புத்தகம்

ராஜா வந்திருக்கிறார்

ராஜா வந்திருக்கிறார்

ராஜா வந்திருக்கிறார் கு.அழகிரிசாமி அவர்களின் சிறுகதை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இந்த கதையை நான் முதன்முதலில் என் அண்ணனின் பதினொன்றாம் வகுப்பில் தமிழ் துணைப்பாடபுத்தகத்தில் இந்த சிறுகதையை படித்திருக்கிறேன். இவ்வளவு நாட்களுக்கு பிறகும் என் மனதை விட்டு நீங்காத சிறுகதை இது. கதைக்குள் செல்வோம்

ராமசாமி அந்த ஊரின் பெரிய ஜமீன்தார் வீட்டு பிள்ளை. செல்லையா, தம்பையா மற்றும் மங்கம்மாள் ஏழைவீட்டின் குழந்தைகள். தினமும் பள்ளி விட்டு வரும்போது இவர்களுக்குள் போட்டி நடக்கும். என்னிடம் அது உள்ளது இது உள்ளது என்று ராமசாமி பெருமை பட்டு கொண்டால் அதற்கு மாற்றாக இவர்களும் அதற்கு பதிலிடுவார்கள். அன்றும் அப்படிதான் ராமசாமி என்னிடம் 'சில்க் சட்டை இருக்கே' உன்னிடம் உள்ளதா என போட்டிக்கு அழைத்தான். ஆனால் செல்லையாவிடம் இல்லை என்று சொன்னால் சிறுவர்கள் கேலி பேசுவார்கள் என கலங்கி நின்றான். அவனுக்கு பதில் மங்கம்மா சில்க் சட்டை சீக்கிரம் கிழிந்து விடும் அதை விட என் அண்ணன் அணிந்துள்ள சட்டைதான் சிறந்தது என்று சொல்லி ராமசாமி வாயை அடைத்து விட்டாள். இப்படியே சிறுவர்கள் கேலி பேசி அவரவர் வீட்டை அடைந்தனர்.

வீட்டிற்கு வந்த பிள்ளைகள் மறுநாள் தீபாவளிக்காக அப்பா தங்களுக்கு வாங்கி வந்த புதிய துணிகளை பார்த்து சந்தோஷ பட்டு கொண்டிருந்தனர். அப்பாவுக்கு ஒரு மேல் துண்டு மட்டும் புதிதாக வாங்கி இருந்தார்.

இரவு படுக்கும் முன் தோட்டம் பக்கம் சென்ற செல்லையாவும், தம்பையாவும் அங்கு ஒரு சிறுவன் பெரிய வீட்டில் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையை எடுத்து வந்து இங்கு வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தான். இவர்கள் அவனை விரட்டியதை பார்த்த அங்கு வந்த அம்மா அச்சிறுவனை அழைத்து விசாரிக்க பெற்றோர் இல்லாத அனாதை அவன் பெயர் ராஜா என்றும் ஏதோ ஊரில் உள்ள அத்தையை தேடி செல்வதாகவும் கூறி அழுதான். அண்ணகளுடன் சேர்ந்து மங்கம்மாவும் விரட்டினாள். பின் அம்மாவின் அன்பால் பேச்சால் பிள்ளைகள் அமைதியானார்கள்.

இரவு முழுவதும் ராமசாமியின் வீட்டில் வேட்டு சத்தம், மங்கம்மா தனக்கும் வேண்டும் என கேட்டு அழுது கொண்டே தூங்கிவிட்டாள்.

மறுநாள் அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்த அம்மா ராஜாவையும் அன்போடு அழைத்து குளிக்க வைத்தார். சிறுவர்கள் புது துணியுடன் இருப்பதை பார்த்து கொண்டிருந்த ராஜாவிற்கு என்ன கொடுப்பது என கலங்கிய அம்மா தந்தையின் ஒரே புது துண்டை கட்டிக்கொள்ள கொடுத்து கலங்கினார்.

ராமசாமி வீடு கோலாகலமாக இருந்தது, அங்கு சென்ற சிறுவர்களை பார்த்த ராமசாமி ஊரார் ராஜா என அழைப்பது போல அவனும் அக்கா கணவரை எங்கள் வீட்டுக்கு 'ராஜா வந்திருக்கிறார்' என்று சொன்னான். இதை போட்டியாக சொல்கிறான் என மங்கம்மா ஏளனமாக எங்க வீட்டுக்கும் 'ராஜா வந்திருக்கிறார்' வேணுன்னா வந்து பாரு ...

என்பதோடு கதை முடிகிறது. இது சுருக்கமாக.சிறுவர்களின் உலகில் ஏற்றம் தாழ்வு என்பது ஏதும் இல்லை. வறுமையில் இருந்தாலும் அந்த அன்னையின் அன்பும் கொடுக்கும் பண்பும் ஏழ்மையின் சிறப்பு. முழு கதையும் படித்தால் என்றும் மனதை விட்டு நீங்காது.சிறுகதையில் என் மனதில் முதலிடம் பிடித்தது இந்த சிறுகதை. நீங்களும் படித்துவிட்டு பகிருங்களேன்.

5
Average: 5 (1 vote)

செம்மீன்

சமீபத்தில் படித்து முடித்து மனதை விட்டு நீங்காது தங்கிய நாவல். மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளை தமிழில் சுந்தர ராமசாமி யால்  மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நாவல்.

மனைவியின் கற்பே கடலுக்கு செல்லும் கணவனை காப்பாற்றும் என நம்பிக்கை கொண்ட மீனவ சமுதாயக் கதை.

செம்மன்குஞ்சு சக்கியின் மகள்கள் கருத்தம்மா, பஞ்சமி. தோணியும் வலையும் வாங்க வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாக கொண்டவர்கள். அதற்கு கருத்தம்மாவின் மீது காதல் கொண்டுள்ள மீன் மொத்த வியாபாரியான பரீக்குட்டி உதவிகிறார். பிடிபடும் மீன்கள் தனக்கே விற்க வேண்டும் என்று. ஆனால் செம்மன்குஞ்சு அவருக்கு தராமல் மற்றவருக்கு அதிக விலைக்கு விற்று கடனும் அடைக்காமல் வருவதால் சக்கியும், கருத்தம்மாவும் சண்டையிடுகிறார்கள்.
சக்கிக்கு தன் மகளுக்கு பரீக்குட்டி மேல் காதல் என தெரியவர தம் சமுதாயத்தில் அப்படி வேற்று மதக்காரரை மணக்கும் வழக்கமில்லை என கருத்தம்மாவை கண்டிக்கிறார். பரீக்குட்டியின் வியாபாரம் நொடிந்து போய் விடுகிறது.இதனிடையே மற்றொரு மீனவன் அனாதையான பழனிக்கு தன் பெண்ணை மணக்க முன் வருகிறான் செம்மன்குஞ்சு மனைவியின் எதிர்ப்பையும் மீறி.

பரீக்குட்டியின் இரவு நேர பாடல் கேட்டு திருமணத்திற்கு முதல்நாள் பேசி மறந்து வேறு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என பேசி விட்டு வருகிறாள்.

மறுநாள் கருத்தம்மா பழனியின் திருமணம் பல சண்டைகள் நடுவில் நடக்கிறது. இதனால் உடல் நலம் இல்லாமல் ஆகும் தாயை பிரிய தந்தையின் கோபத்திற்கு ஆளாகிறாள். கணவனுடன் இல்வாழ்க்கை தொடங்க கருத்தம்மாவின் கற்பு பற்றிய தவறான பேச்சால கணவனிடம் தன் காதலை தெரிவிக்கிறாள். அவனும் மனதில் ஓரம் குறை இருந்தாலும் நம்பிக்கை கொள்கிறான்.

இதனிடைய சக்கி இறந்த செய்தி கொண்டு வந்த பரீக்குட்டி தான உன் அம்மாவின் சொல்படி உன் அண்ணனாக வந்திருக்கேன் என்று சொல்லி செய்தி சொல்லிசெல்கிறான்.
இதனால் ஊராரின் தவறான பேச்சால் பழனியை தன்னுடன் கடலுக்கு அழைத்து செல்ல யாரும் விரும்பவில்லை, தங்களுக்கு ஆபத்து நேரும் என்று.

இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. அப்பாவின் வேறு திருமணத்தால் மனம் வெறுத்து பஞ்சமி அக்காவிடம் வருகிறாள். அவர்கள் பரீக்குட்டி பற்றிய பேச்சு பழனியை வெறுப்பு கொள்ள செய்கிறது. அதே கோபத்துடன் கடலுக்கு செல்கிறான்.
அன்று இரவு பரீக்குட்டி கருத்தம்மாவின் வீடு தேடி வருகிறான். அவர்களின் காதல் மீண்டும் அரும்பி ஒருவரை ஒருவர் அணைத்து கொள்கின்றனர். பழனி செல்லும் தோணி ஆபத்தில் சிக்கி கொள்கிறது.
அதற்கு பிறகு என்ன நடந்தது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

நீண்டநாள் இடைவெளியில் என் மனதை தழுவிய நாவல். இதை படித்து முடித்ததும் இந்த படமும் பார்க்க வேண்டும் என்று ஆவல் வந்துள்ளது. பரீக்குட்டியின் கடலோர பாடல் படிக்கும் போது ' மானச மைனே வரு' பாடல் மனதில் ஓடியது. சில கதைகள் மட்டுமே நம்மை ஏதோ செய்யும். அது போல் என் மனதில் பரீக்குட்டியும், கருத்தம்மாவும் நிறைத்து உள்ளனர்.

5
Average: 4.8 (5 votes)

உடையார்

'உடையார்' எழுத்தாளர் பாலகுமாரனின் சரித்திர நாவல். இங்க நிச்சயம் நிறைய பாலகுமாரன் அவருடைய ரசிகைகள் இருப்பிங்க. ஆனா அவர் எழுத்தில் நான் படித்த முதல் நாவல் இதுவே. உடையார் நாவல் படிக்கிற வாய்ப்பு சமிபத்தில்தான் எனக்கு கிடைத்தது. ஆனா இதை நான் படிக்கணும்ன்னு ரொம்ப நாளகவே ஆர்வமா இருந்தேன். நான் லைப்ரரிலருந்து எடுத்து  வந்துதான் படித்தேன். அவ்வளவு சீக்கிரம் இந்த புத்தகம் எனக்கு கிடைக்கல. இப்போது ஒரே மூச்சில் படிக்கும் படி மொத்தமாக கிடைத்தது.

பொன்னியின் செல்வன் படித்த எல்லோருக்குமே இந்த நாவல் நிச்சயம் பிடிக்கும். பொன்னியின் செல்வர் ஶ்ரீராஜராஜசோழர் நம் மனதை கொள்ளை கொண்ட உண்மை கதாநாயகனின் கனவும், லட்சியமும் கொண்ட தஞ்சை பெரியகோவில் கட்டும் காலக்கட்டமே கதையின் ஓட்டம்.

இது வெறும் மன்னனின் புகழ் மட்டும் பாடவில்லை. சோழர்களின் நாகரிகம், அரசியல் என அவர்களை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இதில் ராஜேந்திரசோழரும் இருக்கிறார். நம் மனதை கொள்ளை இடுபவரோ பொன்னியின் செல்வர்தான்.

இந்நாவல் படித்ததும் தஞ்சை போகவேண்டும் என்ற என் ஆசை பல மடங்கு அதிகம் ஆகிறது. இது பாலகுமாரனின் வெற்றி. அவருடைய ஆசையும் இதுவே என அவரும் முடிக்கிறார்.

தஞ்சை போகவேண்டும், வேறு எங்கும் செல்லாமல் ஒரு நாள் முழுவதும் அந்த கோவிலில் இருக்கவேண்டும். ஶ்ரீராஜராஜதேவர் நின்ற இடம், அமர்ந்த இடம் அவர் ரசித்த இடம் என்று அந்த பிரமாண்டமான பெரியகோவிலை அணுஅணுவாக ரசிக்க வேண்டும்.

்என்னவரிடம் விண்ணப்பம் போட்டிருக்கேன் அழைத்து போறேன்னு உறுதி குடுத்துருக்கார். எப்போது என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் தஞ்சை நோக்கி செல்ல.

5
Average: 4.2 (5 votes)

பொன்னியின் செல்வன்

'பொன்னியின் செல்வன்' கல்கியின் விலைமதிப்பில்லா பொக்கிஷம்.

திருவிழாக் கோலமாய் இருக்கும் வீரநாராயண ஏரியின் கரையோரத்தில் ஆடிபெருக்குத் தினத்தில் பயணிக்கும் வந்தியதேவனோடு நம் பயணமும் தொடங்குகிறது. நாவல் படிக்கும் எண்ணம் மறைந்து நாமும் வந்தியதேவனோடு ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் காணத் தொடங்குவோம். நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையின் நாயகனே.

பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் இவர்களின் அறிமுக வர்ணனையில் நம் கற்பனையில் வீரமாய் வந்து போவர். ஆழ்வார்க்கடியான் - இவரின் ஆரம்பமே அசத்தலாய் இருக்கும். சிறந்த ஒற்றன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்தவர் .
நந்தினி ஒரு புரியாத புதிராகவே இத்தொடர் முழுவதும் வருகிறார் .
குந்தவை, அழகும் அறிவும் கலந்த நம் வந்தியதேவனின் காதலி.
ராஜராஜ சோழன் நம் கதையின் உண்மை நாயகன்; நம் மனதைக் கொள்ளை கொள்ளும் நாயகன்.

அநிருத்த பிரம்மராயர், சேந்தன் அமுதன் எனும் உத்தமசோழன், பூங்குழலி, ஊமைராணி, சுந்தரசோழர், செம்பியன் மாதேவி, குடந்தை சோதிடர், ரவிதாசன் என மறக்க முடியாதவர்கள் பலர்.

ஆதித்தசோழன் இளமையில் வீரர், ஆனால் இவர் மரணம் புரியாத புதிராகவே காட்டப்படுகிறது.

ஆதித்த சோழனின் தூதுவனாய் செல்லும் வந்தியதேவன் பின் குந்தவையின் காதலனாய், ராஜராஜசோழனின் உற்ற தோழனாய், சோழப் பேரரசின் உண்மைக் குடிமகனாய் பல வேடங்கள்.
கல்கி இப் புதினத்தில் சோழர்களின் வீரம், காதல், பண்பாடு, அரசியல், பெருமை அனைத்தையும் சொல்லும் விதம் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றாது. குழப்பங்களுக்கும் பஞ்சம் இல்லை.

படிக்கப் படிக்க காட்சிகள் கண்களில் கற்பனையாய் ஒளிரும்.
கற்பனையில் மூழ்கி வெளி வரத் தோணாது.
பெரும்பாலும் எனக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் நேரம் இரவுதான், இன்னும் கொஞ்சம் நீளாதா எனத் தோணும் முடிக்க மனம் இல்லாமல் .

ஒரு போர்க்களக் காட்சி.
சோழர் குலம் மீண்டும் தழைக்கக் காரணமான விஜயாலய சோழர் வயதான பின் இரு கால்களும் செயல் இழந்து இருந்தவர். பழுவேட்டரையர்களின் தோள்களில் அமர்ந்து இருந்து கைகளிலும் வாள்களை சுழற்றி எதிரிகளை ஓட ஓட விரட்டும் காட்சியை அவர் அங்கே விவரிக்கும் போது நானும் போர்களம் சென்றுவிட்டேன்.

சொல்லிக்கொண்டு போனால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

நீங்க படிச்சிருக்கிங்களா, உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் என்ன? சொல்லுங்க.

அப்படி என்ன இந்தப் புத்தகத்துல இருக்குன்னு படிக்காதிங்க. ஒண்ணும் இருக்காது. ஆனால் படித்து முடித்ததும் உங்க கருத்து வேறா இருக்கும்.

5
Average: 5 (5 votes)

ரம்யமான ரமணிசந்திரன்

எனக்கும் புத்தகங்களுக்கும் எட்டாத தூரம் தான். ஒரு முழு நாவலை படிக்கும் பொறுமை என்றும் இருந்ததில்லை. படிக்கும் வேகம் குறைவு என்பதும் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் சமீப காலமாக அறுசுவை அங்கத்தினர் ஒரு சிலரால் ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் துவங்கினேன். கையில் எடுத்த புத்தகங்களை பாதியில் பொறுமை இழந்து வீசும் நான் ஒரு முழு நாவலை உணவின்றி முடித்த போது வியந்தும் போனேன். கீழே வைக்க முடியாமல் படிக்க இதில் என்ன இருந்தது என்று எனக்குள்ளும் யோசனை தான். இந்த எண்ணம் அடுத்த அடுத்த புத்தகங்களை இன்னும் ஆழ்ந்து வாசிக்க வைத்தது எனலாம்... அல்லது அனுபவித்து மூழ்க வைத்தது எனலாம்.

அட்சர சுத்தமாய் ஒருவரது மனோ நிலையை விளக்குவதிலும், அவரது குணத்தை விவரிப்பதிலும் ரமணிசந்திரனுக்கு ஈடு இணை இல்லையோ என்றது மனம். ஈர்த்தவை எவை??? இவர் கதைகளில் வரும் அறிவான துணிவான பண்பான பெண்களா? கம்பீரமான அன்பான புத்திசாலி ஆண்களா? இருவருமே தானோ?! அன்பானவர்கள் பிரிவதை ஏற்காத பெண்களின் மனம் இவர் கதைகளில் வரும் முடிவு சுபமாய் இருந்ததில் மயங்கியதோ? எது எப்படியோ சில விஷயங்களில் அவர் எழுத்தை பாராட்டாமல் இருப்பது இயலாது போலும்.

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை. படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து.

ஒரு பெண் ஆணிடம் எதிர் பார்க்கும் அன்பும், பரிவும், புரிந்து கொள்ளுதலுமாக இவர் கதைகளில் வரும் கதாநாயகர்கள் அடுத்த ஈர்ப்பு எனலாம். பெண்களின் மனம் புரிவது கடினம் என்பதை பொய்யாக்கும் வகையில் இவர் கதை நாயகர்கள் பெண்களின் முகத்திலும், பார்வையிலுமே எல்லாம் படித்து பதில் பேசும் விதம்... சபாஷ்.

கதையில் வரும் கதாபாத்திரங்களின் அழகான தமிழ் பெயர்கள், அதன் விளக்கம், அதை அன்புக்குறியவர்கள் சுருக்கி அழைக்கும் விதம்... அடடா!!! அழகு. பதிலுக்கு பதில் வரும் வார்த்தை ஜாலமும், ஒருவரை ஒருவர் கேளியாக பேசும் பேச்சையும் ரசிக்காமல் இருக்க இயலுமோ? தேவையான இடங்களில் எல்லாம் அழகான பழமொழிகள், உதாரணக்கதைகள், காவியங்கள், இதிகாசங்கள் என எல்லாமும் எல்லா வயதினருக்கும் பிடித்தமானதாகவே அமைவது சாத்தியமா? சாத்தியப்பட்டிருக்கிறதே.

ஒரு தொழிலை பற்றி எழுதும் போது அதை பற்றிய முழு விவரம், அதில் என்ன முன்னேற்றம், எப்படி செய்ய வேண்டும், என்ன கஷ்டங்கள், என்ன செய்தால் முன்னுக்கு வரலாம், கணக்கு வழக்கு, பணி என எல்லாமும் எழுத முடியுமானால் அவர் எழுத்தில் மட்டுமே கெட்டிக்காரர் அல்ல, நிச்சயம் விசய ஞானம் நிரம்ப உள்ளவரே. அன்றைய கணக்கு புத்தகம் முதல் இன்றைய ஃபேஸ்புக் வரை அத்தனையை பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் ஒருவரால் எழுத இயலுமா? எழுதுகிறாரே!!!

ராகினி சுருங்கி ராகியாகி, ராகி கேழ்வரகான போது... அட!!! இந்த வயதில் இப்படி இளைஞர்களை போல சிந்திக்கவும் இயலுமா என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை தான். அனுபவம் எழுத்தில் தெரிந்தாலும் எண்ணங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும் போது எல்லா வயதினரையும் ஈர்த்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

ஒருவரது தோற்றத்தில் கம்பீரம் காணலாம், ஆனால் எழுத்தில் காண இயலுமா? இயலும்!!! ரமணிசந்திரனின் எழுத்தில் முதிர்ச்சியும், புதுமையான சிந்தனைகளும், ஆழ்ந்த கருத்துக்களும், அன்பான அறிவுரையும், கண்டிப்பும் அளவோடு கலந்து கம்பீரமாய் தோன்றுவதை காண முடியும். கிட்டத்தட்ட 160 நாவல்கள், ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதில் இடம் பிடிக்கும் போது வியப்பாகவே இருக்கின்றது.

தோற்றத்தில் முதிர்ச்சியும், மனதில் இளமையுமாய் ரமணிசந்திரன்... ரசனைக்குரிய ரம்யமான ரமணிசந்திரன்!!

5
Average: 4.4 (17 votes)