விட்டு சென்றேன்..முதலில் எல்லா கடைகளையும் ஒரு முறை சுற்றி பார்த்து,பிடித்தவைகளை பூத் நம்பருடன் குறித்து வைத்து கொண்டேன்.. பிறகு விலை மற்றும் தரத்தை கம்பேர் செய்து வாங்கினோம்.. நான் வாங்க நினைத்தது, முத்து,பவளம்,ஜேட்
இலைகள் மற்றும் பவள பூக்கள்.எல்லா இந்திய பெண்களும் இவைகளைத்தான் வாங்கினார்கள்.. ஷோவில் எங்களுக்கு பிடித்தது 5முதல்15 டாலருக்கு விற்ற கை கடிகாரங்கள் மற்றும் காஷ்மீரி ஸ்கார்ஃப்.. நான் பார்த்த ஒரு பெண்(வேற என்ன வேலை) கிட்டதட்ட 15 கைகடிகாரங்கள் வாங்கினா.எனக்கென்னமோ நிறைய பேர் விவேக் மாதிரி ராசிக்கல் விக்கறவங்களாதான் தெரிஞ்சாங்க.. நான் திருச்சிக்கு போய் ரூபி,மரகதம் பதிச்ச நகைகளை வாங்கிகலாமுன்னு நேத்தே முடிவு பண்ணிட்டேன்.. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது.தலைப்பு ரிப்பீட்டே!

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அன்பின் அம்பிகா, நானும் ஜெம் ஷோ போயிருந்தேன். உங்களைப் போலதான் ஒரு ரவுண்ட் வந்துவிட்டு பின் பிடித்ததை வாங்கினேன். பவள பூக்கள் வைத்த செட் அப்படியே வாங்கினேன். தனியே வாங்கி ஊரில் கொண்டு போய் நகை செய்வதை காட்டிலும் அப்படியே வாங்கினால் சுலபம் என்று வாங்கிவிட்டேன். எனது அண்ணிக்கு, அண்ணன் குழந்தைக்கு என பரிசுப் பொருளுக்காக வாங்கியது தான் அதிகம் :) (நான் எங்க போடுறது)

மேலும் முத்து மாலை ஒறு வாங்கினேன். cultured perlதான். $55க்கு. நல்ல முத்து என கடைக்காரர் சொன்னர். என் கணவரோ இந்த விலைக்கு இது அவ்வளவு தரமானதாக இருக்கது என்கிறார். வாங்கி விட்டேன். இனி ஒன்றும் செய்ய ஏலாது. உங்கட ஜெம் ஷோவில் முத்து என்ன விலை போனது?

நீங்கள் சொன்ன மாதிரி நம்மவர்கள்தான் அதிகம். மற்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் :) பெண்கள் எல்லாரும் கையில் வைத்து ஆராய்ந்து பார்த்து பார்த்து வாங்கினார்கள். நானும் என் கணவரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து முழித்தோம். :) திருவிழா மாதிரி நான் பார்த்துகொண்டு இருக்கும் போதே இடையில் நுழைந்து தாங்கள் பார்ப்பது, உடனே நான் விட்டுவிட்டு வந்து விடுவது, இப்படியே அனேக கடையில். வெறுத்து போய்விட்டது. என் கணவர் சொன்னார், இப்படி என்றால் நீங்கள் ஒன்றும் வாங்க மாட்டீங்கள் என்று :) கடைசியாக ஒரு கடையில் அவர்தான் இடையில் நுழைந்த ஒரு பெண்ணிடம் எனது மனைவி நிற்கிறா என்று சொல்லி இடம் வாங்கி தந்தார். :)
-நர்மதா :)

நர்மதா!! நர்மதா!!
தோடுகள் செய்யும் பொருட்கள் இருக்கும் கடை நான் கண்டுபிடிக்கவில்லை. பின்னர் என் கணவரோடு வேலைபார்க்கும் ஒருவர், அவ செய்கிறவவாம் என்று தன் பொருட்களைக் காட்டினா, தான் ஓன்லைனில்வாங்குவதாகச் சொன்னார்.

இன்று நாங்கள் ஒரு ஷொப்பிங் மோல் போனோம் "ஜோன் லூயிஸ்" என்று, அங்கு இருந்தது, நான் விரும்பும் கலர்கள் கிடைக்கவில்லை, எது கழுத்துக்கு எது காதுக்கு என்றும் புரியவில்லை, மளமளவென்று நானும் எடுக்க என் மகனும் எடுக்க ஒருமாதிரி வாங்கி வந்தோம், அழகான மணிகள் தானே... பிள்ளைகள் இருவரும் நான் கோர்க்கிறேன் நான் குறட்டால் திருப்புகிறேன் என்று எனக்கு ஹெல்ப்பேர்ஸ் அதிகமானதால் என் கணவர் சொன்னார், ஸ்கூல் தொடங்கியபின் செய்யுங்கோ, இது தப்பித்தவறி வாயில் வைத்துவிடப் போகிறார்கள் என்று, அதனால் ஒன்று மட்டுமே செய்தேன், பின்னர் செய்து படமெடுத்து அனுப்புகிறேன்.

நான் என்ன என்ன தேவை என்பதை சரியாகப் பார்த்துவிட்டுச் செல்லவில்லை, அதனால் மணிமூடிகள் வாங்காமல் விட்டுவிட்டேன்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்பதான் பார்த்தன் அதிரா. வீட்டில விருந்தினர். உங்கட ஊரில இருந்துதான் வந்தினம் :) சுரேஜினியும் வடிவான தோடுகள் செய்து இருக்கிறா. நீங்களும் படம் அனுப்புங்கோ பார்ப்பம்.
-நர்மதா :)

இந்த செய்முறையை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் செய்த தோடு/மாட்டல் வகைகளின் படம்

<img src="files/pictures/earr-rings.jpg" alt="picture" />

பிரிட்டன்ல இப்ப கைவேலை சீசன் போல. :) நல்ல வடிவா இருக்குது அதிரா. எனக்கும் ரெண்டு சோடி செய்து அனுப்புங்கோ.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

படத்தை இணைத்தமைக்கு மிக்க நன்றி./////

பிரிட்டன்ல இப்ப கைவேலை சீசன் போல. :) நல்ல வடிவா இருக்குது அதிரா. எனக்கும் ரெண்டு சோடி செய்து அனுப்புங்கோ./// இப்ப இல்லை இமா.. கிடத்தட்ட தொடங்கி ஒருவருடமாகப்போகுது:(, இன்னும் அரங்கேறி முடியவில்லை. சோடி சேர்க்காமல் இருந்தது, இப்பத்தான் சோடி சேர்த்து அனுப்பினேன்(ஒன்றக்கு இன்னும் சேர்க்கவில்லை). உங்களுக்குச் சோடியாகத்தான் வேணுமெண்டால்... 2012 இல் அனுப்புகிறேன்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
மாட்டல்கள் மிகவும் அழகா இருக்கு. இன்னும் செய்யுங்கோ.
-நர்மதா:)

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta