சீனிச்சம்பல்

தேதி: November 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள்
செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

 

வெங்காயம் - 4 (பெரியது)
உள்ளி/பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 2/3 நெட்டு
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் – 5
பச்சை மிளகாய் - 2
செத்தல் மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீனி (ப்ரவுன் சீனி) - ஒரு மேசைக்கரண்டி
மாசிக்கருவாடு (சீவியது) - ஒரு மேசைக்கரண்டி
புளி - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 அல்லது 3 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து மேலும் ஒரிரு நிமிடங்கள் வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வெந்ததும் மாசிகருவாடு சேர்த்து நன்கு கிளறி விடவும். அடிக்கடி கிளறினால் வெங்காயம் குழைந்து விடும்.
மாசிகருவாடு சேர்த்து 4-5 நிமிடங்கள் கழித்து செத்தல் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
வெங்காயம் நன்கு வெந்து பொரிந்தது போல் ஆனதும் புளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் சீனியை சேர்த்து ஒரிரு நிமிடங்கள் நன்கு வதக்கி விட்டு இறக்கி வைத்து விடவும்.
சுவையான சீனி சம்பல் தயார். காரம் அதிகம் விரும்புபவர்கள் இன்னும் சிறிது செத்தல் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்பவும் நான் மாசித்தூள் வைத்திருப்பேன்.ரெசிபிக்கு நன்றி.வத்தல் என்று தானே சொல்வோம்,நீங்க செத்தல் என்று சொல்கிரீர்களே,உங்கள் ஊர் வழக்கச்சொல்லா?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹலோ asiya omar madam,
ஆமாம் இலங்கையில் செத்தல் மிளகாய் என்றுதான் அழைப்பார்கள். எனக்கு எங்கள் ஊர் வழக்கச்சொற்கள் எல்லாம் அத்துப்படி இல்லை, ஒருவேளை வத்தல் என்றும் சொல்லக்கூடும்... எனக்கு சரியாக தெரியவில்லை.
விசா

அன்பு விசா இது மாசி தூளில் செய்வதா, ரொட்டி, மைதா தோசைக்கு தொட்டு கொள்ள அருமையா இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

ஹலோ ஜலீலா madam ,
ஆமாம், நாங்கள் வழக்கமாக இதை ரொட்டி மற்றும் ப்ரெட்டோடுதான் சாப்பிடுவதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த ப்ராக்பஸ்ட் :-)
விசா.

விசா எனக்கும் ரொம்ப பிடிக்கும் அவசரத்துக்கு கை கொடுக்கும் மாசி, ஆனால் இது ரொம்ப சூடு. அடிக்கடி சாப்பிட முடியாது. மைதாதோசை வெங்காயம் பச்சமிளகாய் போட்டு சுட்டு இந்த மாசி வைத்து சாப்பிட்டு பாருங்கள். ரொம்ப சூப்பரா இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

அப்படியா? செய்து பார்க்க வேண்டும் .. நாங்கள் ரொட்டிதான் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்வதுண்டு. மைதா தோசை என்று செய்ததில்லை... நீங்கள் சொன்னதை பார்த்ததும் செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கின்றது :-) .
விசா

தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் விசா. படங்களும் அழகாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.
இந்தக் குறிப்பைப் படிப்பவர்களுக்கு ஒரு மேலதிக தகவல்:- நர்மதாவின் 'கறி பண்' (node8223) இந்த சீனிச்சம்பல் / சீனிச்சம்பல்+அவித்த முட்டை பாதி வைத்துச் செய்தால் நன்றாக இருக்கும்.
சீனிச்சம்பல், பச்சை மிளகாய், உள்ளியைத் தவிர்த்து சரியான பதத்திலும் இறக்கினால், சுத்தமான போத்தலில் அடைத்து வைத்தால் கொஞ்ச நாளைக்குப் பழுதாகாது இருக்கும். பயணங்கள் போகும் ஒவ்வொரு முறையும் செய்துகொண்டு போவேன். 2 வாரங்கள் வரை வைத்திருந்து (அதற்கு மேல் மீதி இருந்ததில்லை.) பாவித்திருக்கிறேன்.
குறிப்பிற்கு நன்றி விசா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இலங்கையில் காய வைத்த பழ மிளகாயை செத்தல் என்பார்கள். மோரில் ஊற வைத்து பின் காய வைத்த பச்சைமிளகாயை வற்றல் என்பார்கள். இதைத் தான் பொரித்து உணவுடன் சாப்பிடுவார்கள்.

*சமைக்கத் தெரியாவிட்டாலும், நன்கு ருசித்து சாப்பிடவாவது தெரிந்து கொள்ளுங்கள்*

சமைக்கத் தெரியாவிட்டாலும், நன்கு ருசித்து சாப்பிடவாவது தேரிந்து கொள்ளுங்கள்

busy has no time 4 tears

busy has no time 4 tears

hi visaa is it chilli flake powder? please answer me.

busy has no time 4 tears

ஆமாம். நான் காய்ந்த மிளகாயை கிரைன்டரில் சில செகண்ட்ஸ் அடித்து எடுத்துக்கொண்டேன்.
விசா

நன்றிகள் இமா மேடம்,
தாமதமான பதிலுக்கு மன்னித்துக்கொள்ளவும். உங்கள் பதிவிற்கு பதில் எழுதாமல் எப்படி விட்டுப்போயிற்று என்று தெரியவில்லை. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி :-)
விசா

brown சீனி என்றால் என்ன?

பிரவுன் சுகர்

ஹலோ அரசி,
ப்ரவுன் சீனி என்று நான் குறிப்பிட்டது ப்ரவுன் சுகரைத்தான். நாங்கள் இலங்கையில் சுகரை சீனி என்றுதான் அழைப்போம். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
ஹலோ சுரேஜினி,
பதிலளித்தமைக்கு நன்றி :-)
விசா

ஹாய் விசா
இன்று சீனிச்சம்பல் செய்தேன் ரொம்ப நல்லை இருந்தது குறிப்புக்கு நன்றி.விரதம் என்பதால் மசிகருவடு போடா இல்லை அடுத்தமுறை செய்யும்போது போட்டு செய்கிறேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?